(விதர்பஸபாயாம் ஜராஸந்தஸுனீதயோர்பாஷணம்)
Jarasandha's address to the kings | Vishnu-Parva-Chapter-105-049 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணன் வரவைக் குறித்து அரசர்களுக்கு மத்தியில் நடந்த ஆலோசனை; மன்னர்களின் கூட்டத்தில் பேசிய ஜராசந்தனும், சுனீதனும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நித்தியனான கிருஷ்ணன், வினதையின் மகனுடன் {கருடனுடன்} அங்கே வந்ததைக் கண்ட முன்னணி மன்னர்கள் பெருஞ்சோகத்தால் பீடிக்கப்பட்டனர்.(1) ஓ! மன்னா, பயங்கர ஆற்றலைக் கொண்டவர்களும், குடிமையியலை {நீதி சாஸ்திரங்களை} நன்கறிந்தவர்களும், ஆலோசனைகளில் திறன்மிக்கவர்களுமான அந்த மன்னர்கள், மன்னன் பீஷ்மகனின் பொன் மாளிகையில் கலந்தாலோசிக்கக் கூடினர். தேவ சபையில் அமர்ந்திருக்கும் தேவர்களைப் போலவே அவர்களும் அங்கே பல்வேறு வண்ண விரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.(2,3)
தேவர்களிடம் பேசும் தேவ மன்னனைப் போலவே பேசும் வகையில் பெருஞ்சக்திவாய்ந்தவனும், பெருந்தோள்களையும், பெருஞ்சக்தியையும் கொண்டவனுமான ஜராசந்தன் அவர்களிடம்,(4) "ஓ! மன்னர்களில் முதன்மையானவர்களே, பேச்சாளர்களில் சிறந்தவர்களே, ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கப் பீஷ்மகரே, எனக்குப் புரிந்த வகையில் நான் சொல்லப் போவதை நீங்கள் அனைவரும் கேட்பீராக.(5) நன்கறியப்பட்ட வசுதேவன் மகனும், கருடனுடனும், பிற யாதவர்களுடனும் குண்டின நகரத்திற்கு {குண்டினபுரத்திற்கு} வந்திருப்பவனுமான இந்தக் கிருஷ்ணன், பெருஞ்சக்தியும், பேராற்றலும் வாய்ந்தவனாவான். கன்னிகைக்காகவே {ருக்மணிக்காகவே} அவன் இங்கே வந்திருக்கிறான், அவளை அடைவதற்காக நிச்சயம் அவன் பெரும் முயற்சிகளில் ஈடுபடுவான்.(6,7) ஓ! மன்னர்களில் முதன்மையானவர்களே, குடிமை விதிகளின் {நீதி சாஸ்திரங்களின்} படியே நீங்கள் இக்காரியத்தில் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பலத்தையும், பலவீனத்தையும் கருத்தில் கொண்டு அனைவரும் செயல்படுவீராக.(8) வினதை மகனின் {கருடனின்} உதவியின்றியே வசுதேவனின் பலம்வாய்ந்த இந்த மகன்கள் இருவரும் {அப்போது} கோமந்த மலையில் செய்த பயங்கரச் செயல்களை நீங்கள் நன்கறிவீர்கள்.(9) {இப்போது} யாதவ, போஜ, அந்தகக் குலங்களின் வலிமைமிக்கத் தேர் வீரர்களுடன் சேர்ந்து வந்திருக்கும் கிருஷ்ணன் எவ்வாறு போரிடுவான் என்பதை என்னால் சொல்ல முடியாது.(10) விஷ்ணு, கருடனில் அமர்ந்து கொண்டு கன்னிகையை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது, தேவர்களின் துணையுடன் கூடிய சக்ரனாலும், வேறு எவனாலும் போர்க்களத்தில் நிற்க இயலாது.(11)
தேவர்கள், தைத்தியர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், நாகர்கள் உள்ளிட்ட மூவுலகங்களிலும், வானத்திலும், பூமியிலும், பாதாளத்திலும், பகல் அல்லது இரவிலும், உலர்ந்த அல்லது ஈரமான பொருளின் மூலமும் மரணத்தைச் சந்திக்காதவனும், பெரும்பலம்வாய்ந்தவனும், வெல்லப்பட முடியாதவனுமான தைத்திய மன்னன் ஹிரண்யகசிபு, சிங்கமனிதன் வடிவத்தில் வந்த ஹரியால் {நரசிங்கத்தால்} பழங்காலத்தில் கொல்லப்பட்டான்[1].(14-17)
[1] சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இந்த இடத்திற்குள் ஒரு ஸ்லோகம் அதிகரிக்கிறது. இந்த அத்தியாயத்தின் நிறைவில் மன்மதநாததத்தரின் பதிப்பில் 50 ஸ்லோக எண்களும், மற்ற இரு பதிப்புகளிலும் 51 ஸ்லோக எண்களும் இருக்கின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பில் இங்கே பிழையேற்பட்டிருக்க வேண்டுமெனக் கருதி இந்தப் பதிப்பில் இது திருத்தப்பட்டிருக்கிறது.
குள்ளனின் வடிவில் வந்த விஷ்ணு {வாமனன்}, அதிதியிடம் கசியபரால் பெறப்பட்டவனும், அசுரர்களில் முதன்மையானவனும், பெரும்பலம்வாய்ந்தவனுமான பலியை வாய்மையெனும் சுருக்குக் கயிற்றால் கட்டி பாதாள லோகத்திற்கு அவனை அனுப்பி வைத்தான்.(18)
திரேத, துவாபர யுக சந்தியில், தீவுக் கண்டங்கள் ஏழின் மன்னனும், கரங்கள் ஆயிரங் கொண்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான மன்னன் கார்த்தவீர்யன், தத்தாத்ரேயனின் அருளின் மூலம் உண்டான அரசால் செருக்கில் பெருகி வளர்ந்த போது, ஜமதக்னி, ரேணுகை ஆகியோரின் மூலம் போர்வீரர்களில் முதன்மையான ராமனின் வேடத்தில் பிறந்த பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {பரசுராமன்}, வஜ்ரத்தைப் போன்று கடினமான தன் கோடரியால் அவனைக் கொன்றான்.(19-21)
பழங்காலத்தில் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த தசரதன் மகன் ராமன், மூவுலங்களையும் வென்ற வீரனான ராவணனைக் கொன்றான்.(22)
கிருத யுகத்தில்[2] தாரகையை {ஆகாயத்தை} வேராகக் கொண்ட போரில், கருடனில் அமர்ந்திருந்தவனும், எட்டுக் கைகளுடன் கூடிய வடிவை ஏற்றவனுமான பலம்வாய்ந்த விஷ்ணு, தங்களுக்கு அளிக்கப்பட்ட வரங்களால் செருக்கடைந்த அசுரர்களைப் போர்க்களத்தில் கொன்றான். விஷ்ணு தன்னுடைய பெரும் யோக சக்தியால் அண்ட வடிவை ஏற்று, சூரியனைப் போன்ற பிரகாசமிக்கவனும், தேவர்களை அச்சுறுத்தியவனுமான தைத்தியன் காலநேமியைத் தன் சக்கரத்தால் கொன்றான்.(23-25)
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இது திரேதா யுகம் என்று குறிப்பிடப்பட்டப்பட்டிருந்தாலும், மற்ற இரண்டு பதிப்புகளிலும் கிருத யுகம் என்று சொல்லியிருப்பதாலும், மூல ஸ்லோகத்திலேயே கிருத யுகம் என்ற சொற்கள் தென்படுவதாலும் இங்கே கிருத யுகம் என்றே திருத்தி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
எண்ணற்ற தைத்தியர்கள் யமனுலகுக்கு இவனால் காலத்தில் அனுப்பப்பட்டனர் எனும்போது சொல்வதற்கு இன்னுமென்ன? பெரும் சக்திவாய்ந்தவர்களும், காடுலாவும் தைத்தியர்களுமான பலரும், தேனுகன், அரிஷ்டன், பிரலம்பன் ஆகியோரும் காட்டில் சிறுவனாக இருந்த இவனால் கொல்லப்பட்டனர். சகுனி, பூதனை, கேசி, ஜமலன் {யமலன்}, அர்ஜுனன், யானையான குவலயபீடன், சாணூரன், முஷ்டிகன், கம்ஸன் ஆகியோரை இடையனின் வடிவில் இருந்த தேவகியின் மகன் கொன்றுவிட்டுத் தன் தொண்டர்களுடன் அங்கே விளையாடிக் கொண்டிருந்தான். இவ்வாறு வேடம் பூண்டு மீமானிட அருஞ்செயல்கள் பலவற்றை இவன் செய்திருக்கிறான்.(26-29)
தேவகியின் மகனான கேசவனை அசுரர்களை அழிக்கும் தேவர்களின் முதல் காரணனாகவும், புராதனப் புருஷனும், அண்டத்தின் முதன்மைக் காரணனுமான நாராயணனாகவும், வாய்மையாகவும், வெளிப்பட்டனவும், வெளிப்படாதனவுமான உயிரினங்கள் அனைத்தின் படைப்பாளனாகவும், எவராலும் தடுக்கப்பட முடியாதவனாகவும், அனைவராலும் துதிக்கப்படுபவனாகவும், முதல்வனாகவும், இடையனாகவும், அழிவற்றவனாகவும், நித்தியனாகவும், சுயம்புவாகவும், பிறப்பற்றவனாகவும், நிலையானவனாகவும், அசைபவனாகவும், அசைவற்றவனாகவும், வெல்லப்பட முடியாதவனாகவும், மூன்று காலடிகளைக் கொண்டவனாகவும், மூவுலகங்களின் தலைவனாகவும், தேவ மன்னனின் பகைவரை அழிப்பவனாகவும், நித்தியமான விஷ்ணுவாகவும் நான் கருதுகிறேன். மதுராவில் இருந்து நான் பெற்ற நிச்சய புத்தி இதுவே.(30-34)
ஒருவன் மனிதக்குடிமுதல்வனின் உயர் குலத்திலேயே பிறந்திருந்தாலும் கருடன் அவனுடைய வாகனமாக முடியுமா?(35) அதையுந்தவிர, கன்னிகைக்காக ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} தன் ஆற்றலை வெளிப்படுத்தும்போது, பலம்வாய்ந்த எந்த மனிதனால் கருடனின் முன்பு நிற்க இயலும்?(36) இந்தச் சுயம்வரத்திற்கு விஷ்ணுவே வந்திருக்கிறான் என நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன். அவன் இங்கே வரும்போது உங்களுக்கு நேரும் பேரிடர் பெரியதாக இருக்கும். இதன் பிறகு எதைச் சரியென நினைக்கிறீர்களோ அதைச் செய்வீராக" என்றான் {ஜராசந்தன்}".(37,38)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மகத மன்னன் ஜராசந்தன் இதைச் சென்னதும், பெரும் விவேகியான சுனீதன் {தமகோஷன்} [3] அதற்கு மறுமொழி கூறும் வகையில், "வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மகத மன்னர் சொன்னவை உண்மையே. கோமந்த மலையில் நடந்த பெரும்போரில் செய்வதற்கரிய அருஞ்செயல்கள் பலவற்றை மன்னர்களின் முன்னிலையில் கிருஷ்ணன் செய்தான்.(39,40) அவர்கள் தங்கள் சக்கரத்திலும், கலப்பையிலும் உண்டான நெருப்பால் யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படை வீரர்கள், கொடிகள் உள்ளிட்ட மன்னர்களின் பெரும்படையை எரித்தனர்.(41) மன்னர்களின் படைவீரர்களுக்கு நேர்ந்த அவலநிலையை நினைவுகூர்ந்தும், இனி அவர்களுக்கு நேரப்போகும் பேரிடருக்கு அஞ்சியும் மகத மன்னர் இதைச் சொன்னார்.(42) ராமனும் {பலராமனும்}, கேசவனும் {கிருஷ்ணனும்} போரில் காலாளாகப் போரிட்டாலும், {எங்கள்} மன்னர்களின் படைவீரர்கள் பயங்கரமாகக் கொல்லப்பட்டனர், எவராலும் அதைத் தடுக்க முடியவில்லை.(43)
[3] சிசுபாலனுக்கும், அவனது தந்தை தமகோஷனுக்கும் சுனீதன் என்ற பெயர் உண்டு. எனினும், சுனீதன் என்ற பெயரிலேயே வேறு ஒரு மன்னனும் மஹாபாரதத்தில் குறிப்பிடப்படுகிறான். இவர்கள் இருவரில் இங்கே பேசுவது எவர் என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. சிசுபாலனாகவும் இருக்கலாம் என்ற ஓர் ஐயத்துடனே ஏற்றுக் கொள்ளலாம்.
ஓ! மன்னர்களில் முதன்மையானவர்களே, சுபர்ணன் {கருடன்} இங்கே வந்த போது அவனுடைய சிறகடிப்பால் எழுந்த காற்றில் அடித்துச் செல்லப்பட்ட வானுலாவிகளை {பறவைகளை} நீங்கள் அனைவரும் நினைத்துப் பாருங்கள்.(44) பெருங்கடல்கள் கலங்கின, பூமியும் மலைகளும் மீண்டும் மீண்டும் நடுங்கின. நாமும், "இதென்ன பேரிடர்?" என நினைத்து அஞ்சினோம்.(45) கேசவன், கவசந்தரித்துக் கருடனில் அமர்ந்து போரிடும்போது, நம்மைப் போன்ற எந்த மனிதனால் போர்க்களத்தில் நிற்க இயலும்?(46) எப்போதும் மகிழ்ச்சியை அதிகரிப்பதும், மன்னர்களுக்குப் புகழைத் தருவதும், அறத்தின் சுரங்கமுமான சுயம்வரத்தை நடத்தும் நடைமுறையை முதன்மையான மன்னர்கள் வகுத்திருந்தனர்.(47) இந்தக் குண்டின நகரத்திற்கு {குண்டினபுரத்திற்கு} வந்திருக்கும் மன்னர்கள் ஒருபோதும் அந்தப் பெரும் வீரனுடன் போரிட மாட்டார்கள்.(48) இந்த இளவரசி {ருக்மிணி} மன்னர்களுக்கு மத்தியில் உள்ள எவரையும் தேர்ந்தெடுத்தால், கிருஷ்ணனின் கர வலிமையை எதிர்த்து நிற்கப் போகிறவன் எவன்?(49) ஓ! மன்னர்களே, சுயம்வரம் ஒரு விழாவாக இருந்தாலும், பேரிடர் பிறக்கவும் வழிவகுக்கும், இதற்காகவே கிருஷ்ணனும் நாமும் இங்கே சந்திக்கிறோம்.(50) எனவே, மகத மன்னர் {ஜராசந்தர்} சொன்னது போலவே, கன்னிகைக்காகக் {ருக்மிணிகாகக்} கிருஷ்ணன் இங்கே வந்திருப்பது மன்னர்களுக்கு நேரப்போகும் பேரிடரையே சொல்கிறது" என்றான் {சுனீதன்}" என்றார் {வைசம்பாயனர்}.(51)
விஷ்ணு பர்வம் பகுதி – 105 – 049ல் உள்ள சுலோகங்கள் : 51
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |