(கம்ஸவதம்)
Trial of arms | Vishnu-Parva-Chapter-85-030 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : மற்போரில் சாணூரனையும், முஷ்டிகனையும் வீழ்த்திய கிருஷ்ணன்; கம்ஸனைக் கொன்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வைசம்பாயனர், "தாமரைக் கண்ணனும், தேவகியின் மகனுமான கிருஷ்ணன் தன் தோள்களைத் தட்டும் ஒலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே தன் அண்ணனுடன் {பலராமனுடன்} சேர்ந்து அரங்கத்திற்குள் நுழைந்தான். அவனது ஆடை காற்றில் அசைந்து கொண்டிருந்தது,(1) அவனது உடல் யானையின் தந்தங்களால் காயமடைந்திருந்தது, அவனது அங்கங்கள் மதநீராலும், குருதியாலும் மறைக்கப்பட்டிருந்தன;(2) சிங்கத்தைப் போல் பாய்ந்த அவன் கம்ஸனுக்கு அழிவைக்கொண்டு வரும் மேகத்தைப் போல அங்கே விரைவாக நுழைந்தான். யானைத் தந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட கைகளுடன் இருந்த அவன் குறைகளைக் காண்பதில் மிகக் கவனமாக இருந்தான். இவ்வாறு அவர்கள் பெருஞ்சக்தியுடன் நுழைவதைக் கண்ட உக்ரஸேனனின் மகன் {கம்ஸன்} முகம் ஒளியிழந்தவனாகக் கோபத்துடன் அவர்களைப் பார்த்தான்.(3,4)
பிறை நிலவுடன் கூடிய ஒற்றைச் சிகர மலையைப் போலக் கைகளில் தந்தங்களுடன் கேசவன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(5) அவன் குதித்துப் பாயந்த போது, கடல் போன்ற அந்த அரங்கமானது அங்கே கூடியிருந்த கூட்டத்தின் எதிரொலிகளால் நிறைந்து ஒளிர்ந்து கொண்டிருந்தது.(6) கோபத்தில் நிறைந்து கண்கள் சிவந்த கம்ஸன், கிருஷ்ணனுடன் போரிடுமாறு பெரும்பலம்வாய்ந்த சாணூரனுக்கு ஆணையிட்டான்.(7) பல மலைகளுக்கு ஒப்பானவர்களும், பெரும்பலம் வாய்ந்த மல்லர்களுமான ஆந்திரன், நிக்ருதி, முஷ்டிகன் ஆகியோரிடம் பலராமனுடன் மோதுமாறு ஆணையிட்டான்[1].(8) கிருஷ்ணனுடன் கவனமாகப் போரிடுமாறு ஏற்கனவே கம்ஸன் சாணூரனுக்கு ஆணையிட்டிருந்தான். மீண்டும் அவ்வாறே ஆணையிடப்படவே அவன் கோபத்தில் கண்கள் சிவந்தவனாக நீருண்ட மேகம் போலப் போரிடச் சென்றான்.(9,10)
[1] இங்கிருக்கும் நிக்ருதி என்ற பெயருக்கு வேறு பொருள் இருக்க வேண்டும். சித்திரசாலை பதிப்பில் இந்த ஸ்லோகம், "கம்ஸன், வஞ்சம் நிறைந்தவனும், பலமிக்கவனும், மலை போன்றவனுமான ஆந்திர மல்லன் முஷ்டிகனிடமும் பலராமனுடன் போரிடுமாறு ஆணையிட்டான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் முஷ்டிகன் குறித்தோ, மூன்று மல்லர்களைக் குறித்தோ குறிப்பில்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "மலைக்கூட்டம் போன்று மஹாபலவானான முஷ்டிகனையும் பலதேவன் பொருட்டுக் கோபத்துடன் கட்டளையிட்டான்" என்றிருக்கிறது. இதே அத்தியாயத்தின் 17ம் ஸ்லோகத்தில் "ஆந்திர மல்லனும்" என்பது சாணூரைக் குறிப்பதாக இருக்கிறது. 18ம் ஸ்லோகத்தில் கிருஷ்ணன் குறிப்பிடும் "ஆந்திரன்" சாணூரனாகவே இருக்க வேண்டும். 24ம் ஸ்லோகத்தில் கிருஷ்ணன், சாணூரனை "கருஷ மாகாணத்தில்" பிறந்தவன் என்று குறிப்பிடுகிறான். 52ம் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ள "ஆந்திர மல்லன்" என்பது தோசலனைக் குறிப்பிடுகிறது. 55ம் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ள "ஆந்திரனையும்" என்பதும், 56ம் சொல்லப்பட்டுள்ள "ஆந்திரனும்" என்பதும் முஷ்டிகனைக் குறிக்கின்றன. எனவே {சாணூரன், முஷ்டிகன், தோசலன் ஆகிய} மூவரும் ஈரீரு முறை "ஆந்திரன்" என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அதன் பிறகு, "அனைவரும் அமைதியாக இருப்பீராக" என்ற அரச அறிவிப்பு அனைத்துப் பக்கங்களிலும் அறிவிக்கப்பட்டதும், மொத்தக்கூட்டமும் அமைதியடைந்தது. அங்கே கூடியிருந்த யாதவர்கள்,(11) "இந்த மற்போரானது, ஆயுதமேதும் பயன்படுத்தக் கூடாததும், திறனும், பலமும் அவசியம் தேவைப்படுவதும், நடுவர்களைக் கொண்டதும், கோழைகள் பங்கேற்கக் கூடாததுமாக முதலில் படைப்பாளனால் {மற்போரை அறிமுகப்படுத்தியவனால்} அறிமுகப்படுத்தப்பட்டது.(12) இதில் பங்கேற்போர் (பங்கேற்கும் தரப்புகள்) தங்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும், அவர்கள் நீரால் தங்கள் களைப்பை அகற்றிக் கொள்ளலாம். மல்லர்கள் தங்கள் உடலை சாணத்தால் பூசிக் கொள்ள வேண்டும்.(13) இதில் ஒருவரோடு ஒருவர் மட்டுமே மோத வேண்டும், தரையில் கிடப்பவனுடன் அவ்வாறே தரையில் கிடந்து மற்றவன் மோத வேண்டும்; ஒருவன் எந்நிலையில் இருக்கிறானோ அதே நிலையிலேயே மற்றவன் போரிட வேண்டும்; இவ்வாறே நடுவர்கள் சொல்கிறார்கள்.(14) சிறுவனோ, இளைஞனோ, முதியவனோ, வலுவானவனோ, வலுவற்றவனோ எவராக இருப்பினும் அவனவன் காத்திருக்கும் பகுதிகளுக்குச் சென்று போட்டியின் நிபந்தனைகள் அறிவிக்கப்பட வேண்டும்.(15) வழிமுறை அறிந்த ஒருவன், எதிராளிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, தன் பலத்தையோ, திறனையோ வெளிப்படுத்தக்கூடாது என்று மற்போரின் வழிமுறைகளை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(16) இப்போது கிருஷ்ணனும் ஆந்திர மல்லனும் இந்த அரங்கத்தில் ஒருவரோடொருவர் மோதப் போகிறார்கள். கிருஷ்ணன் சின்னஞ்சிறுவனாக இருக்கிறான், ஆந்திரனோ முதியவனாக இருக்கிறான். இக்காரியத்தில் நாம் நீதியைத் தீர்மானிக்க வேண்டும்" என்றனர்.(17)
அப்போது சபைக்கு மத்தியில் பேரமளி எழுந்தபோது, குதித்தெழுந்த கோவிந்தன் {கிருஷ்ணன்}, "நான் சிறுவனே, ஆந்திரன் மலைபோன்ற பேருடல் கொண்டவனாக இருப்பினும், பலம்வாய்ந்த கரங்களைக் கொண்ட இந்த மல்லனுடன் நான் போரிட விரும்புகிறேன்.(18,19) சிறுவனாக இருந்தாலும் போர்விதிகள் எதையும் நான் மீற மாட்டேன், மல்லர்களின் கொள்கைகளில் ஒரு கறையாக ஒருபோதும் நான் அமைய மாட்டேன்.(20) சாணத்தையும், நீரையும், உடலில் பூசுவதற்குரிய பிற பொருட்களையும் பயன்படுத்துவது குறித்து மல்லர்களின் வழிமுறைகளில் விதிக்கப்பட்டுள்ள விதிகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.(21) தற்கட்டுப்பாடு, உளவுரம், ஆண்மை, உடற்பயிற்சி, நன்னடத்தை, பலம் ஆகியவற்றால் ஒருவன் வெற்றியை அடைகிறான் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.(22) இந்த மனிதனுடன் எனக்குப் பகையேதும் இல்லையெனினும் இவன் என்னிடம் அந்த உணர்வை உண்டாக்கப்போகிறான். எனவே இவனை வென்று நான் உலகுக்கு நிறைவளிக்கப் போகிறேன்.(23) பேருடல் படைத்த மல்லனான இந்தச் சாணூரன் கருஷ மாகாணத்தில் பிறந்தவனாவான். இவன் மல்லனாக இருப்பினும், இவனுடைய செயல்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.(24) இந்த அரங்கத்தில் செல்வாக்கை அடைய விரும்பும் இவன் மல்லர்கள் பலரை வீழ்த்திக் கொன்றதன் மூலம் மல்லர்களின் வழிமுறைகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.(25) போரில் ஆயுதங்களுடன் போரிடுவோரின் வெற்றி (எதிராளியின் ஆயுதங்களை) வெட்டி வீழ்த்துவதில் அடங்கியிருக்கிறது. அது போலவே மல்லனின் வெற்றி தன் எதிராளியை கீழே வீழ்த்துவதில் அடங்கியிருக்கிறது.(26) ஒருவன் போரில் வெற்றியடைவதன் மூலம் நித்திய புகழை அடைகிறான்; கொல்லப்பட்டால் தேவர்களின் உலகிற்குச் செல்கிறான்.(27) கொல்பவனும், கொல்லப்படுபவனுமாகிய இருவரும் போரில் ஒரே கதியையே அடைகின்றனர்; எனவே இது வாழ்வை முடிக்கும் {உயிரை வாங்கும்} போட்டி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது நல்லோரால் உயர்வாகப் பேசப்படுகிறது.(28) அதையும் தவிர, மல்லர்களின் இந்த வழியானது பலத்துக்கும், செயலுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. இறந்தவனுக்கான சொர்க்கம் எங்கே? வென்றவனுக்கான மகிமை எங்கே[2]?(29) கல்வியில் செருக்குக் கொண்ட மூட மன்னன் தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்காகத் தன் மனிதர்களைக் கொண்டே சில மல்லர்களுக்கு மரணத்தைக் கொண்டு வருகிறான். இங்கே (இயக்குபவனும், செயல்படுபவனும் செய்த) பாவங்கள் அழிகின்றன" என்றான் {கிருஷ்ணன்}.(30)
[2] "இதன் பொருள்: மற்போரென்பது வெற்றுக் கேளிக்கை என்பதால் இந்தப் போட்டியில் ஒருவன் தன் சக்தியை வெளிப்படுத்துவதுமில்லை, நற்செயலேதும் செய்வதுமில்லை. எனவே, கொல்லப்படுபவன் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை, வெல்பவனும் மகிமையை அடைவதில்லை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
அவன் இதைச் சொன்ன உடனேயே காட்டில் போரிடும் யானைகள் இரண்டைப் போல அவர்களிருவருக்கிடையே ஒரு பயங்கரப் போர் நேரிட்டது.(31) ஒருவரையொருவர் பின்னிக் கொண்டும், பற்றிக் கொண்டும், எதிராளியை விட்டும், பூமியில் தூக்கி எறிந்தும், காற்றில் உயரத்தூக்கியும் என அவர்கள் பல்வேறு வழிகளில் மற்போர் செய்தனர்.(32) ஒருவரையொருவர் இழுத்தும், பின்னுக்குத் தள்ளியும், முஷ்டிகள், கைமூட்டுகள், முன்னங்கைகள், கால்மூட்டுகள் ஆகியவற்றால் தாக்கியும், கைகளை ஒன்றோடொன்று பிணைத்துக் கொண்டும், உதைத்தும்,(33,34) அவ்விரு வீரர்களும், கற்களால் தாக்குவதைப் போன்று கடினமாகக் குத்தியும், தங்கள் தலைகளை அசைத்துக் கொண்டும், ஆயுதமில்லாத அந்தப் பயங்கரப் போட்டியில் பாறைகளின் சாரங்களைப் போலப் போரிட்டனர்.(35) அந்த வீரர்களின் கை பலத்தைக் கண்டு அந்தச் சபையில் பேராரவாரம் எழுந்தது. அந்தப் பாராட்டுப் பேரொலியால் மக்களின் மனம் ஈர்க்கப்பட்டது.(36) கூடங்களில் இருந்த மக்கள் (இந்த அருஞ்செயலைக் குறித்து) {'பலே பலே' என்று} உயர்வாகப் பேசினார்கள்.
அப்போது வியர்வையால் முகம் நனைந்த கம்ஸன் தன் பார்வைகளைக் கிருஷ்ணன் மீது செலுத்திக் கொண்டே தன் வலக்கரத்தால் தூரியங்கள் இசைக்கப்படுவதை நிறுத்த செய்தான்.(37) அவனது எக்காளங்களும் தூரியங்களும் இசைக்கப்படுவது நின்றாலும், வானத்தில் தேவர்கள் தங்கள் இசைக்கருவிகளை இசைத்தனர். தாமரைக் கண்ணனான ரிஷிகேசன் போரில் ஈடுபட்டபோது அனைத்துப்பக்கங்களிலும் எக்காளங்கள் முழங்கின.(38,39) விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும், காட்சியில் இருந்து மறைந்திருந்தவர்களுமான வித்யாதரர்களும், தேவர்களும் கிருஷ்ணனின் வெற்றியை விரும்பி வேண்டத் தொடங்கினர்.(40)
ஏழு ரிஷிகளும் வானத்தில் இருந்து "ஓ! கிருஷ்ணா, மல்லன் சாணூரனின் வடிவில் இருக்கும் தானவனைக் வெல்வாயாக" என்று சொன்னார்கள்.(41) சாணூரனுடன் நீண்ட நேரம் மற்போர் புரிந்த தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, கம்ஸனின் மரணத்தை அறிந்தவனாக அவனுடைய பலத்தைக் கவர்ந்தான்.(42) அப்போது பூமி நடுங்கியது, கூடங்கள் உருண்டன, கம்ஸனின் மகுடத்தில் இருந்த மிகச் சிறந்த ரத்தினம் நழுவி விழுந்தது.(43) அதன் பிறகு மீண்டு வந்த சாணூரனை மீண்டும் தன் கரங்களினால் கீழே தள்ளி, தன் கால் மூட்டுகளால் அவனது மார்பை நசுக்கி, தன் முஷ்டியால் அவனது தலையைத் தாக்கினான்.(44) இதனால் கண்ணீரிலும், கருதியிலும் நிறைந்திருந்த அவனது கண்கள் தங்கள் குழிகளில் இருந்து பிதுங்கி வெளியே வந்து பொன்மணிகளைப் போலத் தொங்கிக் கொண்டிருந்தன.(45) இவ்வாறு கண்கள் பிதுங்கிய சாணூரன், தன் பலத்தையும், உயிரையும் இழந்தவனாக அந்த அரங்கத்தில் கிடந்தான்.(46) மல்லன் சாணூரனின் உயிரற்ற உடலுடன் கூடிய அந்தப் பெரிய அரங்கம் ஒரு மலையால் தடுக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(47)
பலத்தில் செருக்குண்ட சாணூரன் கொல்லப்பட்ட பிறகு ரோஹிணியின் மகன் {பலராமன்} முஷ்டிகனுடனும், கிருஷ்ணன் தோசலனுடனும் {தோசலகனுடனும்} மீண்டும் போரிட்டனர்.(48) இந்த முதல் அறைகூவலில் கோபமடைந்த அந்த மல்லர்கள் இருவரும் விதியால் உந்தப்பட்டவர்களைப் போல ராமனையும் {பலராமனையும்}, கிருஷ்ணனையும் சந்தித்தனர்.(49) அவர்கள் காற்றின் வேகத்தால் தூக்கி எறியப்பட்டவர்களாக அந்த அரங்கில் குதிக்கவும், பாயவும் தொடங்கினர். பலம்வாய்ந்தவனான கிருஷ்ணன், மலைச்சிகரம் போலப் பெரிதாக இருந்த தோசலனைத் தூக்கி நூறு முறை சுழற்றி பூமியில் அடித்தான்.(50) அந்தப் பலம்வாய்ந்த மல்லன், கிருஷ்ணனால் தாக்கப்பட்டதும், அவனுடைய வாயில் இருந்து ஏராளமான குருதி வெளிப்பட்டது. அவன் மரணத்தருவாயில் இருந்தான்.(51) பல்வேறு மண்டலகதிகளை வெளிப்படுத்தி முஷ்டிகனுடனும், ஆந்திர மல்லனுடனும் {தோசலனுடனும்} அவர்கள் போரிட்டுக் கொண்டிருந்த போது, சுறுசுறுப்பானவனும், பலம்வாய்ந்தவனுமான பலதேவன், இடியுடன் கூடிய மேகத்திற்கு ஒப்பான தன் முஷ்டியால் அவனது {முஷ்டிகனின்} தலையைத் தாக்கினான்.(52,53) இதனால் அவனது மூளை வெளிப்பட்டுக் கண்கள் பிதுங்கின. அவன் பூமியில் விழுந்தபோது பெருங்கூட்டம் பேராரவாரம் செய்தது.(54) இவ்வாறு தோசலனையும், ஆந்திரனையும் கொன்ற கிருஷ்ணனும், ஸங்கர்ஷணனும், கண்கள் சிவந்த கோபத்துடன் அந்த அரங்கில் குதிக்கவும், பாயவும் தொடங்கினர்.(55) பெரும் மல்லர்களான ஆந்திரனும், சாணூரனும் கொல்லப்பட்ட நேரத்தில், இரக்கமற்ற தோற்றத்தைக் கொண்ட அந்த அரங்கம் மல்லர்களற்றதானது.(56)
பார்வையாளர்களாக இருந்த நந்தன் தலைமையிலான கோபர்கள் அங்கங்கள் நடுங்க அங்கே காத்துக் கொண்டிருந்தனர்.(57) அப்போது தேவகி, நடுக்கத்துடனும், பால் சுரந்த முலைகளின் வேதனையுடனும், ஆனந்தக் கண்ணீரில் நீராடிய கண்களுடனும் கிருஷ்ணனைப் பார்க்கத் தொடங்கினாள்.(58) வஸுதேவன், கிருஷ்ணனைக் கண்டதால் கண்ணீரில் கலங்கிய கண்களுடன் கூடியவனாகத் தன் முதுமையைக் கைவிட்டு இளைஞனானான்.(59) கணிகையர் தங்கள் விழிகளில் உள்ள கருவண்டுப் பார்வைகளால் கிருஷ்ணனின் தாமரை முகத்தைப் பருகிக் கொண்டிருந்தனர்.(60) கிருஷ்ணனைக் கண்டதும் கம்ஸனின் முகத்தில் வியர்வைத் துளிகளும், புருவங்களுக்கிடையில் கோபமும் தென்பட்டன.(61) கேசவனை அழிக்கும் புகை போன்ற எண்ணங்களுடனும், கோபத்துடனும் வீசிய மூச்சுக்காற்றாலும், மனக்கவலையென்ற நெருப்பாலும் அவனது {கம்ஸனின்} இதயம் எரிந்து கொண்டிருந்தது.(62) கோபத்தில் அவனது உதடுகள் நடுங்கின, நெற்றிச் சுருக்கங்களை வியர்வை மறைத்ததால் அவனது உடல் செவ்வண்ண சூரியன் போலத் தெரிந்தது.(63) சூரியக் கதிர்களால் தாக்கப்படும்போது மரத்தில் இருந்து விழும் பனித்துளிகளைப் போலக் கோபத்தால் சிவந்த அவனது முகத்தில் இருந்து விழும் வியர்வைத்துளிகள் தெரிந்தன.(64)
இவ்வாறு பெருங்கோபமடைந்த கம்ஸன், சில பயங்கரர்களிடம் {காலாட்படையினரிடம்} ஓர் அறிவிப்பை வெளியிடும் வகையில், "கடுமுகம் கொண்டவர்களும், காடுலாவும் இடைச்சிறுவர்களுமான இந்தப் பாவிகள் இருவரையும் அரங்கில் இருந்து வெளியேற்றுங்கள். நான் இவர்களைக் காண விரும்பவில்லை. கோபர்களில் {ஆயர்களில்} எவருக்கும் என் ஆட்சிப் பகுதிக்குள் வாழும் தகுதியில்லை.(65,66) இந்த நந்தகோபன் எனக்குத் தீங்கிழைக்க விரும்பும் தீயவனாவான். எனவே, இரும்புச் சங்கிலிகளையும், தளைகளையும் கொண்டு இவனைப் பிணைப்பீராக.(67) என் உறவினனாக இருப்பினும் வஸுதேவன் தீமைமிக்கவனாக இருக்கிறான். எனவே, முதியோர்களைத் தண்டிக்கத் தகாத வகையில் இவனை இன்றே தண்டிப்பீராக.(68) நீங்கள் காணும் அற்பர்களான இந்தக் கோபர்கள் அனைவரும் கிருஷ்ணனிடம் அர்ப்பணிப்புக் கொண்டவர்கள். எனவே, இவர்களிடம் இருந்து பசுக்களையும், பிற வளங்களையும் அபகரிப்பீராக" என்றான்.(69)
கடுமொழி கொண்ட கம்ஸன் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டபோது, ஆற்றலையே வாய்மையாகக் கொண்ட வாஸுதேவன் {கிருஷ்ணன்}, கோபத்தில் விரிந்த விழிகளுடன் அவனை {கம்ஸனைப்} பார்த்தான்.(70) அவன் {கிருஷ்ணன்}, தன் தந்தையான வஸுதேவனும், நந்தனும் அவமதிக்கப்படுவதையும், தன் உறவினர்கள் துயருறுவதையும், நனவற்றவளான தேவகியையும் கண்டு பெருங்கோபம் அடைந்தான்.(71) நீண்ட கரம் கொண்டவனும், சிங்கத்தைப் போன்ற வேகம் கொண்டவனும், நித்தியனுமான கிருஷ்ணன், கம்ஸனைக் கொல்வதற்காக அவன் இருந்த கூடத்திற்கு ஏற விரும்பி காற்றால் செலுத்தப்படும் மேகத்தைப் போல அவனது முன்பு குதிக்கத் தொடங்கினான்.(72,73) அவன் அரங்கத்தில் இருந்து குதித்த போது, கம்ஸனின் தரப்பில் இருந்த குடிமக்கள் மட்டுமே அவனைக் கண்டனர்.(74) விதியால் முழுமையாகப் பீடிக்கப்பட்ட கம்ஸன், கோவிந்தனை வானத்தில் இருந்து வந்தவனாகக் கருதினான்.(75)
கிருஷ்ணன், பரிகம் போன்ற தன் கரங்களை நீட்டி கம்ஸனின் மயிரைப் பற்றி அரங்கத்திற்கு இழுத்து வந்தான்.(76) கிருஷ்ணனின் கைகளால் தாக்கப்பட்டதும், வைரங்கள் பதிக்கப்பட்டதுமான அவனது பொன்மகுடம், அவனது தலையில் இருந்து பூமியில் விழுந்தது.(77) வாஸுதேவன் {கிருஷ்ணன்}, கம்ஸனின் தலைமயிரைப் பற்றிய போது, அவன் அசைவற்றவனாகவும், துன்பத்தில் மூழ்கிக் கலக்கமடைந்தவனாகவும் உயிரற்றவனைப் போல மூச்சு விடத் தொடங்கினான். அவனால் கிருஷ்ணனின் முகத்தையும் காண முடியவில்லை.(78) அவனது காதுகள் குண்டலங்களை இழந்தன, அவனது ஆரம் பிளந்தது, அவனது கரங்கள் நீண்டு வளர்ந்தன, ஆபரணங்களையும், மேல்துணியையும் அவனது உடல் இழந்தது.(79,80) இவ்வாறு தெய்வீகப் பிரகாசத்தால் பீடிக்கப்பட்ட கம்ஸனின் முகம் கலக்கமடைந்தது, அவன் பல முயற்சிகளையும் செய்தான்.(81)
கேசவன், துயருறத் தகுந்த கம்ஸனின் மயிரைப் பிடித்துக் கூடத்தில் இருந்து அரங்கத்திற்குப் பலவந்தமாக இழுக்கத் தொடங்கினான்.(82) பெரும்பிரகாசம் கொண்ட அந்தப் போஜ மன்னனின் {கம்ஸனின்} உடல் கிருஷ்ணனால் இவ்வாறு இழுக்கப்பட்டதால் அந்த அரங்கத்தில் ஓர் அகழி உண்டானது.(83) இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணன், கம்ஸன் தன் இறுதி மூச்சைவிட்ட போது அவனது உடலை வீசி எறிந்தான்.(84) ஆடம்பரங்களுக்குப் பழக்கப்பட்ட கம்ஸனின் உடல் இவ்வாறே தாக்கப்பட்டு, தரையில் நசுக்கப்பட்டு, புழுதியால் மறைக்கப்பட்டது.(85) மூடிய அவனது விழிகளும், மகுடமில்லாமல் இருண்ட அவனது முகமும் இலைகளற்ற தாமரையைப் போலத் தங்கள் அழகை இழந்தன.(86) கம்ஸன், போரில் கொல்லப்படாமலும், கணைகளால் உடல் காயம் படாமலும், மயிர் பற்றி இழுத்துக் கொல்லப்பட்டதால், வீரர்களின் பாதையில் இருந்து நழுவினான்.(87) கம்ஸனின் தசையைச் சிதைத்து, அவனது உயிரைப் பறித்த கேசவனின் நக அடையாளங்கள் அவனது மேனியங்கும் திடீரெனத் தென்பட்டன.(88)
இவ்வாறு கம்ஸனைக் கொன்று, பகை முட்களை அகற்றி, மகிழ்ச்சியில் இரண்டு மடங்காகப் பிரகாசித்த தாமரைக் கண் கிருஷ்ணன், முதலில் {தன் தந்தையான} வஸுதேவனின் பாதங்களைத் தீண்டினான். யதுவின் வழித்தோன்றலான அவன், அதன் பிறகு தன் தாயின் {தேவகியின்} பாதங்களில் விழுந்து வணங்கினான். அவளும் ஆனந்தக் கண்ணீர் தாரைகளால் அவனை நனைத்தாள்.(89,90) தன்னொளியில் பிரகாசிப்பவனான மாதவன் {கிருஷ்ணன்}, வயது மற்றும் தகுதியின் அடிப்படையில் யாதவர்கள் அனைவரின் நலத்தையும் {அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக} விசாரித்தான்.(91) அப்போது அற ஆன்மாவான பலதேவன் {பலராமன்}, செருக்குமிக்கவனும், ஊர்ஜிதன் {ஸுநாமன்} என்ற பெயரைக் கொண்டவனுமான கம்ஸனின் தம்பியைக் கொன்றான்[3].(92) விரஜத்தில் {கோகுலத்தில்} வளர்க்கப்பட்ட அந்த வீரர்கள் இருவரும், இவ்வாறு தங்கள் எதிரிகளை வென்று, கோபத்தை அடக்கிக் கொண்டு, தங்கள் தந்தையின் {வஸுதேவனின்} வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்" என்றார் {வைசம்பாயனர்}.(93)
[3] சித்திரசாலை பதிப்பில், "அற ஆன்மா கொண்ட பலதேவன், பலமிக்கவனும், ஸுநாமன் என்ற பெயரைக் கொண்டவனுமான கம்ஸனின் சகோதரனைப் பலவந்தமாகத் தன் கைகளால் வீழ்த்தினான் {கொன்றான்}" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கம்ஸனுடைய சகோதரன் ஸுநாமன் என்ற பெயரைக் கொண்டவனாவான். தர்மத்தையே ஆன்மாவாகக் கொண்ட பலதேவன் தன் கைகளைப் பயன்படுத்தி அவனை வீழ்த்தினான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "தர்மாத்மாவான பலராமனும், கம்ஸனின் பலமுற்ற ஸஹோதரன் ஸுநாமாவை கைகளாலேயே விரைவில் கொன்றான்" என்றிருக்கிறது.
விஷ்ணு பர்வம் பகுதி – 85 – 030ல் உள்ள சுலோகங்கள் : 93
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |