(ஜராஸந்தாபிகமனம்)
Balarama gets Vishnu | Vishnu-Parva-Chapter-97-041 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : மது அருந்திய பலராமன்; வாருணி, காந்தி, கமலா தேவிகளைச் சந்தித்தது; விஷ்ணுவின் கிரீடத்தைக் கிருஷ்ணனுக்குச் சூடிய கருடன்; படையெடுத்து வந்த ஜராசந்தன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஜமதக்னியின் மகனான ராமர் {பரசுராமர்} சென்ற பிறகு, யது குலத்தைத் தழைக்கச் செய்பவர்களான ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் தாங்கள் விரும்பிய தோற்றங்களை ஏற்றுக் கொண்டு அழகிய கோமந்த மலைச்சிகரத்தில் திரியத் தொடங்கினர்.(1) கருநீல நிறமும், வெண்ணிறமும் கொண்ட அந்த இளைஞர்கள் இருவரும், மார்பில் காட்டு மலர்மாலைகளைச் சூடிக் கொண்டும், கருநீலத்திலும், மஞ்சள் நிறத்திலுமான ஆடைகளை அணிந்தும் மேனியில் மலையின் மண்ணைப் பூசிக்கொண்டும், மலைச்சிகரத்தின அழகிய காடுகளில் விளையாடும் நோக்கிலும், கோள்கள் எழுகையிலும், மறைகையிலும் அவற்றையும், ஒளிக்கோள்களான {ஜ்யோதிகளான} சூரியனையும், சந்திரனையும் காணும் நோக்கிலும் திரியத் தொடங்கினர்.(2-4)
பலம்வாய்ந்தவனும், அழகனுமான ஸங்கர்ஷணன் {பலராமன்}, ஒரு காலத்தில் கிருஷ்ணனில்லாமல் மலைச்சிகரத்தில் திரிபவனாக, மலர்ந்திருக்கும் கதம்ப மரத்தின் அழகிய நிழலில் அமர்ந்தபோது, அவன் மீது இனிய நறுமணம் கொண்ட காற்று வீசத் தொடங்கியது.(5,6) இவ்வாறு காற்றால் தொண்டாற்றப்பட்ட அவன் {பலராமன்}, தன் மூக்குத்துளைகளைத் தீண்டும் மதுவின் மணத்தை நுகர்ந்து, முந்தைய நாளில் அளவுக்கு அதிகமாகக் குடித்து வாய் வறண்ட ஒருவனைப் போல மதுவுக்காக {வாருணிக்காக} ஏங்கினான்.(7,8) அதன்பிறகு, பழங்காலத்தில் அமுதம் பருகியதை நினைவுகூர்ந்த அவன், மதுவைத் தேடியபோது அந்தக் கதம்ப மரத்தைக் கண்டான்.(9) மழைக்காலத்தில் மேகங்களால் பொழியப்பட்டு, அந்த மரத்தின் பொந்தில் தேங்கியிருந்த நீரானது, இனிமை நிறைந்த மதுவாக மாறியிருந்தது.(10) தாகத்தால் பீடிக்கப்பட்டிருந்த பலம்வாய்ந்த பலதேவன், பிணியுற்ற ஒருவன் நீரைப் பருகுவதைப் போல அந்த மதுவை மீண்டும் மீண்டும் பருகி, மதிமயங்கி உடல் திணறத் தொடங்கினான்.(11) அவன் மது மயக்கத்தில் இருந்ததால், கூதிர் கால நிலவுக்கு ஒப்பான அவனது முகம் மயங்கி, கண்கள் உருளத் தொடங்கின.(12)
தேவர்களின் அமுதம் கடையும் மத்தான வாருணி தேவி, மதுவின் வடிவில் {உடல்வடிவம் கொண்டவளாக, காதம்பரி மதுவாக} அந்தக் கதம்ப மரப் பொந்தில் பிறந்திருந்தாள்.(13) கிருஷ்ணனின் தமையன் {பலராமன்}, காதம்பரி மதுவால் மதிமயங்கி, தெளிவற்ற இனிய சொற்களில் பேசத் தொடங்கியபோது, மதுவின் அவதாரம் கொண்டவள் {மதிரா}, சந்திரனின் அன்புக்குரிய மனைவியான {அன்புக்குரியவளான} காந்தி, பாவையரில் முதன்மையானவளும், மேகச் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவளுமான ஸ்ரீதேவி ஆகிய தெய்வீக மங்கையர் மூவரும் இனிய சொற்களுடன் அவனை அணுகினர்.(14-16)
மதிமயங்கி இருந்து ரோஹிணியின் மகனிடம் {பலராமனிடம்}, வாருணி தேவியானவள், கூப்பிய கரங்களுடன், தன் நலனுக்கு உகந்த சொற்களைச் சொல்லியபடி முதலில் வந்தாள்.(16) வாருணி {மதிரா பலராமனிடம்}, "ஓ! பலதேவரே, ஓ! தேவர்களில் முதன்மையானவரே, தைத்திய கூட்டத்தை நீர் எரிப்பீராக. உமது அன்புக்குரியவளான வாருணி இங்கே வந்திருக்கிறேன்.(17) ஓ! தூய முகம் கொண்டவரே, காட்டுத்தீயில் {வடவாக்னியில்} எப்போதும் வசித்து வந்த நீர் மறைந்துவிட்டீர். இதைக் கேட்ட நான், புண்ணியம் கழிந்த ஒருத்தியைப் போலப் பூமியில் திரிந்து வருகிறேன்.(18) நீண்ட காலமாக நான் மலர்களின் மகரந்தங்களிலும், ஒருபோதும் தீண்டப்படாத வசந்த மலர்க் கொத்துகளிலும் {அசைவில்லா பூங்கொத்துகளைக் கொண்ட குருக்கத்திக் கொடிகளிலும்} வாழ்ந்து வந்தேன்.(19) ஆனால் இன்பங்களை விரும்பும் நான், மழை தொடங்கும்போது என் உண்மை வடிவை மறைத்துக் கொண்டு, தாகத்தால் பீடிக்கப்பட்ட உமது வரவை எதிர்பார்த்து கடம்ப மரத்தின் பொந்தில் கிடந்திருந்தேன்.(20) ஓ! பாவமற்றவரே, அமுதம் கடையும் நேரத்தில், அங்கங்கள் அனைத்திலும் ஆட்சி செய்யும் அழகுத் திரளுடன் கூடிய நான் {வாருணியாகிய நான்} என் தந்தை வருணனால் அனுப்பப்பட்டதைப் போலவே இப்போதும் அவரால் அனுப்பப்பட்டிருக்கிறேன்.(21) ஓ! தலைவா, நீ என் அன்புக்குரிய ஆசான் என்பதால், கடலின் காட்டுத் தீயில் {வடவாக்னியில்} முன்பு வசித்ததைப் போலவே உம்முடன் நான் வாழ விரும்புகிறேன்.(22) ஓ! தேவா, ஓ! பாவமற்ற அநந்தனே, உம்மைத் தவிர வேறு எவருக்கும் என்னால் தொண்டாற்ற இயலாது. எனவே, நீர் மறுத்தாலும் நான் உம்மை விட்டுச் செல்லமாட்டேன்" என்றாள் {மதிரா என்கிற வாருணி}.(23)
அழகின் அவதாரமான காந்தி தேவி, சற்றே சுழலும் கண்களுடனும், மதுவின் மயக்கத்தால் அசையும் இடையுடனும் அங்கே வந்து, "ராமன், வெற்றிமகுடம் சூடட்டும்" என்று சொல்லி அங்கே அமர்ந்திருந்த ஸங்கர்ஷணனை {பலராமனை} அணுகி, கரங்களைக் கூப்பி முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் சொற்களை அவனிடம் சொன்னாள்.(24-26) {காந்தி தேவி}, "ஆயிரந்தலைகளைக் கொண்டவரும், பலம்வாய்ந்த தேவனுமான அநந்தனை சந்திரனுக்கும் மேலாகக் கருதுகிறேன். எனவே, மதுவை {மதிராவைப்} போலவே நானும் என் குணங்கள் அனைத்துடனும் உம்மைப் பின்தொடர்கிறேன்" என்றாள் {காந்தி தேவி}.(27)
விஷ்ணுவின் மார்பில் எப்போதும் வாழ்பவளும், தாமரைகளின் வசிப்பிடமுமான கமலா தேவி, அந்தக் கலப்பைதாரியின் {பலராமனின்} மார்பில் தூய மலர்மாலையை {துளசி மாலையைப்} போலத் தன்னை அமைத்துக் கொண்டாள்.(28) நன்கலங்கரிக்கப்பட்டவளும், கைகளில் தாமரையைக் கொண்டவளுமான கமலா தேவி, தூய மலர்களாலான மாலையை எடுத்துக் கொண்டு, தாமரை முகம் கொண்ட பலதேவனின் மார்பில் தன்னை வைத்து,(29) "ஓ! ராமரே, ஓ! அழகிய ராமரே, ஓ! தேவர்களின் மன்னா, வாருணி, காந்தி ஆகியோரோடும், என்னோடும் சேர்ந்திருக்கும் நீர் சந்திரனைப் போல அழகாகத் தெரிகிறீர்.(30) உமது ஆயிரந்தலைகளில் சூரியனைப் போல ஒளிரக்கூடிய உம்முடைய மகுடத்தை வருணனின் வசிப்பிடத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறேன்.(31) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவரே, உமது காதுகளின் ஆபரணங்களாக இருந்தவையும், வைரங்களும், தெய்வீகமான ஆதி தாமரையும் {ஆதிபத்மும்} பதிக்கப்பட்ட பொன்மயமான குண்டலங்கள் இவை (இந்தக் குண்டலங்களையும் நான் கொண்டு வந்திருக்கிறேன்).(32) கடலுக்குத் தகுந்த நீலப்பட்டாடையும், அதனில் {கடலில்} இருந்த அழகிய கழுத்தாரமும் {முத்துமாலையும்} இவை (இவற்றையும் நான் கொண்டு வந்திருக்கிறேன்).(33) ஓ! தேவா, ஓ! பருத்த தோள்களைக் கொண்டவரே, உமக்கு உரிய காலம் வந்துவிட்டது. எனவே, முன்பைப்போலவே இந்த ஆபரணங்களால் உம்மை அலங்கரித்துக் கொண்டு அவற்றைக் கௌரவிப்பீராக" என்றாள் {கமலா தேவி}.(34) ஸ்ரீதேவி இதைச் சொன்னதும், அந்த ஆபரணங்களை ஏற்றுக் கொண்ட பலதேவன், தெய்வீக மங்கையரான அவர்கள் மூவருடன் சேர்ந்து கூதிர்கால நிலவைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(35)
பிறகு அவன் {பலராமன்}, ராகுவிடம் இருந்து விடுபடும் சந்திரனைப் போல, நீருண்ட மேகத்துக்கு ஒப்பான மதுசூதனனுடன் {கிருஷ்ணனுடன்} சேர்ந்து பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(36) ஒரு நாள், எப்போதும் போல அவர்கள் தங்கள் வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தபோது, போர்க்களத்தில் இருந்து அப்போதே திரும்பிவந்தவனும், ஆயுதங்களினால் மேனியில் காயம் கொண்டவனும், தெய்வீக மாலைகளையும், களிம்புகளையும் சூடியவனும், தேவர்களின் வெற்றியை உயர்வாகப் பேசுபவனுமான வினதையின் மகன் {வைந்யேன் / கருடன்} அங்கே விரைவாக வந்து சேர்ந்தான்.(37,38) வருணனின் வசிப்பிடமான பாற்கடலில் தலைவன் விஷ்ணு உறங்கிக் கொண்டிருந்த போது, விரோசனன் மகன் {வைரோசனன்}, அவனது மகுடத்தைக் களவாடிச் சென்றான்.(39) பறவைகளில் முதன்மையான கருடன், விஷ்ணுவின் மகுடத்திற்காக அந்தப் பெருங்கடலில் தைத்தியர்களுடன் பயங்கரமான போரில் ஈடுபட்டு, அதையடைந்தும் விஷ்ணுவைக் காணாமல், தேவலோக வழியில் பூமியின் பரப்பைப் பெரும் வேகத்துடன் கடந்து சென்றான்.(40,41) வினதையின் மகன் {கருடன்}, மடியில் அந்தப் பிரகாசமிக்க மகுடத்துடன் சென்று கொண்டிருந்தபோது அங்கே வந்தடைந்து, தன்னை ஆள்பவனான விஷ்ணு {கிருஷ்ணன்} மற்றொரு பணியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டான்.(42) அந்தப் பறவைகளில் முதன்மையானவன் {கருடன்}, அந்தச் சிறந்த மலையில் {கோமந்தத்தில்}, தலையில் மகுடம் இல்லாமலும், புலப்படத்தக்க ஆடையேதுமில்லாமலும் இருக்கும் விஷ்ணுவை கண்டும், தன் நோக்கத்தைத் தெரிவிக்கும் வகையிலும், ஏற்கனவே அவனது தலையில் {விஷ்ணுவின்} இணைந்திருப்பதைப் போலவே அந்த மகுடத்தை வானில் இருந்து வீசி எறிந்தான் {கிருஷ்ணனின் தலையில் சரியாகப் பொருந்துமாறு வானில் இருந்து மகுடத்தை நழுவவிட்டான்}.(43,44) மாதவனின் தலையில் பொருந்திய அந்த மகுடம், சுமேரு மலையின் உச்சியில் நடுப்பகல் சூரியனைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(45)
கிருஷ்ணன், வினதையின் மகனால் {கருடனால்} கொண்டுவரப்பட்ட தன் மகுடத்தைக் கண்டு, மகிழ்ச்சியடைந்த முகத்துடன் ராமனிடம் {பலராமனிடம்},(46) "இம்மலையில் போருக்கான ஆயத்தங்கள் நிறைவடையும்போது, தேவர்களின் பணி நிறைவடைவதும் அருகில் வருகிறது என நான் நினைக்கிறேன்.(47) நான் பெருங்கடலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, தேவர்களின் மன்னனைப் போன்ற தெய்வீக வடிவமேற்று வந்த விரோசனன் மகன், என் மகுடத்தைக் களவு செய்து, ஒரு கோளைப் போல அதை அபகரித்துச் சென்றான். கருடன் இதை (என்னிடம்) திரும்பக் கொண்டு வந்திருக்கிறான்.(48,49) காற்றைப் போன்ற வேகம் கொண்ட தேர்களின் நுனிகள் இப்போது காணப்படுவதால் ஜராசந்தன் அருகில் இருப்பது உறுதியாகிறது என நான் நினைக்கிறேன்.(50) ஓ! மதிப்பிற்குரிய ஐயா, வெற்றியடையும் விருப்பத்தில் உள்ள மன்னர்களின் நன்கு அணிவகுக்கப்பட்ட படைகளையும், சந்திரனைப் போல ஒளிரும் குடைகளையும் அதோ பாரும்.(51) மன்னர்களின் தேர்களில் தூய்மையாகப் பறக்கும் வெண்ணிறக் குடைகள், ஆகாயத்திலுள்ள நாரைகளைப் போல நம்மை நோக்கி வருகின்றன.(52) தேவலோகதைப் போல ஒளிரும் ஆயுதங்களின் பிரகாசமானது, சூரிய காந்தியுடன் சேர்ந்து பத்து திக்குகளிலும் பரவுகிறது.(53) போருக்கு மத்தியில் என்னை இலக்காக்கி மன்னர்கள் இவற்றை ஏவும்போது, உண்மையில் இவை அழிந்து போகும்.(54) பேரரசன் ஜராசந்தன், சரியான நேரத்திலேயே வந்திருக்கிறான். போரில் அவனே நம் முதல் விருந்தினனும், நமது படைக்கலத் திறனைச் சோதிக்கும் உரை கல்லைப் போன்றவனும் ஆவான்.(55) ஓ! மதிப்புக்குரிய ஐயா, ஜராசந்தன் வராத வரையில் நாம் போரைத் தொடங்கக்கூடாது. எனவே நாம் படைவீரர்களைத் தேடி அவர்களை ஆயத்தம் செய்வோம்" என்றான் {கிருஷ்ணன்}.(56)
இதைச் சொன்ன கிருஷ்ணன், போரில் நுழைந்து ஜராசந்தனைக் கொல்ல விரும்பி, அவனது துருப்புகளை அமைதியாக ஆய்வு செய்யத் தொடங்கினான்.(57) நித்திய யது தலைவனான அவன் {கிருஷ்ணன்}, அந்த மன்னர்களைக் கண்டு, முன்னர்த் தேவலோகத்தில் நடந்த ஆலோசனைகளைத் தனக்குள் மீள்தொகுத்துக் கொள்ளத் தொடங்கினான்.(58) {கிருஷ்ணன் தனக்குள்}, "அரச கடமைகளை நோற்பவர்களும், இங்கு வந்திருப்பவர்களுமான இந்த மன்னர்கள் அனைவரும் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட செயல்பாடுகளின் மூலம் கொல்லப்படுவார்கள்.(59) வேள்வி விலங்குகளைப் போல யமனால் நீர் தெளிக்கப்பட்டவர்களாகவும், சொர்க்கத்தை நோக்கித் திரும்பிய உடல்களைக் கொண்டவர்களாகவும் இந்த முன்னணி மன்னர்களை நான் கருதுகிறேன்.(60) இவர்களது படைகளாலும், ஆட்சிப்பகுதிகளாலும் அடர்த்தியாக மறைக்கப்பட்ட பரப்பைக் கொண்ட பூமியானவள், இந்த மன்னர்களின் கனத்தாலும், படைகளின் கனத்தாலும் களைப்படைந்தவளாகத் தேவலோகத்துக்குச் சென்றாள். இருப்பினும், பூமியின் பரப்பானது மனிதர்களற்றதாகவும், ஆகாயம் மன்னர்கள் நிறைந்ததாகவும் விரைவில் மாறும்" {என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன்}" என்றார் {வைசம்பாயனர்}.(62)
விஷ்ணு பர்வம் பகுதி – 97 – 041ல் உள்ள சுலோகங்கள் : 62
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |