(உமாவ்ரதகதநஸமாப்தி꞉)
Narada gives a history of vratas performed by other ladies | Vishnu-Parva-Chapter-138-082 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : உமை சொன்ன விரத விளக்கம் முடிவு; தேவதைகள் செய்த சாவித்ரி, அதிதி, கங்கா, யாம விரதங்கள்; கிருஷ்ணனின் மனைவிமாரான ருக்மிணி, ஜாம்பவதி, சத்யபாமா ஆகியோர் செய்த விரதங்கள்...
உமை {அருந்ததியிடம்}, "திறன்மிக்க நண்பர்களையும், உறவினர்களையும் பெற விரும்பும் கற்புள்ள ஒரு பெண், ஓராண்டு காலத்திற்கு ஒவ்வொரு சப்தமியிலும் {வளர்பிறை ஏழாம் நாள், தேய்பிறை ஏழாம் நாள் ஆகியவற்றில்} உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(1) ஓராண்டு நிறைவடைந்ததும், பணக்கொடையுடன் சேர்த்து தங்கத்தாலான ஒரு மரத்தையும் ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும். அப்போது அவள் அறம்சார்ந்த நண்பர்களையும், உறவினர்களையும் பெறுவாள்.(2)
ஓ! அறம் சார்ந்தவளே, பெண்களில் முதன்மையானவளே, புங்க மரத்தின் அடியில் ஓராண்டு காலம் விளக்கேற்றி, ஓராண்டு நிறைவடையும் நாளில் பொன்னாலான விளக்கைக் கொடையளிப்பவள்,(3) மகன்களைப் பெற்ற அன்னையாகவும், தன் அழகால் கணவனுக்குப் பிடித்தவளுமாகித் தன் தலைவனின் மனைவியருக்கு மத்தியில் விளக்கைப் போல ஒளிர்வாள்.(4)
ஓ! மங்கலப் பெண்ணே, கடுஞ்சொற்களால் பிறரைக் காயப்படுத்தாதவளும், புதன்கிழமைகளில் உணவு உண்ணாதவளும்[1], கடுஞ்சொல் பயன்படுத்தாதவளும், அனைவருக்கும் பிறகு எப்போதும் இறுதியாக உணவு உண்பவளும்,(5) பழக்க வழக்கங்களில் தூய்மையுள்ளவளும், மாமனார், மாமியாருக்குத் தொண்டாற்றுபவளும், கணவனையே தெய்வமாகக் கருதுபவளும்,(6) வாய்மை நிறைந்தவளுமான கற்புள்ள ஒரு பெண் விரதமோ, உண்ணா நோன்போ இருக்க வேண்டிய அவசியமே இல்லை.(7)
[1] புதன்கிழமைகளில் உண்ணா நோன்பு என்பது மற்ற இரு பதிப்புகளிலும் சொல்லப்படவில்லை.
ஓ! இளமை நிறைந்த கற்புள்ள பெண்ணே, கற்புள்ள எந்தப் பெண்ணாவது தற்செயலாக விதவையாகும் நிலை நேர்ந்தால், அவள் புராணங்களில் விதிக்கப்பட்டுள்ள சில சடங்குகளைப் பின்பற்ற வேண்டும். நான் அவற்றைச் சொல்கிறேன் கேட்பாயாக.(8) ஒரு விதவை, அறம்சார்ந்தோரின் நல்லொழுக்கத்தை நினைவில் கொண்டு தன் கணவனின் வடிவை மண்ணால் செய்தோ, அவனைப் போன்ற ஓவியத்தை வரைந்தோ அதை {அந்த வடிவத்தை} வழிபட வேண்டும்.(9) ஒரு விரதத்தையோ, உண்ணாநோன்பையோ செய்யும் போது, குறிப்பாக உணவை உண்ணும் நேரத்தில், கற்புள்ள ஒரு பெண் அந்த வடிவத்திடம் {சிலையிடமோ, ஓவியத்திடமோ} அனுமதி பெற வேண்டும்.(10) தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து வந்தவளான அந்த விதவையானவள், {பெண்முனியான} சாண்டிலியைப்[2] போலத் தன் கணவன் சென்ற உலகுக்கே சென்று அங்கே சூரியனைப் போல ஒளிர்வாள்.(11)
[2] மஹாபாரதம் உத்யோக பர்வம் பகுதி 113லும், அநுசாஸன பர்வம் பகுதி 123லும் சாண்டிலி பற்றிய செய்திகள் இருக்கின்றன.
புராணங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்தியமான அறச்சடங்குகளை {புண்யக விரத விதிமுறைகளை} இன்று முதல் தெய்வீகக் காரிகையர் {தேவ ஸ்திரீகள்} அறிவார்கள்.(12) அற ஆன்மா கொண்ட நாரத முனிவர், புராணங்களில் விளக்கப்பட்டுள்ளபடியே உண்ணாநோன்பு, விரதங்கள் தொடர்பான மொத்த விதிமுறைகளையும் அறிவார்.(13)
ஓ! சோமனின் மிகச் சிறந்த மகளே {அருந்ததி}, ஏற்கனவே சொல்லப்பட்ட உண்ணா நோன்புகள், விரதங்களுடைய விதிகளின் நீட்சியாகச் செய்யப்படும் அறச்சடங்குகளின் காரியத்தில் அறம்சார்ந்த அதிதியும், இந்திராணியும் {சசிதேவியும்}, {அருந்ததியான} நீயும் கற்புள்ள பெண்களின் கூட்டத்தில் முதன்மையானவர்களாகக் கொண்டாடப்படுவீர்கள்.(14,15) உயரான்ம விஷ்ணுவின் அவதாரங்கள் அனைத்திலும், அவனது மனைவிகள் நித்தியமான இந்தப் புண்யகச் சடங்கின் விதிகளை அறியவருவார்கள்.(16) ஓ! கற்புள்ள பெண்ணே, மேலும் நான் என்ன சொல்லப் போகிறேன்; கணவனிடம் அர்ப்பணிப்பு, தீமை இல்லாமை, சொல்லாலும் பாவம் செய்யப்படாமை ஆகியவையே அறங்கள் அனைத்திலும், அதிலும் குறிப்பாகப் பெண்களின் கடமைகளில் முதன்மையானவையாகும்" என்றாள் {உமாதேவி}".(17)
நாரதர் {ருக்மிணியிடம்}, "ஹரனின் அன்புக்குரியவளான அந்தப் பெருந்தேவியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தவத்தையே செல்வமாகக் கொண்ட அந்தத் தவச்செல்விகள் அவளை வணங்கி விடைபெற்றுச் சென்றனர்.(18) அறச்சடங்குகளை எப்போதும் நோற்பவளான அதிதி, ஏற்கனவே சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி உமா விரதத்தைச் செய்தாள்.(19) கசியபரைப் பாரிஜாத மரத்துடன் கட்டி எனக்குக் கொடையளித்த அவளுடைய அந்த விரதம் அதிதி விரதம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்த விரத விதிகளின் படியே சத்யபாமா கொடைகளை அளித்தாள்.(20) அறத்தில் எப்போதும் நிலைக்கும் சாவித்ரியும் அந்த நோன்பைச் செய்தாள். தற்போது சத்யபாமா முறையாக அந்த விரதத்தையே செய்தாள். இது மற்ற அனைத்தையும் விடச் சிறந்ததாக இருக்கிறது.(21) இந்த விரதம் நோற்கும் போது, மாலை வேலையில் சரியான இடத்தில், பெயர்களை உரைத்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவது இரு மடங்கு பலனை அளிக்கும்.(22) சாவித்ரி விரதத்தையும், அதிதி விரதத்தையும் செய்யும் கற்புள்ள பெண்ணால், தன் கணவனின் குடும்பத்தையும், தன் தந்தையின் குடும்பத்தையும், தன்னையும் காத்துக் கொள்ள முடியும்.(23) இந்திரனின் ராணி {இந்திராணியான சசிதேவி}, உமாவிரத விதிகளின் படி சடங்கைச் செய்து எண்ணற்ற செவ்வாடைகளையும், மீனும், இறைச்சியும் கலந்த உணவையும் கொடையளித்தாள்[3].(24)
[3] சித்திரசாலை பதிப்பில், "இந்திராணியும் செவ்வாடைகளையுடனும், இறைச்சி கலந்த உணவுடனும் இதே நோன்பை விதிப்படி நோற்றாள்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில, "இந்திராணி, உமை செய்த அந்த வ்ரதத்தையே முறைப்படி செய்தாள். மிகச் சிறந்த சிவந்த ஆடையையும், தக்ஷிணையுடன் கூடிய போஜனத்தையும் கொடுத்தாள்" என்றிருக்கிறது. நோன்பு, விரதங்களில் பொதுவாக இறைச்சி கலப்பதில்லை. இதற்கு முன்பு உமையால் சொல்லப்பட்ட விரதங்களிலும் இறைச்சி குறிப்பிடப்படவில்லை. இங்கே இது நாரதரால் ருக்மிணிக்குச் சொல்லப்படுகிறது. மன்மதநாதத்ததரின் பதிப்பிலும், சித்திரசாலை பதிப்பிலும் இறைச்சி கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில் அவ்வாறு சொல்லப்படவில்லை.
நான்காம் நாளில் {வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தித் திதிகளில்} கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு விதி இந்த விரதத்தில் இருக்கிறது. அதன்படி ஒருத்தி பகலும், இரவும் உண்ண நோன்பிருந்து நூறு குடங்களைக் கொடையளிக்க வேண்டும்.(25) ஓ! சிறப்புமிக்கப் பெண்ணே, கங்கா தேவி அந்த உமாவிரதத்தை நிறைவேற்றி அதிகாலையில் தன் நீரிலேயே நீராடினாள்.(26) ஓ! ஹரியின் அன்புக்குரிய ராணியே {ஹரிப்ரியே / ருக்மிணி}, ஒருத்தி மாசி மாதத்தின் வளர்பிறையில் இந்தக் கங்கா விரதத்தைச் செய்து, வேறு எந்த நீரில் {கங்கையிலோ, வேறு எந்த நீரிலோ} நீராடினாலும் விரும்பிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்று {வேதத்தில்} சொல்லப்படுகிறது.(27) ஓ! ஹரியின் அன்புக்குரிய அவனது மனைவியே, அறச்சடங்குகள் அனைத்தையும் அறிந்த ஒரு பெண், கங்கா விரதம் செய்தால், {கணவனின் குலம், தந்தையின் குலம், தாயின் குலம் ஆகிய} மூன்று குலங்களின் ஏழு தலைமுறைகளை அவளால் காக்க முடியும்[4].(28) ஓ! மங்கலப் பெண்ணே, கவலைகளை அகற்றுவதும், விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கொடுப்பதுமான இந்தக் கங்கா விரதத்தை ஒருத்தி செய்யும்போது, அவள் ஆயிரம் குடங்களைக் கொடையளிக்க வேண்டும்.(29)
[4] இந்த வரி, மூன்று பதிப்புகளிலும் ஒப்புநோக்கி மாற்றப்பட்டிருக்கிறது. சித்திரசாலை பதிப்பில், "ஓ ஹரியின் மனைவியே, கங்கா விரதம் இருக்கும் அறத்தில் நிலைத்த பெண் இருபத்தோரு குலங்களைக் காப்பாள்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "கங்கா வ்ரதம் நடத்தும் தர்மமறிந்த ஸ்த்ரீ, பதியின் குலம், பிதா குலம், மாதாமஹ குலம் ஆகிய மூவேழு குலங்களைக் கரையேற்றுகிறாள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ள படியே மொழிபெயர்த்தால், "ஓ ஹரியின் அன்புக்குரிய அவனது மனைவியே, அறச்சடங்குகள் அனைத்தையும் அறிந்த ஒரு பெண், கங்கா விரதம் செய்தால், இரு தரப்பின் ஏழு தலைமுறைகளை அவளால் காக்க முடியும்" என்றிருக்கும்.
ஓ! ஹரியின் அன்புக்குரிய ராணியே, யமனின் மனைவியால் கொண்டாடப்பட்ட யாம விரதம் என்ற பெயரைக் கொண்ட விரதத்தை ஒருத்தி பனிக்காலம் நிலவும் இடத்தில் {கூதிர் காலத்தில் திறந்த வெளியில்} செய்யலாம்.(30) ஓ மங்கலப் பெண்ணே, இந்த விரதத்தைச் செய்யும் தூய ஒழுக்கம் கொண்ட பெண் ஒருத்தி, நீராடிய பிறகு கணவனை வணங்கிவிட்டு வானத்தை நோக்கிப் பின் வரும் சொற்களைச் சொல்ல வேண்டும்.(31) {அவள்}, "நான் பனியை முதுகில் தாங்கி யாமரத விரதத்தைச் செய்வதால், பிழைத்திருக்கும் மகன்களைக் கொண்டவர்களும், கணவர்களிடம் அர்ப்பணிப்புள்ளவர்களுமான பெண்களில் முதன்மையானவளாகத் திகழ்வேனாக.(32) என் கணவரின் மற்ற மனைவியரை நான் ஆள்வேனாக, நான் யமனைக் காணாதிருப்பேனாக, நான் என் கணவருடனும், மகன்களுடனும் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பேனாக.(33) இந்த விரதத்தின் சக்தியால் நான் என் கணவருடன் ஒரே உலகத்திற்கு {அவர் செல்லும் உலகத்திற்கே} செல்வேனாக. செல்வச் செழிப்புள்ளவளாகவும், நல்ல ஆடைகளைக் கொண்டவளாகவும், திறந்த கைகளை உடையவளாகவும், சொந்தங்களால் விரும்பப்படுபவளாகவும், சாதித்தவளாகவும் ஆவேனாக" {என்று வானத்திடம் சொல்ல வேண்டும்}.(34) இவ்வாறு சொல்லிவிட்டு அவள் ஒரு பிராமணனுக்குத் தேனைக் காணிக்கையாக அளித்து, அவனை நலந்தரும் மந்திரங்களை உரைக்கச் செய்து, எள் பாயசத்துடன் அவனுக்கு உணவளிக்க வேண்டும்.(35) ஓ! தேவர்களின் நிறத்தைக் கொண்டவளும், ஹரியின் அன்புக்குரியவளுமான ஹரியின் மனைவியே {ருக்மிணியே}, இவ்வாறே ருத்ரனின் மனைவியான அந்தப் பெருந்தேவியால் {உமையால்} விளக்கப்பட்ட பல்வேறு விரதங்களைத் தேவிகள் {தேவ மங்கையர்} நோற்றனர்.(36) நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்; புராணங்களில் சொல்லப்பட்டதும், முன்பே உமாதேவியால் அடையப்பட்டதுமான மங்கலமான அந்தப் புனிதச் சடங்குகளின் பலன்களை என் தவச் சக்தியின் மூலம் நீ அறுவடை செய்வாயாக {காண்பாயாக}" என்றார் {நாரதர்}".(37,38)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உமையால் அளிக்கப்பட்ட வரத்தின் மூலம் தெய்வீகப் பார்வையைப் பெற்ற ருக்மிணி, விரத விதிகள் அனைத்தையும் கண்டு அதை {விரதத்தைச்} செய்தாள்.(39) காளைகளையும், ரத்தினங்களையும், உணவையும் கொடையளிப்பது உமாவிரதத்தின் அனைத்து வடிவங்களிலும் பெரும் பலன்களையும், விரும்பிய பொருட்கள் அனைத்தையும் கொடுக்கும் என்ற காரணத்தால் அவள் அவற்றைக் கொடையளித்தாள்.(40) ஓ! ஜனமேஜயா, ஜாம்பவதியும் இந்த விரதத்தைச் செய்த பிறகு ரத்தினங்களாலான அழகிய மரத்தைக் கொடையளித்தாள்.(41) சத்யா {சத்யபாமா}, இந்த உமாவிரதத்தைச் செய்து எண்ணற்ற மஞ்சள் ஆடைகளைக் கொடுத்தாள்.(42) {ரோஹிணி, பூரம், உத்திரம், மகம் ஆகியோரும் {அகிய நட்சத்திரங்களும்} தங்கள் குலங்களின் புகழுக்கு வழிவகுக்கும்படி பல வகையான நோன்புகளை முன்னர் நோற்றனர்}[5].(43) ஓ! குருவின் வழித்தோன்றலே, சதபிஷக் தேவியும் {சதயம் நட்சத்திரமும்}, இந்தப் புனிதச் சடங்கைச் செய்து நட்சத்திரங்களின் மத்தியில் மிக உயர்ந்த நிலையை அடைந்தாள்" என்றார் {வைசம்பாயனர்}.(44)
[5] இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தி மன்மதநாததத்தரின் பதிப்பில் விடுபட்டிருக்கிறது. சித்திரசாலை, உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார் பதிப்புகளில் ஒப்பு நோக்கி இங்கே சேர்க்கப்பட்டிருக்கிறது.
விஷ்ணு பர்வம் பகுதி – 138 – 082ல் உள்ள சுலோகங்கள் : 44
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |