(ஸ்வர்காத்பாரிஜாதாநயனம்)
Indra fights with Krishna | Vishnu-Parva-Chapter-132-076 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும் இடையில் மீண்டும் போர்; அமைதியை நிலைநாட்டிய கசியபரும் அதிதியும்; துவாரகை வந்த பாரிஜாதம்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உயர்ந்த ஆன்மா கொண்டவனும், மதுசூதனனுமான கிருஷ்ணன், வில்வத்துக்கும், நீருக்கும் தலைவனை {சிவனை} வணங்கிவிட்டுத் தன் தேரில் ஏறிச் சென்றான்; அவன் தன் தேரில் அமர்ந்து கொண்டு புஷ்கரையின் அருகில் தேவர்களுடன் கூடிய தேவமன்னனை {இந்திரனை} அழைத்தான்.(1,2)
நல்லோரின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவனும், பிரகாசமிக்கவனுமான சக்ரனும், ஜயந்தனும் சிறப்புமிக்கக் குதிரைகளால் இழுக்கப்படும் தேர்களில் ஏறினார்கள்.(3) ஓ! குருக்களில் வழித்தோன்றலே, அப்போது தேரில் அமர்ந்திருந்த அந்தத் தேவர்கள் இருவருக்கும் இடையில் விதிவசத்தால் பாரிஜாதத்திற்காகப் போர் நடந்தது. பகைவரை ஒடுக்குபவனான விஷ்ணு, நேராகச் செல்லும் கணைகளால் தேவர்களின் மன்னனுடைய படைவீரர்களைத் தாக்கினான் ஓ! தலைவா, இந்திரன் உபேந்திரனைத் தாக்கவல்லவனாக இருப்பினும் அவனைத் தாக்கவில்லை, பின்னவனும் முன்னவனைத் தாக்கவில்லை.(4-6) ஓ! மன்னா, ஜனார்த்தனன் கூர்மையான பத்து கணைகளால் தேவர்களின் மன்னனுடைய குதிரைகள் ஒவ்வொன்றையும் தாக்கினான்; தேவர்களில் முதன்மையான வாசவனும், வில்லில் இருந்து ஏவப்பட்ட பயங்கரக் கணைகளால் சைப்யத்தையும், பிற குதிரைகளையும் மறைத்தான்.(7,8) கிருஷ்ணன் ஆயிரங்கணைகளால் (இந்திரனின்) யானையையும், பலம்வாய்ந்தவனான பலனை {பலாசுரனைக்} கொன்றவன் {இந்திரன்} கருடனையும் மறைத்தனர்.(9)
ஓ! பரதரின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, உயரான்மாவும், பகைவருக்குப் பயங்கரனுமான நாராயணனும், தேவர்களின் மன்னனும் இவ்வாறே தங்கள் தேர்களில் அமர்ந்து கொண்டு ஒருவரோடொருவர் போரிட்டபோது, நீரில் மூழ்கும் படகைப் போலப் பூமி நடுங்கினாள், திசைகள் அனைத்தும் ஒளியில் பொதிந்திருந்தன.(10,11) மலைகள் நடுங்கின, நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன, நல்ல மனிதர்கள் பூமியில் விழுந்தனர்.(12) ஓ! மன்னா, நூற்றுக்கணக்கான புயல்கள் வீசின. அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஆறுகள் எதிர் திசையில் பாய்ந்தன, கடுங்காற்று வீசியது, எரிகொள்ளிகள் ஒளியிழந்து விழுந்தன, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் உயிரினங்கள் மீண்டும் மீண்டும் தன்னினைவை இழந்தன. ஓ! மன்னா, நீரிலும் கூட நெருப்பு எரிந்தது, வானத்தில் கோள்களுடன் கோள்கள் போரிட்டன.(13-15) நூற்றுக்கணக்கான விண்மீன்கள் வானத்தில் இருந்து பூமியில் விழுந்தன. திசைகளின் யானைகளும் {திக்கஜங்களும்}, பூமியில் உலவும் யானைகளும் நடுங்கத் தொடங்கின.(16) கழுதையைப் போன்று சாம்பல் நிறம் கொண்டவையும், பயங்கரக் குருதியைப் பொழிபவையுமான மேகங்கள் பெருமுழக்கத்துடன் வானை மறைத்தன.(17) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, வீரர்களான அவ்விரு தேவர்களும் போரிடுவதைக் கண்ட பூமியும், சொர்க்கமும், ஆகாயமும் காட்சியில் இருந்து மறைந்தன.(18) அந்நேரத்தில் பூமியின் நன்மைக்காக முனிவர்கள் மந்திரங்களை ஓதத்தொடங்கினர், பிராமணர்களும் தியானங்களில் ஈடுபட விரைந்தனர்.(19)
அப்போது பெருஞ்சக்திவாய்ந்த பிரம்மன், கசியபரிடம், "ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவனே, உன் மனைவியான அதிதியுடன் சென்று உன் மகன்கள் இருவரையும் தடுப்பாயாக" என்றான்.(20)
அம்முனிவர் {கசியபர்}, தாமரையில் பிறந்த தேவனிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு மனிதர்களில் முதன்மையானவனிடம் {கிருஷ்ணனிடம்} தன் தேரில் சென்றார்.(21)
அறத் தத்துவங்களை நன்கறிந்தவர்களும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவர்களும், பகைவரைக் கொல்பவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களுமான அந்த வீரர்கள் இருவரும் போர்க்களத்தில் கசியபரையும், அதிதியையும் கண்டு தங்கள் தேர்களில் இருந்து இறங்கி, ஆயுதங்களைக் கைவிட்டுத் தங்கள் பெற்றோரின் பாதங்களை வணங்கினர்.(22,23)
அப்போது அதிதி அவர்கள் இருவரின் கரங்களையும் பற்றிக் கொண்டு, "ஒரே தாய்தந்தையருக்குப் பிறந்தும், உடன்பிறவாதவர்களைப் போல ஏன் நீங்கள் ஒருவரையொருவர் கொல்ல முயல்கிறீர்கள்?(24) {சிறு காரியத்திற்காக இந்தப் பயங்கரச் செயலைச் செய்கிறீர்கள். இஃது என் மகன்களுக்கு எந்த வகையிலும் தகுந்ததல்ல என்பதை நான் காண்கிறேன்}.(25) நடந்தது போகட்டும். தாயின் சொற்களுக்கும், பெற்ற தந்தையின் சொற்களுக்கும் கீழ்ப்படிய நீங்கள் நினைத்தால் உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு நான் சொல்வதைக் கேட்பீராக" என்றாள்.(26)
பெருஞ்சக்திவாய்ந்தவர்களான அந்தத் தேவர்கள் இருவரும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிய படியே ஜானவி {கங்கை} ஆற்றங்கரைக்குச் சென்றனர்.(27)
சக்ரன், "ஓ! கிருஷ்ணா, அண்டத்தைப் படைத்த தலைவனும், அரசில் {தேவலோக அரசில்} என்னை நிறுவியவனும் நீயே. இங்கே என்னை நிறுவிவிட்டு இப்போது ஏன் நீயே என்னை அவமதிக்கிறாய்?(28) ஓ! தாமரைக் கண்ணா, என்னை அண்ணனாக ஏற்றுக் கொண்ட நீ இப்போது என்னை ஏன் அழிக்க விரும்புகிறாய்?" என்று கேட்டான்.(29)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறகு அவர்கள் இருவரும் ஜானவியாற்றின் நீரில் நீராடிவிட்டு உறுதியான நோன்புகளைக் கொண்ட உயரான்ம கசியபரிடமும், அதிதியிடமும் திரும்பி வந்தனர்.(30) தாமரைக் கண்களைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும் தங்கள் தாய்தந்தையருடன் இணைந்த அந்த இடத்திற்கு "அன்புக்குரியோர் இணையும் களம் {ப்ரியஸங்கமனம்}" என்று முனிவர்கள் பெயர்சூட்டினர்.(31) ஓ! குருக்களின் வழித்தோன்றலே, அழகிய வடிவங்களில் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த நல்ல தேவர்களின் {தேவகணங்களின்} முன்னிலையில் கிருஷ்ணன் இந்திரனின் பாதுகாப்புக்கான உறுதியை அளித்ததும், அவர்கள் தங்கள் தேர்களில் {விமானங்களில்} ஏறி தேவலோகத்திற்குச் சென்றனர்.(32,33) ஓ! மன்னா, கசியபர், அதிதி, இந்திரன், உபேந்திரன் ஆகியோர் ஒரே தேரில் அமர்ந்து தேவலோகத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(34) ஓ! குருவின் வழித்தோன்றலே, அனைத்துக் குணங்களையும் கொண்ட நல்ல தேவர்கள் சக்ரனிடம் வந்து தங்கள் இருக்கையில் அமர்ந்த பிறகு,(35) அறத்தையே எப்போதும் விரும்புபவளான சசி, அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவர்களான உயரான்ம கசியபரையும், அவரது மனைவியையும் {அதிதியையும்} துதித்தாள்.(36)
அந்த இரவு கடந்ததும், அறக் கோட்பாடுகளை அறிந்தவளான அதிதி, உயிரினங்களுக்கு எப்போதும் நன்மையை விளைவிக்கும் ஹரியிடம் {கிருஷ்ணனிடம்},(37) "ஓ! உபேந்திரா, இந்தப் பாரிஜாதத்தை எடுத்துக் கொண்டு, துவாரகை சென்று, உன் மனைவியுடன் சேர்ந்து மங்கலச் சடங்கை {புண்யக நோன்பை} நிறைவேற்றுவாயாக(38). ஆனால், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தச் சடங்கு நிறைவடைந்ததும், நீ இந்த மரத்தைத் திரும்பவும் கொண்டு வந்து நந்தனவனத்தில் முன்பு போலவே வைப்பாயாக" என்றாள்.(39)
இதைக் கேட்ட கிருஷ்ணன், அறம் சார்ந்த குணம் கொண்டவளென நாரதரால் சொல்லப்பட்டவளும், சிறப்புமிக்கவளுமான தேவர்களின் அன்னையிடம் {அதிதியிடம்}, "அவ்வாறே ஆகட்டும்" என்றான்[1].(40) அதன் பிறகு ஜனார்த்தனன், தன் அன்னையையும், தந்தையையும், சசியுடன் கூடிய மஹேந்திரனையும் வணங்கிவிட்டு, துவாரகை செல்லும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினான்.(41) புலோமனின் நன்மகள் {சசிதேவி}, கிருஷ்ணனின் மனைவியருக்கென அவனிடம் அழகிய ஆபரணங்கள் பலவற்றைக் கொடுத்தாள்.(42) பெரும் மனம் கொண்ட புலோமனின் மகள் {சசி}, மாதவனின் பதினாறாயிரம் மனைவியருக்கும் பல்வேறு வகையான தெய்வீக ரத்தினங்களையும், பல்வேறு வண்ணங்களிலான ஆடைகளையும் கொடுத்து அனுப்பினாள். பெருஞ்சக்திமிக்கவனும், பிரகாசமிக்கவனுமான கேசவன், அந்தப் பரிசுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, வானுலாவிகளில் நல்லவர்களால் {தேவகணங்களால்} கௌரவிக்கப்பட்டு, பிரத்யும்னனுடனும், சாத்யகியுடனும் துவாரகைக்குப் புறப்பட்டு, ரைவதக மலையை அடைந்தான்.(43-45) மரங்களில் முதன்மையான பாரிஜாதத்தை அங்கே நிறுத்தி வைத்த மாதவன், வாயில்களைக் கொண்ட {நகரமான} துவாரகைக்குச் சாத்யகியை அனுப்பிவைத்தான்.(46)
[1] மூன்று பதிப்புகளிலும் ஒப்பு நோக்கப்பட்ட இந்த ஸ்லோகம் சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், "இதைக் கேட்ட கிருஷ்ணன், சிறப்புமிக்கவளான தேவர்களின் அன்னையிடம் {அதிதியிடம்}, "அவ்வாறே ஆகட்டும்" என்றான். நாரதரும் அதற்கு உடன்பட்டார்" என்றிருக்கும்.
கிருஷ்ணன், "ஓ! பெருங்கரங்களைக் கொண்ட பைமர்களின் மன்னா {பீம குல சாத்யகி / பைமவர்த்தனா}, மஹேந்திரனின் வசிப்பிடத்தில் இருந்து பாரிஜாதத்தை இங்கே நான் கொண்டு வந்திருக்கிறேன் என்ற செய்தியை பைமர்களிடம் {பீம குலத்தோரிடம்} சொல்வாயாக.(47) மரங்களில் சிறந்த இந்தப் பாரிஜாதத்தை நான் இன்றே துவாரகைக்குக் கொண்டு செல்லப் போகிறேன். நகரம் மங்கல அடையாளங்களால் அலங்கரிக்கப்படட்டும்" என்றான்.(48)
ஓ! தலைவா, இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட சாத்யகி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். அவன், கிருஷ்ணனின் சொற்களைப் பைமர்களிடம் சொல்லிவட்டு, குடிமக்களுடனும், சாம்பனின் தலைமையிலான இளவரசர்களுடனும் சேர்ந்து திரும்பி வந்தான்.(49) தேர்வீரர்களில் முதன்மையான பிரத்யும்னன், பாரிஜாதத்தைக் கருடனின் முதுகில் எடுத்த வைத்து, அவனை {கிருஷ்ணனை} முன்னிட்டுக் கொண்டு, அழகிய துவாரகா நகருக்குள் நுழைந்தான்.(50) சைப்யத்தாலும், பிற குதிரைகளாலும் இழுக்கப்படும் தேரில் ஹரி {கிருஷ்ணன்} அமர்ந்திருந்தான், சாத்யகியும், சாம்பனும் மிகச் சிறந்த மற்றொரு தேரில் அமர்ந்து அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(51) ஓ! மன்னா, விருஷ்ணி வம்சத்தைச் சேர்ந்த பிறரும் கேசவனின் செயலை உயர்வாகப் புகழ்ந்தவாறே பல்வேறு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.(52)
ஆனர்த்தத்தின் யது குடிமக்கள், ஒப்பற்ற சக்தி கொண்ட கேசவனின் அற்புதமிக்க அருஞ்செயல்களைச் சாத்யகியிடம் இருந்து கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(53) தெய்வீக மலர்களால் நிறைந்திருக்கும் அந்த மரத்தை மீண்டும் மீண்டும் கண்டும் அவர்களால் மகிழ்ச்சியில் நிறைவை எட்ட முடியவில்லை.(54) விளையாட்டுத்தனமான பறவைகள் நிறைந்ததும், மிகச் சிறந்ததும், அற்புதமானதும், சிந்தனைக்கு அப்பாற்பட்டதுமான அந்த மரத்தைக் கண்ட முதிய பெண்களின் முதுமையும் மறைந்துவிட்டது {அவர்களுக்கு இளமை திரும்பியது}.(55) அந்த மரத்தின் நறுமணத்தை முகர்ந்த குருடர்கள் தெய்வீகப் பார்வையைக் கொடையாகப் பெற்றனர், பிணியுற்றிருந்தவர்கள் தங்கள் நோய்களில் இருந்து விடுபட்டனர்.(56) அந்த மரத்தில் இருந்த குயில் போன்ற பறவைகளின் இனியகுரலைக் கேட்டு மகிழ்ச்சியில் நிறைந்த ஆனர்த்தவாசிகள் ஜனார்த்தனனை வணங்கினர்.(57) தொலைவில் வாழ்ந்து வந்த நகரத்து மக்களும் அந்த மரத்தில் இருந்து உண்டாகும் இனிய இசையைக் கேட்டனர்.(58) அந்த நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் அந்தப் பாரிஜாத மரத்தில் இருந்து தான் விரும்பிய நறுமணத்தை அடைந்தான்.(59)
யது குலத்துக் கிருஷ்ணன், இவ்வாறு அழகிய துவாரகா நகருக்குள் நுழைந்து, வசுதேவனையும், தேவகியையும்,(60) தன் அண்ணனான பலனையும் {பலராமனையும்}, குகுர மன்னனையும் {உக்ரசேனனையும்}, தேவர்களுக்கு ஒப்பானவர்களும், மதிக்கத் தகுந்தவர்களுமான பிற யாதவர்களையும் சந்தித்தான்.(61) நித்தியனும், தெய்வீகமானவனும், கதனின் அண்ணனுமான மதுசூதனன், அவர்கள் அனைவரையும் முறையாகக் கௌரவித்து, விடைபெற்றுக் கொண்டு, தன் வசிப்பிடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். அவன், மரங்களில் சிறந்த பாரிஜாதத்தை எடுத்துக் கொண்டு சத்யபாமாவின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(62,63) தெய்வீகமான சத்யபாமா அதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தாள்; அவள் உபேந்திரனைத் துதித்து அந்தப் பெரும் பாரிஜாத மரத்தை ஏற்றுக் கொண்டாள்.(64)
ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்த மரம் வாசுதவேனின் விருப்பத்திற்கிணங்க சிறிய வடிவை ஏற்றது. அஃது அனைவருக்கும் பேராச்சரியத்தை அளித்தது.(65) ஓ! ஜனமேஜயா, சில வேளைகளில் பெரும் வடிவை ஏற்றுத் துவாரகை முழுவதையும் அது மறைத்தது, அதன் பிறகு மீண்டும் கட்டைவிரல் அளவை அடைந்து {உள்ளங்கையில்} அனைவராலும் அடையக்கூடியதாக மாறியது.(66) இவ்வாறு தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட சத்யபாமா, புண்யகச் சடங்கைச் செய்வதற்கான பொருட்கள் அனைத்தையும் திரட்டத் தொடங்கினாள்.(67) கிருஷ்ணன், ஜம்பூத்வீபத்தில் அடையக்கூடிய அனைத்தையும் திரட்டினான். ஓ! குருவின் வழித்தோன்றலே,{68) தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனான கேசவன் சத்யாவுடன் {சத்யபாமாவுடன்} அமர்ந்து நோன்பை நோற்பதற்காக நாரத முனிவரை நினைத்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(69)
விஷ்ணு பர்வம் பகுதி – 132 – 076ல் உள்ள சுலோகங்கள் : 69
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |