(ஆயு வம்ச கதனம்)
An account of Raji and his sons | Harivamsa-Parva-Chapter-28 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : நஹுஷனின் தம்பியாகப் பிறந்த ரஜி; ரஜிக்குப் பிறந்த ஐநூறு ராஜேயர்கள்; தேவர்களின் தரப்பில் தளபதியாக இருந்து அசுரர்களை அழித்து தேவலோக இந்திரனாக ஆன ரஜி; ரஜிக்குப் பிறகு ராஜேயர்கள் செய்த கொடுங்கோன்மை; ராஜேயர்களை வீழ்த்த வழி செய்த பிருஹஸ்பதி; இந்திரன் மீண்டும் தேவலோக அரசை அடைந்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, {புரூரவனின் மூத்த மகனான} ஆயுவுக்கு வீரமிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் ஸ்வர்பானுவின் மகளால் பெறப்பட்டனர்.(1) அவர்களில் நஹுஷன் முதல்வன், அவனுக்கு அடுத்தவன் விருத்தாசர்மன் ஆவர். அதன்பிறகு, ரம்பன் {ரம்பு}, ரஜி மற்றும் அனேனன் ஆகியோர் பிறந்தனர்.(2) ரஜி, ராஜேயர்கள் என்ற பெயரில் பூமியில் அறியப்பட்ட ஐநூறு மகன்களைப் பெற்றான். அந்த க்ஷத்திரியர்கள் இந்திரனையும் பீதி கொள்ளச் செய்தார்கள்.(3) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான பயங்கரப் போர் நடந்த போது, அவர்கள் {தேவாசுரர்கள்} பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, "ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, எங்களுக்கு மத்தியில் வெற்றியால் மகுடம் சூடப்போவது யார்? உம்மிடம் இருந்து நாங்கள் அதைக் கேட்க விரும்புகிறோம்" என்றனர்.(4,5)
பிரம்மன், "போரில் யார் தரப்பில் இருந்து மன்னன் ரஜி ஆயுதம் எடுப்பானோ அவர்களே உண்மையில் மூவுலகங்களையும் வெல்வார்கள்.(6) எங்கே ரஜி இருக்கிறானோ, அங்கே பொறுமை இருக்கிறது; மேலும் எங்கே பொறுமை ஆட்சி செலுத்துகிறதோ அங்கே செழிப்பிருக்கும். எங்கே பொறுமையும், செழிப்பும் இருக்குமோ அங்கே அறமும் {தர்மமும்}, வெற்றியும் {ஜயமும்} இருக்கும்" என்றான்.(7)
ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, பெரும்பாட்டனிடம் கேட்டத்தில் நிறைவடைந்த தேவர்களும், அசுரர்களும், வெற்றியை ஈட்டும் நோக்குடன் ரஜியைத் தங்கள் தளபதியாக்கச் சென்றர்.(8) ரஜி, ஸ்வர்பானுவின் பேரனும், அவனது மகளான பிரபையிடம் பெறப்பட்டவனும் ஆவான். பெரும்பலம் நிறைந்த அந்த மன்னன், சோமனின் குலத்தைப் பெருகச் செய்தான்.(9) மகிழ்ச்சி நிறந்த மனங்களுடன் கூடிய தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் ரஜியிடம், "உன் வெற்றியை அடைவதற்காக மிகச் சிறந்த வில்லையும் கணைகளையும் எடுப்பாயாக" என்றனர்.(10)
அப்போது, மன்னன் ரஜி, தன் சொந்த விருப்பத்தைத் தேவர்கள் மற்றும் அசுரர்களின் விருப்பத்தில் அடையாளம் கண்டு, தன் மகிமையை வெளிப்படுத்தும் வகையில் அவர்களிடம்,(11) "ஓ! இந்திரா, ஓ! தேவர்களே, போரில் அசுரர்களை வென்ற பிறகு இந்திரனின் உயர்ந்த நிலைய நான் அடைவேனெனில் மட்டுமே நான் போரில் ஈடுபடுவேன்" என்றான்.(12)
தேவர்கள் முதலில் மகிழ்ந்தவர்களாக, "ஓ! மன்னா, நீ எதை விரும்புகிறாயோ அது நடக்கும்; உன் ஆசை நிறைவேறும்" என்றனர்.(13)
மன்னன் ரஜி, தேவர்களின் சொற்களைக் கேட்டு, தேவர்களிடம் தான் பேசியதை முன்னணி அசுரர்களுக்குச் சொன்னான்.(14) அதைத் தங்கள் நலனுக்கு உகந்ததாகக் கருதிய செருக்கு வாய்ந்த தானவர்கள், பெருங்கோபத்துடன் அந்த மன்னனுக்கு மறுமொழி கூறும் வகையில்,(15) "எங்கள் தலைவனான பிரஹ்லாதனின் வெற்றியையே நாங்கள் நாடுகிறோம். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அரசை அடைவதற்காகத் தேவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றுவாயாக" என்றனர்.(16)
"அவ்வாறு ஆகட்டும்" என்று சொன்ன அவன் தேவர்களால் (தங்கள் தளபதியாக) நியமிக்கப்பட்டான். பிறகு, இந்திரனாகும் உடன்படிக்கையில் நுழைந்த மன்னன், வஜ்ரதாரியால் கொல்ல இயலாத தானவர்கள் அனைவரையும் கொன்றான்.(17) பேரழகு வாய்ந்தவனும், பலம் நிறைந்தவனும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனுமான மன்னன் ரஜி, தானவர்கள் அனைவரையும் அழித்து, தேவர்கள் இழந்த செழிப்பை மீட்டான்.(18)
அப்போது தேவர்கள் அனைவருடன் கூடிய சதக்ரது {இந்திரன்}[1], ரஜியிடம், "நான் ரஜியின் மகன்" என்றான். மேலும் அவன் அவனிடம், "ஓ! ஐயா, உண்மையில் நீ உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவனானாய். இந்திரனாகிய நான், உன் மகனானேன், மேலும் இந்தச் செயலின் மூலம் நான் புகழடைவேன்" என்றான்.(19,20)
[1] "நூறு வேள்விகளைச் செய்தவன் என்ற பொருள் இந்திரனுடைய மற்றொரு பெயரிது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
மன்னன் ரஜி, சதக்ரதுவின் சொற்களைக் கேட்டும், அவனுடைய மாயையால் பீடிக்கப்பட்டும் மகிழ்ச்சியாக அந்தத் தேவர்களின் தலைவனிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்றான்.(21) தேவனைப் போன்ற அந்த மன்னன் சொர்க்கத்திற்கு உயர்ந்ததும், மூதாதையரின் உடைமைகள் மகன்களுக்கு மத்தியில் நிகராகப் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையைப் பின்பற்றி, அவனுடைய மகன்கள் {ரஜியின் மகன்கள்} தேவர்களின் தலைவனுடைய {இந்திரனின்} அரசைக் கைப்பற்றினர்.(22) ரஜியின் ஐநூறு மகன்களும், ஒரே நேரத்தில் திர்விஷ்டபத்தையும், இந்திரனின் தெய்வீக அரசையும் {தேவலோகத்தையும்} தாக்கினர்.(23)
தன்னரசையும், வேள்விக்காணிக்கைகளில் பங்கையும் இழந்த தேவர்களின் மன்னன் {இந்திரன்}, பல ஆண்டுகள் கடந்ததும் மிகப் பலவீனமானான். அப்போது அவன் பிருஹஸ்பதியிடம், "ஓ! பிரம்மரிஷியே, இலந்தைக் கனியளவு கனமுள்ள தெளிந்த நெய்யை ஏற்பாடு செய்வீராக. அதனால் உண்டாகும் பலத்தைக் கொண்டு என்னால் உயிர்வாழ முடியும்.(24,25) ஓ! தலைவா, என் அரசை அபகரித்துக் கொண்ட ரஜியின் மகன்கள் {ராஜேயர்கள்} என்னை மெலியச் செய்து, கவனமற்றவனாகவும், பதவி மற்றும் சக்தியை இழந்தவனாகவும், பலவீனமானவனாகவும், அறிவற்றவனாகவும் ஆக்கிவிட்டனர்" என்றான்.(26)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "ஓ! பாபமற்றவனே, என்னிடம் இதை நீ முன்பே சொல்லியிருந்தால், உன் நல்வாழ்வுக்கு எதிரான நியாயமற்ற காரியத்தை நான் செய்திருக்க வேண்டியிராது.(27) எனினும், ஓ! தேவர்களின் மன்னா, உன் நன்மைக்காக நிச்சயம் நான் முயற்சி செய்வேன், விரைவில் உன் அரசையும், வேள்விக்காணிக்கைகளில் உனக்குரிய பங்கையும் மீண்டும் நீ பெறுவாய்.(28) ஓ! குழந்தாய், நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன், நீ மனங்கலங்காதே" என்றார். அதன் பிறகு அவர் தேவர்களின் மன்னனுடைய சக்தி அதிகரிக்கும் வகையில் எதையோ செய்தார்.(29)
இருபிறப்பாளர்களில் முதன்மையான அவர் {பிருஹஸ்பதி}, அவர்களுக்கு (ரஜியின் மகன்களுக்குப்) புத்திப் பிறழ்வை ஏற்படுத்தினார். அவர் {பிருஹஸ்பதி} இந்நோக்கத்திற்காக, தர்க்கம் குறித்த படைப்புகள் அனைத்திலும் சிறந்ததும், அறத்திற்கு எதிராகத் தாக்கும் முறைகள் குறித்ததும், நாத்திகம் குறித்ததும், பக்தியற்றவர்களால் பெரிதும் விரும்பப்படுவதுமான ஓர் ஆய்வுரையை எழுதினார். அறத்தையே உயர்ந்ததாக (வாழ்வின் கதியாகக்) கருதுவோர், இவ்வமைப்புக்கு உடன்படுவதில்லை.(30,31) பிருஹஸ்பதியால் எழுதப்பட்ட ஆய்வின் உள்ளடக்கத்தைக் கேட்டவர்களும், அறியாமை கொண்டவர்களுமான ரஜியின் மகன்கள் தர்மசாஸ்திரங்களின் முந்தைய படைப்புகளில் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்த {குதர்க்கம் செய்யத்} தொடங்கினர்.(32) அவர்கள் தங்கள் ஆசானின் நாத்திக அமைப்பையே உயர்வாக மதிக்கத் தொடங்கினர். அறமற்ற இந்தச் செயல்பாட்டினால் அந்தப் பாவிகள் அழிவை அடைந்தனர்[2].(33)
[2] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "பிருஹஸ்பதி, இந்திரனின் மகத்துவத்தை மீட்டெடுப்பதற்காக, மன்னன் ரஜியின் மகன்களுக்கு மூளைச் சலவை செய்யும் பணியைத் தொடங்கினார். கடவுளற்ற தன்மை குறித்த கருத்துகள்; இதுவரை நிலவி வந்த தர்மத்திற்குப் பகையான விளக்கங்கள்; வேண்டுமென்றே முரண்படும் வகையிலான குதர்க்கங்கள் ஆகியவற்றை அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். பிருஹஸ்பதியினால் அமைக்கப்பட்ட இலாபகரமான கருத்துகளால் வெல்லப்பட்ட அந்த அரைகுறைகள், புதிய நற்செய்தியை உறுதிசெய்யத் தொடங்கி, தர்மம் தொடர்பான வழக்கமான சாத்திரங்களை முறையாக வெறுத்தனர். கடமை தவறியவர்களான அவர்கள், கட்டுப்பாடற்றவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களாகவும் தாழ்ந்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர் {பிருஹஸ்பதி}, இந்திரனின் சக்தி அதிகரிக்கும் வகையில் செயல்பட்டார். முனிவர்களில் உயர்ந்தவரான அவர் அவர்களின் {ரஜியின் மகன்களுடைய} மனங்களைக் குழப்பும் வகையில் செயல்பட்டார். அவர்கள் வஞ்சிக்கப்பட்டுக் கோபத்தால் வெறிகொண்டனர். அவர்கள் தர்மத்திற்கு எதிராகத் திரும்பினர்" என்றிருக்கிறது.
தேவர்களின் மன்னன், அடைதற்கு மிகக் கடினமான மூவுலகங்களின் அரசைப் பிருஹஸ்பதியின் உதவியினால் அடைந்து பெரும் நிறைவடைந்தான்.(34) (மன்னன் ரஜியின்) மகன்கள், கோபத்தால் வெறியடைந்து, அறமில்லாதவர்களாகவும், மூடர்களாகவும் ஆனார்கள். அவர்கள் பிராமணர்களை வெறுக்கத் தொடங்கி, சக்தியையும், ஆற்றலையும் இழந்தனர். அதன் பேரில் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, கோபம் மற்றும் காமத்தால் பீடிக்கப்பட்டவர்களான ரஜியின் மகன்களை {ராஜேயர்களைக்} கொன்று தன் செழிப்பையும், அரசையும் மீட்டான்.(35,36) தேவர்களின் தலைவன் அரசை இழந்ததையும், அவனது பதவியும், உரிமையும் மீட்கப்பட்டதையும் எவன் கேட்பானோ, அவை குறித்து எவன் தியானிப்பானோ, அவன் ஒருபோதும் அடக்குமுறைக்கு {கொடுங்கோன்மைக்கு} உள்ளாகமாட்டன்" என்றார் {வைசம்பாயனர்}.(37)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 37
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |