(குவலயாபீடமாரணம்)
A description of the arena | Vishnu-Parva-Chapter-84-029 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : அரங்கத்தின் வர்ணனை; குவலயாபீடம் என்ற யானையைக் கொன்று மற்கத்திற்குள் நுழைந்த கிருஷ்ணனும், பலராமனும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அடுத்த நாள், அந்தப் பெரும் விளையாட்டைக் காண ஆர்வமுள்ள குடிமக்களால் அந்த வட்டரங்கம் நிறைந்திருந்தது.(1) அந்தச் சபையானது, வண்ணம் பூசப்பட்ட எண்கோணத் தூண்களால் தாங்கப்பட்டதாகவும், திடல்கள், கதவுகள், ஆணிகள் பொருத்தப்பட்டதாகவும், வட்டமான அல்லது பிறை வடிவ சாளரங்களுடன் கூடியதாகவும், மெத்தைகளுடன் கூடிய இருக்கைகளைக் கொண்டதாகவும் இருந்தது;(2) பெருங்கடலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த அதில் {அந்தச் சபையில்} போரைக் காண்பதற்காகப் பொருத்தப்பட்ட போதிய அளவில் அகன்ற விதானங்கள் {காட்சிக்கூடங்கள்} பெரும் மேகங்களைப் போலத் தொங்கிக் கொண்டிருந்தன; முன்புறம் திறந்திருந்தாலும், அழகியவையும், நேர்த்தியானவையுமான திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டும், மலர்த்தோரணங்களுடன் மகுடம் சூட்டப்பட்டும் இருந்த அது {அந்த சபை} கூதிர்கால மேகங்களைப் போல ஒளியுடன் பிரகாசித்தது. மலைகளைப் போன்றவையும், பல்வேறு தரப்புகளுக்கும், குழுக்களுக்கும் உரியவையுமான காட்சிக்கூடங்கள், பல்வேறு கலைகளின் கருவிகளுடனும், சின்னங்களுடனும் கூடிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(3-5)
அந்தப்புரவாசிகளின் அறைகள், பொன்னுடனும், ஓவியங்களுடனும், ரத்தினக்கூட்டங்களுடனும் பிரகாசித்தபடி அருகிலேயே ஒளிர்ந்து கொண்டிருந்தன; அவை விலைமதிப்பற்ற கற்களால் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டும், அடியில் விலைமதிப்பற்ற தொங்கட்டான்கள் இணைக்கப்பட்டும், மேலே கோபுரங்களும், பதாகைகளும் பதிக்கப்பட்டும் வானத்தில் கதிர்களைப் பரப்பும் மலைகளைப் போலத் தெரிந்தன.(6,7) மதிப்புமிக்க ரத்தினங்களில் இருந்து பிரதிபலிக்கும் ஒளிக் கதிர்கள், வீசப்படும் வெண்சாமரங்களிலும், பெண்களுடைய ஆபரணங்கள் வெளியிட்ட கிங்கிணி ஒலி இசையிலும் கலந்தன.(8) அற்புத உடைகளை உடுத்திய அழகிய பெண்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கணிகையருக்கான தனிப்பட்ட விதானங்கள் {காட்சிக்கூடங்கள்} தேவர்களுடைய தேர்களின் ஒளிக்கு ஈடாகப் போட்டியிட்டன.(9) அந்தச் சபையில் சிறந்த இருக்கைகளும், பொன்னாலான படுக்கைகளும், மலர்க்கொத்துகளுடன் கலந்த பல்வேறு வண்ணங்களிலான தொங்கல்களும் இருந்தன;(10) அங்கே நீர் கொண்ட பொற்குவளைகளும், பல்வேறு வகையான கனிகளும், குளிர்ந்த பானங்களும், பருகத்தகுந்த நறும்பானங்களும் நிறைந்தவையும், புத்துணர்ச்சியூட்டுபவையுமான அழகிய இடங்கள் இருந்தன.(11)
மேலும் அங்கே வலுவான மரத்தால் கட்டப்பட்ட மேடைகளும் வேறு பல தளங்களும் இருந்தன; நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொங்கல்கள் அங்கே தொங்கிக் கொண்டிருந்தன;(12) விளையாட்டுகளைப் பெண்கள் காண்பதற்காக வீடுகளின் உச்சிகளில் நுட்பமாகப் பொறாமைபடக்கூடிய அளவுக்குப் பொருத்தப்பட்டிருந்த அறைகள், காற்றில் பறக்கும் அன்னங்களைப் போலத் தெரிந்தன.(13) ஒளியில் மேரு மலையைப் போலத் தெரிந்ததும், காந்தியில் அனைத்தையும் விஞ்சியதுமான கம்ஸனின் கூடம் {அனைத்திற்கும்} முன்னால் நின்றிருந்தது; அதன் பக்கங்களும், தூண்களும் பொன்னால் மறைக்கப்பட்டிருந்தது; வண்ண நாண்கள் கட்டப்பட்டு, அனைத்து வகையிலும் ஒரு மன்னனின் இருப்புக்குத் தகுந்ததாக அஃது {அந்தக் கூடம்} இருந்தது.(14,15)
கம்ஸன், 'குவலயாபீட யானை வாயிலில் காத்திருக்கட்டும்' என்று ஆணையிட்டுவிட்டுப் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மனிதர்களால் நிறைந்திருந்ததும், அவர்களது இரைச்சலின் எதிரொலியால் பெருங்கடலைப் போல ஆர்ப்பரித்துக் கொண்டிருந்ததுமான அரங்கத்திற்குள் நுழைந்தான்.(16,17) அவன் தன்னிரு பக்கங்களிலும் வெண்சாமரங்களுடனும், தன் உடலில் இரண்டு வெள்ளுடைகளுடனும், தலையில் வெண்தலைப்பாகையுடனும் வெண்மலையின் வெண்சிகரத்தில் வெண்கதிர்களுடன் கூடிய சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(18) நுண்ணறிவுமிக்கவனான அந்த மன்னன் தன் அரியணையில் சுகமாக அமர்ந்த போது, அவனது {கம்ஸனின்} ஒப்பற்ற அழகைக் கண்ட குடிமக்கள் வெற்றி முழக்கம் {ஜயகோஷம்} செய்தனர்.(19)
அப்போது பலம்வாய்ந்தவர்களான மல்லர்கள், தளர்ந்த ஆடைகளுடன் அரங்கத்திற்குள் நுழைந்து மூன்று தரப்பாக {பிரிவாக} களத்தை அடைந்தனர் {மூன்று வரிசைகளில் அமர்ந்தனர்}.(20) அதன்பிறகு, வஸுதேவனின் மகன்கள் இருவரும் எக்காள {தூரிய} ஒலியின் துணையுடன் தங்கள் கரங்களைத் தட்டிக் கொண்டு மகிழ்ச்சிமிக்க மனங்களுடன் அந்த அரங்கத்தின் வாயிலை அடைந்தனர்.(21) {அவர்கள் அந்த நிகழ்வுக்கான உடையை அணிந்திருந்தனர். அவர்களது உடலில் சந்தனக் குழம்பு பூசப்பட்டிருந்தது. அவர்களின் நெற்றிகளில் சந்தனம் பூசப்பட்டிருந்தது. அவர்கள் மலர் மாலைகளைச் சூடியிருந்தனர். இரட்டையரைப் போலத் தெரிந்த அவர்கள் வலிமைமிக்கத் தங்கள் கரங்களையே ஆயுதங்களாகக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் வலிமைமிக்கத் தோள்களையும், கைகளையும் தட்டிக் கொண்டே முழக்கமிட்டனர்}[1].(22) அழகிய முகங்களைக் கொண்டவர்களான வஸுதேவன் மகன்கள் இருவரும் வேகமாக அங்கே நுழைந்த உடனேயே அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருந்த அந்த மதம் கொண்ட யானையால் தடுக்கப்பட்டனர்.(23) மீண்டும் மீண்டும் தூண்டப்பட்ட அந்தத் தீய யானையானது, தன் துதிக்கையை மடித்துக் கொண்டு, ராமனையும் {பலராமனையும்}, கிருஷ்ணனையும் அழிக்க முயற்சித்தது.(24) அந்த யானையால் அச்சமூட்டப்பட்ட கிருஷ்ணன், சிரித்துக் கொண்டே தீய மனம் கொண்ட கம்ஸனின் நோக்கத்தை இழிவாகப் பேசும் வகையில், "இந்த யானையின் மூலம் கம்ஸன் என்னைக் கொல்ல விரும்புகிறானெனில், உண்மையில் அவன் யமலோகம் செல்ல ஆவலுடன் இருக்கிறான்" என்றான்.(25,26)
[1] இந்த ஸ்லோகம் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. சித்திர சாலை பதிப்பின் மொழியாக்கத்தை ஒட்டி இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையும் சேர்த்தால்தான் இந்த அத்தியாயம் 44 ஸ்லோகங்களைக் கொண்டதாக இருக்கும். மன்மதநாததத்தரின் பதிப்பில் இதைச் சேர்க்காமல் 43 ஸ்லோகங்களே இருக்கின்றன.
பலம்வாய்ந்தவனான கோவிந்தன், மேகத்தைப் போல முழங்கும் அந்த யானை தன்னருகே வந்தபோது, துள்ளிக் குதித்துத் தன் தோள்களைத் தட்டினான்.(27) சிங்கம் போல முழங்கியும், தன் கரங்களைத் தட்டியும் அந்த யானையின் முன்பு நின்றிருந்த அவன், நீரால் நனைந்திருந்த அதன் துதிக்கையைத் தன் மார்போடு சேர்த்து அணைத்தான்.(28) அவன் சிலவேளைகளில் அதன் தந்தங்கள் இரண்டிற்கும் மத்தியிலும், சில வேளைகளில் அதன் கால்கள் இரண்டிற்கும் இடையிலும் சென்று பெருங்கடலைக் கலங்கடிக்கும் காற்றைப் போல அதனைக் கலங்கடித்தான்.(29) பிறகு வாஸுதேவன், அதன் துதிக்கையையும், தந்தங்களையும் விட்டும், அதன் கால்களைவிட்டும் வெளிப்பட்டு, {பின்பக்கத்தில் இருந்து} வாலை இழுத்து அதனைத் தரையில் கிடத்தினான்.(30) பேருடல் படைத்த அந்தச் சிறந்த யானை இதனால் குழப்பமடைந்ததால் {மயக்கமடைந்ததால்}, அதனால் கிருஷ்ணனைக் கொல்ல இயலவில்லை. காயமடைந்த உடலுடன் அஃது அங்கே பிளிறத் தொடங்கியது.(31)
பிறகு, தன் கால் முட்டுகளால் பூமியைத் தீண்டி, தன் தந்தங்களால் பூமியின் பரப்பைக் கீறிய அது கோபத்தால் மழைமேகம் போல மதம் பெருக்கத் தொடங்கியது.(32) குழந்தைத் தனமென்ற சாக்கின் பேரில் அந்த யானையுடன் இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணன், கம்ஸனைக் கொல்லும்பொருட்டு விரைவில் அதனைக் கொல்ல விரும்பினான்.(33) பிறகு அவன் தன் காலை அதன் கீழுதட்டில் {மத்தகத்தில் முன்னால்} வைத்துத் தன்னிரு கைகளைக் கொண்டு அதன் தந்தங்களைப் பிடுங்கி, அவற்றைக் கொண்டே அதைத் தாக்கினான்.(34) வஜ்ரம் போன்ற தன் தந்தங்களால் தாக்கப்பட்ட அந்த யானையானது பேரொலியுடன் சிறுநீரையும், மலத்தையும் கழித்தது.(35) கிருஷ்ணனால் அங்கங்கள் சிதைக்கப்பட்டதும், கவலை பீடித்த மனம் கொண்டதுமான அந்த யானையின் குமடுகளிலிருந்து ஏராளமான குருதி வெளியேறியது.(36)
வினதையின் மகன் (கருடன்), மலைக்குள் தலை நுழைத்திருக்கும் ஒரு பாம்பை இழுப்பதைப் போலவே, அந்த ஹலாயுதனும் (பலதேவனும் {பலராமனும்}) அந்த யானையின் வாலைப் பிடித்து இழுக்கத் தொடங்கினான்.(37) இவ்வாறு தந்தங்களைக் கொண்டு அந்த யானையைத் தாக்கிய கிருஷ்ணன் ஒரே வீழ்ச்சில் உல்பணன் என்ற பெயரைக் கொண்ட அந்த மாவுத்தனை {மஹாமாத்ரனைத்} தாக்கினான்.(38) அப்போது தந்தம் முறிந்ததான அந்தப் பெரும் யானை அவலமிக்கப் பயங்கர முழக்கமிட்டு இடியால் வீசப்பட்ட நெருப்பைப் போல மஹாமாத்ரனோடு சேர்ந்து விழுந்தது.(39) முதன்மையான மனிதர்களான ராமன், கிருஷ்ணன் இருவரும், அந்தப் பயங்கரப் போரில் தோமரத்தையும், பிற ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு அந்த யானையின் பின்புறத்தைப் பாதுகாக்கும் காவலர்களை அழித்தனர்.(40)
காட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த மாதவர்கள் இருவரும் அவர்களைக் கொன்று விட்டு அரங்கத்திற்குள் நுழைந்தபோது, விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள் உள்ளிட்ட அனைவரும், தேவலோகத்தில் இருந்து விரும்பி வந்த அஸ்வினிகள் என அவ்விருவரைக் கருதினர். அவர்கள் சிங்க முழக்கங்களாலும், மகிழ்ச்சிக் கூக்குரல்களாலும், தோள்களையும், உள்ளங்கைகளையும் தட்டுவதாலும் அங்கிருந்த மக்கள் அனைவரையும் நிறைவடையச் செய்தனர்.(41,42) ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, கம்ஸன், அவர்களையும், குடிமக்கள் அவர்களிடம் கொண்டிருக்கும் பற்றையும் மகிழ்ச்சியையும் கண்டு கவலையால் நிறைந்தான்.(43) தாமரைக் கண்ணனான கிருஷ்ணன், பிளிறும் யானையை இவ்வாறு கொன்றுவிட்டு தன் அண்ணனுடன் {பலராமனுடன்} சேர்ந்து கடல் போன்றிருந்த அரங்கை அடைந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(44)
விஷ்ணு பர்வம் பகுதி – 84 – 029ல் உள்ள சுலோகங்கள் : 44
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |