Sunday 30 August 2020

தந்தவக்ரன் பேச்சு | விஷ்ணு பர்வம் பகுதி – 106 – 050

(தந்தவக்த்ரஸ்ய பாஷணம் பீஷ்மகஸ்ய நிர்ணயஶ்ச)

Dantavakra's speech | Vishnu-Parva-Chapter-106-050 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தந்தவக்தரன், சால்வன் ஆகியோரின் பேச்சைக் கேட்டுக் கிருஷ்ணனின் பெருமையைக் கூறிய பீஷ்மகன்...

Dandavakra speech

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சக்திவாய்ந்த சுனீதன் {தமகோஷன்} இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பிறகு, கரூஷ நாட்டு மன்னனான வீரன் தந்தவக்ரன் {தந்தவக்த்ரன் / தந்தவக்தரன்}[1],(1) "ஓ! மன்னர்களே, மகத மன்னனும் {ஜராசந்தனும்}, சுனீதனும் நம் நலத்திற்காகச் சொன்னவை முறையெனவே நான் நினைக்கிறேன்.(2) தீய எண்ணம், செருக்கு, வெற்றிக்கான விருப்பம் ஆகியவற்றால் இந்த அமுதச் சொற்களை என்னால் பழிக்க முடியாது.(3) குடிமையியலால் {நீதி சாத்திரங்களால்} அங்கீகரிக்கப்பட்டவையும் கடல்போன்றவையுமான இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சொற்களை இந்த மன்னர்களுக்கு மத்தியில் வேறு யாரால் சொல்ல முடியும்?(4)

[1] மஹாபாரதத்தில் இவன் ஆதிபர்வம் 67ம் பகுதி, சபாபர்வம் 14ம் பகுதி ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறான்.

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவற்றை நான் சொல்கிறேன் கேட்பீராக. ஓ! மன்னர்களே, வாசுதேவன் {கிருஷ்ணன்} இங்கு வந்திருப்பதில் ஆச்சரியமென்ன?(5) நம் அனைவரையும் போலவே அவனும் இந்தக் கன்னிகைக்காக இங்கே வந்திருக்கிறான். இதில் குணமோ, குற்றமோ என்ன?(6) நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கோமந்தத்தை {கோமந்த மலையை} முற்றுகையிட்டோம். பிறகு, அந்தப் போரில் நீங்கள் குற்றங்காண்பதேன்?(7) ஓ! மன்னர்களே, கம்ஸனுடைய மூடத்தனத்தின் காரணமாக இந்த வீரர்கள் இருவரும் முதலில் பிருந்தாவனத்தில் வாழ்ந்தனர்[2].(8) அதன்பிறகு, ராமன் {பலராமன்}, கேசவன் ஆகிய இருவரையும் கொல்வதற்காக அழைத்த கம்ஸன் அவர்களுக்கு எதிராக மதங்கொண்ட யானையை ஏவினான். அந்த யானையைக் கொன்றுவிட்டு அந்த வீரர்கள் இருவரும் அரங்கத்தினுள் நுழைந்தனர்.(9) அதன்பிறகு அந்த விளையாட்டுக் களத்தில் தொண்டர்களுடன் சேர்ந்து இறந்தவனைப் போல அமர்ந்திருந்த மதுரா மன்னன் கம்ஸனைத் தங்கள் ஆற்றலினால் அவர்கள் கொன்றனர்.(10) வயதில் மூத்தவர்களான நாம் அனைவரும் (மற்றொருவனுடைய {ஜராசந்தனுடைய}) தூண்டுதலின் பேரில் மதுராவுக்குச் சென்றோம் {முற்றுகையிட்டோம்}, இதில் அவர்கள் செய்த குற்றமென்ன?(11)

[2] சித்திரசாலை பதிப்பில், "தேவ முனிவரின் (நாரதரின்) சொற்களுக்கிணங்க, கம்ஸனைக் குழப்புவதற்காக (யமுனை ஆற்றின்) கரையில் இருந்த பிருந்தாவனம் எனும் காட்டில் இந்த வீரர்கள் வாழ்ந்தனர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ராமஜனார்த்தன வீரமும், கம்ஸனுக்கு மனக்கலக்கம் காரணமாகக் காட்டில் வஸித்தனர். தேவரிஷி நாரதர் வார்த்தையால் ப்ருந்தாவனத்தின் ஓரத்தில் இருந்தனர்" என்றிருக்கிறது.

ஓ! மன்னர்களே, நமது பெரும்படையைக் கண்டு அஞ்சிய ராமனும், கேசவனும், தங்கள் நகரத்தையும், படைவீரர்களையும் விட்டுவிட்டுக் கோமந்தத்திற்குத் தப்பிச் சென்றனர்.(12) அங்கேயும் அவர்களை நாம் பின்தொடர்ந்து சென்றோம்; போர்க்கலையில் திறன்பெற்றவர்களாக இருப்பினும் நாம் அவ்விரு சிறுவர்களால் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்டோம்.(13) தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை கொண்டு அவர்கள் போரிடாவிட்டாலும் க்ஷத்திரியர்கள் செய்வதைப் போல நாம் மலையை முற்றுகையிட்டு அதற்குத் தீயிட்டோம்.(14) ஓ! முன்னணி க்ஷத்திரியர்களே, காட்டுத்தீயெனக் கருதி அவர்கள் அந்தத் தீயில் அமைதியாகத் தங்கள் உயிரை விட்டிருந்தால் நாம் அவர்கள் வீழ்த்தப்பட்டவர்களெனக் கருதியிருப்போம். ஜனார்த்தனன் நமக்கு எதிராகப் போரிட்டான் என்பதற்காக {இப்போது} அவனை நாம் பழிக்கிறோம்.(15) இப்போது நடக்கும் காரியங்களைப் பார்த்தால், எங்குச் சென்றாலும் நாம் வலியச் சென்று சச்சரவு செய்வோம் என்று தோன்றுகிறது. எனவே, ஓ! மன்னா {பீஷ்மகரே}, கிருஷ்ணனுடன் நட்பு கொள்வீராக.(16) அதையுந்தவிர அந்தக் கிருஷ்ணன் சச்சரவு செய்வதற்காகக் குண்டின நகரத்திற்கு {குண்டினபுரத்திற்கு) வரவில்லை. அவன் கன்னிகைக்காக வந்திருக்கிறான். {அதற்காக} நாம் ஏன் ஒருவரோடொருவர் சச்சரவில் ஈடுபட வேண்டும்?(17)

கிருஷ்ணன் சாதாரண மனிதனல்ல. மனிதர்களின் உலகில் முதன்மையான மனிதனாகவும், தேவர்களன் உலகில் தேவர்களில் முதன்மையானவனாகவும் அவன் இருக்கிறான். அவன் உலகங்களைப் படைக்கும் தெய்வீகத் தன்மை கொண்டவனாவான். தேவர்களிடம் கெட்ட எண்ணமோ, செருக்கோ, குறுக்குபுத்தியோ இருப்பதில்லை.(18,19) அவர்கள் கலக்கமடைவதில்லை, மெலிவதில்லை, துன்பமடைவதில்லை. அவர்கள் எப்போதும் தங்களை வணங்குவோரின் துன்பத்தை அகற்றுகின்றனர். தேவர்களின் மன்னனான விஷ்ணு, தன் உண்மையான வடிவை வெளிபடுத்துவதற்காகவே கருடனுடன் இங்கே வந்திருக்கிறான். மேலும் கிருஷ்ணன் ஒருபோதும் பகைவரைக் கொல்வதற்காகத் தன் படையுடன் செல்வதில்லை என்பதை நீர் அறிவீராக. முன்னணி போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள், யாதவர்கள் ஆகியோருடன் அவன் இங்கே வந்திருப்பது நட்பை நாடி வந்திருக்கும் அவனது விருப்பத்தையே குறிப்பிடுகிறது.(20-22) எனவே, ஓ! மன்னர்களே, நாம் சென்று, அர்க்கியத்துடனும், வாய் அலும்புவதற்கான நீருடனும் உயரான்ம கிருஷ்ணனை விருந்தோம்பலுடன் வரவேற்போம்.(23) நாம் கேசவனுடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டால், கவலை, அச்சம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு வாழ்ந்திருப்போம்" என்றான் {தந்தவக்த்ரன்}.(24)

பேசுபவர்களில் முதன்மையான சால்வன், நுண்ணறிவுமிக்கத் தந்தவக்த்ரனின் சொற்களைக் கேட்டு, {அங்கிருந்த} மன்னர்களிடம்,(25) "இந்த அச்சத்தால் பயனென்ன? கிருஷ்ணன் மீது கொண்ட அச்சத்தால் நடுங்கி அவனுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்வது முறையென நினைத்திருந்தால் அந்நேரத்தில் நாம் நமது ஆயுதங்களை விட்டிருப்போம்.(26) அதையுந்தவிர, நம் படையை நிந்தித்து, மற்றொரு படையைப் புகழ்ந்து பேச வேண்டியதன் தேவையென்ன? இது க்ஷத்திரிய மன்னர்களின் கடமையல்ல.(27) நாம் அனைவரும் உயர்ந்த அரச குடும்பங்களில் பிறந்திருக்கிறோம், நம்முடைய குலங்களுக்குப் புகழைச் சேர்த்திருக்கிறோம். பிறகு ஏன் நமது புத்தி ஒரு கோழையைப் போல இருக்க வேண்டும்?(28)

தேவகியின் மகனான கிருஷ்ணன், அழிவற்றவன், நித்தியமானவன், மன்னர்களால் வெல்லப்பட முடியாதவன், பலம்வாய்ந்தவன், உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவன், வைகுண்டன், அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த உலகின் ஆசான் என்பதையும், தலைமைத் தேவனான விஷ்ணுவும் அவனே {கிருஷ்ணனே} என்பதையும் நான் அறிவேன்.(29,30) விஷ்ணுவின் நோக்கங்கள் அனைத்தையும் முற்றுமுழுதாக நான் அறிவேன். மன்னன் கம்ஸனை அழிப்பது, பூமியின் சுமையில் இருந்து அவளை விடுவிப்பது, நம்மை அழிப்பது, உலகங்களைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடனே அவன் தன் அம்ஸத்துடன் அவதரித்திருக்கிறான். விஷ்ணுவுக்கும் மன்னர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு பெரும்போர் நடைபெற இருக்கிறது (என்பதையும் நான் அறிவேன்).(31,32)

ஓ! மன்னர்களே, அவனுடைய சக்கரத்தின் நெருப்பால் எரிக்கப்பட்டு நாம் யமலோகம் அடையப் போகிறோம் என்பதை நான் உண்மையாக அறிவேன். ஒருவனும் அகாலத்தில் மாளமாட்டான், காலம் வந்த போது உயிரோடு இருக்கவும் மாட்டான், சரியான நேரத்தில் அவனுடைய வாழ்வுக்காலம் முடிவடையும் என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு மனிதன் அச்சமில்லாமல் இருக்க வேண்டும்.(33,34) தைத்தியர்களின் தவத்தால் உண்டான புண்ணியம் அழியும் போது, யோகத்தை அறிந்த தெய்வீக விஷ்ணு உரிய நேரத்தில் அவர்களின் அழிவைக் கொண்டு வருவான்.(35) தேவர்களின் தலைவனான இவனே, விரோசனனின் மகனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான பலியை பாதாள லோகத்திற்கு அனுப்பியவன்.(36) ஓ! மன்னர்களே, விஷ்ணு இதுபோன்ற பல்வேறு அருஞ்செயல்களைச் செய்திருக்கிறான்; விஷ்ணு இங்கே போரிட வரவில்லை எனப் போர் குறித்து நீங்கள் கேள்வியெழுப்பலாகாது. அதையுந்தவிர, கன்னிகை எவனைத் தேர்ந்தெடுப்பாளோ அவனே அவளை அடைவான். மன்னர்களுக்கு மத்தியில் சச்சரவு ஏற்பட என்ன வாய்ப்பிருக்கிறது? நாம் அனைவரும் இனி இணக்கத்தோடு இருப்போம்" என்றான் {சால்வன்}".(37,38)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு நுண்ணறிவுமிக்க மன்னர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஆனால் மன்னன் பீஷ்மகன் தன் மகனை {ரும்மியை} நினைத்து ஏதும் சொல்லாதிருந்தான்.(39) அவன், தன் மகன் பெருஞ்சக்தி வாய்ந்தவன், செருக்கு நிறைந்தவன், போரில் பயங்கரன், வலிமைமிக்கத் தேர்வீரன், பார்க்கவ ஆயுதங்களால் நன்கு பாதுகாக்கப்பட்டவன் என்பதை அறிவான்.(40)

பீஷ்மகன், "என் மகன் {ருக்மி} பெருஞ்சக்திவாய்ந்தவன், எப்போதும் அகங்காரம் கொண்டவன். போரில் அவன் எவனுக்கும் அஞ்சமாட்டான். கிருஷ்ணன் முன்பு அவன் பணியமாட்டான்.(41) கிருஷ்ணன் தன் கரப் பலத்தால் கன்னிகையை அபகரித்துச் சென்றால் பலம்வாய்ந்த போர்வீரர்களின் மத்தியில் நிச்சயம் பெரும் மனவேறுபாடுகள் உண்டாகும்.(42) ஐயோ, கிருஷ்ணனிடம் விரோதம் கொண்ட என் மகன் எவ்வாறு உயிர்வாழ்வான்? கேசவனிடம் இருந்து அவன் உயிர் பிழைக்கும் வழிமுறை எதையும் நான் காணவில்லையே.(43) ஐயோ, என் மகளுக்காக, பித்ருக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான என் மூத்த மகனை கேசவனுக்கெதிராக நான் எவ்வாறு போரிடச் செய்வேன்?(44) செருக்கு நிறைந்தவனும், அறியாமை கொண்டவனும், போர்க்களத்தில் புறமுதுகிடாதவனுமான என் மகன் ருக்ஷவான் {ருக்மவான் / ருக்மி}, நாராயணனிடம் வரங்கள் பெறுவதற்காக வேண்டுவதில்லை[3].(45) அவன் நெருப்பில் வீசப்பட்ட பஞ்சைப் போல நிச்சயம் எரிக்கப்படுவான்.

[3] சித்திரசாலை பதிப்பில், "ருக்மி நாராயணத் தேவனை (தன் தங்கைக்கு) மணமகனாக விரும்பவில்லை" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "மகன் ருக்மி, தேவனான நாராயணனை மேலானவனாக விரும்பவில்லை" என்றிருக்கிறது.

கரவீரத்தின் வீர மன்னன் சிருகாலன், பல்வேறு வழிகளில் போரிடும் பலம்வாய்ந்த கேசவனால் வெகுவிரைவில் எரிக்கப்பட்டான். பலம்வாய்ந்த கேசவன் பிருந்தாவனத்தில் வாழ்ந்து வந்த போது, ஏழு நாட்கள் ஒற்றை விரலில் கோவர்த்தன மலையை உயர்த்திப் பிடித்திருந்தான். அவனுடைய மீமானிடச் செயல்களை நினைவுகூர்ந்தால் என் மனம் சோர்வடைகிறது.(46-48) விருத்திரனைக் கொன்ற சச்சியின் தலைவன் (இந்திரன்) தேவர்கள் அனைவருடன் (கோவர்த்தன) மலைக்கு வந்து, கிருஷ்ணனை நீராட்டி, (தன் தம்பியாக) உபேந்திரனாக அவனை அங்கீகரித்திருக்கிறான்.(49) பயங்கர நாகனும், நஞ்சின் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தவனும், காலனைப் போன்று பிரகாசமிக்கவனுமான காளியன், யமுனையின் மடுவில் வாசுதேவனால் வீழ்த்தப்பட்டான். பெருஞ்சக்தி வாய்ந்தவனும், தேவர்களுகாலும் தடுக்கப்பட முடியாதவனும், குதிரையின் வடிவில் இருந்தவனுமான தானவன் கேசி, அவனால் கொல்லப்பட்டான். தைத்தியன் பஞ்சனனைக் கொன்று, நீரில் தொலைந்து போன சாந்தீபனியின் மகனை யமனுலகில் இருந்து அவன் மீட்டு வந்தான்.(50-52)

ராமனும், கேசவனும், கோமந்த மலையில் பலருடன் போரிட்டு, பல குதிரைகளையும், தேர்களையும் அழித்துத் தங்கள் எதிரிகளை அச்சத்தால் பீடிக்கச் செய்தனர்.(53) பெருஞ்சக்திவாய்ந்தவர்களான வசுதேவனின் மகன்கள் இருவரும், யானைகளை யானைகளின் மூலமும், தேர்வீரர்களைத் தேர்வீரர்களின் மூலமும், குதிரைப் படையைக் குதிரைப் படையின் மூலமும், காலாட்படையைக் காலாட்படையின் மூலமும் அழித்தனர்.(54) அந்தப் போரில் அவர்கள் யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றை அழித்த வகையில் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள், நாகர்கள், தைத்தியர்கள், பிசாசங்கள், குஹ்யர்கள் ஆகியோராலும் அழிக்க முடியாது. அந்தப் போரை நினைத்தால் என் மனம் சோர்வடைகிறது.(55,56) தேவர்களில் முதன்மையான வாசுதேவனை விடப் பலம்வாய்ந்த எந்த மனிதனையும் இதற்கு முன் பூமியில் நான் கண்டதுமில்லை, தேவலோகத்தில் இத்தகையவன் பிறந்தானென ஒருபோதும் கேட்டதுமில்லை.(57) பெரும்பலம்வாய்ந்த வாசுதேவனுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னன் தந்தவக்த்ரன் நம் நன்மைக்காகவே சொன்னான்" என்று தன் மனத்திற்குள் நினைத்துக் கொண்டான் {மன்னன் பீஷ்மகன்}".(58)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு படைகளின் பலத்தையும், பலவீனத்தையும் தன் மனத்துக்குள் சிந்தித்த பீஷ்மகன், நித்தியனான கிருஷ்ணனிடம் சென்று அவனை அமைதிப்படுத்த விரும்பினான்.(59) குடிமையியலை நன்கறிந்த மன்னர்கள் பலர் அவன் செல்வதை அங்கீகரித்தனர், அவனும், ஸூத மாகத வந்திகளை மங்கலத் துதிகளைப் பாடச் செய்து புறப்பட்டுச் சென்றான்.(60) அந்த இரவு கழிந்ததும், மன்னர்கள் அனைவரும் தங்கள் காலைச் சடங்குகளைச் செய்துவிட்டுத் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் அமர்ந்தனர்.(61) விதர்ப்பத்திற்கு அனுப்பப்பட்டிருந்த ஒற்றர்கள் திரும்பி வந்து தங்கள் தலைவனிடம் இரகசியமாக அனைத்தையும் சொன்னார்கள்.(62) கிருஷ்ணனின் அபிஷேகத்தைக்[4] குறித்துத் தூதர்களிடம் இருந்து கேட்ட மன்னர்களில் சிலர் மகிழ்ச்சியடைந்தனர், வேறு சிலர் அச்சமடைந்து துன்புற்றனர்.(63) பலர் அதைக் கவனிக்காமலும் இருந்தனர். இவ்வாறு கிருஷ்ணனின் அபிஷேகத்தால் (அந்தச் செய்தியால்) கலங்கியதும், மனிதர்கள், குதிரைகள், யானைகள் நிறைந்ததுமான அந்த மன்னர்களின் படை பெருங்கடலைப் போலக் கலக்கமடைந்து மூன்று பிரிவுகளாகப் பிரிந்தது.(64) மன்னர்களில் முதன்மையான பீஷ்மகன், அந்த மன்னர்களுக்கிடையில் ஏற்படும் பிளவைக் கண்டு, தன்னால் அவர்களுக்கு நேரப்போகும் அவமானத்தைக் குறித்துத் தனக்குள் சிந்தித்தான். எரியும் இதயத்துடன் கூடிய அவன் அவர்களின் நோக்கத்தை அறிய விரும்பினான். அதே வேளையில் கைசிகனால் அனுப்பப்பட்ட தூதர்களும் கிருஷ்ணனின் அபிஷேகத்தை அறிவிக்கும் கடிதத்தைத் தங்கள் தலைகளில் சுமந்தவாறு கடல் போன்ற அந்த மன்னர்களின் சபைக்குள் நுழைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(65-67)

[4] "அபிஷேகம் என்ற இந்தச் சொல்லின் உண்மைப் பொருள் நீராடல் அல்லது தெளித்தல் என்பதாகும். இது பெரும்பாலும், தொடக்கவிழா, அரச பட்டமேற்பு முதலிய விழாக்களில் செய்யப்படும். கங்கை நீரை அல்லது பல்வேறு பொருட்கள் ஊறவைத்த நீரைத் தெளிப்பது இந்தச் சடங்கின் முக்கியப் பகுதியாகும். இங்கே சொல்லப்படுவது வழிபடத்தகுந்த தேவர்களை நீராட்டுவதற்குப் பல்வேறு பொருட்கள், கனிகள், ரத்தினங்கள் முதலியவற்றை நீருடன் கொடையாக அளித்துச் செய்யப்படும் அறச்சடங்காகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 19ம் அத்தியாயத்தில் வரும் கோவிந்தாபிஷேகத்தைக் குறிப்பிடவில்லை. அடுத்த அத்தியாயத்தில் வரும் பேரரசப் பட்டாபிஷேகத்தைக் குறிப்பிடுகிறது.

விஷ்ணு பர்வம் பகுதி – 106 – 050ல் உள்ள சுலோகங்கள் : 67
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்