(காலயவநம் ப்ரதி ஜராஸம்தஸம்தேசம்)
JShalya meets Kalayavana | Vishnu-Parva-Chapter-110-054 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : காலயவனனிடம் தூது சென்ற சால்வன்; ஜராசந்தனின் சொற்களைக் கேட்ட காலயவனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "யவனர்களின் மன்னன் காலயவனன் பெருஞ்சக்தி வாய்ந்தவனாகவும், அரச கடமைகளைப் பின்பற்றித் தன் நகரில் வசிப்பவர்களை ஆட்சி செய்பவனாகவும் இருந்தான்.(1) அவன் ஞானியாகவும், மூன்று வர்க்கங்களை[1] அறிந்தவனாகவும், ஆறு குணங்களில்[2] திறம்பெற்றவனாகவும், ஏழு வகைக் குற்றங்களை[3] அறியாதவனாகவும்[4],(2) அனைத்துச் சாதனைகளுடன் கூடியவனாகவும், ஸ்ருதிகளை நன்கறிந்தவனாகவும், பக்திமானாகவும், வாய்மை நிறைந்தவனாகவும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனாகவும், போர் விதிகளை அறிந்தவனாகவும், கோட்டைகளைக் கைப்பற்றுவதில் திறன்வாய்ந்தவனாகவும்,(3) பெரும் பலம் கொண்ட வீரனாகவும், {ஒப்பற்ற பலம் கொண்டவனாகவும்}, தன் அமைச்சர்களைக் கௌரவிப்பவனாகவும் இருந்தான். ஒரு நாள் அவன், தன் அமைச்சர்களுடன் சேர்ந்து சுகமாக அமர்ந்து கொண்டிருந்தான்,(4) அப்போது, யவனர்களில் கல்விமான்களும், நுண்ணறிவுமிக்கவர்களும் தெய்வீகக் கருப்பொருட்கள் பலவற்றைக் குறித்துத் தங்களுக்குள் விவாதித்தபடியே அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தனர்.(5)
[1] "மன்னன் அல்லது நாட்டின் மூன்று நிலைகளான செழிப்பு, சமநிலை அல்லது சிதைவு அல்லது இழப்பு, ஆதாயம், சமத்துவம் என்பனவாகவும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[2] "படை பண்புடன் கூடிய, அல்லது அமைதியுடன் கூடிய ஒரு மன்னனின் ஆறு குணங்கள், போர், அணிவகுப்பு, போர்நிறுத்தம், பகை விதைத்தல், பகை வளர்த்தல், பாதுகாப்பை நாடல் என்பனவாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[3] "சூது, பகலில் உறக்கம், அவதூறு, வேசித்தனமான விளையாட்டு, சோம்பல், மது, வேட்டை என்பன ஏழு குற்றங்களாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[4] சித்திரசாலை பதிப்பில், "அந்த மன்னன் (பாதம் [நிலை - தர்மம்], ஸ்தானம் [தொடர்ச்சி - அர்த்தம்], விருத்தி [செழிப்பு - காமம்] என்ற) மூன்று நிலைகளை அறிந்தவனாக இருந்தான். (சந்தி, விக்ரஹம், யானம், ஆஸனம், திவைதீபாவம், ஆஷ்ரயம்) என்ற ஆறு குணங்களுடன் கூடிய புத்தியைக் கொண்டவனாக அவன் இருந்தான். அவன் (பகடை, வேட்டை, பெண்கள், மது ஆகியவற்றையும், மேற்கண்ட மூன்று நிலைகளையும் உள்ளடக்கிய) ஏழு குற்றங்களை அறியாதவனாகவும் இருந்தான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "தர்மார்த்தகாம தத்வமறிந்தவன்; புத்திமான்; ஸந்தி முதலிய ஆறு ராஜநீதி குணங்களையும் அனுஸரித்து ஜீவிப்பவன். ஏழு விடத் தோஷங்களொன்றும் அறியாதவன்" என்றிருக்கிறது.
அதே வேளையில் இனிமை நிறைந்ததும், கிளர்ச்சியடையச் செய்வதும், குளிர்ந்ததும், நறுமணமிக்கதுமான காற்று அங்கே வீசியது.(6) மன்னன் காலயவனனும், அங்கே கூடியிருந்த யவனர்கள் அனைவரும் கிளர்ச்சியடைந்தவர்களாக, "இஃது எங்கிருந்து வருகிறது?" என்று நினைத்தனர்.(7) அப்போது தெற்கிலிருந்து ஒரு தேர் வருவதை அவர்கள் கண்டனர். அது பொன்மயமானதாகவும், வெண்மையானதாகவும், ஒளிபொருந்திய ஆபரணங்களால் ஒளியூட்டுவதாகவும், தெய்வீகக் கொடிகளாலும், முக்கோணக் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டதாகவும், மனம், அல்லது காற்றின் வேகம் கொண்ட குதிரைகளால் இழுக்கப்பட்டதாகவும், புலித்தோல்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும், பகைவருக்குப் பயங்கரமானதாகவும், நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், தேவ தச்சனால் வடிவமைக்கப்பட்டதாகவும், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டதாகவும், மற்ற தேர்களைக் கலங்கடிக்கவல்லதாகவும், சூரியச் சந்திரக் கதிர்களைப் போன்ற ரத்தினங்களால் பளபளப்பதாகவும் இருந்தது.(8-11)
பலம்வாய்ந்தவனும், அழகனுமான சௌபத்தின் மன்னன் {சால்வன்} அதில் அமர்ந்திருந்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான யவனர்களின் மன்னன் {காலயவனன்}, தன் நண்பனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து அவனது கால்களைக் கழுவுவதற்கான நீரையும், அர்க்கியத்தையும் {தன் அமைச்சர்களின் மூலம்} மீண்டும் மீண்டும் அனுப்பினான்.(12) அவன் {காலயவனன்}, தன் அரியணையில் இருந்து எழுந்து, கைகளில் அர்க்கியத்துடன் வெளியே சென்று, அந்தத் தேர் தரையிறங்கும் படியில் {அல்லது அந்தத் தேர் இறங்கக்கூடிய இடத்தில்} காத்திருந்தான்.(13) பெருஞ்சக்திவாய்ந்த சால்வன், சக்ரனைப் போன்று பலம்வாய்ந்தவனான மன்னன் காலயவனனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து, நம்பிக்கையுள்ள இதயத்துடன் தன் தேரில் இருந்து இறங்கித் தன் நண்பனைக் காண்பதற்காக அந்த யவன அரண்மனைக்குள் நுழைந்தான். மன்னர்களில் முதன்மையான சால்வன், யவனர்களுடைய மன்னனின் கரங்களில் இருக்கும் அர்க்கியத்தைக் கண்டு, இனிய சொற்களில், "ஓ! பேரொளி கொண்டவனே, நான் அர்க்கியத்திற்குத் தகுந்தவனல்ல.(14-16) நான் இப்போது மன்னர்களின் தூதனும், நுண்ணறிவுமிக்க ஜராசந்தனால் உன்னிடம் அனுப்பப்பட்டவனும் ஆவேன். எனவே மன்னர்களின் அர்க்கியத்திற்கு நான் தகுந்தவனல்ல" என்றான் {சால்வன்}.(17,18)
காலயவனன் {சால்வனிடம்}, "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, மன்னர்களின் நன்மைக்காக மகத மன்னனால் {ஜராசந்தனால்} நீ தூதனாக இங்கே அனுப்பப்பட்டாய் என்பதை நான் அறிவேன்.(19) ஓ! நுண்ணறிவுமிக்க மன்னா, மொத்த மன்னர் குழாமால் நீ இங்கே அனுப்பப்பட்டிருக்கிறாய் என்ற காரணத்தாலேயே, கால் கழுவுவதற்குரிய நீர், இருக்கை ஆகியவற்றுடனும், பல்வேறு வழிமுறைகளின் மூலமும் நான் உன்னைத் துதித்து வரவேற்கிறேன்.(20) ஓ! மன்னா, உன்னைத் துதிப்பதன் மூலம் நான் மொத்த மன்னர் குழாமையும் வழிபட்டவனாவேன், மேலும் உன்னை மதிப்பதன் மூலம் அவர்களை மதித்தவனாகவும் ஆவேன். எனவே, ஓ! மன்னா, நீ இந்த அரியணையில் என்னுடன் அமர்வாயாக" என்றான் {காலயவனன்}".(21)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதன்பிறகு அந்த மன்னர்கள் இருவரும், ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டும், ஒருவரையொருவர் நலன் விசாரித்துக் கொண்டும் அந்தப் புனிதமான அரியணையில் சுகமாக அமர்ந்தனர்[5].(22)
[5] சித்திரசாலை பதிப்பில், "மன்னன் காலயவனன் சால்வனின் கரங்களைப் பற்றிக் கொண்டும், அவனை ஆரத் தழுவிக் கொண்டும் நலம் விசாரித்தான். அவர்கள் இருவரும் தங்களுக்குரிய அரச இருக்கைகளில் சுகமாக அமர்ந்தனர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "கைகுலுக்கி, க்ஷேம ஆரோக்யம் விசாரித்து, இருவரும் சேர்ந்து, மங்களமான ஸிம்ஹாஸத்தில் இனிது அமர்ந்திருந்தனர்" என்றிருக்கிறது.
காலயவனன் {சால்வனிடம்}, "மன்னர்களான நீங்கள், யாருடைய கரங்களின் வலிமையினால் நீங்கள் சச்சியின் தலைவனுடைய {இந்திரனின்} பாதுகாப்பில் இருப்பதைப் போலக் கவலையேதுமின்றி வாழ்கிறீர்களோ அவருக்கு எது சாத்தியமில்லாமல் போனதால் என்னிடம் அவர் உம்மை அனுப்பியிருக்கிறார்?(23) ஓ! மன்னா, பலம் நிறைந்தவரான மகத மன்னர் {ஜராசந்தர்} எனக்கு அனுப்பியிருக்கும் ஆணையை உண்மையில் என்னிடம் சொல்வீராக. அவரது ஆணை மிகக் கடினமானதாக இருப்பினும் அதை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன்" என்றான்.(24)
சால்வன் {காலயவனனிடம்}, "ஓ! யவனர்களின் மன்னா, மகத மன்னன் உன்னிடம் சொல்லுமாறு என்னிடம் சொல்லி அனுப்பியதை நான் விரிவாகச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(25)
ஜராசந்தர், "தடுக்கப்பட முடியாதவனான கிருஷ்ணன், தன் பிறப்பிலிருந்தே உலகை ஒடுக்கிவருகிறான். அவனது தீய செயல்களை அறிந்து நான் அவனைக் கொல்ல முயன்றேன்.(26) நால்வகையானதும், வாகனங்களுடன் கூடியதுமான பெரும்படையுடனும், எண்ணற்ற மன்னர்களின் துணையுடனும் நான் கோமந்த மலையை முற்றுகையிட்டேன்.(27) அங்கே சேதி மன்னர் {தமகோஷர்} சொன்ன விவேகம் நிறைந்த சொற்களைக் கேட்டு அவர்களை (ராமனையும், கிருஷ்ணனையும்) அழிப்பதற்காக அந்தச் சிறந்த மலைக்கு நான் தீமூட்டினேன்.(28) அப்போது அந்த ராமன் {பலராமன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தழல்களைக் கொண்டதும், அண்ட அழிவின் போது உண்டாவதற்கு ஒப்பானதுமான நெருப்பைக் கண்டு அந்த மலைச் சிகரத்திலிருந்து பெருங்கடலைப் போன்ற மன்னர்களின் மத்தியில் குதித்தான். தடுக்கப்பட முடியாதவனான அவன், தேர்வீர்களையும், காலாட்படையினரையும், குதிரைப் படையினரையும் கொல்லத் தொடங்கினான்.(29,30) பாம்பைப் போல நகரும் அவன் தன் கலப்பையைக் கொண்டு யானைகளையும், குதிரைகளையும், படைவீரர்களையும் பிடித்து, தன் உலக்கையால் அவர்களைக் கலங்கடித்தான்.(31) சூரியனின் ஆற்றலைக் கொண்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ராமன், நூற்றுக்கணக்கான மன்னர்கள் நிறைந்த அந்தப் போர்க்களத்தில் மறையும் சூரியனைப் போலப் பல்வேறு வழிகளில் திரிந்து, யானைகளைக் கொண்டு யானைகளையும், தேர்களைக் கொண்டு தேர்வீரர்களையும், குதிரைகளைக் கொண்டு குதிரைப் படையையும் அழித்தான்.(32,33)
பெரும் பலம் மிக்கவனும், ஆற்றல்வாய்ந்த யது வீரனுமான ராமனுக்குப் பிறகு கிருஷ்ணன், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தன் சக்கரத்தையும், உருக்காலான தன் கதாயுதத்தையும் எடுத்துக் கொண்டு, அப்பாவி மானைத் தாக்கும் சிங்கத்தைப் போலத் தன் பாதத்தின் பலத்தால் மலையை நடுங்கச் செய்தபடியே பகைவரின் படைக்கு மத்தியில் குதித்தான்.(34,35) ஓ! மன்னா, அந்த நேரத்தில் சுழன்று கொண்டிருந்ததும், மழையில் நனைந்திருந்ததுமான அந்த மலை {கோமந்த மலை}, நெருப்பை அணைத்து ஆடிக் கொண்டிருப்பதைப் போலப் பூமிக்குள் நுழைந்தது[6].(36) அவ்வாறு எரியும் அந்த மலையில் இருந்து கீழே குதித்த ஜனார்த்தனன், தன் கையில் சக்கரம் தாங்கியவனாக எங்கள் படையை அழிக்கத் தொடங்கினான்.(37) அவன், தன்னுடைய பெரும் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டும், தன் கதாயுதத்தால் அனைவரையும் சாய்த்துக் கொண்டும், தன் உலக்கையால் மனிதர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கலங்கடிக்கத் தொடங்கினான்.(38) அப்போது அவர்களது கோபத்தில் உண்டானவையான சக்கரத்தின் நெருப்பும், கலப்பையின் நெருப்பும், சூரியனைப் போன்ற மன்னர்களால் பாதுகாக்கப்பட்ட {எங்கள்} பெரும்படையை எரித்தது.(39) மனிதர்கள், யானைகள், குதிரைகள், தேர்கள், கொடிகள் ஆகியவற்றுடன் கூடிய எங்கள் படையானது அவ்விரு காலாட்படை வீரர்களாலும் ஒரு கணத்தில் எரிக்கப்பட்டது.(40)
[6] சித்திரசாலை பதிப்பில், "மலைகளின் மன்னனும், குதிக்கப் போவதைப் போலத் தோன்றியதுமான அந்த மலை, நீர்த்தாரைகளால் நனைந்தது. (நீருடன்) சுடர்விட்டெரிந்த செந்நெருப்பை அணைத்துச் சற்றே அசைந்தபடியே அது தரைக்குள் சென்றது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "சிறந்த கோமந்த மலை நாட்டியமாடுவது போல, நீர்த்தாரையால் அபிஷேகம் செய்யப்பட்டது. {அதன்பிறகு} நெருப்பையணைத்துக் கோஷம் போட்டுக் கொண்டு தரையை அடைந்தது" என்றிருக்கிறது.
ஓ! மன்னா, சக்கரத்தின் நெருப்பால் அஞ்சி துயருற்றதும், முறியடிக்கப்பட்டதுமான என் படையைக் கண்ட நான், பெரும் தேர்த்திரள்கள் சூழ போரில் ஈடுபட்டேன்.(41) கேசவனின் அண்ணனும், பலனை அழித்த வீரனுமான பலதேவன், தன் கையில் கதாயுதத்துடன் என் முன்னே நின்றான்.(42) சிங்கம் போன்ற அந்த வீரன் {பலராமன்}, பனிரெண்டு அக்ஷௌஹிணிகள் படைவீரர்களைக் கொன்றும், {சம்வர்த்தகமெனும்} தன் கலப்பையையும், உலக்கையான சௌனந்தத்தையும் கைவிட்டும், தன் கதாயுதத்துடன் என்னைப் பின்தொடர்ந்து வந்தான்.(43) ஓ! மன்னா, வஜ்ரத்தைப் போன்ற தன் கதாயுதத்தை என் மீது வீசியெறிந்து ஆண்மையுடன் அவன் தரையில் நின்று கொண்டிருந்தான்.(44) கிரௌஞ்ச அழிவுக் காலத்தின் கார்த்திகேயனைப் போன்ற அவன், தன் அகன்ற வழிகள் இரண்டாலும் எரித்துவிடுவதைப் போல என் மூட்டுகளைப் பார்த்தான்.(45) ஓ! யவனர்களின் மன்னா, பலதேவனின் அத்தகைய வடிவைக் கண்ட எந்த மனிதன்தான் போர்க்களத்தில் அவன் முன்பு உயிர் வாழும் நம்பிக்கையுடன் நிற்பான்?(46) அவன், யமனின் தண்டத்திற்கு ஒப்பான கதாயுதத்தை ஏந்தி, கலப்பையுடன் சேர்த்து அதைச் சுழற்றியபோது, அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், மேக முழக்கத்தைப் போன்று ஆழமான தன் புலப்படாத குரலால் ஆகாயத்தை நிறைத்தபடியே, "ஓ! பாவமற்ற ராமா, (இவனை) தாக்காதே; ஓ! கலப்பைதாரியே {ஹலாயுதா}, {பீமனைத் தவிர} வேறு எவனாலும் இவன் மரணத்தை அடைவதில்லை என்று விதிக்கப்பட்டிருக்கிறது" என்று சொன்னான்.(47-49) நான் பெரும்பாட்டனால் சொல்லப்பட்ட இந்தச் சொற்களை என் காதுகளாலேயே கேட்டு கவலையால் நிறைந்தவனாகப் போர்க்களத்தில் இருந்து திரும்பி வந்தேன்.(50)
ஓ! மன்னா {காலயவனா}, இந்தக் காரணத்திற்காகவும், மன்னர்களின் நன்மைக்காகவும் நான் இந்த நிகழ்வை உனக்குச் சொல்லி அனுப்பியிருக்கிறேன். என் சொற்களைக் கேட்டுவிட்டு, இதில் எது சரியென நீ நினைக்கிறாயோ அதைச் செய்வாயாக.(51) ஒரு மகனைப் பெற விரும்பிய உன் தந்தை, தன் கடுந்தவங்களால் தேவர்களின் தேவனான சங்கரனைத் தணிவடையச் செய்து, மதுராவின் இளவரசர்களால் கொல்லப்பட முடியாத உன்னை மகனாக அடைந்தார்.(52) பெரும் முனிவரான கார்க்கியர், உண்ணா நோன்பிருந்து, பனிரெண்டு வருடங்கள் இரும்பு சூர்ணத்தை மட்டுமே உண்டு, தேவர்களாலும், அசுரர்களாலும் தியானிக்கப்படும் தாமரைப் பாதங்களைக் கொண்ட பெருந்தேவன் சிவனைத் தணிவடையச் செய்ததால் தான் விரும்பிய செல்வமான உன்னை அடைந்தார்.(53) அந்த ஜனார்த்தனன், சூரியக் கதிர்களின் மூலம் உலரும் பனியைப் போலக் கார்க்கிய முனிவரின் தவத்தாலும், பிறைச்சின்னம் தரித்த மஹாதேவனின் சக்தியாலும் நிச்சயம் மரணமடைவான்.(54) ஓ! மன்னா, இவ்வாறு மன்னர்களால் வேண்டிக்கொள்ளப்படும் நீ, கிருஷ்ணனை வெல்வதற்காக அணிவகுத்து வருவாயாக. உன் படையுடன் மதுரா நகருக்குள் நுழைந்து உன் புகழை அங்கே நிலைநாட்டுவாயாக.(55) வசுதேவனின் மகன் மதுராவில் பிறந்தவனாவான், பலதேவன் அவனுடைய அண்ணனாவான். நீ மதுரா நகருக்குச் சென்றால், போரில் அவர்களை உன்னால் வீழ்த்த இயலும்" என்றார் {ஜராசந்தர்}".(56)
சால்வன், "ஓ! மன்னா {காலயவனா}, மன்னர்களின் நன்மைக்காகப் பேரரசர் ஜராசந்தர் என்னிடம் சொல்லியனுப்பிய செய்தியை இவ்வாறே நான் உன்னிடம் சொல்லிவிட்டேன். உன் அமைச்சர்களுடன் முறையாக ஆலோசித்த பின், உன் நலத்திற்கு உகந்ததையும், சரியானதையும் இப்போது நீ செய்வாயாக" என்றான் {சால்வன்}" {என்றார் வைசம்பாயனர்}.(57)
விஷ்ணு பர்வம் பகுதி – 110 – 054ல் உள்ள சுலோகங்கள் : 57
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |