Thursday 16 April 2020

இளையின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 27

(அமாவஸு வம்ச கீர்த்தனம்)

An account of Ila's family | Harivamsa-Parva-Chapter-27 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : புரூரவனின் வழியில் வந்த ஜஹ்னு; ஜாஹ்னவி ஆன கங்கை; ஜஹ்னுவின் வழியில் வந்த குசிகன்; காதி, சத்யவதி, ரிசீகரின் கதை; விஷ்வாமித்ரர் மற்றும் பரசுராமரின் பிறப்பு; விஷ்வாமித்ரரின் குலம்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இளையின் மகனுக்கு {புருரவனுக்கு}, தேவலோகத்தில் பிறந்த தேவர்களின் மகன்களுக்கு ஒப்பான உயரான்ம மகன்கள் இருந்தனர்.(1) அவர்கள் ஆயு, தீமான், அமாவஸு, அற ஆன்மவான விஷ்வாயு, சிருதாயு, திருடாயு, வலாயு {வனாயு}, சதாயு ஆகியோராவர். அவர்கள் அனைவரும் ஊர்வசியின் மகன்களாவர். பீமன் மற்றும் நக்னஜித் ஆகியோர் அமாவஸுவின் மகன்களாவர்.(2) மன்னன் காஞ்சனப்பிரபன் பீமனின் மகன் ஆவான். ஸர்வமேதமெனும் பெரும் வேள்வி செய்து கொண்டாடிய ஜஹ்னு என்ற பெயரைக் கொண்டவனைக் கேசினியிடம் மகனாகப் பெற்றவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனும், கல்விமானுமான ஸுஹோத்ரன் காஞ்சனனின் மகனாவான்.(3,4) கங்கை, தன் கணவனாகுமாறு அவனை {ஜஹ்னுவை} வேண்டினாலும், அவன் மறுத்ததால் அவள் அந்த யாகக் களத்தில் காட்டாறாகப் பாய்ந்தாள்.(5)ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இவ்வாறு கங்கையால் நீர் பெருகிய களத்தைக் கண்ட ஸுஹோத்ரன் மகன் ஜஹ்னு பெரும்கோபம் கொண்டவனாக அவளிடம்,(6) "நான் உன் நீரைக் குடித்துத் தீர்க்கப் போகிறேன், உன் ஆணவத்திற்கான தண்டனையை நீ இவ்வாறே அடையப் போகிறாய்" என்றான்.(7)

அந்த அரசமுனி {ஜஹ்னு}  கங்கையைக் குடித்து முடித்தான், பெரும் முனிவர்கள் ஜானவி என்ற பெயரில் அவளை {கங்கையை} அவனது மகளாக்கினர்.(8) ஜஹ்னு யுவனாஷ்வனின் மகளான காவேரியை மனைவியாக்கிக் கொண்டான். யுவாஷ்வனின் சாபம் காரணமாக, கங்கை தன் மேனியின் ஒரு பாதியைக் கொண்டு ஆறுகளில் முதன்மையானவளும், களங்கமற்றவளும், ஜஹ்னுவின் மனைவியுமான காவேரியை அமைத்தாள்.(9) ஜஹ்னு காவேரியிடம் ஸுஸஹன் {ஸுனஹன்} என்ற பெயரில் அன்புக்குரியவனும், பக்திமானுமான ஒரு மகனை பெற்றான். அவனுடைய {ஸுஸஹனின்} மகன் அஜகன் ஆவான்.(10) அஜகனின் மகன், வேட்டைப் பிரியனான மன்னன் பலாகாஷ்வன் ஆவான். அவனுடைய மகன் குசன் ஆவான்.(11) அவனுக்கு {குசனுக்கு} தேவர்களைப் போன்ற பிரகாசமிக்க நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் குசிகன், குசநாபன், குசாஷ்வன், மற்றும் மூர்த்திமான் ஆகியோராவர்.(12)

மன்னன் குசிகன் காட்டில் திரியும் பஹ்லவர்களுடன்[1] வளர்ந்து வந்தான். அவன் கடுந்தவங்களைச் செய்து இந்திரனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றான். {அவன் செய்த தவத்தின் மேல் கொண்ட} அச்சத்தால் தேவர்களின் மன்னன் அவனுடைய மகனாகப் பிறந்தான்.(13) அந்த அரசமுனி ஓராயிரம் வருடங்கள் கடுந்தவம் செய்த பிறகு சக்ரன் {இந்திரன்} அவனைக் கண்டான். ஆயிரங்கண்களைக் கொண்ட புரந்தரன் {இந்தரன்} அவனைக் கண்டு, அவன் சந்ததியைப் படைக்க வல்லவன் என்று நினைத்து அதன்படியே அவனுடைய சக்திக்குள் நுழைந்தான். தேவர்களின் மன்னனைக் குசிகன் மகனாகப் பெற்ற போது, அவன் குசிகனின் மனைவியான புருகுத்சனின் மகளிடம் {பௌருகுத்ஸியிடம்} பிறந்து மன்னன் காதியாக ஆனான்.(14-16)

[1] "ஸகரனால் தாடி வைத்துக் கொள்ளும்படி தீர்ப்பளிக்கப்பட்ட தரந்தாழ்ந்த க்ஷத்திரிய குலத்தினரில் ஒரு குலத்தின் பெயரிது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

உன்னதமானவளும், இனியவளுமான சத்யவதி காதியின் மகளானாள். அவன் அவளைப் பிருகுவின் மகனான ரிசீகருக்கு {மனைவியாகக்} கொடுத்தான்.(17) பிருகுவின் மகன் அவளிடம் நிறைவடைந்து, தன் மகன்களுக்கும், காதியின் மகன்களுக்குமான சருவை அமைத்தார்.(18) பிருகுவின் மகனான ரிசீகர், தன் மனைவியை அழைத்து, அவளிடம் {சத்யவதியிடம்}, "நீயும், உன் அன்னையும் இந்தச் சருவை உண்ண வேண்டும்.(19) (உன் தாயார்) க்ஷத்திரியர்களில் முதன்மையான ஒரு பிரகாசமான மகளைப் பெறுவாள். இவ்வுலில் வேறு எந்த க்ஷத்திரியனால் அவனை வீழ்த்த முடியாது. படைகளை நடத்தும் சாதியைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் அனைவரையும் அவன் அழிப்பான்.(20) ஓ! மங்கலக் காரிகையே, இந்தச் சரு உன் மகனை நுண்ணறிவுமிக்கவனாகவும், புலன்களைக் கட்டுப்படுத்திய ஒரு பெருந்தவசியாகவும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவனாகவும் ஆக்கும்" என்றார்.(21)

பிருகுவின் மகனான ரிசீகர் தன் மனைவியிடம் {சத்யவதியிடம்} இதைச் சொல்லிவிட்டு, எந்தத் தடங்கலும் இல்லாமல் கடுந்தவங்களைச் செய்வதற்குக் காடுகளுக்குள் நுழைந்தார்.(22) அந்தச் சமயத்தில் தன் குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்குப் பயணம் {தீர்த்த யாத்திரை} மேற்கொண்ட மன்னன் காதி, தன் மகளைக் காண்பதர்காக ரிசீகரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(23) முனிவரிடம் இருந்து பற்ற இரு குடுவைகளையும் எடுத்துக் கொண்ட சத்யவதி, பெரும் கவனத்துடன் அவற்றில் ஒன்றைத் தன் தாயாருக்குக் கொடுத்தாள்.(24) ஒரு தற்செயலான விபத்தில் அந்தத் தாயானவள் அறியாமலேயே தன் சொந்த சருவைத் தன் மகளுக்குக் கொடுத்து, தன் மகளுக்கெனக் கொடுக்கப்பட்டதைத் தானும் உண்டாள்[2].(25) அதன்பேரில் சத்யவதி க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொல்ல விதிக்கப்பட்ட பயங்கரக் குழந்தையைத் தன் கருவில் கொண்டாள். அப்போது அவள் பெரும் பிரகாசத்தில் ஒளிர்ந்தாள்.(26)

[2] மஹாபாரதம், வனபர்வம் பகுதி 115 லும்,  அநுசாஸன பர்வம் பகுதி 4 லும் இந்தக் கதை சில பல மாறுதல்களுடன் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சரு மாறுவது தற்செயலாக இல்லாமல், வேண்டுமென்றே மாற்றியதாகவும் இருக்கிறது.

இருபிறப்பாளர்களில் முதன்மையான ரிசீகர் அவளைக் கண்டும், தியானத்தின் மூலம் அனைத்தையும் அறிந்தும், தமது அழகிய மனைவியிடம்,(27) உன் அன்னையால் திணிக்கப்பட்ட சருவின் மாற்றத்தால் நீ மிகப் பயங்கரமான, இரக்கமற்ற மகனைப் பெற்றெடுப்பாய்.(28) உன் தம்பி, வேதங்கள் அனைத்தையும் அறிந்த பெருந்தவசியாகப் பிறப்பான். என் தபத்தின் மகிமையால் நான் வேதங்களில் உள்ள என் மொத்த அறிவையும் அவனுக்கு அளிக்கிறேன்" என்றார்.(29)

பெருமைமிக்கச் சத்யவதி, தன் கணவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவரிடம், "நான் உம்மிடம் இருந்து இத்தகைய பிராமணர்களில் இழிந்த மகனைப் பெற விரும்பவில்லை" என்று சொல்லி அவரைத் தணிவடையச் செய்ய முயற்சித்தாள்.

இவ்வாறு வேண்டிக் கொள்ளப்பட்ட அந்தத் தவசி {ரிசீகர்}, அவளிடம் {சத்யவதியிடம்},(30) "ஓ! மங்கலமான இல்லத்தரசியே, நானும் கூட அத்தகைய மகனைப் பெற விரும்பவில்லை. தந்தை மற்றும் தாயின் காரணமாகவே மகன் கொடூரனாகிறான்" என்றார்.

சத்யவதி மீண்டும் அவரிடம்,(31) "நீ விரும்பினால் உலகங்களையே படைக்க முடியும் எனும்போது ஒரு மகனைக் குறித்துச் சொல்வானேன். தன் புலன்களைக் கட்டுப்படுத்தவல்ல எளிய மனம் கொண்ட மகனையே நீர் எனக்குக் கொடுக்க வேண்டும்.(32) ஓ! தலைவா, ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதை உம்மால் செய்ய முடியாதென்றால், என் இதயத்தில் இருந்து ஒரு பேரப்பிள்ளை {அவ்வாறு} பிறக்கட்டும்" என்றாள்.(33)

அதன் பேரில் அவரது தவத்தின் மூலம் அவளிடம் தணிவடைந்த அவர், "ஓ! அழகியே, மகனுக்கும் பேரனுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை. எனவே, நீ சொன்னதே நடைபெறட்டும்" என்றார்.(34)

பிறகு சத்யவதி, எப்போதும் தம் புலன்களைக் கட்டுப்படுத்துபவரும், கடுந்தவங்களைச் செய்வதையே நோக்கமாகக் கொண்டவரும், ஜமதக்னி என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றாள்.(35) பிருகுவின் சரு மாற்றப்பட்டதன் காரணமாகவும், ருத்திரன் மற்றும் விஷ்ணுவின் (சக்திகள்) கலப்பினாலும், பின்னவனின் {விஷ்ணுவின்} சக்தியில் இருந்து ஜமதக்னி பிறந்தார். வாய்மை நிறைந்தவளும், பக்திமானுமான அந்தச் சத்யவதி, இப்போது கௌசிகி என்ற கொண்டாடப்படும் ஆறாகப் பாய்கிறாள்.(36,37)

ரேணுகன் என்ற பெயரில் இக்ஷ்வாகு குலத்தில் பலம்நிறைந்த மற்றொரு மன்னன் இருந்தான். பெருமைமிக்க ரேணுகை அவனது மகளே ஆவாள். பெருந்தவசியான ஜமதக்னி ரேணுகையிடம் {காமலியிடம்}, பயங்கரம் நிறைந்தவனும், பெரும் பிரகாசம் கொண்டவனும், க்ஷத்திரியர்க்ள அனைவரையும் அழிப்பவனும், அறிவியல்கள் அனைத்தின் ஆசானும், குறிப்பாக வில்லறிவியலில் ஆசானும், ராமன் {பரசுராமன்} என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைப் பெற்றாள்.(38-40) இவ்வாறு ரிசீகர் தமது தபத்தின் பலத்தால் சத்யவதியிடம், பெருஞ்சிறப்புமிக்கவரும், வேதங்களை அறிந்தோரில் முதன்மையனவருமான ஜமதக்னியைப் பெற்றார்.(41) அவரது இரண்டாவது மகன் சிசுனசேபஹரும், இளைய மகன் சுனஹபுச்சஹரும் ஆவர். குசிகனின் மகன் காதி, தபம் மற்றும் தற்பாட்டின் குணம் கொண்ட விஷ்வாமித்ரரைத் தன் மகனாகப் பெற்றான். அவர் {விஷ்வாமித்ரர்} பிராமண நிலையை அடைந்து முனிவரெழுவரில் ஒருவரானார்.(42,43)

அற ஆன்மாவான விஷ்வாமித்ரர், விஷ்வரதன் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். பிருகுவின் ஆதரவினால் அவர் {விஷ்வாமித்ரர்}, தம் குலத்தைப் பெருக்குபவராகக் கௌசிகனில் இருந்து பிறந்தார்.(44) தேவராதனும், பிறரும் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்ட விஷ்வாமித்ரரின் மகன்களாவர். அவர்களின் பெயர்களைக் கேட்பாயாக.(45) அவர் தேவஷ்ரவையிடம் கதியைப் பெற்றார், அவனிடம் {கதியிடம்} இருந்து காத்யானர்கள் {காத்யான கோத்ரத்தார்} தங்கள் பெயரைப் பெற்றனர். அவல் சாலாவதியிடம் ஹிரண்யாக்ஷனையும், ரேணுவிடம் {ரேணுமதியிடம்} ரேணுமானையும் பெற்றார். ஸாங்கிருதி, காலவர், முத்கலர் ஆகியோரும் நன்கறியப்பட்டவர்கள். மதுச்சந்தரும், ஜயன், தேவலன், அஷ்டகன், கச்சபன் மற்றும் புரிதன் {ஹாரிதன்} ஆகியோர் அனைவரும் விஷ்வாமித்ரரின் சந்ததியே ஆவர். குசிகனின் உயரான்ம வழித்தோன்றல்களின் குடும்பங்கள் நன்கறியப்பட்டவையாகும்.(46-48)

பாணிகள் {பாணினி}, பப்ருகள் {பப்ரவர்}, கரஜபார்கள் {த்யானாஜப்யர்} ஆகியோர் தேவராதனின் வழித்தோன்றல்களாவர். சாலங்காயனர்கள், பாஷ்கலர்கள், லோஹிதர்கள், யமதூதர்கள், காரீஷவர்கள், ஸௌஷ்ருதர்கள், ஸைந்தவாயனர்கள் ஆகியோர் அனைவரும் கௌசிகரின் வழித்தோன்றல்களாவர். தேவலர்கள், ரேணுக்கள் ஆகியோர் ரேணுகையின் பேரர்களாவர். யாஜ்ஞவல்கியர், அகமர்ஷணர், உடும்பரர் {ஔதும்பரர்}, அபிக்லானனர் {அபிஷ்ணர்}, தாரகாயனர், சுஞ்சுலர் ஆகியோர் ஸாலவதி மற்றும் ஹிரண்யக்ஷனின் பேரப்பிள்ளைகளாவர். ஸாங்கிருத்யர், காலவர், பாதராயணர் ஆகியோரும், பிறரும், நுண்ணறிவுமிக்க விஷ்வாமித்ரரின் சந்ததியராவர். இவ்வாறே கௌசிகரின் குடும்பம் {கௌசிக குலம்} அனைவராலும் நன்கறியப்பட்டதே. அவர்கள் தரத்துக்குத் தக்க திருமணம் செய்து கொண்டனர். பிராமணர்களுக்கு, க்ஷத்திரியர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு பூருவின் குடும்பம், பிராமணத் தவசியான வசிஷ்டரின் குடும்பம் மற்றும் கௌசிகர்களுக்கு இடையில் உள்ள தொடர்பும் எப்போதும் நன்கறியப்பட்டதே.(49-53)

விஷ்வாமித்ரரின் மகன்களில் சுனஹசேபர் மூத்தவனாவார். தவசிகளில் முதன்மையான பார்க்கவரும் கௌசிகரானார்.(54) விஷ்வாமித்ரரின் மகனான சுனஹசேபர், ஹரிதஷ்வனின் {ஹரிதஷ்வஸ்யனின்} வேள்வியில் கொல்லப்பட விதிக்கப்பட்டார்.(55) தேவர்கள் சுனஹசேபரை மீண்டும் விஷ்வாமித்ரரிடம் அவரைக் கொடுத்ததால் அதுமுதல் அவர் தேவராதர் என்று அழைக்கப்பட்டார்[3]. விஷ்வாமித்ரருக்கு, தேவராதரும் இன்னும் ஆறு பேரும் மகன்களாக இருந்தனர். அவருக்கு {விஷ்வாமித்ரருக்கு}, திருஷத்வதியிடம் அஷ்டகன் என்ற பெயரில் மகன் பிறந்தான். அஷ்டகனின் மகன் லௌஹி ஆவான். இவ்வாறே நான் {அமாவஸு வழி வந்த} ஜஹ்னுவின் குடும்பத்தை {குலத்தை} சொன்னேன், இனி ஆயுவின் சந்ததியைக் குறித்துச் சொல்லப் போகிறேன்" என்றார் {வைசம்பாயனர்}.(58)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "விஷ்வாமித்ரரின் மகன்களிடையே சுனஹசேபர் நற்பெயர் பெற்றிருந்தார். ரிசீகர் மற்றும் சத்தியவதியின் மூன்றாவது மகனாகப் பிராமணராக அவர் பிறந்திருந்தாலும், பின்வரும் நிகழ்வால், விஷ்வாமித்ரரின் மகனானதால் அவர் உண்மையிலே கௌசிக குலத்தவராக ஆகிவிட்டார். ஒரு முறை சுனஹசேபர் ஹரிதஷ்வஸ்யனின் {ஹரிஷ்சந்திரனின்} வேள்வியில் வேள்வி விலங்காகப் பயன்பட இருந்தார். ஆனால் விஷ்வாமித்ரர் சுனஹசேபருக்கு ஒரு ஸ்லோகத்தைக் கற்பித்ததன் மூலம் அதைத் தவிர்த்தார். அதன் பேரில் தேவர்கள் அவரை வேள்வி விலங்காவதில் இருந்து விடுவித்து விஷ்வாமித்ரரிடம் அளித்தனர். தேவர்களால் கொடுக்கப்பட்டதனாலேயே அவர் தேவராதர் என்று அழைக்கப்பட்டார்" என்றிருக்கிறது. இந்தப் பகுதி {அத்யாயம்} முழுவதும் பிபேக்திப்ராயின் பதிப்பில் இல்லை.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 58
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்