(க்ருஷ்ணஸ்ய குண்டிநபுரம் ப்ரதி கமநம்)
The meeting of Krishna and Garuda | Vishnu-Parva-Chapter-104-048 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கருடனை நினைத்த கிருஷணன்; அவர்களுக்கிடையில் நடந்த உரையாடல்; அனைவரும் குண்டினபுரத்தை அடைந்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இதைச் சொல்லிவிட்டுத் தேரில் புறப்பட்ட கிருஷ்ணன், மாலைப்பொழுதில்[1] பீஷ்மகனின் வீட்டை அடைந்தான்.(1) அவன் மன்னர்களின் கூட்டத்தை அடைந்து, முகாம்கள் நிறைந்த அகன்ற அரங்கை {முற்றத்தைக்} கண்ட போது, ராஜசீக[2] மனச்சாய்வால் {குணத்தால்} பீடிக்கப்பட்டான்(2) மன்னர்களை அச்சுறுத்துவதற்காகவும், தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காகவும், முன்பே சித்தி அடைந்திருந்த வினதையின் பெருஞ்சக்திவாய்ந்த மகனை {கருடனை} அவன் நினைத்தான்.(3)
[1] "உரையில் உள்ள சொற்கள் 'லோஹிதாயதி பாஸ்கரே' என்பனவாகும், இதன் பொருள் 'உருக்கப்பட்ட இரும்பைப் போலச் சூரியன் சிவந்தபோது' என்பதாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். இங்கே குறிப்பிடப்படும் பீஷ்மகன் என்பான், ருக்மி, ருக்மிணி ஆகியோரின் தந்தையாவான்.
[2] "அவனது மனச்சாய்வு இருள் குணத்தால் {தமோ குணத்தால்} பீடிக்கப்பட்டது, அஃதாவது அவன் சுயநல நோக்கில் செயல்பட்டாலும், பாப கதியை அடையவில்லை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அரசர் தங்குமிடங்கள் நிறைந்த அரசர் கூட்டத்தை அடைந்ததும், விஸ்தார இடைவெளி முற்றத்தைக் கண்டு க்ருஷ்ணன் ரஜோ குணத் தோற்றத்தை ஏறிட்டுக் கொண்டான்" என்றிருக்கிறது. இங்கே மன்மதநாததத்தர் ஆசை குணம் {ரஜோ குணம்} என்று சொல்லாமல் இருள் குணம் {தமோ குணம்} என்று சொல்லியிருக்கிறார். ராஜசீகம் என்பது ரஜோ குணத்தையே குறிக்கும்.
வினதையின் மகன் {கருடன்} நினைக்கப்பட்ட உடனேயே எளிதில் காணக்கூடிய தோற்றத்தை ஏற்றுக் கொண்டு கேசவனை {கிருஷ்ணனை} அணுகினான்.(4) காற்றையே கலங்கடிக்கும் அவனது சிறகுகளின் வீச்சால் நடுங்கிய மனிதர்கள் அனைவரும் பூமியில் மல்லாந்து விழுந்தனர்.(5) எழும் சக்தியை இழந்த பாம்புகளைப் போல அவர்கள் எழ முயற்சித்தனர். மலை போன்ற உறுதி கொண்ட கிருஷ்ணன், அவர்கள் அனைவரும் விழுந்ததைக் கண்டு, பறவைகளின் மன்னன் வந்து விட்டதை அறிந்து கொண்டான்.(6) பிறகு அவன், தெய்வீக மலர்மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்ட கருடன், தன் சிறகுகளை அடித்துப் பூமியை அசைத்தவாறு தன்னை அணுகி வருவதைக் கண்டான்.(7)
