Sunday 13 September 2020

காலயவனன் | விஷ்ணு பர்வம் பகுதி – 114 – 058

(காலயவநவதம்)

Account of Kalayavana | Vishnu-Parva-Chapter-114-058 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : காலயவனன் தோற்றம்; துவாரகையில் இருந்து தனியாக மதுராவுக்குச் சென்ற கிருஷ்ணன்; முசுகுந்தனால் எரிக்கப்பட்ட காலயவனன்...

Krishna and Muchukunda in a Cave in the Himalayas

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மதிப்புமிக்க ஐயா, உயரான்மாவும், நுண்ணறிவு மிக்கவனும், யதுக்களில் முதன்மையானவனுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வரலாற்றை விரிவாக நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, (செழிப்பின் தேவியான) லக்ஷ்மியின் ஒரே வசிப்பிடமும், மத்திய இந்தியாவின் (மிக உயர்ந்த) பகுதியும் {மத்திய தேசத்தின் முக்கியப் பகுதியும்}, பூமியின் சிகரமும்,(2) தானியங்கள், செல்வம், அழகிய வீடுகள் ஏராளமாக நிறைந்ததும், வழிபடத்தகுந்த ஆரியர்கள் பலரைக் கொண்டிருந்ததுமான மதுராவை விட்டு ஜனார்த்தனன் போரிடாமல் அகன்றதேன்? காலயவனன் கிருஷ்ணனிடம் எவ்வாறு நடந்து கொண்டான்?(3,4) கடுந்தவங்களில் பெரும் யோகியும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனன், நீர்க்கோட்டையான துவாரகையை அடைந்தபிறகு செய்ததென்ன?(5) காலயவனன் யாருடைய மகன்? அவனுடைய பலமென்ன? இவையனைத்தையும் எனக்கு நீர் விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உயர்ந்த மனம் கொண்ட கார்க்கியர் அந்தக, விருஷ்ணி குலங்கள் இரண்டிற்கும் ஆசானாக இருந்தார். அவர் எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்றுவந்தார்; அவர் மனைவியைக் கொண்டிருந்தார் என்றாலும் அவளை அறிந்தாரில்லை[1]. ஆசைகளை ஆள்பவரும், நித்தியருமான கார்க்கியர் இவ்வாறு தன் நாட்களைக் கழித்துவந்த போது, அவருடைய மைத்துனர் {சியாலர் /சைசிராயணர்}[2] அவரை ஆண்மையற்றவரென {அபிசஸ்தரென} மன்னனின் முன்பு சொன்னார்.(7,8) ஓ! மன்னா, இவ்வாறு அஜிதம்ஜயனின் நகரத்தில்[3] அவமதிக்கப்பட்ட கார்க்கியர் தமது மைத்துனரின் மீது கொண்ட கோபத்தால் மனைவியுடன் சேர விரும்பாமல், ஒரு மகனை அடைவதற்காகக் கடுந்தவங்களில் ஈடுபட்டார். பனிரெண்டு ஆண்டுகள் இரும்பு சூர்ணத்தை உண்டு திரிசூலபாணியான மஹாதேவனை(9) அவர் வழிபட்டு வந்தார். இதன் காரணமாக விருஷ்ணி, அந்தகக் குலங்களின் வழித்தோன்றல்களால் போரில் வீழ்ப்பட இயலாத பலமிக்க மகனை அடையும் வரத்தை ருத்திரன் அவருக்கு அளித்தான்.(10)

[1] சித்திரசாலை பதிப்பில், "அவர் ஒரு மனைவியை அடையாமல் தூய வாழ்வை வாழ்ந்து வந்தார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர் பிரம்மச்சாரியாக இருந்ததால், ஒரு மனைவியைக் கொள்ளாமல் இருந்தார் என்றிருக்கிறது" இந்த இரு பதிப்புகளிலும் கார்க்கியர் மனைவியைக் கொள்ளவில்லை என்றிருக்கிறது. ஹரிவம்ச பர்வம் 35ம் அத்தியாயத்தில் ஏற்கனவே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் அவர் மனைவியைக் கொண்டிருந்தார் என்ற குறிப்பில்லை. 

[2] இவர் திரிகர்த்த மன்னனின் புரோஹிதரான சைசிராயணர் என்று ஹரிவம்ச பர்வம் 35ம் அத்தியாயத்தின் 11,12ம் ஸ்லோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

[3] மற்ற மூன்று பதிப்புகளிலும் அஜிதம்ஜயனின் நகரத்தைப் பற்றிய குறிப்பில்லை. அஜிதம்ஜயம் என்பது வெல்லப்படமுடியாததையும் வென்றவர் என்ற பொருளையும் தரும். சித்திராசலை பதிப்பில், "இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவரும், வெல்லப்படமுடியாததையும் வென்றவருமான கார்க்கியர், பெண்களை விரும்பாமல் கடுந்தவத்தில் ஈடுபட்டார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இவ்வாறே இருக்கிறது.

யவனர்களின் மன்னன் மகனற்றவனாக இருந்தான். அந்த மன்னன், இருபிறப்பாளர்களில் முதன்மையான கார்க்கியருக்கு மஹாதேவன் அளித்த வரத்தைக் கேட்டு, அவரைத் தன் நாட்டுக்கு[4] அழைத்து வந்தான்.(11,12) அவன் அவருக்கு ஆறுதலளித்துக் கோபிகையர் கவனித்துக் கொள்ளும்படிக்கு அவர்களது வசிப்பிடத்திலேயே அவரை இருக்கச் செய்தான்.(13) கோபாலி என்ற பெயர் படைத்த அப்சரஸ் ஒருத்தி ஒரு கோபிகையின் வடிவை ஏற்று, கார்க்கியரின் மூலம் அந்த அழிவற்ற, பயங்கரமான கருவைத் தன் கருவறையில் கொண்டாள்.(14) இவ்வாறு திரிசூலபாணியின் ஆணையின் பேரில் கார்க்கியர், ஒரு பெண்ணின் வடிவில் இருந்தவளும், மனைவியைப் போன்று தம்முடன் வாழ்ந்தவளுமான {கோபாலி என்ற} அந்த அப்சரஸிடம் பெரும் பலம்வாய்ந்த வீரனான காலயவனனைப் பெற்றார்.(15) பிள்ளையற்றவனான யவனர்களின் மன்னனால் தன் மகனைப் போல அவன் {காலயவனன்} அந்தப்புரத்தில் வளர்த்து வரப்பட்டான். ஓ! மன்னா, அந்த யவனர்களின் தலைவன் இறந்த பிறகு காலயவனன் மன்னன் ஆனான்.(16) போரிடும் விருப்பத்தில் அவன் இருபிறப்பாளர்களில் முதன்மையான நாரதரிடம் கேட்ட போது, அவர் விருஷ்ணி, அந்தகக் குல வீரர்களை அவனுக்குச் சுட்டிக் காட்டினார்.(17)

[4] யவனர்களின் நாடுகள் என்பன பொதுவாக ரோம கிரேக்க நாடுகளைக் குறிக்கும். ஆனால் இங்கே இமயத்திற்கு வடக்கே உள்ள ஏதோவொரு நாட்டைக் குறிக்கிறது. இதன்பின்வரும் 19,20 ஸ்லோகங்களும் இதை உறுதி செய்யும் வண்ணம் இருக்கின்றன. ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 54ம் அத்தியாயத்தில் சால்வ மன்னன் விதர்ப்ப நாட்டில் இருந்து யவனர்களின் நாட்டுக்குச் செல்கிறான். அப்போது அவனது விமானம் தெற்கிலிருந்து வருவதை யவனர்கள் கண்டனர் என்ற குறிப்பு 8-11 ஸ்லோகங்களில் காணப்படுகிறது.

மதுசூதனனான கிருஷ்ணன், யவனர்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தாலும், காலயவனன் பெற்றிருக்கும் வரத்தின் கதையை நாரதர் மூலம் கேள்விப்பட்டதால் அவனைக் கருத்தில் கொள்ளாமல் இருந்தான்[5].(18) யவனர்களின் மன்னன் பெருஞ்சக்தியுடன் வளர்ந்தபோது, இமயத்தின் அருகில் வாழ்ந்து வந்த சகர்கள், துஷாரர்கள், தரதர்கள், பாரடர்கள், தங்கணர்கள் {சிருங்கலர்கள்}, கசர்கள், பஹ்லவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மிலேச்ச மன்னர்கள் அவனிடம் தஞ்சமடைந்தனர்.(19,20) அந்த யவனர்களின் மன்னன் {காலயவனன்}, விட்டில் பூச்சிக் கூட்டத்திற்கு ஒப்பான அந்தத் தஸ்யு மன்னர்களால் சூழப்பட்டவனாகவும், பல்வேறு உடைகளைத் தரித்தவனாகவும், பல்வேறு ஆயுதங்களைத் தாங்கியவனாகவும் மதுராவுக்குப் புறப்பட்டுச் சென்றான்.(21) எண்ணற்ற குதிரைகள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு பெரும்படையுடனும் அவன் பூமியின் பரப்பைக் கலங்கச் செய்தான்.(22) படைவீரர்களால் எழுப்பப்பட்ட புழுதியில் சூரியனின் பாதை மறைக்கப்பட்டது. அந்தப் படை கழித்த மலஜலங்களால் ஓர் ஆறே உண்டானது.(23) குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் மலத்தில் இருந்து உண்டானதால் அந்த ஆறு அஷ்வகிருத் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.(24)

[5] கிருஷ்ணன் யவனர்களுக்கு மத்தியில் வாழ்ந்தான் என்ற செய்தி இங்கே தவறுதலாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இந்த வாக்கியம் யவனர்களுக்கு மத்தியில் வளர்ந்த காலயவனன் என்றிருக்க வேண்டும். சித்திரசாலை பதிப்பில், "மதுசூதனன் (கிருஷ்ணன்), (சிவன் மூலம் கிடைத்த) வரத்தைக் குறித்து நாரதரிடம் இருந்து அறிந்தான். மகத்தாக வளர்ந்து வந்த அந்த யவனனைக் கிருஷ்ணன் கருத்தில் கொள்ளவில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மதுசூதனன், இவ்வாறு கொடுக்கப்பட்ட வரம் குறித்து நாரதர் மூலம் அறிந்தான். எனவே, அவன் வளர்ந்து வந்த யவனனின் பலத்தைப் புறக்கணித்தான்" என்றிருக்கிறது.

விருஷ்ணிகளுக்கும், அந்தகர்களுக்கும் தலைவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இந்தப் பெரும்படையின் வரவைக் கேள்விப்பட்டுத் தன் உற்றார் உறவினரிடம்,(25) "விருஷ்ணி, அந்தகக் குலங்களுக்குப் பேராபத்து நேரப் போகிறது. திரிசூல பாணியால் {ருத்திரனால்} பகைவனுக்குக் கொடுக்கப்பட்ட வரத்தின் காரணமாக அவன் நம்மால் கொல்லத்தகாதவனாக இருக்கிறான்.(26) அவனை வெல்வத்றாக {அவனுடன் சமாதானம் செய்து கொள்வதற்காக} வேற்றுமை நீக்கும் பிற வழிமுறைகள் அனைத்தையும் நான் செய்தேன். ஆனால் செருக்கால் நிறைந்த அவன் போரையே விரும்புகிறான்.(27) "{இதுவரை} நான் இங்கே வாழலாம்" என்று நாரதர் என்னிடம் சொன்னார்; நானும் இதையே உங்களுக்குச் சொல்கிறேன்.(28) பேரரசன் ஜராசந்தன் {தன் மருமகனான கம்சனைக் கொன்றதற்காக} நம்மை மன்னிக்கவில்லை; விருஷ்ணி சக்கரத்தாலும் {கூட்டத்தாலும்}, கம்சனின் அழிவாலும் தாக்கப்பட்ட பிற மன்னர்களும் நம்முடன் நிறைவில்லாதவர்களாக மகத மன்னனிடம் தஞ்சம்புகுந்தனர். ஜராசந்தனின் பாதுகாப்பில் இருக்கும் அவர்கள் நமக்குத் தடை ஏற்படுத்துகின்றனர் {நம்மை ஒடுக்குகின்றனர்},(29,30) யாதவர்களின் உறவினர்கள் பலர் அவர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நகரத்தில் வாழ்ந்து வந்தால் நம்மால் ஒருபோதும் செழிப்படைய இயலாது எனும்போது மேலும் எதை அடையமுடியும்?" என்றான் {கிருஷ்ணன்}.(31)

இதைச் சொல்லிவிட்டுப் பின்வாங்க விரும்பிய கேசவன் {கிருஷ்ணன்}, யவனர்களின் மன்னனிடம் {காலயவனனிடம்} ஒரு தூதனை அனுப்பினான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட மாதவன், அவனை (யவனர்களின் மன்னனை) அச்சுறுத்தும் வகையில் மைத்திரளுக்கு ஒப்பான பயங்கரமான கரும்பாம்பு ஒன்றை ஒரு குடுவைக்குள் இட்டு அடைத்தான்.(32) அதன் பிறகு அதைத் தன் தூதன் மூலம் யவனர்களின் மன்னனுக்கு அனுப்பிவைத்தான். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, அந்தத் தூதன், "கிருஷ்ணன் பயங்கரப் பாம்பைப் போன்றவன்" என்று சொல்லி காலயவனனிடம் அந்தக் குடுவையைக் காட்டினான்.(33,34)

தன்னை அச்சுறுத்துவதற்காக யாதவர்கள் இதை அனுப்பியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு காலயவனன், அந்தக் குடுவையை பயங்கர எறும்புகளால் நிறைத்தான்.(35) அதன் பிறகு அந்தப் பாம்பானது கூரிய பற்களைக் கொண்ட அந்த எண்ணற்ற எறும்புகளால் உண்ணப்பட்டுச் சாம்பலானாது. காலயவனன் அந்தக் குடுவையை அடைத்து ஏராளமான விளக்கங்களுடன் அதைக் கிருஷ்ணனிடம் அனுப்பி வைத்தான்.(36,37)

வாசுதேவன் தன் தகுமுறை வீணானதைக் கண்டு மதுரா நகரைவிட்டு துவாரகைக்குச் சென்றான்.(38) ஓ! மன்னா, அதன் பிறகு, பெருஞ்சிறப்புமிக்கவனும், பலம்வாய்ந்த வீரனுமான வாசுதேவன், பகைமைகளுக்கு ஒரு முடிவைக் கொண்டு வரும்பொருட்டு, வீரர்கள் அனைவரையும் தேற்றி துவாரகையில் அமர்த்திவிட்டு, தன் கரத்தை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு கால்நடையாக மதுராவுக்குப் புறப்பட்டுச் சென்றான்.(39,40)

காலயவனன் அவனைக் கண்டதில் நிறைவடைந்து சினத்துடன் அவனை எதிர்கொண்டான். பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணனும் அவனை ஈர்த்தபடியே தன் பின்னால் இழுத்துச் சென்றான். யவனர்களின் தலைவன் கோவிந்தனைப் பிடிப்பதற்காக அவனைப் பின் தொடர்ந்து சென்றாலும் அந்த யோகியை அவனால் பிடிக்கமுடியவில்லை.(41,42)

பெருஞ்சக்திவாய்ந்தவனும், சிறப்புமிக்கவனும், மாந்தாதாவின் மகனும், தேவர்களுக்கும், அசுரர்களுக்கு இடையில் நடந்த போரில் ஈடுபட்டு வெற்றியடைந்தவனும், {போரில் ஏற்பட்ட களைப்பால்} உறக்கம் வேண்டி நின்றவனுமான மன்னன் முசுகுந்தனுக்கு, முன்னவர்கள் {தேவர்கள்} ஒரு வரத்தை அளித்தனர். அவன் {முசுகுந்தன்} போரில் களைத்திருந்ததால் மீண்டும் மீண்டும், "ஓ! தேவர்களே, என்னை உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்பவனைக் கோபத்தில் எரியும் என் கண்களால் நான் எரித்துவிடுவேன்" என்றான்.(43-45)

தேவர்களும், அவர்களுடைய மன்னனும் {இந்திரனும்}, "அவ்வாறே ஆகட்டும்" என்றனர். இவ்வாறு தேவர்களின் ஆணையைப் பெற்ற அந்த மன்னன் {முசுகுந்தன்}, மிகவும் களைப்படைந்தவனாக மலைகளின் மன்னனிடம் {இமய மலையிடம்} முதலில் வந்தான். பிறகு ஒரு குகைக்குள் நுழைந்து, கிருஷ்ணனால் காணப்படும் வரை அங்கேயே உறங்கிக் கிடந்தான். முசுகுந்தன் அடைந்த வரத்தையும், அவனது சக்தியையும் நாரதர் கிருஷ்ணனிடம் சொல்லியிருந்தார். எனவே அவன் தன்னுடைய மிலேச்சப் பகைவன் {காலயவனன்} தன்னை விரட்டி வந்த போது பணிவுடன் முசுகுந்தனின் குகைக்குள் நுழைந்தான்.(46-49)

Krishna Muchukunda Kalayavana

நுண்ணறிவுமிக்கவர்களில் முதன்மையான கேசவன், அந்த அரசமுனியின் {முசுகுந்தனின்} பார்வையைத் தவிர்க்கும் வகையில் அவனது தலையின் அருகில் அமர்ந்தான்.(51) தீய மனம் கொண்ட யவன மன்னன், வாசுதேவனைப் பின்தொடர்ந்து வந்து குகைக்குள் நுழைந்து அந்த மன்னனை {முசுகுந்தனை} அங்கே கண்டான். பூச்சியானது நெருப்புக்குள் விழுவதைப் போலவே அவன் {காலயவனன்} தன் அழிவுக்காகத் தன் காலால் அந்த மன்னனை {முசுகுந்தனை} உதைத்தான்.(51,52) கால் தீண்டியதால் விழிப்படைந்த அரசமுனி முசுகுந்தன், தன் உறக்கம் கலைந்ததால் பெருஞ்சீற்றமடைந்தான்.(53) இந்திரனால் கொடுக்கப்பட்ட வரத்தை நினைவுகூர்ந்த அவன், கோபம் நிறைந்த தன் கண்களால் அந்த யவன மன்னனை {காலயவனனைக்} கண்டான். அவ்வாறு அந்த யவனர்களின் மன்னன் {காலயவனன்} பார்க்கப்பட்ட உடனேயே முற்றிலும் எரிந்து போனான்.(54)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, உலர்ந்த மரத்தை எரிக்கும் மின்னலைப் போலவே முசுகுந்தனின் கண்களுடைய சக்தியால் உண்டான அந்த நெருப்பும் மிக விரைவிலேயே காலயவனனைச் சாம்பலாக்கியது.(55) இவ்வாறு தன் புத்தியால் வெற்றியை அடைந்த வாசுதேவன், நீண்ட காலம் உறக்கத்தில் இருந்த பேரரசன் முசுகுந்தனிடம் சென்று, பின்வரும் மிகச் சிறந்த சொற்களைச் சொன்னான்,(56) "ஓ! மன்னா, நீர் நீண்ட காலமாக உறங்கிவருகிறீர் என்பதை நாரதர் மூலம் நான் கேள்விப்பட்டேன். நீர் எனக்காகப் பெரும்பணியைச் செய்திருக்கிறீர். உமக்கு நன்மை நேரட்டும். நான் சென்று வருகிறேன்" என்றான்.(57)

மன்னன் முசுகுந்தன், வடிவில் உயரம் குறைந்த வாசுதேவனைக் கண்டு தன் மனதில், "நான் நீண்ட காலம் உறங்கியிருக்கிறேன், யுகமும் மாறியிருக்கிறது" என்று நினைத்தான். அதன்பிறகு அந்தப் பேரரசன் {முசுகுந்தன்}, கோவிந்தனிடம், "யார் நீ? ஏன் இங்கே வந்தாய்? நான் எவ்வளவு காலம் உறங்கினேன் என்பதை உன்னால் முடிந்தால் சொல்வாயாக" என்று கேட்டான்.(58,59)

கிருஷ்ணன் {முசுகுந்தனிடம்}, "நகுஷனின் மகனும், யயாதி என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மன்னன் சந்திர குலத்தில் புகழ்பெற்றிருந்தான். யது அவனுடைய மூத்த மகனாவான். அவனுக்குத் துர்வசு உள்ளிட்ட இன்னும் நான்கு மகன்கள் இருந்தனர். ஓ! தலைவா, அந்த யதுவின் குலத்தில் வசுதேவரின் மகனாகப் பிறந்த வாசுதேவனாக என்னை அறிவீராக. ஒரு பணிக்காகவே நான் உம்மிடம் வந்தேன்.(60,61) ஓ! மன்னா, திரேதா யுகத்தில் இருந்து நீர் உறங்கிக் கொண்டிருக்கிறீர் என்பதை நான் நாரதர் மூலம் கேள்விப்பட்டேன். {அடுத்த துவாபர யுகத்தையும் தாண்டி} இப்போது கலி யுகம் தொடங்கப் போகிறது. தற்போது என்னால் உமக்குச் செய்ய முடிந்ததை எனக்குச் சொல்வீராக.(62) ஓ! மன்னா, தேவர்களால் உமக்கு அளிக்கப்பட்ட வரத்தின் மூலம், நூறு வருடங்கள் போரிட்டாலும் என்னால் கொல்ல முடியாதவனைச் சாம்பலாக்கிவிட்டீர்" என்றான் {கிருஷ்ணன்}".(63)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் முசுகுந்தன் குகையைவிட்டு வெளியே வந்தான். தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட நுண்ணறிவுமிக்க வாசுதேவனும் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(64) குகையின் வாயிலில் இருந்து வெளிவந்த அவன், வடிவில் உயரம் குறைந்தவர்களும், குறைந்த சக்தியையும், ஆற்றலையும், பலத்தையும் கொண்டவர்களுமான மனிதர்களால் பூமி மறைக்கப்பட்டிருப்பதையும், தன் நாடு பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதையும் கண்டான்.(65) இவை அனைத்தையும் கண்ட அந்த மன்னன், கடுந்தவங்களில் ஈடுபடத் தீர்மானித்துக் கிருஷ்ணனுக்கு விடைகொடுத்து அனுப்பி, இமய மலையின் அடர்ந்த காடுகளுக்குள் புகுந்தான் {பதரிகாசிரமத்தை அடைந்தான்}.(66) கடுந்தவங்கள் பயின்று அங்கேயே இறந்து தன்னுடைய நற்செயல்களின் விளைவால் அடையப்பட்ட தேவலோகத்திற்குச் சென்றான்.(67)

அற ஆன்மா கொண்டவனும், நுண்ணறிவுமிக்கவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தகுமுறையின் மூலம் தன் பகைவனுக்கு அழிவைக் கொண்டுவந்து, அவனுடைய படைவீரர்களிடம் சென்று, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டதும், தங்கள் தலைவனை இழந்ததுமான அந்தப் படையுடன் {யவனப் படையுடன்} புறப்பட்டுச் சென்றான்.(68,69) ஜனார்த்தனன் இவ்வாறு தன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிய பிறகு, அந்த நால்வகைப் படையை மன்னன் உக்ரசேனனுக்கு அளித்துத் தன்னால் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு துவாரகா நகருக்கு அழகூட்டினான்" {என்றார் வைசம்பாயனர்}.(70)

விஷ்ணு பர்வம் பகுதி – 114 – 058ல் உள்ள சுலோகங்கள் : 70
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்