(ஜராஸந்தபயானம்)
The Battle Between Krishna and Jarasandha | Vishnu-Parva-Chapter-92-036 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : மதுரா நகர் முற்றுகை; அதைத் தொடர்ந்த போர்; ஜராசந்தனுக்கும் பலராமனுக்கும் இடையில் நடந்த போர்; தோற்றுத் திரும்பிய ஜராசந்தன்...
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த அத்தியாயத்தின் தலைப்பு "கிருஷ்ணனுக்கும் ஜராசந்தனுக்கும் இடையிலான போர்" என்று இருந்தாலும், இந்த அத்தியாயத்தில் பலராமனுக்கும், ஜராசந்தனுக்கும் இடையில் நடந்த போர் விளக்கப்படுவதால் தலைப்பு மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் மன்மதநாததத்தரின் பதிப்பில் 90ம் அத்தியாயத்திற்குப் பிறகு, 92ம் அத்தியாயமே வருகிறது. இடையில் எந்தச் செய்தியும் விடுபடவில்லை. இதில் அச்சுப்பிழை ஏற்பட்டிருக்க வேண்டும். எனினும் அடுத்தடுத்து 93, 94 என்று அத்தியாய வரிசை தொடர்வதால் அந்தப் பிழையுடனேயே இங்கும் அத்தியாய எண் கொடுக்கப்படுகிறது. இந்த எண்களைத் தொடர்ந்து வரும் விஷ்ணு பர்வத்தின் அத்தியாய எண் முறையான வரிசையின்படியே 36 என்று கொடுக்கப்படுகிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "விருஷ்ணிகளுக்கும், படைத்தலைவர்களுக்கும், மகதத் தலைவனைப் {ஜராசந்தனைப்} பின்பற்றும் மன்னர்களுக்கு இடையில் பெரும்போர் நடந்தது.(1) ஓ பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, வாசுதேவன் ருக்மியுடனும், ஆஹுகன் பீஷ்மகனுடனும், வசுதேவன் கிராதனுடனும், பப்ரு கைசிகனுடனும்,(2) சேதியின் மன்னன் {சிசுபாலனின் தந்தை தமகோஷன்} கவனுடனும் {கதனுடனும்}, சம்பு {சங்கு} தந்தவக்ரனுடனும் போரிட்டனர். இவ்வாறே மகத மன்னனுடைய படைவீர்களுக்கும், பெருஞ்சக்திவாய்ந்த அரசுகளுக்கும் எதிராக விருஷ்ணிகளின் படையைச் சார்ந்த அந்தப் பெரும் வீரர்களும், படை வீரர்களும் இருபத்தேழு நாட்கள் போரிட்டனர்.(3,4) யானைகளைச் செலுத்தியவர்கள் {எதிர் தரப்பில்} அவ்வாறே வருகிறவருடனும், குதிரைப்படை {பகைவரின்} குதிரைப்படையுடனும், காலாட் படை காலாட்படையுடனும், தேர் வீரர்கள் தேர்வீரர்களுடனும் போரிட்டனர்.(5)
விருத்திரனுக்கும், தேவர்களின் மன்னனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைந்ததைப் போல மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்த கூடிய வகையில் ஜராசந்தனுக்கும், ராமனுக்கும் {பலராமனுக்கும்} இடையில் பயங்கரப் போர் நடந்தது.(6) கிருஷ்ணன், ருக்மிணியின் உணர்வைக் கருத்தில் கொண்டு ருக்மியைக் கொல்லாதிருந்தாலும், நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்று பயங்கரமானவையும், சூரியக் கதிர்களைப் போல எரிபவையுமான அவனது {ருக்மியின்} கணைகளைத் தான் கற்ற கல்வியின் மூலம் {பயிற்சியின் பலத்தால்} முறியடித்தான்.(7) அந்தப் போர்க்களமானது இரு படைகளின் சதை மற்றும் குருதிச் சேற்றால் மறைக்கப்பட்டது. பகை கொண்ட இரு படைகளுக்கு இடையில் நடந்த அந்த மோதலில்(8) தலையற்ற வடிவங்கள் எண்ணற்றவை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எழுந்தன. {அந்தப் போரில் கொல்லப்பட்ட படைவீரர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவுக்கு அதிகமானதாக இருந்தது}.(9) தேர்வீரனான ராமன் {பலராமன்}, நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் ஜராசந்தனை மறைத்தான். மகதத்தின் வீர மன்னனும் அவனை {பலராமனை} கணைகளால் மறைத்தான்.(10)
வேகமாகச் செல்லும் தேர்களில் ஒருவரையொருவர் அணுகிய அவர்கள், பல்வேறு ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கி சிங்க முழக்கம் செய்தனர். அவர்களது குதிரைகளும், தேர்களும் கொல்லப்பட்ட பிறகு, அவர்களது தேர்கள் சிதறிய பிறகு, அவர்களுடைய ஆயுதங்கள் {கணைகள்} குறைந்த போது(11,12) தங்கள் கதாயுதங்களை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர். பூமியானவள் அவர்களின் பாதங்களின் கனத்தால் நடுங்கினாள்.(13) கோபத்தில் கதாயுதங்களை எடுத்துக் கொண்டவர்களும், கதாயுதப் போரில் திறன்மிக்கவர்களும், மலைச்சிகரங்களைப் போன்று பெரிய கரங்களைக் கொண்டவர்களுமான அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த வீரர்கள் இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தோடினர். அவர்கள் செய்யும் போரைக் காண்பதற்காகப் பிற வீரர்கள் போரில் இருந்து விலகினர்.(14) போர்க்கலையில் திறம்பெற்றவர்களென உலகங்களால் கொண்டாடப்படும் அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த வீரர்கள் இருவரும் இரண்டு மதங்கொண்ட யானைகளைப் போல ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(15) ஓ! மன்னா, ஆயிரக்கணக்கான தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள், யக்ஷர்களும் அனைத்துத் திசைகளில் இருந்தும் அங்கே வந்தனர்.(16) அவர்களுடைய பிரகாசத்தில் ஒளிர்ந்த அந்தப் போர்க்களமானது ஒளிக்கோள்களால் மறைக்கப்பட்ட வானத்தைப் போலத் தெரிந்தது.(17)
பிறகு பெரும்பலம் வாய்ந்த ஜராசந்தன், இடப்பக்கம் திரும்பி ராமனை {பலராமனை} நோக்கி விரைந்தான், பலதேவனும் தெற்கு நோக்கித் திரும்பினான்.(18) கதாயுதப் போரில் திறம்பெற்றவர்களான அவ்விரு வீரர்களும், ஒரு யானை தன்னை எதிர்க்கும் மற்றொரு யானையைத் தன் தந்தங்களால் தாக்குவதைப் போன்று பத்து திக்கும் எதிரொலிக்க ஒருவரையொருவர் தாக்கினர்.(19) அந்த மோதலில் பலதேவனுடைய கதாயுதத்தின் வீச்சொலி இடியைப் போன்றதாகவும், மகத மன்னனின் கதாயுதத்தின் வீச்சொலி பிளக்கும் மலையைப் போன்றதாகவும் கேட்டன.(20) காற்றால் விந்திய மலையைக் கலங்கடிக்க இயலாததைப் போலவே ஜராசந்தனின் கைகளில் இருந்த கதாயுதமானது, கதாயுதம் தரிப்பவர்களில் முதன்மையானவனை {பலராமனை} அசைக்க முடியாமல் நழுவியது.(21) மகத மன்னன் ஜராசந்தன், ராமனுடைய கதாயுதத்தின் வேகத்தைத் தன் கல்வியினாலும் {பயிற்சியினாலும்}, பொறுமையினாலும் தாங்கிக் கொண்டான்.(22)
இவ்வாறு போர்க்களத்தில் மண்டலகதிகளில் நீண்ட நேரம் திரிந்து கொண்டிருந்த இருவரும் களைப்படைந்தனர். பிறகு அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(23,24) போர்வீரர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும் சிறிது நேரம் நிகரான வல்லமையுடன் போரிட்டனர். அவர்களில் ஒருவரும் போர்க்களத்தில் இருந்து அகலவில்லை.(25) பலம்வாய்ந்தவனான ராமன், கதாயுதப் போரில் ஜராசந்தனின் திறனைக் கண்டு, தன் கதாயுதத்தை விட்டுவிட்டு தன் உலக்கையை எடுத்தான்.(26) அந்தப் போரில் பலதேவன், துல்லியமாக இலக்கைத் தாக்குவதும், பயங்கரத் தோற்றம் கொண்டதுமான உலக்கையை எடுத்தபோது உலகத்தின் சாட்சியாக விளங்கும் இனிய ஒலி வானத்தில் கேட்டது, அது {அந்த அசரீரி} ஹலாயுதனான பலதேவனிடம்,(27,28) "ஓ! ராமா, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மகத மன்னனான இவன் {ஜராசந்தன்} உன்னால் கொல்லத்தக்கவனல்ல. இதற்காக வருந்தாமல் விலகுவாயாக. ஜராசந்தனுடைய அழிவுக்காக நான் வகுத்திற்கும் வழிமுறையின் மூலம் விரைவில் அவன் மரணமடைவான்" என்றது.(29)
வருங்காலம் குறித்த இந்தக் குரலைக் கேட்ட ஜராசந்தன் இதயமுடைந்தான், அதனால் பலதேவனும் அவனைத் தாக்காதிருந்தான்.(30) ஓ! பேரரசே, இவ்வாறு அவர்கள் போரிடுவதில் இருந்து விலகியபோது, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட யாதவர்களுக்கும், பிற மன்னர்களுக்கும் இடையிலான பயங்கரப் போர் நீண்ட நேரம் நீடித்தது. பேரரசன் ஜராசந்தன் இவ்வாறு வீழ்த்தப்பட்டு ஓடிச் சென்ற போது, சூரியன் மறைந்த போது, கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், தங்கள் இலக்கை அடைந்தவர்களுமான யாதவர்கள், இரவில் அவனை {ஜராசந்தனைத்} தொடர்ந்து செல்லவில்லை. அவர்கள், மாதவனின் விருப்பப்படி தங்கள் படைவீரர்களைத் திரட்டிக் கொண்டு தங்கள் நகரத்திற்குள் நுழைந்தனர். வானத்தில் இருந்து இறங்கி வந்த ஆயுதங்கள் அனைத்தும் அப்போதே மறைந்தன.(31-34)
மன்னன் ஜராசந்தனும் மனம் உடைந்தவனாகத் தன் நகருக்குத் திரும்பிச் சென்றான். அவனைப் பின்தொடர்ந்து வந்த மன்னர்களும் அவரவருக்குரிய நாடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.(35) மறுபுறம், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஜராசந்தன் பெருஞ்சக்தி வாய்ந்த மன்னனானதால் அவனை வீழ்த்திய யாதவர்களால் தோல்வியைக் கடந்தவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ள முடியவில்லை.(36) பெருந்தேர்வீரர்களான யாதவர்கள் பதினெட்டு முறை அவனோடு போர் புரிந்தாலும் அவர்களால் போர்க்களத்தில் அவனைக் கொல்ல முடியவில்லை.(37) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, இருபது அக்ஷௌஹிணி படைவீரர்கள் மன்னன் ஜராசந்தனுடன் வந்தனர்.(38) விருஷ்ணிகள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்ததால் பிற மன்னர்களால் பின்தொடரப்பட்ட மன்னன் பார்ஹத்ரதனால் கலங்கடிக்கப்பட்டனர்.(39) பெருந்தேர்வீரர்களான விருஷ்ணிகள், இவ்வாறு மகத மன்னன் ஜராசந்தனை வீழ்த்தி மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினர்" என்றார் {வைசம்பாயனர்}.(40)
விஷ்ணு பர்வம் பகுதி – 92 – 036ல் உள்ள சுலோகங்கள் : 40
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |