Wednesday 16 September 2020

ருக்மிணியைக் கடத்திய கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 116 – 060

(ருக்மிணீஹரணம்)

An account of Rukshmi: Krishna takes away Rukshmi | Vishnu-Parva-Chapter-116-060 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ருக்மிணியை அபகரித்துச் சென்ற கிருஷ்ணன்; ஜராசந்தனுடனும், சிசுபாலனுடனும் கடும்போர் செய்த யாதவர்கள்...

Krishna kidnaps Rukmini

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதேவேளையில் வலிமைவாய்ந்த ஜராசந்தன், சேதிகளின் மன்னனை நிறைவடையச் செய்யும் வகையில், "மன்னன் சிசுபாலனுக்கும், பீஷ்மகனின் மகளான ருக்மிணிக்கும் இடையில் பொன் நாணய, ஆபரணக் கொடைகளுடன் திருமணம் நடைபெறும்" என அறிவித்தான்.(1,2) பெரும் பலம்வாய்ந்தவனும், ஆயிரங்கண் தேவனைப் போன்று மாயைகளில் தேர்ந்தவனும், தந்தவக்ரனின் மகனுமான சுவக்தரன்,(3) பெருஞ்சக்தியும், வலிமையும் கொண்டவனும், ஓர் அக்ஷௌஹிணி படைவீரர்களின் தலைவனுமான சுதேவன், பௌண்ட்ர மன்னன் வாசுதேவனின் மகன்,(4) பெருஞ்சக்திவாய்ந்த ஏகலவ்யனின் மகன், பாண்டிய மன்னனின் மகன், கலிங்கத்தின் பலம்வாய்ந்த மன்னன்,(5) கிருஷ்ணனின் பகைவனான மன்னன் வேணுதாரி, அம்சுமான், கிரதன் சுருததர்மன்,(6) பகைவரைப் புறமுதுகிடச் செய்யும் காளிங்கன், காந்தார மன்னன், பெரும் வீரமிக்கவனான கௌசம்பியின் மன்னன்,(7) பெரும்படையுடன் கூடிய பகதத்தன், சலன், பலம்வாய்ந்தவனான சால்வன், பெரும்படையுடன் கூடிய பூரிஸ்ரவஸ், வீரனான குந்திவீர்யன் ஆகியோரையும் இதை ஆதரிக்குமாறு அவன் {ஜராசந்தன்} தூண்டினான்[1]" என்றார்.(8)

[1] ஸ்லோக எண்கள் 7,8 ஆகியவற்றில் உள்ள இந்தச் செய்தியானது, சித்திரசாலை பதிப்பு, உவேஎஸ்.ராமானுஜ ஐயங்கரின் பதிப்பு என இரண்டு பதிப்புகளிலும் உள்ள செய்தியோடு ஒப்பிடப்பட்டு இங்கே மாற்றி அளிக்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளவாறே மொழிபெயர்த்திருந்தால், "காளிங்கன், காந்தார மன்னன், பெரும் பலம்வாய்ந்தவனும், காசியின் மன்னனுமான பிரகாசன் ஆகியோரையும், மேலும் பிறரையும் அவன் {ஜராசந்தன்} போரில் ஈடுபடத் தூண்டினான்(7,8)" என்று இந்த ஸ்லோகங்களின் செய்தி அமைந்திருக்கும்.

ஜனமேஜயன், "ஓ! வேதங்களை அறிந்த இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பிரகாசமிக்கவனான மன்னன் ருக்மி எந்நாட்டில் பிறந்தான்? எக்குலத்தில் பிறந்தான்?" என்று கேட்டான்.(9)


