(காலயவநம் ப்ரதி ஶாலவகமநம்)
Jarasandha's proposal to invite Kalayavana | Vishnu-Parva-Chapter-109-053 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ஜராசந்தனுடைய அனுமதியின் பேரில் காலயவனனிடம் தூது சென்ற சால்வன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவனின் மகன் {கிருஷ்ணன்} புறப்பட்ட பிறகு, ஆபரணங்களால் அங்கங்கள் பளபளத்தவர்களும், தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப விரும்பியவர்களுமான மன்னர்கள், இதை (தங்கள் நோக்கத்தை ஜராசந்தனுக்குத்) தெரிவிக்கும் பொருட்டுப் பீஷ்மகனின் சபா மண்டபத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(1) அப்போது மன்னர்களில் முதன்மையானவனும், அறவிதிகளை நன்கறிந்தவனுமான பீஷ்மகன், சூரியனையும், சந்திரனையும் போன்ற பிரகாசத்துடன் அழகிய இருக்கைகளில் சுகமாக அமர்ந்திருந்த அந்த மன்னர்களிடம்,(2) "ஓ! மன்னர்களே, சுயம்வரத்திற்கு நேர இருக்கும் பேரழிவை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். என் பிழையின் விளைவாக ஏற்பட்ட பலனுக்காக நீங்கள் என்னை மன்னிப்பீராக" என்றான்"[1].(3)
[1] சித்திரசாலை பதிப்பில், "ஸ்வயம்வர முறையில் திருமணம் செய்வது உங்களுக்குத் தீங்கை விளைவிக்கும். வயது முதிர்ந்தவனான என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். காட்டுத் தீயில் எரியும் மரம் எவ்வாறு பலனளிக்கும்?" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "வயது சென்ற எனது துரத்ருஷ்ட பலனாக ஸ்வயம்வரம் வைத்த தோஷத்தை அறிந்து நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "(அந்த மன்னன் {பீஷ்மகன்}) இவ்வாறு சொல்லிவிட்டு மன்னர்கள் அனைவரையும் வரவேற்று, {பாரதத்தின்} மத்தியப்பகுதி, கிழக்கு, மேற்கு, வடக்குப் பகுதி மாகாணங்களின் ஏகாதிபதிகள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பி வைத்தான். மனிதர்களில் முதன்மையானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த மன்னர்களும் பதிலுக்கு மன்னன் பீஷ்மகனைக் கௌரவித்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.(4,5) ஜராசந்தன், சுனீதன் {தமகோஷன்}, பெருஞ்சக்திவாய்ந்த தந்தவக்ரன், சௌப மன்னன் சால்வன், மன்னன் மஹாகூர்மன் ஆகியோரும், மன்னர்கள் கிருதகைசிகர்களும், பிரவர குலத்தை {பெருங்குலத்தைச்} சேர்ந்த முன்னணி மன்னர்கள் அனைவரும்,(6,7) காஷ்மீர மன்னன் வேணுதாரியும், தக்காணத்தை {பாரதத்தின் தெற்குப் பகுதியைச்} சேர்ந்த மன்னர்கள் {தக்ஷிணாபதிகள்} பிறரும் ரகசியம் கேட்க விரும்பி பீஷ்மகனுடன் இருந்தனர்.(8,9) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பலம்வாய்ந்த மன்னன் பீஷ்மகன் இந்த மன்னர்கள் காத்திருப்பதைக் கண்டு அவர்களிடம் அன்புள்ள இதயத்துடனும், ஆழமான மென் குரலுடனும் மூவகைப் பொருள்களுடன் {அறம், பொருள், இன்பத்துடன்} தொடர்புடையவையும், புள்ளிவிவரங்களால் {அறிவு, செல்வம், ஆற்றல், பலம், வீரம், அருளொளி என்ற ஆறு குணங்களால்} அலங்கரிக்கப்பட்டவையுமான அறச் சொற்களைச் சொன்னான்.(10,11)
பீஷ்மகன், " மன்னர்களே, நீங்கள் சொன்ன அறச் சொற்களைப் பின்பற்றியே நான் இவ்வாறு செயல்பட்டேன் {இந்த சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது}; நாம் எப்போதும் அறவிதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதால் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்" என்றான்".(12)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அறவிதிகளை நன்கறிந்த மன்னன் பீஷ்மகன், இவ்வாறு அந்த மன்னர்களின் கூட்டத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, தன் மகனை {ருக்மியை} இலக்காகக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினான்.(13)
பீஷ்மகன், "என் மகனுடைய செயல்பாடுகளைக் கண்டு என் கண்கள் அச்சத்தில் நடுங்குகின்றன; நான் இப்போது அனைவரையும் சிறுவர்களாகவே கருதுகிறேன். அவனே (கிருஷ்ணனே) புருஷர்களில் முதன்மையானவன்.(14) புகழும், ஆற்றலும் கொண்டவனும், புகழின் அவதாரமும், சிறப்புமிக்கவர்களில் முதன்மையானவனுமான அவன், தன் கரங்களின் வலிமையையும், தன்னுடைய பெரும்புகழையும் மனிதர்களின் இந்த உலகத்தில் நிறுவியிருக்கிறான்.(15) தாமரைக் கண்ணனான கிருஷ்ணனைத் தன் கருவில் கொண்டவளும், மங்கையரில் முதன்மையானவளும், அழகின் மொத்த வடிவமும், மூவுலகங்களில் உள்ள அனைவரிலும் பெரியவளும், தேவர்களாலும் துதிக்கப்படுபவளும், அன்பு நிறைந்த தன் கண்களால் அவனுடைய தாமரை முகத்தைக் கண்டவளுமான தேவகி அருளப்பட்டவள்" என்றான்".(16,17)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னன் பீஷ்மகன் அந்த மன்னர்களின் கூட்டத்தின் மத்தியில் மீண்டும் மீண்டும் இந்தச் சொற்களைச் சொன்ன போது, பெரும் பிரகாசம் கொண்ட மன்னன் சால்வன்[2], இனிய சொற்களில் பேசத் தொடங்கினான்.(18)
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இங்கே சல்லியன் என்றிருக்கிறது. சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இங்கே சால்வன் என்று இருக்கிறது. மூல ஸ்லோகங்களில் சால்வன் என்றே இருப்பதால் இங்கே சால்வன் என்று திருத்தி அளிக்கப்படுகிறது.
சால்வன் {ருக்மிணியின் தந்தை பீஷ்மகனிடம்}, "ஓ! பகைவரைக் கொல்பவரே, ஓ! மன்னர்களின் தலைவா, நீர் உமது மகனுக்காக {ருக்மிக்காக} வருந்தாதீர். க்ஷத்திரியர்கள் போரில் வெற்றியையோ, தோல்வியையோ அடைகின்றனர்.(19) இது மனிதர்களின் தவிர்க்க முடியாத வழியும், நித்திய அறமும் ஆகும். பெருஞ்சக்திவாய்ந்த உமது மகனைப் போரில் தாக்குப்பிடிக்கப் பலதேவனையும், கிருஷ்ணனையும் தவிர மூன்றாம் மனிதனான வேறு எவனால் முடியும்?(20) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட உமது மகன் வில்லை எடுத்துக் கொண்டு, போரில் பகைவரின் தேர்வீரர்களையும், பெரும் வீரர்களையும் தனியாகவே தாக்குப்பிடிக்க இயன்றவனாக இருக்கிறான்.(21) அவன் தன் கரங்களின் வலிமையைக் கொண்டு தேவர்களும் பயன்படுத்தக் கடினமான பார்க்கவ ஆயுதங்களைக் கையாளும் போது எந்த மனிதனால் அவற்றைத் தாங்கிக் கொள்ள இயலும்? நித்திய புருஷனான கிருஷ்ணன் பிறப்போ, இறப்போ அற்றவனாக இருக்கிறான்.(22,23) திரிசூலபாணியாலும் (சிவனாலும்) அவனை மனிதர்களின் உலகில் வீழ்த்த முடியாது. ஓ! பேரரசரே, உமது மகன் சாத்திரங்கள் அனைத்தின் உண்மைப் பொருளை நன்கறிந்திருக்கிறான்.(24) அவன் {ருக்மி}, கேசவனை {கிருஷ்ணனை} ஈசானனாக அறிந்து கொண்டு அவனுடன் போரில் ஈடுபடாமல் இருக்கிறான். அவனை {கிருஷ்ணனை} யாராலும் வீழ்த்த முடியாது என்பதில்லை.(25)
{யவன மன்னனால் போரில் கிருஷ்ணனை வீழ்த்த இயலும்}. காலயவனன் என்ற ஒருவன் கேசவனால் கொல்லப்பட இயலாதவனாக இருக்கிறான். கார்க்கிய முனிவர் ஒரு மகனைப் பெற வேண்டும் என்ற நோக்கில், இரும்புப் பொடியை {இரும்பு சூர்ணத்தை} உண்டு, மிகக் கடுமையானவையும், பயங்கரமானவையுமான தபங்களைச் செய்து கொண்டு பனிரெண்டு ஆண்டுகளாக ருத்திரனைத் துதித்து வந்தார்.(26,27) இதனால் நிறைவடைந்த சங்கரன் ஒரு வரம் தர முன் வந்தபோது, 'மதுராவின் மன்னர்களால் கொல்லப்பட இயலாத ஒரு மகன் வேண்டு'மென அந்தக் கார்க்யர் வேண்டினார். ருத்திரனும், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி அந்த வரத்தை அருளினான்.(28) அந்தக் கார்க்யரின் மகனான காலயவனன், மதுராவின் மன்னர்களால் போர்க்களத்திலோ, குறிப்பாக மதுரா நகரிலோ ருத்திரனுடைய அந்த வரத்தின் மூலம் கொல்லப்பட இயலாதவனாக இருக்கிறான்.(29) மதுராவின் இளவரசர்களில் கிருஷ்ணன் பெருஞ்சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும், போர் நேர்கையில் அவனுடன் {காலயவனனுடன்} போரிட்டால் அவனால் வீழ்த்தப்படுவான்.(30) ஓ! மன்னர்களே, நலம் தரும் என் உரத்த சொற்களை ஏற்று யவனர்களின் மன்னனுடைய தலைநகருக்கு ஒரு தூதனை அனுப்புவீராக" என்றான் {சால்வன்}".(31)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சௌபத்தின் மன்னனும், பெரும்பலம் வாய்ந்தவனுமான சால்வனின் சொற்களைக் கேட்ட முன்னணி மன்னர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக "நாம் செய்வோம்" என்று சொன்னார்கள்.(32) பேரரசன் ஜராசந்தன், அவர்களின் சொற்களைக் கேட்டும், பிரம்மனின் சொற்களை நினைவுகூர்ந்தும் இதயமுடைந்து பேசத் தொடங்கினான்.(33)
ஜராசந்தன், "ஐயோ, முன்பெல்லாம் அந்நிய மன்னன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட தலைவர்கள் அனைவரும் என்னைத் தஞ்சமடைந்து தாங்கள் இழந்த நாடுகளையும், பணியாட்கள், படைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் திரும்பப் பெறுவார்கள்.(34) இப்போதோ, தங்கள் தலைவனிடம் கொண்ட கோபத்தின் காரணமாக அந்நியனுடன் தொடர்பு கொள்ளும் பெண்ணைப் போல என்னை மற்றொருவனின் புகலிடத்தை நாடத் தூண்டுகின்றனர்.(35) ஐயோ, கிருஷ்ணன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நானே மற்றொருவனைத் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் என்றால் இதில் விதியே வலியது. அதை எவ்வழிமுறையினாலும் எவனாலும் மீற முடியாது.(36) ஓ! மன்னர்களே, ஆதரவற்றவனாக மற்றொருவனின் (மற்றொரு மன்னனின்) பாதுகாப்பை நாடுவதைவிட இறப்பதே எனக்குச் சிறந்தது. எனவே நான் வேறு எவனுடைய புகலிடத்தையும் நாடமாட்டேன்.(37) புலப்படாத சொற்களால் {அசரீரியால்} எனக்குக் காலனாகச் சுட்டிக் காட்டப்பட்டவன் கிருஷ்ணனாகவோ, பலதேவனாகவோ, வேறு மனிதனாகவோ, தேவர்களில் எவனுமாகவோ இருந்தாலும்கூட நான் அவனுடன் போரிடுவேன்.(38)
இதுவே என் உறுதியான தீர்மானம், தகைமை கொண்ட மனிதனின் ஒழுக்கமும் இதுவே. மற்றொருவனின் பாதுகாப்பை நாடி அதற்கு எதிராக நான் செயல்பட மாட்டேன்.(39) அவன் (கிருஷ்ணன்) உங்கள் அனைவரையும் அழித்துவிடக்கூடும் என நீங்கள் அனைவரும் நினைப்பதால், உங்கள் பாதுகாப்புக்காக நான் அவனிடம் {காலயவனிடம்} ஒரு தூதனை அனுப்பப் போகிறேன்.(40) ஓ! மன்னர்களே, அந்தத் தூதனும் வழியில் கிருஷ்ணனால் தடுக்கப்படாத வகையில் வான் வழியே செல்ல வேண்டும். அவ்வழியில் செல்லக்கூடிய ஒருவனை நீங்கள் தேடுவீராக.(41) பிரகாசமிக்கவனும், சௌபத்தின் மன்னனுமான இவன் {சால்வன்}, நெருப்பு, சூரியன், சந்திரன் ஆகியோரின் ஆற்றலைக் கொடையாகக் கொண்டிருக்கிறான். சூரியனைப் போன்ற தேரில் அவனே {சால்வனே} அந்த யவனனின் {காலயவனனின்} தலைநகருக்குச் செல்லட்டும்.(42) அவன் நம் தூதனாக யவனர்களின் மன்னனிடம் சென்று, கிருஷ்ணனுடன் நாம் கொண்டுள்ள சச்சரவை அவனுக்குத் தெரிவிக்கட்டும். அவன் {சால்வன்} தலைவர்களின் இந்தக் கூட்டத்திற்கு அவனை {காலயவனனை} அழைத்து வர முயற்சி செய்யட்டும்" என்றான் {ஜராசந்தன்}".(43)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பேரரசன் ஜராசந்தன் இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பலம்வாய்ந்தவனான சௌபத்தின் மன்னனிடம் {சால்வனிடம்} மீண்டும், "ஓ! கௌரவங்களை அளிப்பவனே, இந்தத் தலைவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய நீ புறப்படுவாயாக.(44) யவன மன்னன் {காலயவனன்} புறப்பட்டு வந்து, கிருஷ்ணனை வென்று, நமக்கு நிறைவளிக்கும் வகையிலான உத்திகளைப் பயன்படுத்துவாயாக" என்றான்.(45)
அந்தப் பேரரசன் {ஜராசந்தன்}, இவ்வாறு அனைவருக்கும் ஆணையிட்டுவிட்டு, பீஷ்மகனை முறையாக வழிபட்டுவிட்டுத் தன் படைகள் சூழத் தன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றான்.(46) மன்னர்களில் முதன்மையான சால்வனும், அனைவரையும் முறையாகக் கௌரவித்துவிட்டு, காற்றைப் போலச் செல்லும் தேரில் வான வழியில் புறப்பட்டுச் சென்றான்.(47) தக்காணத் {பாரதத்தின் தெற்குப்பகுதியைச் சார்ந்த} தலைவர்கள் {தக்ஷிணாபதிகள்} சிறிது தொலைவிற்கு ஜராசந்தனைப் பின்தொடர்ந்து சென்ற பிறகு தங்கள் தங்களுக்குரிய நகரங்களுக்குச் சென்றனர்.(48) மன்னன் பீஷ்மகன், தன்னுடைய தீய ஒழுக்கத்தையும், கிரதன், கைசிகன், கிருஷ்ணன் ஆகியோரின் ஒழுக்ககங்களையும் சிந்தித்தவாறே தன் மகனுடன் {ருக்மியுடன்} சேர்ந்து தன் அரண்மனைக்குள் நுழைந்தான்.(49)
கற்புடையவளும், விவேகியுமான ருக்மிணி, கிருஷ்ணனின் வரவால் தம் சுயம்வரம் நிறுத்தப்பட்டதால், மன்னர்கள் ஏமாற்றமடைந்ததை அறிந்து தன் தோழிகளிடம் சென்று, நாணத்தால் கவிழ்ந்த முகத்துடன்,(50) "தாமரைக் கண்களைக் கொண்ட கிருஷ்ணரைத் தவிர வேறு எவரையும் துணையாகக் கொள்ள நான் விரும்பவில்லை என்பதை உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்" என்றாள் {ருக்மிணி}" {என்றார் வைசம்பாயனர்}.(51)
விஷ்ணு பர்வம் பகுதி – 109 – 053ல் உள்ள சுலோகங்கள் : 51
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |