Thursday 13 August 2020

மன்னர்களுக்கு ஜராசந்தனின் ஆணை | விஷ்ணு பர்வம் பகுதி – 98 – 042

(கோமந்ததாஹம்)

Jarasandha's instructions to the kings | Vishnu-Parva-Chapter-98-042 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கோமந்த மலை போர் தொடக்கம்; ஜராசந்தன் ஆணை; தமகோஷன் விவேகம்; மலைக்குத் தீ வைத்த ஜராசந்தன் படை...

Mountain siege

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெரும்பிரகாசம் கொண்டவனும், பலம்நிறைந்தவனும், நோன்புகளை நோற்பவனும், மன்னர்களின் தலைவனுமான ஜராசந்தன், கடல் போல அசையும் நால் வகைப் படைகள் சூழ அங்கே வந்து சேர்ந்தான். எங்கும் தடையின்றிச் செல்லக்கூடிய திறன்மிக்கப் போர்வீரர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, உற்சாகமிக்கக் குதிரைகளால் இழுக்கப்படுபவையும், போருக்குப் பயன்படுத்தக்கூடியவையுமான தேர்களும், மணிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், போரில் செருக்கு மிக்கப் போர்வீரர்களுக்கான பொன் அம்பாரிகளைச் சுமக்கக் கூடியவையும், மேகங்களைப் போன்றவையுமான யானைகளும், நுண்ணறிவுமிக்கச் சாரதிகளால் செலுத்தப்படுபவையும், காற்றைப் போன்ற வேகம் கொண்டவையும், குதித்து ஓடுபவையுமான குதிரைகளும், வாள்கள், குத்துவாள்கள், தோல் கவசங்கள் ஆகியவற்றுடன் கூடியவர்களும், வானம் வரையிலான உயரத்திற்குக் குதிக்கக்கூடியவர்களுமான எண்ணற்ற வீரர்களைக் கொண்ட காலாட்படையும் அவனிடம் இருந்தன. மன்னர்களின் கூட்டம் அவனைப் {ஜராசந்தனைப்} பின்தொடர்ந்து வந்தது.(1-6) அந்தச் சிறந்த மலையின் குகைகள் அனைத்திலும், திக்குகள் அனைத்திலும், மேக முழக்கங்களுக்கு ஒப்பான தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், மதங்கொண்ட யானைகளின் பிளிறலும், குதிரைகளின் கனைப்பொலியும், காலாட்படையினரின் சிங்க முழக்கங்களும் எதிரொலித்துக் கொண்டிருந்தபோது பேரரசன் ஜராசந்தனின் படையானது கடல் போலத் தெரிந்தது.(7,8) உள்ளங்கைகளையும், தோள்களையும் தட்டிக் கொண்டு இருந்த மகிழ்ச்சிமிக்கப் போர்வீரர்களுடன் கூடிய அந்த மன்னர்களின் படைகள், மேகங்களின் படையைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(9) காற்றின் வேகம் கொண்ட பலவண்ணத் தேர்களையும், மேகங்களுக்கு ஒப்பான யானைகளையும், வெண்மேகங்களுக்கு ஒப்பான குதிரைகளையும், நன்கு உடுத்தியிருந்த காலாட்படை வீரர்களையும் கொண்ட அந்தப் படையானது, மழைக்கால முடிவில் கடலை முத்தமிடும் மேகங்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(10-11)

அதன்பிறகு, ஜராசந்தன் தலைமையிலான பலம்வாய்ந்த மன்னர்கள் அனைவரும் அந்த மலையைச் சுற்றி முகாம் அமைத்தனர்.(12) அந்த நேரத்தில் அந்த மன்னர்களின் முகாம்கள், முழு நிலவு நாளில் முழுமையான கடலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.(13) அந்த இரவு கழிந்ததும், மன்னர்கள் கௌதுகாம் எனும் மங்கலச் சடங்கைச் செய்துவிட்டு, மலையேறி போரிடுவதற்காக எழுந்தனர்.(14) மலையின் பள்ளத்தாக்கில் கூடியிருந்த அவர்கள், ஆவலின் காரணமாகப் போரிடத் தகுந்த ஆலோசனைகளைச் செய்தனர்.(15) இவ்வாறே, அண்ட அழிவின் போது கரைபுரளும் கடலுக்கு ஒப்பான பேரமளி அங்கே கேட்டது.(16) தலைகளில் கஞ்சிகம் என்ற தலைப்பாகைகளுடனும், கையில் பிரம்புகளுடனும் கூடிய காவலர்கள், "மா (அஃதாவது, ஒலியெழுப்பாதீர்)" என்று கூச்சலிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் திரியத் தொடங்கினர்.(17) அதன்பேரில் அமைதியடைந்த அந்தப் படையானது, மீன்களும், பெரும்பாம்புகளும் நிறைந்த ஒரு கடலைப் போன்றிருந்தது.(18)

மன்னனின் ஆணையை அறிவித்ததும், பெருங்கடலைப் போன்ற அந்தப் படை அசைவற்றதாக அமைதியடைந்தபோது, மன்னன் ஜராசந்தன் தேவர்களின் ஆசானை {பிருஹஸ்பதியைப்} போலப் பேசினான்.(19) {அவன்}, "மன்னர்களின் படைகள் இந்த மலையை முழுமையாக முற்றுகையிடட்டும்.(20) கல்லாயுதங்களும் {கல் வீசும் பொறிகளும்}, கதாயுதங்களும் ஆயத்தம் செய்யப்படட்டும், பராசங்களும், தோமரங்களும் உயர்த்தப்படட்டும்.(21) ஆயுதங்களை மேல் நோக்கி ஏவுவதற்கும், வேகமாகப் பாய்ந்து வரும் ஆயுதங்களைத் தடுப்பதற்கும் உரிய வழிமுறைகளைக் கலைஞர்கள் ஆயத்தம் செய்யட்டும்.(22) ஒருவரோடொருவர் போரில் ஈடுபடுபவர்களும், போரில் விருப்பமும், வெறியும் கொண்டவர்களுமான வீரர்களிடம் சேதி மன்னன் {சிசுபாலனின் தந்தை தமகோஷன்}[1] பேசுவது செயல்முறைக்குக் கொண்டுவரப்படட்டும்.(23) டங்கங்கள் {மண்வெட்டிகள்}, கனித்ரங்கள் {கடப்பாரைகள்} ஆகியவற்றைக் கொண்டு இந்த முதன்மையான மலை பிளக்கப்படட்டும். போரில் நிபுணர்களான மன்னர்கள் அருகில் நிற்கட்டும்.(24) வஸுதேவனின் இரு மகன்களையும் நான் கொல்லாதவரையில், என் படை இந்த மலையைத் தொடர்ந்து முற்றுகையிடட்டும்.(25) பாறைகளாலான இந்த மலையை இவ்வாறே நீங்கள் முற்றுகையிடுவீராக, பறவைகளும் வெளியேற முடியாத வகையில் இவ்வாறே கணைகளால் நீங்கள் வானத்தில் தடையேற்படுத்துவீராக.(26) மன்னர்கள் அனைவரும் என் கட்டளையை ஏற்று, மலையடிவாரத்தில் காத்திருந்து, வாய்ப்பேற்பட்ட உடனேயே மலையில் ஏறட்டும்.(27)

[1] விஷ்ணு பர்வம் 45:2ல் ஜராசந்தனுடன் வந்த சேதி மன்னனின் பெயர் தமகோஷன் {சிசுபாலனின் தந்தை} என்று நேரடியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்ரன், கலிங்க மன்னன், சேகிதானன், பாஹ்லிக மன்னன், காஷ்மீர மன்னனான கோநந்தன், கரூஷ மன்னன்,(28) கிம்புருஷ நாட்டின் திருமன் {கிம்புருஷன்}, மலைசார்ந்த இனக்குழுவினர் ஆகியோர் மறுபுறத்தில் இருந்து மலையில் ஏறட்டும்.(29) பூரு குலத்தின் வேணுதாரி {பௌரவன், வேணுதாரி}, விதர்ப்பன் {வைதர்ப்பன்}, மன்னன் ஸோமகன், போஜன், மன்னன் ருக்மி, மாலவன், சூர்யாக்ஷன்,(30) பாஞ்சாலர்களின் மன்னன் துருபதன், அவந்தி மாகாணத்தின் விந்த அனுவிந்தர்கள், சுறுசுறுப்பிமிக்கத் தந்தவக்தரன், சாகலி, புருமித்ரன், பேரரசன் விராடன்,(31) கௌசம்பி, மாலவன், சுருததந்வா {சததந்வா}, விதூரதன், திரிகர்த்த மன்னன், பூரிஸ்ரவன், பாணன், பஞ்சநதன்(32) ஆகிய இந்த மன்னர்களும், வஜ்ரம் போன்று பலம்வாய்ந்தவர்களும், இப்போது கோட்டையைக் கைப்பற்றவல்லவர்களுமான இவர்கள் யாவரும், வடக்கில் இருந்து ஏறி இந்த மலையைத் தாக்கட்டும்.(33)

அம்ஸுமானின் மகனான வீரன் கைதவேயன் {கைதவன்}, உலூகன், ஏகலவ்யன், திருடாஷ்வன், க்ஷத்திரியக் கடமைகளை எப்போதும் நோற்பவனான ஜயத்ரதன்,(34) உத்தமௌஜஸ், சால்வன், கேரள மன்னன், கௌசிகன், வைதிசத்தின் மன்னன் வாமதேவன் {வைதிசன், வாமதேவன்}, பலம்வாய்ந்தவனான ஸுகேது ஆகியோர்(35) கிழக்கில் இருந்து மலையில் ஏறி மேகங்களை விலக்கும் காற்றைப் போல அதை {மலையைப்} பிளக்கட்டும்.(36)

நானும், தரதனும், சேதியின் பலம்வாய்ந்த மன்னனும் {தமகோஷனும்} மலையின் மேற்குப் பக்கத்தைப் பிளக்கப் போகிறோம்.(37) இவ்வாறு அனைத்துப் பக்கங்களிலும் நம் மக்களால் முழுமையாக முற்றுகையிடப்படும் இந்த மலை, தன் மேல் இடி விழுந்ததைப் போலப் பேரச்சம் கொள்ளட்டும்.(38) கதாதாரிகள் கதாயுதங்களுடனும், பரிகாதாரிகள் பரிகங்களுடனும், படையின் பிற வீரர்கள் வேறு பல்வேறு ஆயுதங்களுடனும் இந்த முதன்மையான மலையைப் பிளக்கட்டும்.(39) ஓ! மன்னர்களே, மேடு பள்ளமான பாறைகளைக் கொண்ட இந்த மலை உங்களால் இன்று தரைமட்டமாகட்டும்" என்றான் {ஜராசந்தன்}[2].(40)

[2] ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 35:14-51ல் உள்ள செய்திகள் சில பல மாறுபாடுகளுடன் இங்கே 42:1-40ல் மீண்டும் உரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு ஸ்லோகத்திலும் சிற்சில மாறுபாடுகள் இருக்கின்றன. சில இடங்களில் நகரம் என்பது மலை என்றும், சில இடங்களில் குணங்களும், சில இடங்களில் வினைகளும், சில இடங்களில் பெயர்களும் மாறுபட்டிருக்கின்றன.

கடல்கள் பூமியைச் சூழ்ந்திருப்பதைப் போலவே அந்த மன்னர்களும் ஜராசந்தனின் ஆணையின் பேரில் கோமந்த மலையைச் சூழ்ந்திருந்தனர்.(41) அப்போது தேவர்களின் மன்னனான இந்திரனைப் போன்ற சேதி மன்னன் {தமகோஷன்}, "உயர்ந்த மரங்களைக் கொண்டதும், உயர்ந்த சிகரங்கள் நிறைந்ததும், மலைகளில் முதன்மையானதுமான கோமந்த மலையை, ஒரு கோட்டையைக் கைப்பற்றுவதைப் போலக் கைப்பற்றுவதால் என்ன பயன்?(42) உலர்ந்த மரங்கள் மற்றும் சுள்ளிகளைக் கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் மறைத்து இன்றே இஃதை எரிப்போம். வேறேதும் முயல்வதால் என்ன பயன்?(43) அதையுந்தவிர இந்த க்ஷத்திரியர்கள் இளைஞர்களாகவும், போரில் கணைகளைக் கொண்டு போரிடுபவர்களாகவும் இருக்கிறார்கள்.(44) ஒரு மலையில் காலாளாக இவர்களை நாம் போரில் ஈடுபடுத்தக்கூடாது. முற்றுகையிடுவதன் மூலமோ, மேலே ஏறுவதன் மூலமோ தேவர்களாலும் இந்த மலையை அசைக்க முடியாது. ஓ! மன்னா {ஜராசந்தா}, ஒரு கோட்டையைக் கைப்பற்றும்போதே முற்றுகை முறையானது.(45,46) மலையில் தஞ்சம் புகுந்தவர்கள் உணவு, நீர், விறகு ஆகியவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்படும்போது தானாக வசப்படுவார்கள்.(47) எண்ணிக்கையில் நாம் பலராக இருப்பினும் போரில் நிலைத்திருக்கும் யாதவர்கள் இருவரையும் நாம் அலட்சியம் செய்யக்கூடாது. இது விவேகமுள்ள முடிவாகாது. அந்த இரு யாதவர்களின் பலத்தை நாம் அறியமாட்டோம்.(48) அவர்களது செயல்களால் அவர்கள் தேவர்களைப் போன்று புகழ் பெற்றிருக்கின்றனர். அவர்கள் சிறுவர்களாக இருப்பினும் மிகக் கடினமான அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்திருக்கிறார்கள்.(49) இந்த மலையைச் சுற்றிலும் உலர்ந்த புற்களையும், மரங்களையும் இட்டு அவற்றுக்குத் தீமூட்டுவோம். அதனால் எரிக்கப்பட்டு அவர்கள் தங்கள் உயிரை விடுவார்கள்.(50) எரிக்கும்போதே அவர்கள் இம்மலையை விட்டு வெளியே வந்து நம்மை அணுகினால், நாம் அனைவரும் சேர்ந்து {தீயில் தள்ளி} அவர்களைக் கொல்வோம். அவர்களும் மரணமடைவார்கள்" என்றான் {சிசுபாலனின் தந்தை தமகோஷன்}.(51)

மன்னர்களும், படைவீரர்கள் அனைவரும் தங்கள் நன்மைக்காகச் சேதிமன்னன் பேசியவற்றை விரும்பினார்கள்.(52) அதன் பிறகு, சூரியக் கதிர்களால் பீடிக்கப்படும் மேகத்தைப் போல அந்த மலையானது, உலர்ந்த மரங்கள், புற்கள், சுள்ளிகள் ஆகியவற்றைக் கொண்டு எரிக்கப்பட்டது.(53) வேகமான கரங்களைக் கொண்ட மன்னர்கள், காற்றின் போக்குக்கும், இடத்துக்கும் தகுந்தவாறு அந்த மலையில் அனைத்துப் பக்கங்களுக்கும் தீமூட்டினர்.(54) பிறகு, காற்றால் தூண்டப்பட்ட நெருப்பானது தழல்களுடனும், புகையுடனும், அனைத்துப் பக்கங்களிலும் பற்றி எரிந்து வானுக்கு அழகூட்டியது.(55) இவ்வாறு உலர்ந்த மரத்திரட்டின் மூலம் பெறப்பட்ட நெருப்பானது, அழகிய மரங்கள் நிறைந்த எழில்மிகு கோமந்த மலையை எரிக்கத் தொடங்கியது.(56) எரிந்து கொண்டிருந்த அந்த மலை நூறாக (துண்டுகளாகப்) பிளக்கப்பட்டபோது, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பெரும் எரிகொள்ளிகளைப் போலப் பெரும்பாறைகள் வெளிவரத் தொடங்கின.(57) தன்னொளியுடன் கூடிய சூரியன் மேகங்களுக்கு ஒளியூட்டுவதைப் போல எழுதழல்களுடன் கூடிய நெருப்பானது அந்த மலைக்கு ஒளியூட்டியது.(58) உருகும் உலோகங்கள், எரியும் மரங்கள், கலங்கும் விலங்குகளுடன் கூடிய அந்த மலையானது துன்பத்துடன் அழுவதைப் போலத் தெரிந்தது.(59) நெருப்பால் எரிக்கப்பட்டுச் சூடாக இருந்த அந்த மலையில் இருந்து பொன், கருநீல, வெள்ளி வண்ணங்களில் உலோகங்கள் உருகி வெளிவரத் தொடங்கின.(60) பாதி அளவு புகையின் இருளால் சூழப்பட்டதும், நெருப்பின் தழல்களால் மறைக்கப்பட்டதுமான அந்த மலை மறையும் மேகங்களைப் போல அழகை இழந்தது.(61)

தளர்ந்த பாறைத் திரளுடனும், பயங்கரமாகப் பொழியும் நெருப்புக் கங்குகளுடனும் கூடிய அந்த மலையானது எரிகொள்ளி மழையைப் பொழியும் மேகத்தைப் போலத் தெரிந்து.(62) பாய்ந்தெழும் நீரூற்றுகளுடனும், சூழும் புகையுடனும் கூடிய அந்தக் கோமந்த மலையானது, பிரளய கால நெருப்பால் எரிக்கப்படுவதைப் போலத் தெரிந்தது.(63) பாதி எரிந்த உடலையும், பதட்டமடைந்த கண்களுடன் கூடிய பெரும்படங்களையும் கொண்ட பாம்புகள், பெருமூச்சுவிட்டபடியே தலைகளைக் கீழ்நோக்கியவாறு மீண்டும் மீண்டும் பாயவும், குதிக்கவும் தொடங்கின.(64) நெருப்பின் தாக்குதலில் தூண்டப்பட்ட சிங்கங்களும், புலிகளும் கதறத் தொடங்கின, எரிவதன் விளைவால் மரங்கள் சாறுகளை வெளியேற்றத் தொடங்கின.(65) சாம்பலுடனும், நெருப்புக் கங்குகளுடனும் தாமிர வண்ணத்தில் எழத் தொடங்கிய காற்றானது, புகையுடன் கூடியதாக மேகங்களைப் போல வானத்தை மறைத்தது. நெருப்பு பரவியதால் பறவைகளும், விலங்குகளும் மேட்டுச் சமவெளிகளை விட்டு அகன்றன, {நெருப்பின் சக்தியால்} மலையும் கலக்கமடைந்தது.(66-68) நடுங்கும் பெரும்பாறைகள் நிறைந்த அந்த மலையானது, வாசவனின் {இந்திரனின்} வஜ்ரத்தால் பிளக்கப்பட்டதைப் போலப் பாறைகளை வீசியெறியத் தொடங்கியது.(69) இவ்வாறே அந்த க்ஷத்திரியர்கள் அந்த மலைக்குத் தீமூட்டி அதனால் துன்பமடைந்து {தீயினால் சுடப்பட்டு} ஒரு மைல் {அரை குரோச} தொலைவிற்குப் பின்வாங்கிச் சென்றனர்.(70)

இவ்வாறு அந்த முதன்மையான மலை எரிக்கப்பட்டு, மரங்களும் காண முடியாத அளவுக்குப் பொசுக்கப்பட்டு, (அந்த மலையின்) வேர் {அட்டித்தளம்} ஆட்டங்கண்ட போது, கோபத்துடன் கூடிய ராமன் {பலராமன்}, தாமரைக் கண் கிருஷ்ணனான மதுசூதனனிடம்,(71,72) "ஓ! தம்பி கிருஷ்ணா, நம் பகைவர்கள் நம் மீது கொண்ட பகையால் மேட்டுச்சமவெளிகள், சிகரங்கள் மரங்களுடன் கூடிய இந்த மலையை எரிக்கின்றனர்.(73) ஓ! கிருஷ்ணா, இந்த மலைக்காட்டில் வாழும் முன்னணி இருபிறப்பாளர்கள், புகையால் மறைக்கப்பட்டு, நெருப்பால் தாக்கப்பட்டு அழுவதைப் போல இருப்பதைக் காண்பாயாக.(74) ஓ! தம்பி, நம்மால் இந்தக் கோமந்த மலை எரிந்தால் இவ்வுலகில் நாம் பெரும்பழியை அடைந்து நிந்திக்கப் படுவோம்.(75) எனவே, ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, நாம் தஞ்சமடைந்திருக்கும் இந்த மலைக்கு நாம் பட்டிருக்கும் கடனைத் தீர்ப்பதற்காக நம் கைகளாலேயே இந்த க்ஷத்திரியர்களை அழிக்க வேண்டும்.(76) போர்வீரர்களில் முதன்மையானவர்கள், நன்கு ஆயுதந்தரித்தவர்களுமான இந்த க்ஷத்திரியர்கள் இந்த மலைக்குத் தீயிட்டுத் தங்கள் போர் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர். (அவர்களை நாம் யமனுலகுக்கு அனுப்புவோம்)" என்றான் {பலராமன்}.(77)

காட்டு மலர்மாலை, அழகிய குண்டலங்கள், மகுடம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவனும், காதம்பரி மதுவால் மதிமயங்கியவனும், கூதிர்கால நிலவுக்கு ஒப்பானவனும், நீல உடை உடுத்தியவனும், வெண்முகம் கொண்டவனும், அழகனும், கேசவனின் அண்ணனுமான பலதேவன் {பலராமன்}, இதைச் சொல்லிவிட்டு, சுமேருவின் சிகரத்தில் சந்திரனைப் போலக் கோமந்த மலைச் சிகரத்திலிருந்து கீழே மன்னர்களின் மத்தியில் குதித்தான்.(78-80) ராமன் கீழே குதித்த போது, ஒப்பற்ற சக்தியைக் கொண்டவனும், கருநீல மேகத்துக்கு ஒப்பானவனும், அழகனுமான கிருஷ்ணனும் கோமந்த மலைச் சிகரத்தில் இருந்து கீழே குதித்தான்.(81)

தெய்வீகமான ஹரி, தன்னிரு பாதங்களால் அந்த முதன்மையான மலையை அழுத்தியபோது அதன் நாற்புறங்களும் நொறுங்கி விழுந்தன.(82) அப்போது மதங்கொண்ட யானைகளுக்கு ஒப்பான அதன் பாறைகளில் இருந்து வெளிவந்த நீரானது, யுக முடிவில் மழையால் பிரளய நெருப்பை அணைக்கும் சூரியனைப் போல அந்த {மலையில் எரிந்து கொண்டிருந்த} நெருப்பை உடனடியாக அணைத்தது.(83) பலம்வாய்ந்தவனும், தாமரைக் கண்ணனும், மென்மையான முகத்தையும், சிங்கம்போன்ற குரலையும் கொண்டவனும், ஆயிரங்கண் தேவனைப் போல அழகிய மகுடம் சூடியவனும், மார்பில் ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியைத் தரித்தவனுமான கிருஷ்ணன், இவ்வாறு நெருப்பை அணைத்துவிட்டு ராமனை {பலராமனைப்} பின்தொடர்ந்து குதித்தான்.(84,85) அவர்கள் அந்த முதன்மையான மலையை விட்டு இறங்கியபோது, அவர்களின் பாதச்சுவடுகளால் அழுத்தப்பட்டு மலையானது சுடரும் நெருப்பை அணைப்பதற்காக நீரைத் தரத் தொடங்கியது. நீரால் அந்நெருப்பு அணைக்கப்பட்டதைக் கண்ட மன்னர்கள் பீதியடைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(86,87)

விஷ்ணு பர்வம் பகுதி – 98 – 042ல் உள்ள சுலோகங்கள் : 87
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்