விஷ்ணுவுடைய கரத்தீண்டலின் ஆதரவைப் பெறும் நோக்கம் கொண்ட அவனது முதுகில் கவிழ்ந்த நிலையில் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் பாம்புகளின் நாவுகளைப் போல நீட்டிக் கொண்டிருந்தன. தாதுக்களைக் கொண்ட மலையைப் போலப் பொன்னிறகுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பறவை மன்னன் {கருடன்} கரும்பாம்புகளைத் தன் காலில் இழுத்து வந்தான். தன் வாகனமானவனும், நுண்ணறிவுமிக்கவனும், பாம்புகளை அழிப்பவனும், தைத்தியர்களை அச்சுறுத்துபவனும், தன் கொடிக்கம்பத்தில் சின்னமாக இருப்பவனும், தன் அமைச்சனுமான கருடன், தனக்காக அமுதத்தைக் கொண்டு வந்த தேவனைப் போலத் தன் முன் நிற்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த பின்வரும் சொற்களைச் சொன்னான்.(8-12) {கிருஷ்ணன்}, "ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! தேவ படையின் பகைவரைக் கலங்கடிப்பவனே, ஓ! வினதையின் இதயத்தைத் திளைக்கச் செய்பவனே, ஓ! கேசவனுக்குப் பிடித்தமானவனே, உனக்கு நல்வரவு.(13) ஓ! பறவைகளில் முதன்மையானவனே, நாம் கைசிகனின்[3] வீட்டுக்குச் சென்று சுயம்வரத்தைக் காண்போம். நீயும் எங்களுடன் வருவாயாக.(14) அங்கே பெருஞ்சக்தி வாய்ந்த நூற்றுக்கணக்கான மன்னர்கள், தங்கள் யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் வந்து கூடியிருக்கின்றனர்; அந்த உயரான்மாக்களை நாம் காண்போம்" என்றான் {கிருஷ்ணன்}.(15)
[3] இங்கே குறிப்பிடப்படும் கைசிகன் என்பான், ருக்மி, ருக்மிணி ஆகியோரின் தந்தையான பீஷ்மகனின் தந்தையாவான், அதாவது ருக்மிணியின் பாட்டனாவான்.
பெருந்தோள்களைக் கொண்ட அழகிய கிருஷ்ணன், பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகனிடம் {கருடனிடம்} இதைச் சொல்லிவிட்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான யாதவர்களுடன் சேர்ந்து உயரான்ம கைசிகனின் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.(16) தேவகியின் மகனும், வினதைமகனின் {கருடனின்} நண்பனுமான அழகிய கிருஷ்ணன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான யாதவர்களுடன் சேர்ந்து விதர்ப்ப நகரத்தை {குண்டினபுரத்தை} அடைந்த போது, அனைத்துவகை ஆயுதங்களையும் தரித்திருந்த பெருஞ்சக்திவாய்ந்த {அச்சம் நிறைந்த} மன்னர்கள் யாவரும் மகிழ்ச்சியில் நிறைந்தவர்களாக அவன் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்".(17,18)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதே வேளையில் அறநெறிகளின் விதிகளை நன்கறிந்த மன்னன் கைசிகன், மன்னர்களுக்கு மத்தியில் இருந்து மகிழ்ச்சியாக எழுந்து, கால் கழுவுதற்கும், வாய் அலம்புவதற்கும் உரிய நீருடனும், அர்க்கியத்துடனும் கிருஷ்ணனை வரவேற்று, தன் நகரத்திற்கு இட்டுச் சென்றான்.(19,20) கிருஷ்ணன், கைலாச மலைக்குள் நுழையும் சங்கரனைப் போல ஏற்கனவே தனக்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்குள் தன் படையினருடன் நுழைந்தான். வாசவனின் {இந்திரனின்} தம்பியான கிருஷ்ணன், உணவுப் பொருட்கள், பானங்கள், ஆபரணங்கள், கௌரவங்கள், அன்பு ஆகியவற்றுடன் துதிக்கப்பட்டவனாக மன்னன் கைசிகனின் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(21,22)
விஷ்ணு பர்வம் பகுதி – 104 – 048ல் உள்ள சுலோகங்கள் : 22
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |