Saturday, 21 November 2020

கிருஷ்ணாசுரப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 141 – 085

(அநிருத்தவிக்ரம ராஜ்ஞாம் பந்தநம்)

War between Krishna and Asuras | Vishnu-Parva-Chapter-141-085 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : யாதவப் படையின் மகரவியூகம்; தானவர் நகர முற்றுகை; பிரத்யும்னன் செய்த ஏற்பாடு; ஷட்புரத்துக்குள் நுழைதல்; பிரம்மதத்தரைத் தேற்றிய பிரத்யும்னன்...

The Maya of Pradyumna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மக்களின் பார்வைக்குள் தெளிந்த சூரியன் வந்த கணத்திற்குள் பலதேவன், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோர் தார்க்ஷியனின் {கருடனின்} முதுகில் மகிழ்ச்சியுடன் ஏறினர்.(1) போரிடும் விருப்பம் உள்ள அந்த வீரர்கள் {மூவரும்}, உடும்புத் தோலுறைகள், கவசம், விரலுறைகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு வில்வ இலைகளுக்கும், நீருக்கும் தலைவனான {வில்வோதகனான} சிவ தேவனை வழிபட்டனர்.(2) ஓ! குரு குலப் புலியே {ஜனமேஜயனே}, ருத்திரனிடம் வரமும், அவனது சொற்களால் கங்கையைப் போன்ற புனிதமும் பெற்ற ஆவர்த்தகையெனும் புனித ஆற்றின் நீரில் அவர்கள் நீராடினர்.(3) கௌரவங்களை அளிப்பவனும், நல்லோரின் புகலிடமுமான தலைவன் கிருஷ்ணன், அந்த நேரத்தில் படையின் முன்னணியில் பிரத்யும்னனை நிறுத்தி, பாண்டவர்களை யஜ்ஞத்திற்குப் பொறுப்பாக்கி {வேள்வியைக் காப்பதில் அவர்களை ஈடுபடுத்தி},(4) எஞ்சிய படைவீரர்களைக் குகையின் வாயிலில் நிறுத்திவிட்டு, ஜயந்தனையும், பிரவரனையும் மனத்தில் நினைத்தான்.(5) ஓ! பரதனின் வழித்தோன்றலே, {அவன் அவ்வாறு} நினைத்த உடனேயே அவர்களும் அங்கே வந்தனர். அந்தத் தலைவனால் {கிருஷ்ணனால்} மட்டுமே அவர்களைக் காண முடிந்தது, அவர்கள் பிரத்யும்னனுக்கு மேல் {ஆகாயத்தில்} நிறுத்தப்பட்டனர்.(6)

கிருஷ்ணனின் ஆணையின் பேரில், போருக்கான பேரிகையும், ஜலஜம் {சங்கு}, முரஜம் {முரசு} ஆகியனவும், பிற இசைக் கருவிகளும் முழக்கப்பட்டன.(7) ஓ!பரதனின் வழித்தோன்றலே, சாம்பனும், கதனும் படைவீரர்களை மகர வடிவத்தில் {மகர வியூகத்தில்} அணிவகுக்கச் செய்தனர். சாரணன், உத்தவன், போஜ குலத்தைச் சேர்ந்த வைதரணன்,(8) அறம்சார்ந்தவனான அனாதிருஷ்டி, விப்ருது, பிருது, கிருதவர்மன், தங்ஷ்டரன், பகைவரைக் கலங்கடிப்பவனான நிசக்ஷு,(9) அறம் சார்ந்த சனத்குமாரன், சாருதேஷ்ணன் ஆகியோர் அனிருத்தனுக்கு உதவத் தொடங்கி, படையின் பின் பகுதியைப் பாதுகாத்தனர்.(10)

ஓ! குலத்திற்குப் புகழ் சேர்ப்பவனே {ஜனமேஜயனே}, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றையும், மனிதர்களையும் உள்ளடக்கிய {ரத கஜ துரகப் பதாதி கலந்த} யாதவப் படையின் எஞ்சிய பகுதி போர் வியூகத்தின் மத்தியில் நின்றிருந்தது.(11) தானவர்களும், மேகங்களின் இடியொலியைப் போல முழங்கிக் கொண்டு, கழுதைகள், யானைகள் ஆகியவற்றில் ஏறி ஷட்புரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(12) அவர்களில் சிலர் முதலைகள், முயல்கள், குதிரைகள், எருமைகள், சிங்கங்கள், ஆமைகள் ஆகியவற்றில் வந்தனர்.(13) பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களும், கிரீடம், ஆபீடம், மகுடம், அங்கதம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பயங்கரர்களுமான அவர்களின் தேர்கள் பலவும் அவ்விலங்குகளாலேயே இழுக்கப்பட்டன.(14) ஓ! மன்னா, தேவர்களின் தலைவன் தேவ படைக்குத் தலைமையேற்று வெளிப்படுவதைப் போலவே, நிகும்பனும் அசுரப் படைக்குத் தலைமையேற்று,(15) மேகவொலி போன்ற பேரிகை முழக்கத்தையும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பு ஒலிகளையும் உண்டாக்கியவாறு சங்குகளையும் முழக்கிக் கொண்டு வெளிப்பட்டான்.(16) அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த தானவர்கள், பல்வேறு வகைகளில் முழக்கங்களையும், சிங்க முழக்கங்களையும் செய்து, வானத்தையும், பூமியையும் அவ்வொலியால் நிறைத்தனர்.(17)

ஓ! ஜனமேஜயா, சேதி நாட்டுப் படைவீரர்களும், பிற மன்னர்களின் படைவீரர்களும் பெருங்கவனத்துடன் அசுரர்களுக்குத் துணைபுரிந்து கொண்டிருந்தனர்.(18) ஓ! வீர மன்னா, துரியோதனனால் தலைமை தாங்கப்பட்ட நூறு சகோதரர்களும், பெருஞ்சடசடப்பொலியை உண்டாக்குபவையும், கந்தர்வ நகரத்தைப் போன்றவையும் {போன்று பெரியவையும்}, வேகமாகச் செல்லக்கூடியவையுமான தங்கள் தேர்களில் சேதி மன்னன் சிசுபாலனின் தொண்டர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர்.(19) ருக்மியும், ஆஹ்விருதியும் பனை மரங்களைப் போன்றிருந்த தங்கள் அழகிய விற்கள் இரண்டையும் அசைத்துக் கொண்டு தங்கள் மனத்தைப் போருக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.(20) யாதவர்களுடன் போரிட்டு வெற்றியடையும் நோக்குடன் மன்னன் பகதத்தன், சல்யன், சகுனி, ஜராசந்தன், திரிகர்த்தன், விராடன், உத்தரன் ஆகியோரும், நிகும்பனின் தலைமையிலான அசுரர்களும் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.(21,22)

போரில் நிகும்பன் பாம்புகளைப் போன்ற கணைகளால் பைமர்களின் பயங்கரப் படையைத் தாக்கத் தொடங்கிய போது, யது படையின் தலைவனான ஆனாதிருஷ்டியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(23) அவனும் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகளால் பகைவரின் படையினரைக் கொல்லத் தொடங்கினான்.(24) கணைகளால் அனைத்தும் மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் நிகும்பனும் புலப்படவில்லை, அவனது தேரும், கொடிமரமும், குதிரைகளும் புலப்படவில்லை.(25) மாய சக்தி படைத்தோரில் முதன்மை வீரனான நிகும்பன் இதைக் கண்டு கோபத்தால் நிறைந்தான். அவன் தன் மாய சக்திகளின் மூலம் பைமத் தலைவன் ஆனாதிருஷ்டியைக் கலங்கடித்தான்.(26) வீரமிக்க நிகும்பன், தன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி ஆனாதிருஷ்டியை மயக்கமடையச் செய்து, ஷட்புரம் என்ற பெயரைக் கொண்ட குகைக்கு அவனைக் கொண்டு சென்று அங்கே அவனைச் சிறையிலடைத்தான். மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்பிய அவன்,(27) தன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி, கிருதவர்மன், சாருதேஷ்ணன், போஜகுலத்தின் வைதர்ணன், சனத்குமாரன், ஜாம்பவதியின் மகனான ருக்ஷன், {பலராமனின் மகன்களான} நிசடன், உல்முகன் ஆகியோரையும், இன்னும் எண்ணற்ற யாதவர்கள் பிறரையும் அங்கே {அந்தக் குகைக்குக்} கொண்டு சென்றான்.(28,29) ஓ! மன்னா, அவன் ஷட்புரத்தின் பயங்கரக் குகைக்கு யாதவர்களைக் கொண்டு சென்ற போது, தன்னை எவராலும் காண முடியாத படிக்கு மாயாசக்தியால் மறைத்துக் கொண்டான்.(30) பைமர்களின் பயங்கரப் படுகொலையைக் கண்ட தலைவன் கிருஷ்ணன், பலதேவன், சாத்யகி ஆகியோர் கோபமடைந்தனர்,(31) பகை வீரர்களைக் கொல்பவனான சாம்பன், தடுக்கப்பட முடியாதவனான அனிருத்தன் ஆகியோரும், எண்ணற்ற பைமர்கள் பிறரும், குறிப்பாகப் பிரத்யும்னனும் பெருங்கோபத்தில் நிறைந்தனர்.(32)

அப்போது, ஓ! மன்னா, சாரங்கபாணி (கிருஷ்ணன்), தன் சாரங்க வில்லில் நாண் பூட்டிக் கணைகளை ஏவியவாறே நெருப்பின் தேவன் {அக்னி} புற்களில் திரிவதைப் போல அந்தத் தானவர்களின் மத்தியில் திரிந்தான்.(33) தானவர்கள், எரியும் நெருப்பை நோக்கி விரையும் விட்டில் பூச்சிகளைப் போல யமனின் பாசக்கயிற்றால் இழுக்கப்பட்டவர்களாக அந்தப் பிரகாசமிக்கத் தேவனை நோக்கி ஓடினர்.(34) அவர்கள், ஆயிரக்கணக்கான சதக்னிகள், பரிகங்கள், நெருப்பைக் கக்கும் சூலங்கள், எரியும் கோடரிகள், பயங்கரப் பாறைகள், பெருங்கற்கள் ஆகியவற்றை எடுத்தனர், மதங்கொண்ட யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும் தூக்கி வீசினர்[1].(35,36) எனினும், ஓ! வீரா, நாராயண நெருப்பில் அனைத்தும் எரிந்தன. பெரும் பிரகாசமிக்கவனும், உலகுக்கு நன்மை செய்பவனுமான அந்த யது குலத் தலைவன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே தன் கணைகளின் நெருப்பால் அவர்கள் அனைவரையும் கலங்கடித்தான்.(37) கூதிர் கால மழைப்பொழிவால் துன்புறும் காளையைப் போலவே அவன் அவர்களின் கணைமாரியைப் பொறுத்துக் கொண்டான்.(38) இவ்வாறே அந்தப் போர் சிறிது நேரம் தொடர்ந்தபோது மழையைத் தாக்குப்பிடிக்கமுடியாத மண் அணையைப் போல நாராயணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளை அசுரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.(39) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அகலத்திறந்த வாயுடன் கூடிய சிங்கத்தின் முன்பு நிற்க முடியாத காளைகளைப் போலவே அசுரர்களால் கிருஷ்ணனின் முன்பு நிற்க முடியவில்லை[2].(40)

[1] 34, 35, 36 ஆகிய ஸ்லோகங்களின் பொருள் மற்ற இருபதிப்புகளுடனும் ஒப்புநோக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், சதக்னி முதலிய ஆயுதங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் பயன்படுத்தியதாகப் பொருள் அமையும். இங்கே கிருஷ்ணன் பயன்படுத்தியது சாரங்க வில்லை மட்டும்தான்.

[2] மற்ற இரு பதிப்புகளை ஒப்புநோக்கி இந்த ஸ்லோகம் மாற்றப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், "அகலத்திறந்த ஐந்து வாய்களுடன் கூடிய சிவதேவனின் முன்பு நிற்க முடியாத காளைகளைப் போலவே அசுரர்களால் கிருஷ்ணனின் முன்பு நிற்க முடியவில்லை" என்று இருக்கும்.

ஓ! ஜனமேஜயா, நாராயணனான கிருஷ்ணனால் இவ்வாறு கொல்லப்பட்டபோது, அச்சத்தால் பீடிக்கப்பட்ட அசுரர்கள் வானத்தில் உயர எழுந்தனர். ஓ! தலைவா, அவர்கள் வானில் எழுந்தவுடனேயே ஜயந்தனும், பிரவரனும் நெருப்பு போல எரியும் கணைகளால் அவர்கள் அனைவரையும் கொன்றனர்.(41,42) அந்த நேரத்தில் அசுரர்களின் தலைகள் மரத்தில் இருந்து விழும் பனங்கனிகளைப் போலப் பூமியில் விழுந்தன.(43) காலனால் கொல்லப்பட்ட ஐந்து தலை பாம்புகளைப் போலத் தைத்தியர்களின் கரங்கள் பூமியின் பரப்பில் விழுந்தன.(44)

ருக்மிணியின் அறம்சார்ந்த வீரமகன் {பிரத்யும்னன்}, மேலும் க்ஷத்திரியக் கூட்டத்தை வெளிவர விடாமல் அழிப்பதற்காக வாயில் புலப்படாத மற்றுமொரு பயங்கரக் குகையை உண்டாக்கிவிட்டு,(45) கதன், சாரணன், சுதன் {தன் மகன் அனிருத்தன்}, சாம்பன் ஆகியோருடனும், பிற வீரர்களுடனும் அதே குகையின் வழியிலேயே யாரும் காணாமல் வெளியே வந்தான்.(46) கிருஷ்ணனின் பலம்வாய்ந்த மகன் {பிரத்யும்னன்} வெளியே வந்தவுடனேயே போர்க்களத்தின் முன்னிலையில் அங்கேயும் இங்கேயும் கவனமாகத் திரிந்து கொண்டிருந்த கர்ணனைப் பிடித்து அந்தப் பயங்கரக் குகையில் அடைத்தான்[3].(47)

[3] மற்ற இரண்டு பதிப்புகளையும் ஒப்புநோக்கி இந்த ஸ்லோகத்தின் பொருள் மாற்றப்பட்டிருக்கிறது. சித்திரசாலை பதிப்பில், "போரின் முன்னணியில் இருந்த கிருஷ்ணனின் பலம்வாய்ந்த மகன் (பிரத்யும்னன்) போர்க்களத்தில் வெற்றியடைய முயன்று கொண்டிருந்தவனும், போராடிக் கொண்டிருந்தவனுமான கர்ணனைப் பிடித்து, அந்தப் பயங்கரக் குகைக்குள் அவனைத் தள்ளினான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "கிருஷ்ணன் மகன் பலவான் ப்ரத்யும்னன் பின் போர் முன்னணியில் அங்குமிங்கும் துள்ளும் கர்ணனைப் பிடித்துக் கோரமான மாயக் குகையில் கோஷமிட்டுக் கொண்டு வைத்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பின் படியே மொழிபெயர்த்திருந்தால், "கிருஷ்ணனின் பலம்வாய்ந்த மகன் {பிரத்யும்னன்} வெளியே வந்தவுடனேயே போர்க்களத்தின் முன்னிலையில் அங்கேயும் இங்கேயும் கவனமாகத் திரிந்து கொண்டிருந்த நிகும்பனைத் தாக்கத் தொடங்கினான்" என்று இருக்கும்.

அதன்பிறகு அவன், ஓ! மன்னா, தன் சிங்க முழக்கத்தால் குகையை எதிரொலிக்கச் செய்தபடியே மன்னன் துரியோதனன், விராடன், துருபதன்,(48) சகுனி, சல்யன், நீலன், பீஷ்மர், விந்தன், அனுவிந்தன், ஜராசந்தன்,(49) திரிகர்த்த, மாளவ மன்னர்கள், பெருஞ்சக்திவாய்ந்த வாசால்யர்கள், திருஷ்டத்யும்னன், ஆயுதப் பயன்பாட்டை அறிந்தவர்களான பாஞ்சால நாட்டின் பிற இளவரசர்கள்,(50) ஆஹ்விருதி, தன் மாமனான ருக்மி, பேரரசன் சிசுபாலன், பகதத்தன் ஆகியோரை அழைத்து அவர்களிடம்,(51) "ஓ! மன்னர்களே, மேன்மையான உங்கள் நிலையையும், என்னுடன் நீங்கள் கொண்ட உறவுமுறையையும் கருத்தில் கொண்டே நான் உங்களை இந்தப் பயங்கரக் குகைக்குள் தள்ளாமல் இருக்கிறேன்[4].(52) நுண்ணறிவுமிக்கவனும், திரிசூலபாணியும், வில்வத்துக்கும், நீருக்கும் தலைவனான தேவனே {வில்வோதகனே / சிவனே}, உங்கள் அனைவரையும் இந்தக் குகைக்குள் தள்ளுமாறு எனக்கு ஆணையிட்டிருக்கிறான்.(53) பெருஞ்சக்திவாய்ந்த நிகும்பனின் சம்பரி மாயை {சம்பர மாயை} மூலம் சிறையிலிடப்பட்டிருக்கும் யாதவர்களை விடுவிக்க என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக நான் முயற்சிப்பேன்" என்றான் {பிரத்யும்னன்}. (54)

[4] சித்திரசாலை பதிப்பில், "உங்கள் உறவுமுறையையும், கண்ணியத்தையும் நான் மதிக்கிறேன். இந்தப் பயங்கரக் குகைக்குள் உங்களைத் தள்ளுகிறேன். திரிசூலபாணியான வில்வோதகன் (சிவன்) உங்களைக் குகையில் அடைக்குமாறு எனக்கு ஆணையிட்டான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "உங்களுடன் ஸம்பந்தத்தையும், பெருமையையும் மதிக்கிறேன். இந்தக் கோரரூப குகையில் உங்களை வைக்கிறேன். புத்திமான், சூலந்தரித்த வில்வோத ஈஸ்வரனால் உன்னால் அவ்வரசர்கள் குகையில் வைக்கத்தக்கவர்கள் என்று நான் கட்டளையிடப்பட்டிருக்கிறேன்" என்றிருக்கிறது.

இவ்வாறு சொல்லப்பட்டதும், மன்னர்களின் படைத்தலைவனான சிசுபாலன், பைமர்களை, குறிப்பாகப் பிரத்யும்னனைக் கணைகளால் தாக்கினான்.(55) அப்போது ருக்மிணியின் மகன் சிவனை வணங்கிவிட்டுப் பேரரசன் சிசுபாலனைக் கட்டத் தொடங்கினான்.(56) அதேவேளையில், சிவகணங்களில் முதன்மையான நந்தி, ஆயிரக்கணக்கான பாசக்கயிறுகளை எடுத்துக் கொண்டு அங்கே வந்து, பெருஞ்சக்திவாய்ந்தவனும், வீரனுமான ருக்மிணியின் மகனிடம் {பிரத்யும்னனிடம்},(57) "ஓ! யதுவின் வழித்தோன்றலே, வில்வோதகேஷ்வரன் (சிவன்) உன்னிடம் இரவில் சொன்னதைச் செய்யுமாறு உனக்கு ஆணையிட்டிருக்கிறார்.(58) கன்னியருக்கான கையூட்டாக ரத்தினங்களைப் பெற்றுக் கொண்ட இந்த மன்னர்களைப் பாசக்கயிறுகளில் கட்டுவாயாக. {பின்னர்} அவர்களை விடுவிக்கும் அதிகாரமும் உனக்குண்டு.(59) ஓ! வீரா, ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, அசுரர்களில் ஒருவரையும் விடாமல் ஒழிப்பாயாக. இந்தச் செய்தியை ஜனார்த்தனனுக்குச் சொல்வாயாக" என்றான்.(60)

அதன்பிறகு பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, ஓ! குருவின் வழித்தோன்றலே, பாம்புகளைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மன்னன் பகதத்தன், சிசுபாலன், ஆஹ்வதி, ருக்மி ஆகியோரையும், பிற மன்னர்களையும் ஹரனால் கொடுக்கப்பட்ட பாசக்கயிறுகளால் கட்டி அவர்கள் அனைவரையும் மாயக் குகைக்கு அழைத்துச் சென்றான்.(61,62) ஓ! பரதனின் வழித்தோன்றலே, யதுவின் வழித்தோன்றலான பிரத்யும்னன், தன் மகன் அனிருத்தனைக் குகைக்குக் காவலாக நிறுத்திவிட்டு,(63) அந்த க்ஷத்திரியர்களின் யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு எஞ்சியிருந்த படைத்தலைவர்களையும், கருவூலக் காவலர்களையும் சங்கிலிகளில் கட்டினான்.

ஓ! தலைவா, கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்} அசுரர்களைக் கொல்லத் தயாரானபோது,(64,65) கவசங்களுடன் கூடிய அவன் {பிரத்யும்னன்}, இரு பிறப்பாளர்களில் முதன்மையான பிரம்மதத்தரிடம், "{வேள்வியைச் செய்வீராக}. தனஞ்சயர் {அர்ஜுனர்} உமக்கு உதவப் போகிறார் என்பதைக் காண்பீராக.(66) உமக்கு அச்சமேதுமில்லை. உறுதியான இதயத்துடன் உமது பணியைச் செய்வீராக. ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பாண்டவர்கள் உங்களைப் பாதுகாப்பதில் ஈடுபடும்போது, தேவர்களிடமோ, அசுரர்களிடமோ, வேறு எந்த உயிரினத்திடமோ நீர் அச்சங்கொள்ள வேண்டியதில்லை.(67) அசுரர்களால் உமது மகள்களை மனத்தாலும் தீண்ட இயலவில்லை; என் மாயா சக்திகளால் நான் அவர்களை வேள்விக்களத்தில் வைத்திருப்பதைப் பாரும்" என்றான் {பிரத்யும்னன்}."(68)

விஷ்ணு பர்வம் பகுதி – 141 – 085ல் உள்ள சுலோகங்கள் : 68
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்