வைசம்பாயனர், "அரசமுனியான யாதவனின் மகன் விதர்ப்பன், விந்திய மலைக்குத் தென்புறத்தில் விதர்ப்பம் என்ற பெயரில் ஒரு நகரத்தை அமைத்தான்.(10) பலம்வாய்ந்தவர்களும், சக்திமிக்கவர்களுமான கிரதன், {கைசிகன்} முதலிய அவனுடைய மகன்கள் அனைவரும் தனித்தனி நாடுகளின் மன்னர்களாகி, தனித்தனி குலங்களை நிறுவினர்.(11) ஓ! மன்னா, அவர்களில் விருஷ்ணிகள் பீமனின் குலத்தில் பிறந்தனர். அன்சுமான், கிரதனின் குலத்திலும், ஹிரண்யரோமன் என மக்களால் அழைக்கப்படுபவனும், தக்காணத்தின் மன்னனுமான பீஷ்மகன் கைசிகனின் குலத்திலும் பிறந்தனர். குண்டின நகரத்தில் {குண்டினபுரத்தில்} வாழ்பவனும், அகஸ்தியரால் தலைமை தாங்கப்படும் தெற்குப் பகுதியை ஆள்பவனுமான மன்னன் பீஷ்மகனுக்கு,(12,13) ருக்மி என்ற பெயரில் ஒரு மகனும், ருக்மிணி என்ற பெயரில் ஒரு மகளும் இருந்தனர். பெருஞ்சக்திவாய்ந்த ருக்மி, துருமனிடமிருந்து தெயவீக ஆயுதங்களையும்,(14) ஜமகதக்னியின் மகனான ராமரிடமிருந்து {பரசுராமரிடமிருந்து} பிரம்மாயுதத்தையும் {பிரம்மாஸ்திரத்தையும்} அடைந்தான். அற்புதச் செயல்களைச் செய்பவனான கிருஷ்ணனின் முன்பு எப்போதும் அவன் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தான்.(15) ஓ! மன்னா, பெரும்பிரகாசம் கொண்டவனான வாசுதேவன், பூமியில் ஒப்பற்ற அழகு படைத்த ருக்மிணியைக் குறித்துக் கேள்விப்பட்ட உடனேயே அவளை அடைய விரும்பினான்.(16) பலமும், சக்தியும் கொண்ட ஜனார்த்தனனைக் குறித்துக் கேள்விப்பட்ட ருக்மிணியும் "அவர் மட்டுமே என் கணவராக முடியும்" என்று {அவனை} விரும்பினாள்.(17) பெருஞ்சக்தி வாய்ந்த கிருஷ்ணன் ருக்மிணியை வேண்டினாலும், பெரும்பலமிக்கவனும், கம்சனின் மரணத்தால் துயரில் நிறைந்தவனுமான ருக்மி, "இவன் அவனுடைய {கம்ஸனின்} பகைவன்" என்று நினைத்து, அவளை அவனுக்குக் கொடுக்காதிருந்தான்.(18)

பேரரசன் ஜராசந்தன், சுனீதனின் {தமகோஷனின்} மகனான சேதி மன்னன் சிசுபாலனுக்காகப் பெரும்பலம்வாய்ந்தவனான பீஷ்மகனிடம் அந்தக் கன்னிகையை {ருக்மிணியை} வேண்டினான்.(19) மகத மாகாணத்தில் முன்னர்க் கிரிவ்ரஜ நகரத்தை அமைத்த மன்னன் பிருஹத்ரதன், சேதி மன்னனான வசுவின் மகனாவான்.(20) அவனுடைய குலத்திலேயே பெரும்பலம் வாய்ந்த ஜராசந்தன் பிறந்திருந்தான்; சேதி மன்னன் தமகோஷனும் அதே குலத்திலேயே பிறந்தவனாவான்.(21) அந்தத் தமகோஷன், {கிருஷ்ணனின் தந்தையான} வசுதேவனின் தங்கை ஸ்ருதஸ்ரவையிடம்,(22) பேராற்றல் படைத்தவர்களான சிசுபாலன், தசக்ரீவன், ரைப்யன், உபதிசன், பலி எனும் ஐந்து மகன்களைப் பெற்றான்.(23) மன்னன் சுனீதன் {தமகோஷன்}, தன் குலத்தில் பிறந்தவனான ஜராசந்தனிடம் தன் மகன் சிசுபாலனைக் கொடுத்தான், அவனும் {ஜராசந்தனும்} தன் மகனைப் போலவே அவனை {சிசுபாலனை} வளர்த்து வந்தான்.(24) ஜராசந்தனின் பாதுகாப்பில் வளர்ந்த சேதி மன்னன் சிசுபாலன், பெருஞ்சக்திவாய்ந்தவனும், விருஷ்ணிகளின் பகைவனுமான அவனை {ஜராசந்தனை} நிறைவடையச் செய்வதற்காக அவர்களுடன் {விருஷ்ணிகளுடன்} சச்சரவு செய்து வந்தான்.(25) கம்சன், ஜராசந்தனின் மருமகனாவான். அரங்கத்தில் அவன் {கம்சன்} கிருஷ்ணனால் கொல்லப்பட்டதன் காரணமாக அவனுக்கும் {ஜராசந்தனுக்கும்}, விருஷ்ணிகளுக்கும் இடையில் பகை ஏற்பட்டது.(26) அந்த நேரத்தில்தான் அந்த மகத மன்னன் {ஜராசந்தன்}, சுனீதனின் மகனான சிசுபாலனுக்காகப் பலம் வாய்ந்த பீஷ்மகனிடம் இருந்து ருக்மிணியைப் பெற விரும்பினான்.(27) அதன் பேரில் பேரரசன் ஜராசந்தன், சிசுபாலனுடனும், தந்தவக்ரனுடனும் விதர்ப்பத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.(28) நுண்ணறிவுமிக்கப் பௌண்ட்ர மன்னன் வாசுதேவனும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களான அங்க, வங்க, கலிங்க மன்னர்களும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(29) ருக்மி, அந்த மன்னர்களை எதிர்கொண்டழைத்துக் கௌரவித்து அவர்களைத் தன் நகரத்திற்கு வரவேற்றான்.(30)

ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும், தங்கள் தந்தையின் தங்கையை {தங்கள் அத்தையை} நிறைவடையச் செய்வதற்காக வலிமைமிக்க விருஷ்ணி குலத் தேர்வீரர்களுடனும், தங்கள் படையுடனும் அந்த நகரத்திற்கு {குண்டினபுரத்திற்குச்} சென்றனர்.(31) கிரத, கைசிகர்களின் நாட்டை ஆண்ட மன்னன் {பீஷ்மகன்}, நகரத்திற்கு வெளியே வாழ்ந்து வந்த அந்த வழிபடத்தகுந்த யாதவர்களை {ராமகிருஷ்ணர்களை} முறையாக வரவேற்று அழைத்துச் சென்றான்.(32) மங்கலக் குறிகள் அனைத்தையும் கொடையாகக் கொண்டவளும், புனிதச் சடங்குகளைச் செய்த பிறகு அழகில் ஒளிர்ந்தவளுமான ருக்மிணி, திருமணத்திற்கு முந்தைய நாளில் {ஜேஷ்ட /கேட்டை நட்சத்திரத்தில்}, சசிதேவியை {இந்திராணியை} வழிபடுவதற்காக, நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் படைவீரர்களின் பாதுகாப்புடன் தன் வீட்டில் இருந்து இந்திரனின் கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றாள்.(33,34)  எரிதழலைப் போன்றவளும், பெண்களில் முதன்மையானவளும், சந்திரக் கதிர்களைப் போன்று மென்மையானவளும், அழகியரில் சிறந்தவளுமான ருக்மிணியைப் பூமியில் இறங்கிவந்த மாயா தேவியையோ, பாதாளத்தில் இருந்து புறப்பட்ட பூமாதேவியையோ, தன் மனைவியாவதற்காகவே தாமரையைவிட்டு இறங்கி வந்த ஸ்ரீதேவியையோ போல அந்தக் கோவிலின் அருகில் அவன் {கிருஷ்ணன்} கண்டான்.(35,36)  கருநீலவண்ண மேனியையும்[2], அகன்ற விழிகளையும் கொண்ட காரிகையான ருக்மிணி, தேவர்களின் மனத்தாலும் காணமுடியாத வகையில் தேரில் அமர்ந்திருந்தாலும் அவளைக் கிருஷ்ணனால் காண முடிந்தது. அவளுடைய உதடுகளும், கடைக்கண்களும் தாமிரம்போல {சிவந்து} இருந்தன, தொடைளும், இடையும், மார்பும் திரண்டிருந்தன,(37,38) அவளுடைய மேனி நெடியதாக இருந்தாலும் மெலிதாகவும், அழகாகவும் இருந்தது; அவளுடைய முகம் நிலவைப் போன்று இருந்தது. புருவங்கள் எழில்மிக்கனவாகவும், கூந்தல் சுருள் முடிகளைக் கொண்டு கருமையானதாகவும் இருந்தன, அவளுடைய அழகு காண்பதற்கினியதாக இருந்தது. நிகர்வரிசை கொண்ட வெண்பற்களால் அவளது முகம் அழகூட்டப்பட்டிருந்தது.(39,40) பெண்களில் முதன்மையானவளும், நீல ஆடை உடுத்தியிருந்தவளும், அக்கால உலகில் அழகிலும், புகழிலும், அருளிலும் ஒப்பற்றவளாகத் திகழ்ந்தவளுமான அந்த அழகிய ருக்மிணியைக் கண்டதும் அவளிடம் ஈர்ப்புக் கொண்ட கிருஷ்ணனின் மனத்தில் நெய்யூட்டப்படும் நெருப்பைப் போலப் பெருஞ்சக்தியுடன் ஆசை வளர்ந்தது.(41,42) கேசவன், விருஷ்ணிகளிடம் ஆலோசிப்பதற்கு முன் ராமனிடம் ஆலோசனை செய்து விட்டு, அவளைக் {ருக்மிணியைக்} களவு செய்வதெனத் தன் மனத்தில் தீர்மானித்தான்.(43)

[2] சித்திரசாலை பதிப்பில், "பதினாறு வயதுடைவள், வெண்ணிறம் கொண்டவள் என்றிருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவள் கிட்டத்தட்ட கருப்பாக இருந்தாள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "சியாமம் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் இயல்பான பொருள் கருப்பு என்பதாகும். இருப்பினும், சியாமம் என்பது திருமணமாகாத கன்னிப்பெண் என்றும், பதினாறு வயதுடைய சிறிய பெண் என்றும்கூடப் பொருள் தரும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அவள் உத்தம லக்ஷணம் வாய்ந்த கார்மேனியள்" என்றிருக்கிறது.

ருக்மிணி, பூஜையை முடித்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்ததும், அவளது மெய்க்காப்பாளர்கள் அனைவரையும் தாக்கிவிட்டு அவளைப் பலவந்தமாகத் தன் தேருக்கு அபகரித்துச் சென்றான் ஜனார்த்தனன்.(44) ராமனும் {பலராமனும்}, பெரும் மரமொன்றை வேரோடு பிடுங்கிப் பகைவரைத் தாக்கி யமலோகத்திற்கு விருந்தினர்களாக அவர்களை அனுப்பத் தொடங்கினான்.(45) பலதேவனின் ஆணையின் பேரில் தாசார்ஹர்களும் முழுமையாக ஆயுதந்தரித்தனர்; குதிரைகளுடனும், யானைகளுடனும், ஏற்றப்பட்ட கொடிகளுடன் கூடிய தேர்கள் ராமனைச் சூழ்ந்து கொண்டன.(46) கிருஷ்ணன், ருக்மிணியுடன் துவாரகைக்கு விரைந்து சென்றான். போருக்கான பொறுப்பை ராமன் {பலராமன்}, யுயுதானன் {சாத்யகி},(47) அக்ரூரன், விப்ருது, கதன், கிருதவர்மன், சக்ரதேவன், சுதேவன், பெருஞ்சக்திவாய்ந்த சாரணன்,(48) நிவ்ருதசத்ரு, வீரமிக்கப் பங்ககாரன், விதூரதன், உக்ரசேனனின் மகன் கங்கன், சத்யத்யும்னன்,(49) ராஜாதிதேவன், மிருதுரன், பிரஸேனன், சித்ரகன், அதிதாந்தன், பிரஹத்துர்கன், ஸ்வபல்கன், சத்யகன், பிருது முதலிய விருஷ்ணி, அந்தகக் குல வீரர்கள் ஆகியோரிடம் {அந்தப் போருக்கான பொறுப்பை} மதுசூதனன் ஒப்படைத்திருந்தான்.(50-51)

கவசந்தரித்தவர்களும், பலம்வாய்ந்தவர்களுமான தந்தவக்ரன், சிசுபாலன், ஜராசந்தன் ஆகியோர் ஜனார்த்தனனைக் கொல்வதற்காகக் கோபத்துடன் புறப்பட்டனர்.(52) பெரும்பலம்வாய்ந்த சேதி மன்னனும் {தமகோஷனும் / சுனீதனும்} கூட, அங்க, வங்க கலிங்க, பௌண்ட்ர மன்னர்களுடனும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் சகோதரர்களுடனும் புறப்பட்டுச் சென்றான்.(53) வாசவன் தலைமையிலான தேவர்களைப் போலச் சங்கர்ஷணனின் {பலராமனின்} தலைமையிலான பெருஞ்சக்திவாய்ந்த விருஷ்ணிகளும் தங்கள் பகைவருடன் கோபத்துடன் போரிட்டனர்.(54)

அந்தப் பெரும்போரில் சாத்யகி, தங்களைத் தாக்கிய பலம்வாய்ந்த ஜராசந்தனை ஆறு நாராசங்களால் வேகமாகத் துளைத்தான்.(55) அக்ரூரன் ஒன்பது கணைகளால் தந்தவக்ரனைத் தாக்கியபோது, அந்தக் காரூஷ மன்னன் வேகமாகச் செல்லும் பத்துக் கணைகளால் அவனைப் பதிலுக்குத் தாக்கினான்.(56) விப்ருதுவின் ஏழு கணைகளால் தாக்கப்பட்டவனும், பலம்வாய்ந்தவனுமான சிசுபாலன், பதிலுக்கு எட்டுக் கணைகளால் அவனை {விப்ருதுவைத்} துளைத்தான்.(57) அப்போது கவேஷணன் ஆறு கணைகளாலும், அதிதாந்தன் எட்டாலும், பிருஹத்துர்கன் ஐந்து கணைகளாலும் சேதி மன்னனைத் தாக்கினர். அவனும் அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து ஐந்து கணைகளால் பதிலுக்குத் தாக்கி, நான்கு கணைகளால் விப்ருதுவின் நான்கு குதிரைகளைக் கொன்றான்.(58,59) பகைவர்களைக் கொல்பவனான சேதி மன்னன், அடுத்தக் கணத்திலேயே ஒரு பல்லத்தால் பிருஹத்துர்கனின் தலையைக் கொய்து, கவேஷணனின் தேரோட்டியை யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(60) பெரும்பலம்வாய்ந்த விப்ருது, குதிரைகள் கொல்லப்பட்ட தன்னுடைய தேரைக் கைவிட்டு, பிருஹத்துர்கனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான்.(61) அவனுடைய {பிருஹத்துர்கனின்} தேரோட்டி, கவேஷணனின் தேரில் ஏறிக் கொண்டு வேகமாகச் செல்லும் அவனுடைய குதிரைகளைச் செலுத்தினான்.(62)

அப்போது கரங்களில் விற்களுடனும், கணைகளுடனும் இருந்த யாதவர்கள், தேரில் ஆடிக் கொண்டிருந்தவனான சுனீதனை {தமகோஷனை / சிசுபாலனை} கணைமாரியால் மறைத்தனர்.(63) அந்தப் போர்க்களத்தில் தந்தவக்ரனின் மார்பைக் கணைகளால் துளைத்த சக்ரதேவன், மேலும் ஐந்து கணைகளால் பிரகாசனையும் தாக்கினான்.(64) அவனும் {சக்ரதேவனும்} அவ்விருவரின் {தந்தவக்ரன், பிரகாசன் ஆகியோரின்} பத்துக் கணைகளால் முக்கிய அங்கங்களைத் துளைக்கப்பட்டுக் காயமடைந்தான். அதன்பிறகு சிசுபாலனின் தம்பியான பலி பத்துக் கணைகளால் சக்ரதேவனுக்கும்,(65) ஐந்தால் விதூரதனுக்கும் காயமேற்படுத்தினான். அப்போது பெருஞ்சக்திவாய்ந்த விதூரதன் கூராக்கப்பட்ட ஆறு கணைகளால் பலியைத் தாக்கி, பதிலுக்கு முப்பது கணைகளால் தானே காயமடைந்தான்.(66)

கிருதவர்மன், மூன்று கணைகளால் பௌண்ட்ர வாசுதேவனின் மகனைத் துளைத்துத் தேரோட்டியைக் கொன்று, அவனுடைய கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான். இதைக் கண்ட பௌண்ட்ரன் ஆறு கணைகளால் பதிலுக்கு அவனைத் தாக்கி,(67,68) ஒரு பல்லத்தால் அவனுடைய வில்லையும் அறுத்தான். நிவ்ருதசத்ரு, கூரிய கணைகளால் கலிங்க மன்னனைத் தாக்கினான். கலிங்க மன்னனும், ஓர் இரும்பு உலக்கையால் அவனுடைய தோளைத் தாக்கினான்.(69) வீரமிக்கவனான கங்கன் {உக்ரசேனனின் மகன்} தன் யானையை அங்க மன்னனின் யானை மீது பாயச் செய்து உலக்கையால் அவனது மேனியில் காயமேற்படுத்தினான். அங்கனும், தன் கணைகளால் அவனை {கங்கனைத்} தாக்கினான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான சித்ரகன், ஸ்வபல்கன், சாத்யகி ஆகியோர் தங்கள் நாராசங்களால் கலிங்கத் தேர்வீரர்களைத் தாக்கினர்.(70,71)

அந்தப் போர்க்களத்தில் ராமன் {பலராமன்}, கோபத்துடன் ஒரு மரத்தைப் பிடுங்கி எறிந்து வங்க மன்னனையும், அவனது யானையையும் கொன்றான்.(72) வீரமிக்கச் சங்கர்ஷணன் {பலராமன்}, வங்க மன்னனைக் கொன்றுவிட்டு அவனது தேரில் ஏறி, ஒரு வில்லை எடுத்துக் கொண்டு தன்னுடைய பயங்கரக் கணைகளால் எண்ணற்ற கைசிகர்களை யமலோகம் அனுப்பி வைத்தான்.(73) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பலம்வாய்ந்தவனுமான அந்தத் தேர்வீரன், ஆறு கணைகளால் காரூஷர்களில் பெரும் வில்லாளிகளைக் கொன்று, அதன்பிறகு, மகதப் படையின் நூற்றுக்கணக்கான யானைகளையும் கொன்றுவிட்டு ஜராசந்தனை நோக்கி விரைந்தான்.(74) அந்தக் கதாதாரி (ராமன்) தன் மேல் பாயப் போவதைக் கண்ட மகத மன்னன் {ஜராசந்தன்} மூன்று நாராசங்களை அவன் மீது ஏவினான்.(75) அவனும் {பலராமனும்} பதிலுக்கு எட்டு நாராசங்களால் அவனுக்குக் காயமுண்டாக்கி கோபத்துடன் ஒரு பல்லத்தால் அவனது தங்கக் கொடிக்கம்பத்தை அறுத்தான்.(76) இவ்வாறு கணைகளைப் பொழிந்த அவ்விருவருக்கிடையில், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதைப் போன்ற பயங்கரப் போர் நடந்தது.(77)

யானைவீரர்கள், யானைவீரர்களோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும், குதிரைப்படை குதிரைப்படையோடும்,(78) ஈட்டிகள், வாள்கள், கவசங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் காலாட்படையினருடனும் என ஒருவரோடொருவர் கோபத்துடன் போரிட்டு, தலைகளை வெட்டியபடியே அவர்கள் போர்க்களத்தில் திரியத் தொடங்கினர்.(79) வாள்களும், கணைகளும், கவசங்களும் விழுவது பறவைகளின் கதலைப் போல அங்கே கேட்டது.(80) பேரிகைகள், சங்குகள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் ஒலியானது, அந்தப் பெரும் போர்வீரர்களின் ஆயுதங்களின் ஒலியையும், வில்லின் நாணொலியையும் மறைத்தது" என்றார் {வைசம்பாயனர்}.(81)

விஷ்ணு பர்வம் பகுதி – 116 – 060ல் உள்ள சுலோகங்கள் : 81
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்