(அங்கநிர்வேஷஹேதூநி வ்ரதாநி)
The same subject continued | Vishnu-Parva-Chapter-137-081 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பெண்களின் உடல் உறுப்புகளில் மேன்மையேற்படுவதற்குரிய விரதங்களும், விதிகளும்...
தேவி {உமை [அருந்ததியிடம்]} தொடர்ந்தாள், "ஓ! அருந்ததி, மிகச் சிறந்த அருள் நிலையை {ஆனந்தத்தை / பேரின்பத்தை} அடையத் தகுந்ததாக உடலை ஆக்கும் அறச்சடங்குகளை {புண்யக விரதங்களைச்} சொல்லப் போகிறேன் இந்தப் பெண்களுடன் சேர்ந்து நீ கேட்பாயாக.(1)
கற்புள்ளவளான ஒரு பெண், மாதத்தின் தேய்பிறை எட்டாம்நாளில் {கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில்} உண்ணாமல் இருந்தோ, கிழங்குகளையும், கனிகளையும் மட்டுமே உண்டோ ஒரு பிராமணருக்கு உணவளித்தாலும்,(2) வெள்ளை ஆடை உடுத்தி, தூய்மையான ஒழுக்கத்தைப் பின்பற்றி, ஆசானையும் தேவர்களையும் ஓராண்டு துதித்து, தன் சக்திக்கேற்ற வகையில் பசுவின் வாலால் செய்யப்பட்ட சாமரம், கொடி ஆகியவற்றையும், பாகிலிடப்பட்ட கனிகளையும் {உணவையும்} இருபிறப்பாளருக்கு {பிராமணர்களுக்குக்} கொடுத்தாலும்,(3,4) சுருண்டு, இடை வரை வளர்ந்து, அலைவீசும் கூந்தல் அவளுக்கு அமையும், அவள் தன் கணவனுக்கு மிகப் பிடித்தவளாக ஆவாள்.(5)
மிகச் சிறந்த அருளுக்குத் தகுந்ததாகத் தன் தலை இருக்க வேண்டுமென விரும்பும் கற்புள்ள ஒரு பெண், கோமயத்தாலும் {பசுஞ்சாணத்தாலும்}, வில்வக் கனியும், நெல்லிக்கனியும் கலந்த பாலாலும் அதை {தலையைக்} கழுவி, கோமியம் {பசுவின் சிறுநீரைப்} பருகி, கோமியம் கலந்த நீரால் தன் தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். ஓ! அழகிய பெண்ணே, மாதத்தின் தேய்பிறை பதினான்காம் நாளில் {கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில்} இந்த நடைமுறைகளை ஒருத்தி செய்தால், அவள் விதவையாகாமால், நற்பேறு பெற்றவளாகவும், பிணிகளில் இருந்து விடுபட்டவளாகவும் ஆகிறாள். தலையில் உண்டாகும் நோய்களால் அவள் ஒருபோதும் பீடிக்கப்படமாட்டாள்.(6-8)
ஓ! தூய புன்னகை கொண்டவளே, அழகிய நெற்றியை விரும்பும் பெண், பிரதமை திதியில் {வளர்பிறை முதல்நாள், தேய் பிறை முதல் நாள் ஆகியவற்றில்} ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும்.(9) இப்படியே ஓராண்டு முடியும் வரை அவள் பாலும், பால் கலந்த உணவும் மட்டுமே உண்ண வேண்டும். அதன்பிறகு, பொன்னாலான இருக்கை ஒன்றை ஒரு பிராமணனுக்கு அளிப்பவள் மிக அழகிய நெற்றியை அடைவாள்.(10)
அழகிய புருவங்களை நாடும் இளமைநிறைந்த பெண், துவிதியையில் {வளர்பிறை பனிரெண்டாம் நாள், தேய்பிறை பனிரெண்டாம் நாள் ஆகியவற்றில்} தொடங்கி ஒரு நாள் விட்டு மறுநாள் காய்கறி கலந்த உணவை உண்டு அவள் வாழ வேண்டும்.(11) ஓ! மென்மையான பெண்ணே, இவ்வாறு ஓராண்டை நிறைவு செய்யும் அவள் ஒரு பிராமணனுக்குக் கனிந்த கனிகளையும், உப்பையும், நெய் நிறைந்த பாத்திரங்களையும், உளுந்து நிறை கொண்ட பொன்னையும் தக்ஷிணையாகக் கொடுத்து, அவனை ஆசிகூறும் மந்திரங்களை உரைக்கச் செய்ய வேண்டும்.(12,13)
அழகிய காதுகளைப் பெற விரும்பும் இளமைநிறைந்த பெண், சிரவண {திருவோணம்} நட்சத்திரத்தில் கோதுமை உணவு உண்ண வேண்டும்.(14) இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும், பொன்னாலான இரு காதுகளைத் தெளிந்த நெய்யில் இட்டு, பாலுடன் சேர்த்து அவற்றை ஒரு பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும்.(15)
நெற்றியை எட்டும் நீண்ட அழகிய மூக்கை விரும்பும் காரிகை, மலர்கள் வளரும் காலம் வரை ஒரு நாள் விட்டு மறுநாள் உண்ணா நோன்பிருந்து, எள்ளும் நீரும் காணிக்கை அளிக்க வேண்டும் {எள் செடிக்கு நீரூற்ற வேண்டும்}.(16) மலர்கள் வளர்ந்ததும் அவற்றில் சிலவற்றைக் கொய்து, தெளிந்த நெய்யிலிட்டு அவற்றைக் கொடையளிக்க வேண்டும்.(17)
ஓ! தூய புன்னகை கொண்டவளே, ஓ! அமுதத்தில் பிறந்தவளே, அழகிய கண்களைப் பெற விரும்பும் கற்பும், கல்வியுமுள்ள பெண், ஒருநாள் விட்டு மறுநாள் உண்ணா நோன்பிருந்து, பாலும், தயிரும் உண்டு வாழ வேண்டும்.(18) இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும் தாமரை இலைகளையும், நெய்தல் இலைகளையும் பாலில் இட்டு அவை மிதந்து கொண்டிருக்கும்போதே(19) அவற்றை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கவேண்டும். ஓ! கற்புள்ள பெண்ணே, இந்தக் கொடையால் அவள் கருப்பு மானைப் போன்ற கண்களை நிச்சயம் பெறுவாள்.(20)
அழகிய உதடுகளை அடைய விரும்பும் அறம்சார்ந்த, கற்புள்ள பெண், ஓராண்டு காலம் நவமிகளில் {வளர்பிறை ஒன்பதாம் நாள், தேய்பிறை ஒன்பதாம் நாள் ஆகியவற்றில்} வேண்டப்படாத {பிச்சையில் பெறாத} உணவை உண்டு, மண் குடத்தில் இருந்து நீரைப் பருக வேண்டும். இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும், பவளங்களைக் கொடையளிக்க வேண்டும். ஒரு பெண் இவ்விதியைப் பின்பற்றினால் அவள் நற்பேறு பெற்றவளாகவும், மகன்களைப் பெற்ற அன்னையாகவும், செல்வச்செழிப்புள்ளவளாகவும், பசுக்களை உடையவளாகவும் இருப்பாள், அவளது உதடுகள் கோவைக்கனிகளைப் போல ஒளிரும்.(21-23)
அழகிய பற்களை விரும்பும் அழகிய பெண், வளர்பிறையின் எட்டாம் நாளில் {சுக்லபக்ஷ அஷ்டமியில்} இரு வேளை உணவைத் தவிர்க்க வேண்டும்.(24) ஓ! திறன்மிக்க அறம்சார்ந்த பெண்ணே, கற்புள்ள ஒரு பெண், இவ்வழியில் ஓராண்டை நிறைவு செய்து, வெள்ளியாலான பல்லை பாலில் இட்டு, அவற்றைக் கொடையளிக்க வேண்டும்.(25) ஓ! பாவமற்றவளே, இந்தச் சடங்கைச் செய்யும் கற்புள்ள ஒரு பெண், ஜாதிப்பூக்களைப் போன்ற பற்களையும், நல்லூழையும் {சௌபாக்யத்தையும்}, மகன்களையும் அடைவாள்.(26)
ஓ! அழகிய முகம் கொண்டவளே, அழகிய முகத்தை விரும்பும் பெண், முழு நிலவு {பௌர்ணமி} இரவில் சந்திரன் எழும்போது நீராடி,(27) பாலில் சமைத்த கோதுமையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும். இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும், தூய்மையான வெள்ளியாலான நிலவை முற்றுமலர்ந்த தாமரையில் வைத்து ஒரு பிராமணனுக்குக் கொடுத்து,(28) அவனை நலந்தரும் மந்திரங்களை உரைக்கச் செய்ய வேண்டும். அத்தகைய கொடையால் ஒரு பெண் முழு நிலவைப் போன்ற அழகிய முகத்தைப் பெறுவாள்.(29)
பனங்கனிகளைப் போன்ற திரண்டெழும் முலைகளை விரும்பும் பெண், தசமியில் {வளர்பிறை பத்தாம் நாள், தேய் பிறை பத்தாம் நாள் ஆகியவற்றில்} தன் பேச்சைக் கட்டுப்படுத்தி {மௌன விரதம் இருந்து}, வேண்டப்படாத {பிச்சையில் பெறாத} உணவை உண்ண வேண்டும்.(30) இவ்வாறு அவள் ஓராண்டை நிறைவு செய்து தங்கத்தாலான வில்வக் கனிகள் இரண்டை தற்கட்டுப்பாடுடைய பிராமணன் ஒருவனுக்குத் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.(31) இதனால் ஒரு பெண் திரண்ட முலைகளையும், பெரும் நற்பேற்றையும், பல மகன்களையும் பெறுவாள்.(32)
மெலிந்த வயிற்றை அடைய விரும்பும் பெண், பஞ்சமியில் {வளர்பிறை ஐந்தாம் நாள், தேய்பிறை ஐந்தாம் நாள் ஆகியவற்றில்} தண்ணீருடன் சேர்ந்த உணவை ஒரு வேளை மட்டுமே ஓராண்டு காலம் உண்ண வேண்டும்.(33) ஓராண்டு நிறைவடைந்ததும் தற்காட்டுப்பாடு கொண்ட ஒரு பிராமணனுக்குக் கொடைகளுடன் சேர்ந்து அழகிய ஜாதிக் கொடியையும் கொடுக்க வேண்டும்.(34)
ஓ! இளமை நிறைந்த பெண்ணே, அழகிய கைகளைப் பெற விரும்புபவள், ஒவ்வொரு துவாதசி அன்றும் {வளர்பிறை பனிரெண்டாம் நாள், தேய்பிறை பனிரெண்டாம் நாள் ஆகியவற்றில்} அனைத்து வகைக் காய்கறிகளை மட்டுமே உண்ண வேண்டும்.(35) இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும் அவள் ஒரு பிராமணனுக்குத் தங்கத்தாலான தாமரை ஒன்றையும், நீரில் பிறந்த இரண்டையும் {இரண்டு தாமரைகளையும்} கொடையளிக்க வேண்டும்.(36)
ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவளே, அகன்ற பிட்டங்களை {பின்பாகத்தைப்} பெற விரும்புபவள், ஒவ்வொரு திரயோதசியிலும் {வளர்பிறை பதிமூன்றாம் நாள், தேய்பிறை பதிமூன்றாம் நாள் ஆகியவற்றில்} வேண்டப்படாத {பிச்சையில் பெறப்படாத} உணவை ஒரு வேளை மட்டுமே உண்ண வேண்டும்.(37) ஓ! அழகிய முகம் கொண்டவளே, இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும் பிரஜாபதியின் {பிரம்மனின்} முக வடிவில் உப்புக்குவியலை அமைத்து அதைக் கொடையளிக்க வேண்டும்.(38) அறச்சடங்குகளை அறிந்த பெண் அதன் பிறகு, தங்கத்தாலான அவனது {பிரம்மனின்} வடிவைக் கொடையளிக்க வேண்டும். அஞ்சன மையையும், பிற பொடிகளையும் தவிர்க்க வேண்டும்[1].(39) உடையாத {சிறந்த} ரத்தினங்களையும், செவ்வாடைகளையும் கொடையளிக்க வேண்டும். ஓ! மென்மையான பெண்ணே, இதைச் செய்வதால் அவள் தன் இதயத்தில் விரும்பும் வகையிலான பிட்டத்தை அடைவாள்.(40)
[1] மன்மதநாததத்தர், சித்திரசாலை பதிப்புகளில் அஞ்சன மையையும், பிற பொடிகளையும் இட்டுக் கொள்ள வேண்டும் என்றிருக்கிறது. உ.வே.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில் தவிர்க்க வேண்டும் என்றிருக்கிறது. பொதுவாக விரதக் காலங்களில் மையிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், உ.வே.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பின் துணை கொண்டும் இந்த மொழிபெயர்ப்பு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
இன் சொல் விரும்பும் கற்புள்ள பெண், ஓராண்டு காலம் உப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அல்லது ஒரு மாதமாவது தவிர்க்க வேண்டும், பிறகு ஒரு பிராமணனுக்குப் பணக்கொடையுடன் உப்பையும் கொடுக்க வேண்டும். அந்த அழகிய பெண் இதனால் கிளிகளைக் காட்டிலும் இனிமைமிகுந்த சொற்களைப் பேசுபவளாவாள்.(41,42)
ஓ! சோமனின் மகளே {அருந்ததி}, அழகிய கால்களை அடைய விரும்பும் பெண் ஒவ்வொரு சஷ்டியிலும் {வளர்பிறை ஆறாம் நாள், தேய்பிறை ஆறாம் நாள் ஆகியவற்றில்} நீர்சார்ந்த உணவை உட்கொள்ள வேண்டும்.(43) ஓ! தபங்களில் ஈடுபடுபவளே, அவள் தன் கால்களால் நெருப்பையோ, பிராமணனையோ தீண்டாதிருக்க வேண்டும்; எப்போதாவது அவ்வாறு நேர்ந்து விட்டால் அந்தக் கால்களையோ, பிராமணனையோ துதிக்க வேண்டும்.(44) அறச்சடங்குகளை நன்கறிந்தவளான கற்புள்ள ஒரு பெண் இந்த நோன்பை நோற்கும்போது, தன்னுடைய ஒரு காலால் மற்றொரு காலைக் கழுவக்கூடாது {காலால் கால் தேய்த்துக் கழுவக் கடாது}.(45) ஓ! பாவமற்றவளே, ஓ! கற்புள்ள பெண்ணே, இந்த விரதத்தின் நிறைவில் அவள் தங்கத்தாலான ஆமைகள் இரண்டைத் தெளிந்த நெய்யில் இட்டு அவற்றை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும்.(46) ஓ! அழகிய பெண்ணே, அதன்பிறகு இரண்டு தாமரைகளைக் கீழ்முகமாக வைத்து அவற்றைச் சிவப்பு நிறப் பொருட்களுடன் கலந்து ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும்.(47)
ஓ! தூய பெண்ணே, உடலில் அனைத்து உறுப்புகளையும் அழகாகப் பெற விரும்பும் கற்புள்ள பெண், மலர்கள் மலரும் பருவ காலத்தில் {மாதவிடாயின் போது / ரஜஸ்வலா காலத்தில் என்றும் கொள்ளலாம்} மூன்று இரவுகள் உண்ணாநோன்பு நோற்க வேண்டும்.(48) ஆடி, ஐப்பசி, கார்த்திகை, மாசி மாதங்களில் ஏதாவதொன்றின் முழுநிலவு நாளில் {பௌர்ணமியில்} தன் தந்தை தாயாரை அந்த நாளின் தலைமை தெய்வமாகத் துதிக்க வேண்டும்.(49) ஓ! மதிப்புக்குரிய பெண்ணே, அந்தப் பெண் அந்தக் காலத்தில் கணவனையே தெய்வமாகக் கருதி நாள்தோறும் தெளிந்த நெய்யையும், உப்பையும் ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும்.(50) அவள் தன் வீட்டைத் தூய்மைப்படுத்தி, களிமண்ணால் பூச {சாணத்தால் மெழுகி சுத்தம் செய்ய} வேண்டும். ஓ! தூய்மையானவளே, ஓ! சிறப்புமிக்கப் பெண்ணே, கணவனையே தன் தெய்வமாகக் காணும் காரிகை அந்தக் காலத்தில் சொல்லாலும் பாவம் இழைக்காதவளாக, காய்கறிகளை உண்ணாதவளாக, தூய்மையற்ற உணவேதும் கொடையளிக்காதவளாக இருக்க வேண்டும்" {என்றாள் உமாதேவி}.(51,52)
விஷ்ணு பர்வம் பகுதி – 137 – 081ல் உள்ள சுலோகங்கள் : 52
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |