(ஷட்புரவதம்)
An account of the city of Asuras | Vishnu-Parva-Chapter-139-083 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிரம்மன் அசுரர்களுக்கு அளித்த வரம்; பிராமணர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தேவர்களால் கொல்லப்படாதவர்களான அசுரர்கள்; அசுரர்களுக்கு வழிகாட்டிய சிவன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! வியாசரின் சீடரே, ஓ! அறநெறிகளை அறிந்தவரே, ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, ஓ! வைசம்பாயனரே, பாரிஜாத மரம் அபகரிக்கப்பட்ட கதையைச் சொன்ன போது, பயங்கரம் நிறைந்த அசுரர்களின் வசிப்பிடமான ஷட்புரத்தைக் குறித்தும் நீர் குறிப்பிட்டீர்.(1) ஓ! தவசிகளிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, அந்த அந்தகாசுரர்களின் அழிவை இப்போது சொல்வீராக" என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர், "சக்திமிக்கவனான ருத்திரன் வீரம் நிறைந்த திரிபுரர்களைக் கொன்ற பிறகும் முன்னணி அசுரர்கள் பலர் எஞ்சியிருந்தனர்.(3) திரிபுரவாசிகளில், அறுபது லட்சத்திற்கும் குறையாத அசுரர்கள் ருத்திரனுடைய கணைகளின் நெருப்பால் எரிக்கப்படாமல் இருந்தனர்[1].(4) ஓ!மன்னர்களில் முதன்மையானவனே, தங்கள் உற்றார் உறவினரின் அழிவின் விளைவால் துயரில் பீடிக்கப்பட்டிருந்த அந்த வீரர்கள், சூரியனை நோக்கித் திரும்பிய முகங்களுடன் காற்றை மட்டுமே உண்டு, நல்லோரும், பெரும் முனிவர்களும் விரும்பும் ஜம்பூத்வீபத்தில் பிரம்மனைத் துதித்துக் கொண்டு நூறாயிரம் ஆண்டுகள் தவம் செய்து வந்தனர்.(5,6)
[1] மற்ற இரு பதிப்புகளை ஒப்புநோக்கி இந்த வாக்கியம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், "திரிபுரவாசிகளான அந்த அசுரர்கள் ருத்திரனுடைய கணைகளின் நெருப்பால் எரிக்கப்பட்டனர்" என்றிருக்கும்.
சிலர் அத்தி மரத்தின் அடியில் உறைவிடத்தை ஏற்படுத்திக் கொண்டு கடுந்தவங்களைச் செய்து வந்தனர்;(7) சிலர் விளா மரத்தின் அடியிலும், வேறு சிலர் நரிகளின் குகைகளிலும் {ஸ்ருகால மரங்களின் அடியிலும்} வாழ்ந்து கொண்டு கடுந்தவங்களில் ஈடுபட்டனர்.(8) ஓ! குருவின் வழித்தோன்றலே, இன்னும் சில அசுரர்கள் ஆல மரத்தின் அடியை அடைந்து, ஆன்ம அறிவியலைக் கற்றுத் தவங்களைச் செய்து வந்தனர்.(9) ஓ! மன்னா, அறவோரில் சிறந்தவனும், தேவர்களில் முதன்மையானவனுமான படைப்பாளன் பிரம்மா, அவர்களுடைய தவங்களில் நிறைவடைந்து வரமளிப்பதற்காகக் கீழே வந்தான்.(10) தாமரையில் பிறந்த அந்தத் தேவனால், "வரத்தை வேண்டுவீராக" என்று கேட்கப்பட்டும், தலைவன் திரயம்பங்கனிடம் {சிவனிடம்} கொண்ட வன்மத்தின் காரணமாக அவர்கள் எதையும் {எந்த வரத்தையும்} வேண்டாதிருந்தனர்.(11)
ஓ! குருவின் வழித்தோன்றலே, அவர்கள் தங்கள் உற்றார் உறவினரின் அழிவுக்குப் பழிவாங்கும் விருப்பத்தை வெளிப்படுத்திய போது, அனைத்தையும் அறிந்தவனான பெரும்பாட்டன் {பிரம்மன்},(12) "உமாதேவியுடன் கூடிய தலைவன் மஹேஷ்வரன் பிறப்பும், நடுநிலையும் {இருப்பும்}, அழிவும் அற்றவனாவான் {ஆதி, மத்யம், அந்தமற்றவனாவான்}. மொத்த அண்டத்தையும் அவனே படைக்கிறான், அவனே அழிக்கிறான். அவனுக்குத் தீங்கிழைக்க வல்லவன் எவன்? அது பயனற்ற காரியமே. அவனுக்கு எதிரான உங்கள் வன்மத்தைக் கைவிட்டுத் தேவர்களின் நகரில் மகிழ்ச்சியாக வாழ விரும்புவீராக" என்றான்.(13,14)
இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்டதும் தீய ஆன்மா கொண்ட அசுரர்கள் பலர் அதற்கு இணங்கவில்லை; ஆனால் பவனின் {சிவனின்} சக்திகளை அறிந்த அவர்களில் சிலர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.(15) பெரும்பாட்டன், விருப்பமில்லாத தீய அசுரர்களிடம், "ஓ! அசுர வீரர்களே, ருத்ரனுக்கு எதிரான உங்கள் பழியுணர்வைத் தவிர வேறு எந்த வரத்தையும் வேண்டுவீராக" என்று கேட்டான்.(16)
இதைக் கேட்ட அவர்கள், "ஓ! தலைவா, நாங்கள் தேவர்கள் அனைவராலும் கொல்லப்படமுடியாதவர்களாவோமாக. நாங்கள் பூமிக்கு அடியில் ஆறு நகரங்களை நிறுவுவோமாக;(17) ஷத்புரம் என்ற பெயரில் அவை அழைக்கப்படட்டும் {எங்கள் விருப்பங்களை அந்நகரங்கள் நிறைவேற்றட்டும்}. ஓ! தலைவா, அந்த ஆறு நகரங்களுக்குச் சென்று நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வோமாக.(18) ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவனே, திரிபுரவாசிகள் கொல்லப்பட்டதைக் கண்டு நாங்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் உற்றார் உறவினரைக் கொன்ற ருத்ரனிடம் இருந்து எங்களுக்கு அச்சமுண்டாகாதிருப்பதாக" என்று கேட்டனர்.(19)
பெரும்பாட்டன் {பிரம்மன்}, "ஓ! அசுரர்களே, நல்லோரை விரும்புகிறவர்களும், நல்ல வழிமுறைகளில் நடப்பவர்களுமான பிராமணர்களின் வழியில் தடைகளை ஏற்படுத்தாமல் இருந்தால் நீங்கள் தேவர்களாலும், சங்கரனாலும் கொல்லப்பட முடியாதவர்களாக இருப்பீர்கள்.(20) உலகின் மிகச்சிறந்த புகலிடங்களான பிராமணர்களுக்கு நீங்கள் அறியாமையினால் தீங்கிழைக்க நேர்ந்தாலும் அழிவை அடைவீர்கள்.(21) அனைத்து உயிரினங்களுக்கு நன்மையைச் செய்பவன் தலைவன் ஜனார்த்தனன் என்பதால், நீங்கள் பிராமணர்களைத் துன்புறுத்தினால் நாராயணனிடமிருந்து உங்களுக்கு அச்சமுண்டாகும்" என்றான் {பிரம்மன்}.(22)
ஓ! மன்னா, பெரும்பாட்டனால் விடை கொடுத்து அனுப்பப்பட்ட அந்த அசுரர்கள் அங்கிருந்து சென்றனர். நல்லோரின் புகலிடமும், திரிபுரவாசிகளைக் கொன்றவனுமான அந்தத் தெய்வீகத் தலைவனே, உமையுடனும், தன் தொண்டர்களுடனும், அறம் சார்ந்தவர்களும், தன் தொண்டர்களுமான மற்ற அசுரர்களின் முன் தோன்றினான்.(23,24)
{சிவன் அவர்களிடம்}, "ஓ! அசுரர்களில் முதன்மையானவர்களே, உங்களுக்கு நன்மை நேரட்டும். பகைமை, செருக்கு, வன்மம் {ஹிம்சை} ஆகியவற்றைக் கைவிட்டு என் புகலிடத்தை நாடியிருக்கிறீர்கள். எனவே நான் உங்களுக்கு வரமளிக்கப் போகிறேன்.(25) உங்கள் செயல்பாடுகளில் நான் நிறைவடைந்திருக்கிறேன். எப்போதும் நற்பணிகளில் ஈடுபடுபவர்களும், உங்களுக்குத் தீக்ஷை அளித்தவர்களுமான {உங்களை நல்வழியில் ஈடுபடுத்தியவர்களுமான} இருபிறப்பாளர்களுடன் சேர்ந்து நீங்கள் தேவலோகத்திற்குச் செல்வீராக.(26)
பிரம்மஞானத்தை அறிந்தவர்களும், இந்த விளா மரத்தின் அடியில் வாழ்பவர்களுமான தவசிகள் என் உலகை அடைவார்கள்.(27) ஒரு மாதமோ, அரை மாதமோ {ஒரு பக்ஷமோ} {புது நிலவு நாளிலோ, முழு நிலவு நாளிலோ} அறச்சடங்குகளுடன் என்னைத் துதிக்கும் துறவிகள் {வானப்ரஸ்தர்கள்},(28) ஓராயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் பலனை அடைவார்கள். அவர்கள் என்னை மூன்று இரவுகள் வழிபட்டால் தாங்கள் விரும்பிய உலகை {விரும்பிய கதியை} அடைவார்கள்.(29) அர்க்கத்வீபத்தில்[2] {நல்ல மனிதர்கள் விரும்பும் த்வீபத்தில் / ஜம்பூத்வீபத்தில் / இந்தியாவில்} வாழும் மனிதன், இவ்வழியில் என்னை வழிபட்டால் இருமடங்கு பலன்களை அறுவடை செய்வான்; ஆனால் பகை நாட்டில் வாழும் மனிதனால் எதையும் ஈட்ட முடியாது. {உங்களுக்கு நன்மை நேரட்டும்}.(30) என்னை ஸ்வேதவாஹனனாக (வெள்ளை நிறக் காளையை வாகனமாகக் கொண்டவனாக) இங்கே துதிப்பவன், மனத்தில் அச்சத்தால் பீடிக்கப்பட்டவனாக இருப்பினும் என்னை அடைவான்.(31) அறம் சார்ந்தவர்களும், அர்ப்பணிப்பில் உறுதிமிக்கவர்களும், அத்தி, ஆல, விளா மரங்களுக்கு அடியில் வாழ்பவர்களும், நரிகளின் குகைகளில் {ஸ்ருகால மரங்களுக்கு அடியில்} வாழ்பவர்களும்,(32) குறிப்பாக முனிவர்களை வழிபடுபவர்களுமான மனிதர்கள் தாங்கள் விரும்பிய உலகங்களை {கதிகளை} அடைவார்கள்" {என்றான் சிவன்}.(33)
[2] பூமியில் ஜம்பூத்வீபம், சாகத்வீபம், குசத்வீபம், சால்மலிகத்வீபம், கிரௌஞ்சத்வீபம், புஷ்கரத்வீபம் முதலிய த்வீபங்கள் இருப்பதாக மஹாபாரத பீஷ்ம பர்வ 11ம் அத்யாயத்திலும், 12ம் அத்யாயத்திலும் வரும் பூமி பர்வ உபபர்வத்தில் சொல்லப்படுகிறது. அர்க்கம் என்றொரு த்வீபம் சொல்லப்படவில்லை. சூரியனுக்கும் அர்க்கன் என்ற பெயர் உள்ளதால் இங்கே சொல்லப்படுவது சூரியலோகம் என்றும், அர்க்கன் என்பதற்கு நல்லோன் என்ற பொருளும் உள்ளதால் நல்லவர்கள் வசிக்கும் த்வீபம் என்றும் பொருள் கொள்ளலாம். இதே அத்யாயத்தில் 5, 6ம் ஸ்லோகங்களில் "நல்லோரும், பெரும் முனிவர்களும் விரும்பும் ஜம்பூத்வீபம்" வருவதன் பொருள் உணர்ந்தால் இது ஜம்பூத்வீபத்தையே குறிப்பிடுகிறது என்ற தீர்மானத்திற்கு வரலாம்.
ஓ! பெரும் மன்னா, தெய்வீகமானவனும், ஸ்வேதவாஹனனுமான மஹாதேவன் இதைச் சொல்லிவிட்டு, அவர்களுடன் {அறம் சார்ந்த அசுரர்களுடன்} சேர்ந்து ருத்ர லோகத்திற்குச் சென்றான்.(34) "நான் ஜம்பூத்வீபத்திற்கு {இந்தியாவுக்குச்} செல்லப் போகிறேன், நான் அங்கே {ஜம்பூத்வீபத்தில்} வாழப்போகிறேன்" என்று மனத்தில் தீர்மானிப்பவர்களே கூட ருத்ரலோகத்தை அடைவார்கள்[3]" என்றார் {வைசம்பாயனர்}.(35)
[3] மற்ற இரண்டு பதிப்புகளிலும் சொற்களில் வேறுபாடு இருந்தாலும் பொருளில் வேறுபாடு இல்லையென நினைக்கிறேன். அவை பின்வருமாறு: சித்திரசாலை பதிப்பில், "ஜம்புவின் வழியில் செல்லவும், ஜம்புவின் வழியில் வாழவும் விரும்பும் ஒருவனும் ருத்திரலோகத்தில் வழிபடப்படுகிறான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஜம்பு மார்க்கம் போவேன். நான் ஜம்பு மார்க்கத்தில் வசிக்கிறேன் இப்படி ஸங்கல்பம் செய்கிறவன் கூட ருத்ரலோகத்தில் பெருமை அடைகிறான்" என்றிருக்கிறது.
விஷ்ணு பர்வம் பகுதி – 139 – 083ல் உள்ள சுலோகங்கள் : 35
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |