(காலயவனவாக்யம்)
Kalayavana agrees to kill Krishna | Vishnu-Parva-Chapter-111-055 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனைக் கொல்லும் திட்டத்திற்கு சால்வனிடம் இணங்கி மதுராவுக்குப் புறப்பட்ட காலயவனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பேரரசன் ஜராசந்தனின் ஆணையின் பேரில் மன்னன் சால்வன் இதைச் சொன்ன பிறகு, யவனர்களின் மன்னனான காலயவனன், பெரும் மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினான்.(1)
காலயவனன் {சால்வனிடம்}, "ஓ! நான் உயர்வாகக் கௌரவிக்கப்பட்டவனானேன், அருளப்பட்டவனுமானேன்; கிருஷ்ணனை வெல்வதற்கு எண்ணற்ற மன்னர்கள் என்னை வேண்டிக் கொண்டதன் மூலம் என் வாழ்வு வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டது.(2) மூவுலகங்களிலும், ஏன் தேவர்களாலும், அசுரர்களாலும் வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனை வீழ்த்தும் பணியில் இம்மன்னர்கள் என்னை நியமித்திருக்கிறார்கள். நான் வெற்றியை அடையும் வகையில் அவர்கள் எனக்கு ஆசி வழங்கியிருக்கின்றனர்.(3) இந்த மன்னர்கள் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் என் வெற்றியைத் தீர்மானித்திருக்கும் போது, நீர் போன்ற அவர்களின் சொற்பொழிவால் நான் வெற்றியடைவேன்.(4) மன்னர்களின் வேண்டுகோளுக்கிணங்க பேரரசர் ஜராசந்தர் இட்ட ஆணை எதுவாக இருப்பினும் நான் அதைச் செய்வேன். இதில் நான் தோல்வியடைந்தாலும், அஃது என் வெற்றிக்கு ஒப்பானதாகவே இருக்கும்.(5) ஓ! மன்னா {சால்வா}, இன்று நாளும், நட்சத்திரங்களும் மங்கலமாக இருக்கின்றன. போர்க்களத்தில் கிருஷ்ணனை வீழ்த்த இன்றே இந்த மங்கலமான கணத்திலேயே மதுராவுக்குப் புறப்படப் போகிறேன்" என்றான் {காலயவனன்}".(6)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "யவனர்களின் தலைவன் {காலயவனன்}, பெருஞ்சக்திவாய்ந்த சௌப மன்னன் சால்வனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், ஆடைகளையும் கொடுத்து அவனை முறையாகக் கௌரவித்தான்.(7) அதன்பிறகு அவன், தாராளமான ஆசிகளை அடைவதற்காகத் தன் விருந்தினர்களுக்கும், பிராமணர்களும் பல்வேறு வகையான செல்வங்களைக் கொடையளித்து, நெருப்பில் முறையாக ஆகுதிகளைக் காணிக்கையளித்தான். அவன் நலம்பயக்கும் சடங்குகளைச் செய்த பிறகு, ஜனார்த்தனனை வெல்வதற்காகத் தன் படையுடன் புறப்பட்டுச் சென்றான்.(8,9) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மன்னன் சால்வனும், தன் விருப்பம் முழுமையாக நிறைவடைந்தவனாக யவனர்களின் மன்னனை ஆரத்தழுவிக் கொண்டு, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் தன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(10)
விஷ்ணு பர்வம் பகுதி – 111 – 055ல் உள்ள சுலோகங்கள் : 10
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |