(காலயவநஸ்யாபியோகோ த்வாரவதீப்ரயாணம்)
Krishna's proposal to go to Dwaraka | Vishnu-Parva-Chapter-113-057 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனுடைய விருப்பத்தின் பேரில் மதுரையைவிட்டுக் குசஸ்தலிக்குச் சென்ற யாதவர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒரு காலத்தில் தாமரைக் கண்ணனான கிருஷ்ணன், யதுக்களின் சபையில் அவர்களிடம் பின்வரும் அறிவார்ந்த சொற்களைச் சொன்னான்.(1) {கிருஷ்ணன்}, "இந்த மதுரா நகரம் யதுக்களின் வசிப்பிடமாகும். நாங்கள் இங்கே பிறந்தோம், விரஜத்தில் {ஆயர்பாடியில்} வளர்க்கப்பட்டோம்.(2) எனினும் நம் அனைவரின் துன்பங்களும் அகன்றன, பகைவரும் வீழ்த்தப்பட்டனர். இப்போது நமக்கு மன்னர்களுடனான பகைமையும், ஜராசந்தனுடன் போரும் தொடங்கியிருக்கின்றன.(3) நம்மிடம் எண்ணற்ற காலாட்படையினர் இருக்கின்றனர், விலங்குகளும் இருக்கின்றன. நம்மிடம் போதுமான அளவு ரத்தினங்களும் இருக்கின்றன, நண்பர்களும் இருக்கின்றனர்.(4) நமது நண்பர்களின் மூலமும், படைவீரர்களின் மூலமும் நாம் செல்வத்தைத் திரட்டியிருந்தாலும், மதுரா நகரம் பகைவர் எளிதில் நுழையும் வண்ணம் மிகச் சிறியதாக இருக்கிறது.(5) அதையுந்தவிர, ஒரு கோடி இளவரசர்களும், காலாட்படையினரும் இங்கே சேர்ந்து வாழ்ந்து வந்தால், அவர்களுக்குள் பிளவு ஏற்படுவதற்குரிய போதுமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன[1].(6) எனவே, ஓ! முன்னணி யதுக்களே, நாம் வேறெங்காவது சென்று வாழ்வது சிறந்தது என நான் கருதுகிறேன்.(7) யதுக்களின் இந்தக் கூட்டத்தின் முன்பு நமது நன்மைக்காக நான் சொன்னதை நீங்கள் ஒப்புக்கொண்டால் உரிய காலத்தில் அதைச் செயல்படுத்துவேன்" என்றான் {கிருஷ்ணன்}.(8)
[1] சித்திரசாலை பதிப்பில், "இங்கே (நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணாக்கான) பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களும், காலாட்படைக் கூட்டத்தினரும் இருக்கின்றனர். அனைவரும் இங்கே வாழ்வதற்கு இந்த இடம் போதுமானதாக இருக்காது என நான் கருதுகிறேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நம்மிடம் கோடிக்கணக்கான இளைஞர்களும், பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையினரும் இருக்கின்றனர். இதனால் நாம் இங்கே வசிப்பது கடினமாகும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "இங்குக் காலாட்படைக்கும், யுவகோடிகளுக்கும் கைகலப்பு எதிர்பார்க்கிறேன். இங்கு வசிப்பது எனக்கு உசிதமாகப் படவில்லை" என்றிருக்கிறது.
இதைக் கேட்ட யாதவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, "ஓ! கிருஷ்ணா, இந்த மக்கள் அனைவரின் நன்மைக்கும் உகந்ததென நீ கருதுவதைச் செய்வாயாக" என்றனர்.(9)
அதன்பிறகு விருஷ்ணிகள் இந்த மிகச் சிறந்த முன்மொழிவு குறித்த ஆலோசனைகளைத் தங்களுக்குள் செய்யத் தொடங்கினர், {அவர்கள்} "நம் பகைவனான மன்னன் ஜராசந்தன் நம்மால் கொல்லத்தகாதவனாக விதிக்கப்பட்டிருக்கிறான். அவன் பெரும்பலம் கொண்டவனாகவும் இருக்கிறான்.(10) மன்னர்களின் படைகள் பலவும் இந்த மதுரா நகரத்தில் அழிக்கப்பட்டது உண்மையே. ஆனால் நூறு ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாத அளவுக்கு அவனது படைவீரர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர்" {என்றனர்}.(11)
அந்த நேரத்தில், ஓ! மன்னா, பேரரசன் ஜராசந்தன், காலயவனனுடன் சேர்ந்து தன் படையுடன் மதுராவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.(12) தடுக்கப்பட முடியாத பெரும் படையுடன் ஜராசந்தனும், காலயவனனும் வருவதைக் கேள்விப்பட்ட யாதவர்கள் முன்பு சொன்னதைப் போலவே பின்வாங்க நினைத்தனர்.(13)
வாய்மைநிறைந்த கிருஷ்ணன், மீண்டும் யாதவர்களிடம், "இன்று மங்கலமான நாளாக இருக்கிறது. எனவே இன்றே நாம் நமது படையுடனும், தொண்டர்களுடனும் மதுராவை விட்டுப் புறப்படுவோம்" என்றான்.(14)
கிருஷ்ணனின் ஆணையைக் கேட்ட வசுதேவனின் தலைமையிலான யாதவர்கள், தங்கள் மனைவிமாருடனும், தேர்கள், யானைகளுடனும், கடலலைகளுக்கு ஒப்பான படைவீரர்களின் ஒலியால் நாற்புறத்தையும் எதிரொலிக்கச் செய்தவாறே புறப்பட்டுச் சென்றனர்.(15,16) அந்த யாதவர்கள், தங்கள் செல்வத்துடனும், உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடனும், தங்கத் தேர்கள், மதங்கொண்ட யானைகள், பொன்னால் அலங்கரிக்கப்பட்டு நடைபயிலும் குதிரைகள் ஆகியவற்றுடனும் மதுராவை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.(17,18) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்த யாதவர்கள் தங்கள் தங்களுக்குரிய படையணிகளை அலங்கரித்து அவற்றைத் தூண்டிவிட்டு மேற்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.(19) வசுதேவனும், போர்க்களத்தை எப்போதும் அலங்கரிக்கும் முன்னணி யாதவர்களும் படையினர் முன்பு நின்று அவர்களுக்கு வழிகாட்டினர்.(20)
இவ்வாறு அந்த முன்னணி யதுக்கள் நெடுந்தொலைவைக் கடந்து கடற்கரையை அடைந்தனர். அந்த இடம் பல வகைச் செடிகொடிகளுடன் கூடியதாகவும், தென்னை மரங்களும், அழகிய யானைகளும் நிறைந்ததாகவும், பனைமரங்கள், புன்னைரங்கள், பகுள மரங்கள், திராட்சை தோட்டங்களால் மறைக்கப்பட்டதாகவும் இருந்தது.(21,22) காண்பதற்கினிய இத்தகைய இடத்தை அடைந்த யாதவர்கள் தேவலோகத்தையே அடைந்து விட்டதைப் போலப் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.(23) பகைவீரர்களைக் கொல்பவனான கிருஷ்ணன், நகரம் அமைப்பதற்கான இடத்தைத் தேடி வந்து கடற்கரையில் அமைந்திருந்த இந்தப் பெருநிலத்தைக் கண்டான்.(24) கற்களுடன் கலந்த தாமிர வண்ண மண்ணைக் கொண்ட அந்த நிலம், விலங்குகளை {வண்டிகளைச்} சுமக்கத் தகுந்ததாகவும், ஒரு நகரத்திற்கான நல்ல அடையாளங்களைக் கொண்டதாகவும், செழிப்பின் தேவியே {ஸ்ரீதேவியே} விரும்பி வசிக்கும் இடமாகவும் இருந்தது.(25) அங்கே கடல் காற்று வீசிக் கொண்டிருந்தது, அந்த இடத்திற்குப் பெருங்கடல் நீரளித்துக் கொண்டிருந்தது.(26) அதன் அருகிலேயே மந்தர மலையைப் போன்ற எழில்மிகுந்த ரைவத மலையும் அழகில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(27) ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டதும், பெரும் மனிதர்கள் அவ்வப்போது வந்து செல்லும் இடமாக இருந்ததுமான அந்த மலையில் {ரைவத மலையில்} துரோணர் நீண்ட பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.(28) அங்கேதான் மன்னன் ஏகலவ்யனும் வாழ்ந்திருந்தான். {அங்கே} அவனால் {கிருஷ்ணனால்} பகடைக்களம் போன்று அமைக்கப்பட்ட விளையாட்டுக் களம் துவாராவதி என்ற பெயரில் கொண்டாடப்பட்டது[2].(29) கேசவன் அந்த இடத்தையே தன் நகரத்திற்காகத் தேர்ந்தெடுத்தான், யாதவர்களும், தங்கள் படைவீரர்களுடன் அங்கேயே முகாமிட விரும்பினர். அதன் பிறகு யது குலத் தளபதிகள் இரவைக் கழிப்பதற்காக அங்கே கூடாரங்களை அமைத்தனர்.(30,31)
[2] சித்திரசாலை பதிப்பில், "அங்கே துரோணர் வெகு காலம் வாழ்ந்த இடத்தில் ஏகலவ்யன் வசித்திருந்தான். அங்கே அந்த இடத்தில் பல மனிதர்களும் அனைத்து வகை ரத்தினங்களும் இருந்தன. அங்கே தான் மன்னனுக்கான {உக்ரசேனனுக்கான!} விளையாட்டுக் களம் கட்டப்பட்டது. பகடை விளையாட்டின் அட்டை போன்று எட்டு பகுதிகளைக் கொண்ட பெரிய பகுதியான அது துவாரவதி என்று பெயரிடப்பட்டது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இங்கேதான் ஏகலவ்யன் வசித்திருந்தான், இந்த இடத்தில்தான் துரோணர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தார். அங்கே பல மனிதர்கள் இருந்தனர், அனைத்து வகை ரத்தினங்களும் இருந்தன. மன்னனின் இன்பத்திற்காக அங்கே ஒரு சிறந்த இடம் அமைக்கப்பட்டது. அந்தப் பரந்த இடத்திற்குத் துவாராவதி என்று பெயரிடப்பட்டது. அஃது அஷ்டபாத விளையாட்டுக்கான விரிப்பு போல இருந்தது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அஃது ஏகலவ்யன் வஸித்த இடம், வெகு மனிதர்கள் இருந்தவிடம் எல்லா ஸ்ரேஷ்டமான பொருள்கள் இருக்குமிடம். அங்கேயே அந்த உக்ரஸேன ராஜாவுக்கு விளையாடுமிடம் நன்கு நிர்மாணிகப்பட்டுள்ளது. "த்வராவத்" எனும் பெயர்" என்றிருக்கிறது. உக்ரசேனனுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டுக் களம் என்பது உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில் மட்டுமே இருக்கிறது.
யதுக்களில் முதன்மையான தலைவன் கிருஷ்ணன் அங்கே தன் நகரத்தை அமைக்கும் நோக்கில் அவர்களுடன் சேர்ந்து கவலைகளின்றி வாழ்ந்து வந்தான்.(32) மனிதர்களில் முதன்மையானவனும், யாதவர்களின் தலைவனும், கதனின் அண்ணனுமான அவன் {கிருஷ்ணன்}, அந்த நகரத்தில் அமைய இருக்கும் பல்வேறு வீடுகளுக்கான பெயர்களைத் தன் மனத்துக்குள் நினைத்தான்.(33) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு துவாராவதி நகரை அடைந்த யாதவர்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தேவலோகத்தில் வசிக்கும் தேவர்களைப் போல அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.(34) ஓ! பரதனின் வழித்தோன்றலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணன் {கேசவன்}, இவ்வாறு காலயவனன் வருவதைக் கேட்டு, ஜராசந்தனின் மீது கொண்ட அச்சத்தால் துவாரவதி {குசஸ்தலி} நகரத்திற்குப் புறப்பட்டு வந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(35)
விஷ்ணு பர்வம் பகுதி – 113 – 057ல் உள்ள சுலோகங்கள் : 35
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |