(கோமந்தாரோஹணம்)
A description of the mount Gomanta | Vishnu-Parva-Chapter-96-040 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கோமந்த மலை குறித்த வர்ணனை; கிருஷ்ணனிடம் மீண்டும் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்ற பரசுராமர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு, பலத்தால் செருக்குண்ட மதங்கொண்ட யானைகளின் நடையைக் கொண்டவர்களும், பேசுபவர்களில் முதன்மையான யாதவர்களுமான ராமன் {பலராமன்}, கேசவன் {கிருஷ்ணன்} இருவரும், அந்தப் பிருகுவின் வழித்தோன்றலுடன் {பரசுராமருடன்} சேர்ந்து வேள்விப் பசுவின் பாலைப் பருகிவிட்டு, ஜாமதக்னியால் {பரசுராமரால்} சுட்டிக்காட்டப்பட்ட பாதையில் கோமந்த மலையைக் காணப் புறப்பட்டுச் சென்றனர்.(1,2) தேவலோகத்துக்கு அழகூட்டும் தேவர்களைப் போலவும், ஜாமதக்னேயரை மூன்றாவதாகக் கொண்ட மூன்றாவது நெருப்புகளைப் போலவும் அந்த வீரர்கள் இருவரும் அந்தச் சாலைக்கு அழகூட்டினர்.(3) தேவர்கள் மந்தர மலைக்கு வருவதைப் போல அவர்கள் மனிதர்களால் எப்பொழுதும் பயன்படுத்தப்படும் சாலையைக் கடந்து மாலை வேளையில் கோமந்த மலையை அடைந்தனர். அழகிய கொடிகளால் மறைக்கப்பட்டும், பல்வேறு மரங்களால் அலங்கரிக்கப்பட்டும், தூபங்களால் நறுமணம் கூட்டப்பட்டும், அழகிய மயில்களின் வரிசையால் வண்ணமூட்டப்பட்டும் இருந்த அது {கோமந்த மலை}, வண்டுகளால் முழுமையாக நிறைந்ததாகவும், பாறைகளும், மரங்களும் நிறைந்ததாகவும், மேகமுழக்கங்களைப் பின்பற்றும் மயில்களின் அகவல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(4-6)
அந்த {கோமந்த} மலையின் சிகரங்கள் வானத்துடன் இணைக்கப்பட்டிருந்தன, மரங்கள் மேகங்களால் மறைக்கப்பட்டிருந்தன, பாறைகள் மதங்கொண்ட யானைகளின் தந்தங்களால் கீறப்பட்டிருந்தன, அருவியைச் சூழ்ந்திருந்த இடங்கள் பச்சைப் பசும்புற்களாலும், கொடிகளாலும் மறைக்கப்பட்டும், பறவைகளின் இன்னொலிகளை எதிரொலித்துக் கொண்டும் இருந்தன.(7,8) மலைகளில் முதன்மையான அது {கோமந்த மலை} கருநீல பாறைகளுடன் சேர்ந்து மேகத்தைப் போன்ற பல வண்ணங்களை ஏற்றது. அதன் மேனி உலோகத் துகள்களால் பூசப்பட்டிருந்தது.(9) மேட்டுச் சமவளிகளாலும், நீரூற்றுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததும், அழகிய தேவர்களால் நிறைந்திருந்ததுமான அது, விரும்பியவாறு உலவும் மைநாக மலையைப் போன்று உயர்ந்ததாகவும், உயர்ந்த சிகரங்களைக் கொண்டதாகவும் இருந்தது. அதன் தாழ்வரைகளில் நீர் நிறைந்திருந்தது.(10) அதன் குகைகள் காட்டாலும், மேகங்களாலும் அலங்கரிக்கப்பட்டதாகவும், பனஸம் {பலா}, காட்டுமா, நாட்டுமா, தினிசம், மூங்கில், சந்தனம்,(11) தமாலை {மாவிலங்க} மரம், ஏலமரங்கள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டதாகவும் இருந்தது. மரீசக்ஷூபம் {மிளகு}, பிப்பலீ {திப்பிலி}, இலுப்பை மரம், ஆச்சா மரம், சால மரங்கள்,(12) வெண்தேக்கு, நிம்பம் {வேம்பு}, பாதிரி, கூந்தல் பனை, ஆச்சா மரங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. நீரில் பிறந்த தாமரைகளால் நீரும், நிலத்தில் பிறந்த தாமரைகளால் நிலமும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(13-15) புன்னை மரம், நாவல் மரம், ஜம்பூல மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அது கண்ட மரம், கந்தல மரம், சம்பகம், அசோகம், வில்வம், திந்துகம்,(16) குடஜமம் ஆகியவற்றாலும், நாக மலர்களாலும் {நாகப் புஷ்பங்களாலும்} முழுமையான பளபளப்புடன் இருந்தது. யானைக் கூட்டங்களாலும், மான்கூட்டங்களாலும் அது நிறைந்திருந்தது.(17)
மலைகளில் முதன்மையான அதன் {கோமந்த மலையின்} பெரிய பள்ளத்தாக்குகளுக்குச் சித்தர்களும், சாரணர்களும், ராட்சசர்களும் அடிக்கடி வந்து சென்றனர், பாறைகளில் எப்போதும் வித்யாதரர்கள் நிறைந்திருந்தனர்,(18) சிங்கங்களின் முழக்கங்களும், புலிகளின் முழக்கங்களும் அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தது. நீரோட்டங்களால் அது தெளிக்கப்பட்டும், நிலாமரங்களால் {சந்திரக் கதிர்களால்} அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(19) அப்சரஸ்களால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக மரங்களின் மலர்களால் மறைக்கப்பட்டதுமான அந்த மலை {கோமந்த மலை} தேவர்களாலும், கந்தர்வர்களாலும் உயர்வாகப் பேசப்பட்டது.(20) இந்திர வஜ்ரத்தின் வீச்சையோ, காட்டுத்தீயையோ, பெருங்காற்றினால் உண்டாகும் அச்சத்தையோ அதன் சிகரங்கள் ஒருபோதும் அனுபவித்ததில்லை.(21) சிகரங்களின் உச்சிகள் வலுவான அருவிகளாலும், ஓடைகளாலும் அழகூட்டப்பட்டு, அழகான நீராலும், பாசிகளாலும் ஒளிர்ந்து கொண்டிருந்தன. வழித்தடங்கள் அனைத்திலும் மான்கள் இருந்தன.(22,23) மலைகளில் சிறந்த அதன் {கோமந்த மலையின்} சாரல்களை {பக்கங்களை} மேகங்கள் போன்ற கருநீலப் பாறைகள் அலங்கரித்தன. மனைவியர் ஒரு கணவனுக்கு அழகூட்டுவதைப் போலவே,(24) பூத்துக் குலுங்கும் மலர்களால் மறைக்கப்பட்டவையும், மென்மையான மரங்களால் நிறைந்தவையுமான காடுகள் அதற்கு {கோமந்த மலைக்கு} அழகூட்டின. மனைவியுடன் கூடிய மனிதனைப் போலக் குகைகளாலும், காடுகளாலும் அழகூட்டப்பட்ட அதன் சிகரங்களில் சில இடங்கள் செயற்கை பொற்காடுகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போல மூலிகைகளின் பிரகாசத்தாலும், தவசிகள் வசித்ததாலும் எரிவது போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.(25,26) அகன்ற அடிவாரத்தையும், உயர்ந்த சிகரத்தையும் கொண்ட அந்த மலை வானத்தையும் பூமியையும் கலங்கடிப்பதைப் போலத் தெரிந்தது.(27)
தேவர்களைப் போன்ற அந்த மூன்று வீரர்களும், அழகிய கோமந்த மலையை அடைந்து அங்கே வாழும் விருப்பம் கொண்டனர்.(28) வினதையின் மகனை {கருடனைப்} போலத் தடையற்ற போக்கைக் கொண்ட அவர்கள், வானத்தில் பறவைகள் உயர்வதைப் போலப் பெரும் வேகத்துடனும், சக்தியுடனும் அந்தச் சிறந்த மலையில் ஏறினர்.(29) அந்த மலையின் மிகச் சிறந்த சிகரத்தில் தேவர்களைப் போல ஏறிய அவர்கள், தாமதமேதும் செய்யாமல் தங்கள் இதயத்தின் விருப்பப்படி அங்கே ஒரு வசிப்பிடத்தைக் கட்டினர்.(30)
ஜமதக்னியின் பெரும் மகனான ராமர் {பரசுராமர்}, அந்த மலையின் சிகரத்தில் அமர்ந்திருக்கும் அந்த யாதவர்களை {கிருஷ்ணனையும், பலராமனையும்} கண்டு, தன் கருத்துகளைத் தாராளமாக வெளிப்படுத்தும் நோக்கில் அவர்களிடம்,(31) "ஓ! குழந்தாய், தலைவா, கிருஷ்ணா, இனி நான் சூர்ப்பரக நகரத்திற்குச் செல்கிறேன். தேவர்களுடன் போரில் இறங்கினாலும் நீங்கள் வீழ மாட்டீர்கள்.(32) ஓ! மாதவா, வழியில் நீங்கள் என்னைப் பின்பற்றி வந்ததால் நான் அடைந்த மகிழ்ச்சியின் மூலம் என்னுடைய இந்த அழிவற்ற உடலும் அருளை அடைந்திருக்கிறது.(33) மன்னர்களுக்கு மறுமையில் நன்மை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதும், நீங்கள் ஆயுதங்களை அடையப்போவதும், தேவர்களால் விதிக்கப்பட்டதுமான போர் இங்கே நடைபெறும்.(34) ஓ! விஷ்ணு, ஓ! கிருஷ்ணா, தேவர்களாலும், முதன்மையான மனிதர்களாலும் துதிக்கப்படும் நீ பொதுவான மனிதர்களின் அறச் சொற்களைக் கேட்பாயாக.(35) காலத்தால் விதிக்கப்பட்டதும், ஜராசந்தனுடன் நிகழப் போவதுமான இந்தப் போர், மனித வடிவை ஏற்று உலகில் நீ செய்யத் தொடங்கியிருக்கும் மனிதச் செயல்களின் முதல் தவணையாக இருக்கப் போகிறது.(36,37) ஓ! கிருஷ்ணா, நீ உன் சக்தியால் உன் ஆயுதத்தைத் தாங்கியவாறு போரில் பயங்கர வடிவை ஏற்பாயாக.(38) உயர்த்தப்பட்ட சக்கரத்துடனும், கதாயுதத்துடனும் நீ போர்க்களத்தில் நிற்கும்போது, பருத்திருக்கும் உன் எட்டுக் கரங்களைக் கண்டு தேவர்களின் மன்னனும் {இந்திரனும்} அச்சத்தில் பீடிக்கப்படுவான்.(39)
ஓ! அறவோரில் முதன்மையானவனே, தேவர்களின் நகரத்தில் {தேவலோகத்தில்} தீர்மானிக்கப்பட்டதைப் போல, தேவர்களின் நலத்திற்காக, உலகில் உன் மகிமையை நிறுவுவதற்கான அணிவகுப்பு இன்றே தொடங்குகிறது.(40) ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, ஓ! நீண்ட கரங்களைக் கொண்ட கோவிந்தா, உன் தேருடைய கொடிக்கம்பத்தில் காத்திருப்பதற்காக வினதையின் மகனை {கருடனை} விரைவாக அனுப்புவாயாக.(41) திருதராஷ்டிர மகன்களுடைய {துரியோதனாதிகளுடைய} ஆளுகையின் கீழ் போரிடுவதையே வாழ்நாள் நோக்கமாகக் கொண்டிருக்கும் மன்னர்கள், தேவர்களின் நகரத்தை {தேவலோகத்தை} நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டவர்களைப் போலப் போருக்காகக் காத்திருக்கின்றனர்.(42) மன்னர்களின் எதிர்கால அழிவைக் கண்டுவிட்டவளைப் போலப் பூமியானவள், விதவைத் தன்மையால் பீடிக்கப்பட்டவளாகவும், ஒற்றைப் பின்னலுடன் கூடிய கேசத்தைக் கொண்டவளாகவும் உனக்காகக் காத்திருக்கிறாள்.(43) ஓ! கிருஷ்ணா, ஓ! பகைவரைக் கொல்பவனே, மனித வடிவை ஏற்று நீ போர்க்களத்தில் நிற்கும்போது, பகை நட்சத்திரங்களால் பீடிக்கப்பட்ட க்ஷத்திரியர்கள், {முகம்} சுருங்காமல் இன்பமான மனநிலையை ஏற்பார்கள்.(44) எனவே, ஓ! மாதவா, தானவப் படையைக் கலங்கடிப்பதற்காகவும், மன்னர்கள் தேவலோகத்தை அடைவதற்காகவும், தேவர்களின் மகிழ்ச்சிக்காகவும் நீ விரைவாகப் போரில் ஈடுபடுவாயாக.(45) ஓ! கிருஷ்ணா, அண்டமே கௌரவிக்கும் உன்னால் கௌரவிக்கப்பட்டதால் நான், அசைவனவும், அசையாதனவும் கொண்ட மொத்த உலகத்தாலும் கௌரவிக்கப்பட்டவனாக என்னைக் கருதிக் கொள்கிறேன்.(46) ஓ! நீண்ட கரங்களைக் கொண்டவனே, மன்னர் கூட்டத்துடன் போரிடும்போது உண்மையில் நீ என்னை நினைவுகூர்வாயாக. நான் உன் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பேன்" என்றார் {பரசுராமர் கிருஷ்ணனிடம்}.(47)
ஜமதக்னியின் மகனான ராமர் {பரசுராமர்}, பணியில் ஒருபோதும் களைப்படையாத கிருஷ்ணனிடம் இதைச் சொல்லிவிட்டு, தான் விரும்பிய இடத்திற்கு {சூர்ப்பரகத்திற்குப்} புறப்பட்டுச் சென்றார்" என்றார் {வைசம்பாயனர் ஜனமேஜயனிடம்}.(48)
விஷ்ணு பர்வம் பகுதி – 96 – 040ல் உள்ள சுலோகங்கள் : 48
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |