(த்வாரவதீநகரநிர்மாணம்)
The laying out of Dwarka | Vishnu-Parva-Chapter-115-059 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : விஷ்வகர்மன் துவாரகை நகரத்தைப் பெரியதாக அமைத்தல்; தேவசபையான சுதர்மம் துவாரகைக்குக் கொண்டு வரப்பட்டது; யாதவர்களை சுகமாகக் கவனித்துக் கொண்ட கிருஷ்ணன்; ரேவதியை மணந்த பலராமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தெளிந்த விடியலில் சூரியன் உதித்தபோது, யதுகுல ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அந்தக் காலைக்கான தன் தூய்மைச் சடங்குகளைச் செய்துவிட்டு, காட்டுப்புறத்தில் சிறிது நேரம் அமர்ந்து ஒரு கோட்டை கட்டுவதற்கான இடத்தைத் தேடத் தொடங்கினான். யது குலத்தின் முக்கிய உறுப்பினர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர்.(1,2) பிறகு ரோஹிணி நட்சத்திர ஆதிக்கம் கொண்ட ஒரு மங்கல நாளில் பிராமணர்களுக்கு ஏராளமான கொடைகளை அளித்து, அவர்களைக் கொண்டு மங்கலச் சடங்குகளைச் செய்தான். அதன் பிறகு கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினான்.(3)
இவ்வாறு கோட்டையின் கட்டுமானத்தைத் தொடங்கியபோது, படைப்பாளர்களில் முதன்மையானவனும், கேசியைக் கொன்றவனுமான அந்தத் தாமரைக் கண்ணன் {கேசவன்}, தேவர்களிடம் பேசும் இந்திரனைப் போல யாதவர்களிடம்,(4) "ஓ! யாதவர்களே, நான் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் தேவர்களின் வசிப்பிடத்தைப் போன்றிருப்பதைக் காண்பீராக. பூமியில் இவ்விடம் எப்பெயரால் கொண்டாடப்பட இருக்கிறதோ அதையும் நான் தேர்ந்தெடுத்திருக்கறேன்.(5) முற்றங்கள், உல்லாச வீதிகள், சமப்படுத்தப்பட்ட நல்ல சாலைகள், அந்தப்புரங்கள் என நகரத்திற்குரிய அனைத்து அடையாளங்களுடன் அமைக்கப்படும் என் நகரம் இந்திரனின் அமராவதியைப் போலப் பூமியில் துவாராவதி என்ற பெயரில் கொண்டாடப்படும்.(6,7) உக்ரசேனரை உங்கள் முன்னிலையில் கொண்டு உங்கள் பகைவரின் பாதைகளில் தடைகளை ஏற்படுத்தித் தேவர்களைப் போலக் கவலைகளற்றவர்களாக இங்கே இன்புற்றிருப்பீராக.(8) வீடுகள் கட்டுவதற்காக நீங்கள் அனைவரும் நிலங்களை எடுத்துக் கொள்வீராக; தோட்டங்களும், நாற்சந்தி சாலைகளும் அமைக்கப்படட்டும், சாலைகளும், மதில்களும் கட்டுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படட்டும்.(9) வீடுகள் கட்டுவதில் நிபுணர்களான கலைஞர்களும், கொத்தர்களும் {சிற்பிகளும்} நாடு முழுவதும் அனுப்பப்படட்டும்" என்றான் {கிருஷ்ணன்}.(10)
இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட யாதவர்கள், தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்வதற்காக மகிழ்ச்சியுடன் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர்.(11) ஓ! மன்னா, சில யாதவர்கள் கயிறுகள் {நூல்கள்} கொண்டு தங்கள் நிலங்களை அளப்பதில் ஈடுபட்டனர்,(12) அவர்களில் சிலர், அந்த மங்கல நாளில் பிராமணர்களைத் துதிப்பதன் மூலம் காவல்தெய்வத்தை வழிபடத் தொடங்கினர்[1].
[1] சித்திரசாலை பதிப்பில், "அந்த மங்கல நாளில் அந்த இடத்திற்கான தேவர்களுக்குரிய சடங்குகளைச் செய்ய அவர்களுக்குச் சிலர் (சில பிராமணர்கள்) தேவைப்பட்டனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்த மங்கல நாளில் அவர்கள் பிராமணர்களை வழிபட்டனர். வாசுதேவன் தேவர்களுக்குரிய சடங்குகளைச் செய்தான்" என்றிருக்கிறது.
அதன்பிறகு உயர்ந்த மனம் கொண்ட கோவிந்தன், கொத்தர்களிடம் {சிற்பிகளிடம்},(13) "முற்றங்கள், சாலைகளுடன் என் காவல் தெய்வத்திற்கான கோவிலை எனக்குக் கட்டித் தாருங்கள்" என்றான்[2].(14) அதற்கு அந்தக் கொத்தர்கள், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, கோட்டை கட்டுவதற்கான பொருட்கள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு, வாயிலையும், எல்லைக் கோட்டையும் வடிவமைக்கத் தொடங்கினர்.(15) அவர்கள், வேள்விகளின் தேவனான பிரம்மனுக்கும், இந்திரனுக்கும், நெருப்பு, நீர் ஆகியனவற்றின் தலைமை தேவர்களுக்கும், பிற தேவர்களுக்கும் அவரவருக்கு உரிய இடங்களில் கோவில்களைக் கட்டினார்கள். பிறகு அவர்கள், அந்தக் கோவில்களில் (சுத்தாக்ஷம், ஐந்த்ரம், பல்லாடம், புஷ்பதந்தம் என்ற பெயர்களைக் கொண்ட) நான்கு வாயில்களைக் கட்டினார்கள்[3].(16,17)
[2] சித்திரசாலை பதிப்பில், "இந்த இடத்தில், நாற்சந்திகளுடனும், நன்கு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுடனும் எங்களுடைய தேவர்களை நிறுவுவதற்கான மாளிகை கட்டப்பட வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "எங்கள் தேவர்களை வழிபடுவதற்கான சிறந்த கோவிலை நீங்கள் கடித்தருவதற்கு உகந்த இடம் இதுதான். நாற்சந்திகளையும், சாலைகளையும் அளந்து கொள்ளுங்கள்" என்றிருக்கிறது.
[3] சித்திரசாலை பதிப்பில், "பிரம்மன், நீர் (தேவன்), நெருப்பு (தேவன்), தேவர்களின் தலைவன் (இந்திரன்) என்ற நான்கு தேவர்களுக்கு நான்கு வாயில்களையும், சுத்தாக்ஷம், ஐந்த்ரம், பல்லாடம், புஷ்பதந்தம் என்ற பெயர்களிலான அரைவைக்கற்களையும், குழவிகளையும் அமைத்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீர், நெருப்பு, தேவர்களின் தலைவன், அரைவைக்கல் மற்றும் குழவிக்கான நான்கு தேவர்களுக்கும் நான்கு பீடங்கள் அமைக்கப்பட்டன. கிருஹக்ஷேத்ரன், ஐந்திரன், பல்லாடன், புஷ்பதந்தன் என்ற நான்கு தேவர்களுக்கு அங்கே நான்கு வாயில்கள் இருந்தன" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ப்ரஹ்மா முதலியவர்களுக்கு இடங்களையும் கர்மப்படி அமைத்தனர். அப்பு (ஜல) தேவதை, அக்னி, இந்திரன், லிங்க தேவதை (சிவன்) ஆகிய நான்கு தேவதைகளையுடைய நான்கு வாயில்களை அமைத்தனர். சுத்தாஷ, ஐந்த்ர, பல்லாட, புஷ்பதந்த இந்த நான்கு மூர்த்திகளை ஆவாஹனம் செய்து அந்த வீடுகளில் மஹாத்மாக்களான யாதவர்கள் வந்து சேர்ந்ததும் மாதவன் நகரம் சீக்ரம் அமைக்க ஆலோசித்தான்" என்றிருக்கிறது.
இவ்வாறே உயரான்ம யாதவர்களின் வீடுகளும் கட்டப்பட்டபோது, மாதவன் அந்த நகரை மிக விரைவாக வடிவமைக்கும் எண்ணம் கொண்டான். அப்போது யாதவர்களுக்கும், அந்த நகரத்திற்கும் நலம் விளைவிக்கக் கூடியதும், அந்த நகரை விரைவாகவே அமைக்கவல்லதுமான தூய எண்ணம் அவனது மனத்தில் தற்செயலாக எழுந்தது.(18,19) பிரஜாபதியின் மகனும், வடிவமைப்பாளர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான விஷ்வகர்மன் அந்நகரைக் கட்ட வேண்டும் என்று அவன் நினைத்தான். பிறகு கிருஷ்ணன், தேவலோகத்தை நோக்கித் திரும்பிய முகத்துடன் ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்து, "விஷ்வகர்மன் இங்கே வரவேண்டும்" எனத் தன் மனத்தில் நினைத்தான்.(20,21) அதேவேளையில், உயர்ந்த புத்தியைக் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனும், தெய்வீக வடிவமைப்பாளனுமான விஷ்வகர்மன் அங்கே வந்து கிருஷ்ணன் முன்பு நின்றான்.(22)
விஷ்வகர்மன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்ட விஷ்ணுவே, உனது அடிமையான நான் தேவர்களின் மன்னனுடைய {இந்திரனுடைய} ஆணையின் பேரில் விரைந்து வந்தேன்; நான் நிறைவேற்ற வேண்டிய ஆணையென்ன?(23) ஓ! தேவா, பெரும்பாட்டனையும் (பிரம்மனையும்), முக்கண்ணனையும் போல நீ என்னால் துதிக்கப்படத் தகுந்தவன். ஓ! தலைவா, உங்கள் மூவருக்கு மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது.(24) ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, மூவுலகங்களுக்கும் விதிப்பதைப் போலவே மகிழ்ச்சியாக எனக்கு அணையிடுவாயாக" என்றான்.(25)
யதுக்களில் முதன்மையானவனும், கம்சனைக் கொன்றவனுமான கேசவன், விஸ்வகர்மனின் பணிவான சொற்களைக் கேட்டு ஒப்பற்ற சொற்களில் மறுமொழி கூறினான்.(26) {கிருஷ்ணன்}, "ஓ! தேவர்களில் முதன்மையானவனே, தேவர்களின் நன்மைக்காகத் {தேவர்களுடன்} தனிமையில் நடந்த நமது ஆலோசனைகளில் நீயும் இருந்து கேட்டிருக்கிறாய். நீ இப்போது இங்கே எனக்கொரு வீடு கட்ட வேண்டும்.(27) ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவனே, என் சுயத்தை வெளிப்படுத்துவதற்காக இங்கே ஒரு நகரத்தைக் கட்டி, என் சக்திக்குத் தகுந்த வீடுகளால் அதை அலங்கரிப்பாயாக.(28) ஓ! பெரும்புத்திமானே, நிபுணனான உனக்கு இன்னும் நான் சொல்ல என்ன இருக்கிறது? அமராவதியைப் போலப் பூமியில் கொண்டாடப்படும் வகையில் ஒரு நகரத்தை எனக்குக் கட்டுவாயாக; என் நகரத்தின் அழகையும், யது குலத்தின் பெருமையையும் மனிதர்கள் காணும் வகையில் தேவலோகத்தில் எனக்குள்ளதைப் போலவே இங்கே எனக்கொரு வீட்டைக் கட்டுவாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(29,30)
இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட நுண்ணறிவுமிக்க விஷ்வகர்மன், களைப்பறியா செயல்களைச் செய்பவனும், தேவர்களின் பகைவரை அழிப்பவனுமான கிருஷ்ணனிடம்,(31) "ஓ! தலைவா, நீ விதித்த அனைத்தையும் நான் செய்வேன். ஆனால் இத்தனை மனிதர்களை உள்ளடக்கிக் கொள்ள உன் நகரம் போதுமானதல்ல. பெருங்கடல்கள் நான்கும் தங்கள் முழு வடிவங்களுடன் இங்கே இருக்கும் வகையில் உன் நகரம் மிகப் பெரியதாக இருக்க வேண்டும்.(32,33) ஓ! புருஷர்களில் முதன்மையானவனே, பெருங்கடல் {சமுத்ரராஜன்} இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால் உன் நகரம் மிகப் பெரியதாக மாறும்" என்றான்.(34)
பேசுபவர்களில் முதன்மையான கிருஷ்ணன் இதை முன்பே தீர்மானித்திருந்தான். எனவே தெய்வீக வடிவமைப்பாளன் {விஷ்வகர்மன்} இவ்வாறு பேசியதும், ஆறுகளின் தலைவனான பெருங்கடலிடம் அவன் {கிருஷ்ணன்},(35) "ஓ! பெருங்கடலே, உனக்கு என் மீது மதிப்பேதும் இருந்தால், பனிரெண்டு யோஜனைகள் தொலைவுக்கு நீரில் உன் வடிவை விலக்கிக் கொள்வாயாக.(36) நீ இடம் கொடுத்தால், செல்வங்களும், இன்பங்களும் நிறைந்த இந்த நகரமானது என் பெரிய படை தங்குவதற்கு உகந்ததாக இருக்கும்" என்றான் {கிருஷ்ணன்}.(37)
ஆறுகளின் தலைவனான பெருங்கடலானவன், கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு, {காற்றுடன் சேர்ந்த மாருத} யோகத்தில் ஆழ்ந்து {நீரை விலக்கிக் கொண்டு}, தன் படுக்கையை {நீர்ப்படுகையை} அவனுக்கு அளித்தான். விஷ்வகர்மன், கோவிந்தனிடம் பெருங்கடல் வெளிப்படுத்தும் மதிப்பைக் கண்டும், நகரம் கட்டுவதற்கான இடத்தைக் கண்டும் பெரிதும் மகிழ்ந்தான்.(38,39) அப்போது விஷ்வகர்மன், யதுவின் வழித்தோன்றலான கிருஷ்ணனிடம், "இன்றே இந்த நாளிலேயே நீ இந்நகரில் தங்குவாயாக. ஓ! தலைவா, நான் ஏற்கனவே இந்த மிகச்சிறந்த நகரத்திற்கான திட்டத்தை என் மனத்தில் வகுத்துவிட்டேன். எனவே, இப்போதே இது வீடுகளின் வரிசைகளால் அலங்கரிக்கப்படும்.(40,41) இந்த எழில்மிகு நகரம் அதன் அழகிய நுழைவாயில்கள், தோரணங்கள், மேல்மாடங்களின் {உப்பரிகைகளின்} காரணமாகப் பூமியின் திமிலாக {பூமியில் உயர்ந்ததாக} விளங்கும்" என்றான் {விஷ்வகர்மன்}.(42)
அவன், தேவர்களும் விரும்பும் பகுதியில் அந்நகரைக் கட்டிவிட்டு, நீராடும் வீடுகளைக் கொண்ட கிருஷ்ணனின் அந்தப்புரத்தைக் கட்டினான்[4].(43) இவ்வாறே துவாரவதி என்ற பெயரைக் கொண்ட அந்த அழகிய வைஷ்ணவ நகரம் விஷ்வகர்மனின் மனோ முயற்சியில் கட்டப்பட்டது.(44) அந்த நகரம் உரிய வகையிலான கதவுகளால் பாதுகாக்கப்பட்டும், மிகச்சிறந்த மதில்களால் அலங்கரிக்கப்பட்டும், அகழிகளெனும் பள்ளங்களாலும், அரண்மனைகள்,(45) அழகிய ஆண் பெண்கள், வணிகர்கள், பல்வேறு வணிகப் பொருட்கள் ஆகியவற்றாலும் நிறைந்ததாகவும் இருந்தது. அது பூமியில் நிறுவப்பட்டிருந்தாலும், வானத்தில் உலவுவதைப் போலத் தோன்றியது.(46) குளங்கள், தூய நீரைக் கொண்ட சிற்றோடைகள், தோட்டங்கள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அஃது அகன்ற கண்களைக் கொண்ட ஒரு காரிகையைப் போல அனைத்துப் பக்கங்களிலும் மறைக்கப்பட்டிருந்தது.(47) வளமான முற்றங்கள், மேகங்களால் தாக்கப்படும் உயர்ந்த மாளிகைகள், {புழுதியற்ற} தெளிவான அரசவீதிகள், வண்டிகளுக்கான சாலைகள் ஆகியவற்றையும் கொண்டிருந்தது.(48) தேவலோகத்திற்கு அழகூட்டும் இந்திரனின் நகரத்தைப் போலவே அனைத்து வகை ரத்தினங்களாலும் செழித்த அந்நகரமும் பூமியில் பெருங்கடலை அலங்கரித்துக் கொண்டிருந்தது.(49)
[4] சித்திரசாலை பதிப்பில், "அந்த நகரில் தேவர்களாலும் வணங்கப்படும் ஓரிடத்தில், கிருஷ்ணனைக் கவனித்துக் கொள்வதற்கான பெண்களின் குடியிருப்புகளும் பெரிய அளவில் கட்டப்பட்டன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கிருஷ்ணனின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பெரிய அந்தப்புரங்கள் அங்கே இருந்தன. தேவர்களால் வணங்கப்படும் இடத்தில் அந்த நகரம் கட்டப்பட்டது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "தேவர்களால் பூஜிக்கப்பட்ட இடமான அந்நகரில் க்ருஷ்ணனுக்குப் பரிசர்யை செய்யும் இடமாகிய பெரிய அந்தப்புரத்தையும் செய்தான்" என்றிருக்கிறது.
வீரர்களுக்கான அழகிய களமும், அண்டை நாட்டு மன்னர்களின் இதயங்களில் பொறாமையை உண்டாக்குவதுமான அந்நகரம், தன்னகத்தே கொண்ட மாளிகைகளால் வானத்தையும் மறைத்தது.(50) அந்த நகரம், பூமியில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மக்களின் ஒலியால் நிறைந்ததாகவும், கடலலைநீரால் நிறைந்த காற்றைக் கொண்டதாவும் இருந்தது.(51) பெண்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அழகிய நகரமான அந்தத் துவாரகை, எழில்மிகு கடற்புறங்களுடனும், தோட்டங்களுடனும் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட ஆகாயத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(52) சூரியனைப் போன்றவையும், தங்கத்தின் ஒளியுடன் கூடியவையுமான மதில்களால் சூழப்பட்ட அந்நகரம், பொன்மாளிகைகளாலும், வெண்மேகங்களைப் போன்ற வாயில்களாலும் நிறைந்ததாகவும், அரண்மனைகளால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. சில இடங்களில் நெடுஞ்சாலைகள் தோறும் உயர்ந்த மாளிகைகள் நிறைந்திருந்தன.(53,54) யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனும், தன் மக்களால் சூழப்பட்டவனுமான கிருஷ்ணன், வானத்திற்கு ஒளியூட்டும் சந்திரனைப் போலவே ரத்தினங்கள் நிறைந்ததும், விஷ்வகர்மனால் கட்டப்பட்டதுமான அந்தத் தெய்வீக நகரத்தில் வாழத் தொடங்கினான்.(55) தெய்வீக வடிவமைப்பாளன் {விஷ்வகர்மன்}, தேவர்களின் நகருக்கு ஒப்பான அந்த நகரத்தை அமைத்த பிறகு, கோவிந்தனால் கௌரவிக்கப்பட்டுத் தேவர்களின் உலகத்திற்குச் சென்றான்.(56)
இவ்வாறு அந்த நகரமைந்த போது, ஆன்ம அறிவை அறிந்த கிருஷ்ணன், தன் மக்களில் வறியோரை ஏராளமான செல்வங்களால் நிறைவடையச் செய்ய விருப்பம் கொண்டான்[5].(57) ஒருநாள் இரவில், பலம்வாய்ந்தவனான உபேந்திரன் {கிருஷ்ணன்}, வளங்களின் தேவனான வைஷ்ரவணனின் {குபேரனின்} பணியாளும், நிதிகளில் முதன்மையானவனுமான சங்கனைத் தன் வீட்டுக்கு அழைத்தான். துவாராவதியின் தலைவனான கேசவன் விரும்பியதைப் போலவே, சங்கன் அவனிடம் வந்தான்.(58,59)
[5] சித்திரசாலை பதிப்பில், "ஆன்மாவை அறிந்தவனான கிருஷ்ணனுக்கு, ஏராளமான செல்வங்களைக் கொடையளிப்பதால் மக்களைச் செழிப்பாக்கும் மற்றொரு எண்ணம் உதித்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஆன்மாவை அறிந்தவனான கிருஷ்ணன், பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் செல்வத்தால் நிறைவடையச்செய்வது எவ்வாறு என்று மீண்டும் சிந்தித்தான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "தன் ஸ்வரூபமறிந்த க்ருஷ்ணனுக்கு மறுபடியும் எண்ணம் உண்டாயிற்று; இந்த ஜனங்களைச் செல்வக் குவியல்களால் நான் திருப்திப்படுத்துவேன்" என்றிருக்கிறது.
வைஷ்ரவணனை எப்போதும் மதிப்பதைப் போலவே, பணிவுடனும், கூப்பிய கரங்களுடனும் அவனை {கிருஷ்ணனை} வணங்கிய சங்கன்,(60) "ஓ! தலைவா, தேவர்களுடைய கருவூலங்களின் தலைவன் நான். ஓ! யதுவின் வழித்தோன்றலே, ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, நான் நிறைவேற்ற வேண்டிய உன் ஆணையென்ன என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான்.(61)
இதைக் கேட்ட ரிஷிகேசன், குஹ்யர்களில் சிறந்தவனான அந்தச் சங்கனிடம், "என்னுடைய நகரில் குறைந்த செல்வம் கொண்ட மனிதர்களுக்குப் போதுமான வளங்களை அளிப்பாயாக.(62) இந்நகரில் பசித்தவர், மெலிந்தவர், அழுக்கடைந்தவர், வறியவர் எவரையும் காண நான் விரும்பவில்லை. "ஏதாவது கொடுப்பீராக" என்று எவரும் இரந்தழுவதைக் கேட்கவும் நான் விரும்பவில்லை" என்றான் {கிருஷ்ணன்}".(63)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குபேரனின் பணியாட்களில் முதன்மையான சங்கன், கேசவன் விதித்ததை நிறைவேற்றும் வண்ணம், துவாராவதியின் ஒவ்வொரு வீட்டிலும் செல்வக்குவியல்களைப் பொழிய அவற்றுக்கு {நிதிகளுக்கு / செல்வங்களுக்கு} ஆணையிட்டான், அவையும் அவ்வாறே செய்தன.(64) எனவே, அங்கே எந்த மனிதனும் வறியவனாகவோ, வழிமுறைகள் எதனிலும் குறைந்தவனாகவோ இல்லை. {பேரான்மாவான கேவசனின் துவாராவதி நகரில் மெலிந்தவராகவோ, அழுக்கடைந்தவராகவோ ஒருபோதும் எவரும் இல்லை}.(65,66)
அதன்பிறகு, யாதவர்களுக்கு எப்போதும் நன்மை செய்வதையே விரும்பும் அந்தத் தெய்வீகப் புருஷன், விலங்குகளின் உயிர்க்காற்றான வாயுவை (காற்றின் தேவனை) அழைத்தான். தனியாக அமர்ந்திருக்கும் கதாதரன் {கிருஷ்ணன்} முன்பு தோன்றிய அவன் {வாயு},(67,68) "ஓ! தேவா, எங்கும் பெரும் வேகத்தில் செல்லக்கூடியவன் நான். உனக்கு நான் செய்ய வேண்டியதென்ன? ஓ! பாவமற்றவனே, தேவர்களுக்குத் தூதனாக இருப்பதைப் போலவே நான் உனக்கும் தூதனாவேன்" என்றான்.(69)
இதைக் கேட்ட ஹரி புருஷோத்தமன், அண்டத்தின் உயிரும், தன் வடிவில் அங்கே வந்தவனுமான வாயுவிடம்,(70) "தேவர்களிடமும், அவர்களின் மன்னனிடமும் {இந்திரனிடமும்} சென்று நான் அவர்களிடம் கொண்டிருக்கும் மதிப்பைச் சொல்லி, சுதர்மை என்ற சபா மண்டபத்தை அவர்களிடம் பெற்று துவாரகைக்கு அதைக் கொண்டு வருவாயாக.(71) ஓ! வாயுவே, அறம்சார்ந்தவர்களும், {எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோரும்}, ஆற்றல்மிகுந்தவர்களுமான இந்த யாதவர்கள் அதற்குள் செல்ல வேண்டும்; எனவே போலியைக் கொண்டு வராதே {அது செயற்கையானதாக இருக்கக்கூடாது};(72) எங்கும் செல்லவல்லதும், விரும்பிய வடிவை ஏற்கவல்லதுமான அந்த அழிவற்ற சபா மண்டபத்தால் மட்டுமே தேவர்களைப் போன்ற இந்த யாதவர்களுக்கு இடமளிக்க முடியும்" என்றான் {கிருஷ்ணன்}.(73)
மனோ வேகம் கொண்டவனான வாயு, களைப்பறியா செயல்களைச் செய்யும் கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு, தேவலோகத்துக்குச் சென்று கேசவனின் வாழ்த்துகளையும், வேண்டுகோளையும் தேவர்களிடம் தெரிவித்தான். அதன் பிறகு சுதர்மை எனும் சபா மண்டபத்தைப் பெற்றுக் கொண்டு பூமிக்குத் திரும்பினான்.(74,75) அதன்பிறகு அந்தக் காற்றின் தேவன் அறம்சார்ந்தவனும், ஆற்றல்மிக்கவனுமான கிருஷ்ணனிடம் சுதர்மை மண்டபத்தைக் கொடுத்தவிட்டு மறைந்தான்.(76) தேவர்களுக்காகத் தேவலோகத்தில் உள்ளதைப் போலவே, முன்னணி யாதவர்களுக்காக அந்தச் சுதர்மை மண்டபத்தைத் துவாராவதியில் கேவசன் நிறுவினான்.(77) இவ்வாறே நித்தியனும், நுண்ணறிவுமிக்கவனுமான ஹரி, தேவலோகம் சார்ந்த, பூமி சார்ந்த, நீர் சார்ந்த பொருட்களால் ஒரு பெண்ணைப் போலத் துவாராவதி நகரை அலங்கரித்தான்.(78)
நகரத்தின் எல்லைகளைத் தீர்மானித்த பின்னர், படைத்தலைவர்களையும், குலத்தலைவர்களையும் அவரவருக்குரிய இடங்களில் பேரரசன் உக்ரசேனன் நிறுவினான். அதன்பிறகு புரோஹிதர் சாந்தீபனி, படைத்தலைவன் அனாதிருஷ்டி, அமைச்சர்களில் முதன்மையான விக்ருது, யாதவர்களின் பணிகளில் எப்போதும் ஈடுபடுபவர்களும், உத்தவரால் தலைமைதாங்கப்பட்டவர்களுமான பத்து முதியவர்களும் அவரவருக்குரிய இடங்களில் இருத்தப்பட்டனர். தேர்வீரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான தாருகன் கேசவனின் தேரோட்டியாகவும், போர்வீரர்களில் முதன்மையான சாத்யகி அவனுடைய படைத்தலைவனாகவும் நியமிக்கப்பட்டனர்[6].(79-82)
[6] சித்திரசாலை பதிப்பில், "கிருஷ்ணன் ஒழுக்க நெறிகளை நிறுவி, வரிசைமுறைகளையும், தரமுறைகளையும் அமைத்து, படைத்தலைவர்களையும், மேலாளர்களையும் இயல்பில் ஈடுபடுத்தினான்.(79) உக்ரசேனன் மன்னனாகவும், காசியர் (சாந்தீபனி) புரோஹிதராகவும், அதிருஷ்டி படைத்தலைவனாகவும், விக்ருது முதலமைச்சராகவும் நிறுவப்பட்டனர்.(80) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், யாதவக் குலத் தலைவர்களான பத்து முதியவர்களை அனைத்துக் காரியங்களின் அமைச்சர்களாக நிறுவினான்.(81) சாரதிகளில் சிறந்த தாருகன், கேசவனின் தேரைச் செலுத்துவதில் ஈடுபட்டான். போராளிகளில் சிறந்த சாத்யகி போர்த்தலைவனாக நியமிக்கப்பட்டான்.(82)" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் சித்திரசாலை பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
பழியற்றவனும், உலகின் படைப்பாளனுமான கிருஷ்ணன், தன் நகரில் இந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, யாதவர்களுடன் சேர்ந்து பூமியில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.(83) சில நாட்கள் கழிந்ததும், ரேவதி என்ற பெயரைக் கொண்டவளும், நல்லியல்புடன் கூடியவளுமான ரேவதனின் மகளைக் கேசவனின் ஒப்புதலுடன் பலதேவன் அடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(84)
விஷ்ணு பர்வம் பகுதி – 115 – 059ல் உள்ள சுலோகங்கள் : 84
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |