Monday 13 April 2020

ஏழு பிராமணர்கள் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 21

(பித்ரு கல்பம் - 5 | சிராத்த மஹாத்மியம்)

An account of the seven Brahmanas | Harivamsa-Parva-Chapter-21 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பரத்வாஜரின் மகன்களான ஏழு பிராமணர்கள் மறுபிறவியில் கௌசிகரின் மகன்களாகப் பிறந்தது; கர்க்கரின் பசுவைக் கொன்று உண்டு, புலி கொன்றுவிட்டதாக அவரிடம் பொய் சொன்னது; ஏழு பிறவிகளில் அவர்கள் அடைந்த வெவ்வேறு நிலைகள்; ஆறாம் பிறவியில் அவர்களில் ஒருவன் மன்னன் விப்ராஜனைப் போலச் செழிப்படைய விரும்பியது...

மார்க்கண்டேயர், "மக்கள் சிராத்தம் செய்கின்றனர், யோகிகளும் அதையே செய்கின்றனர். அதன் {சிராத்தம் செய்வதன் மூலம் உண்டாகும்} மிகச் சிறந்த பலன்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(1) ஓ! பரதனின் வழித்தோன்றலே {பீஷ்மா}, பிரம்மதத்தன் தன் ஏழாம் பிறவியில் எதை அடைந்தானோ, அதைக் கொண்டே அறம் குறித்த அறிவு படிப்படியாக ஏற்பட்டது.(2) ஓ! பாவங்களைக் களைந்தவனே, பெரும் நுண்ணறிவுமிக்கவனே, அறப் புறக்கணிப்புக்குப் பரிகாரமாக {பீடயம் - கோ ஹிம்ஸை - பசுவைக் கொல்லும் கொடுஞ்செயல் செய்ததனால் உண்ட கீழ்மைக்குப் பரிகாரமாக} சிராத்தம் செய்வதன் மூலம் பிராமணர்கள் பழங்காலத்தில் எதை அடைந்தனர் என்பதைக் கேட்பாயாக[1].(3)[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "சிருதம், தனம், குலம், புத்ரம், பசவாதி போன்ற, அஃதாவது, ஒருவன் கொண்ட கல்வி, செல்வம், சாதி, சந்ததி, கால்நடைகள் போன்ற உலகக் காரியங்கள் ஒருவன் செய்யும் சிராத்தத்தைப் பொருத்தே அடையக் கூடியவையாகும். மோட்சத்தைத் தரக்கூடிய யோகமும் சிராத்தத்தைப் பொருத்தே அடையக்கூடியதாகும். அதுபோல, சிராத்தம் செய்வதன் மூலம் நேரும் விளைவுகளைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன். மேலும் பிரம்மதத்தனும், அவனுடன் பிறந்தோரும் அடைந்த ஏழு பிறவிகளைக் குறித்தும் நான் சொல்லப் போகிறேன்; அதே போல, அவர்களின் மனங்கள் எவ்வாறு அறத்தில் இருந்து மெல்லப் பிறழ்ந்தன என்பதையும்; சிராத்தத்திற்காக அந்தப் பிராமணர்களால் ஒரு கொடுஞ்செயல் எவ்வாறு செய்யப்பட்டது என்பதையும் சொல்லப் போகிறேன். மேலும், அதனால் அவர்களுக்கு உண்டான விளைவுகளையும் நான் சொல்லப் போகிறேன். இந்த அத்தியாயங்களின் மையத்தைத் தொகுத்துக் கொள்ள நீ முயற்சிக்க வேண்டும். இதை ஒரு காலத்தில் மார்க்கண்டேயர் பீஷ்மரிடம் சொன்னார். அதையே இப்போது பீஷ்மர் தர்மராஜனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொல்லிக் கொண்டிருக்கிறார்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "பீடயம் - கோ ஹிம்ஸை - பசுவைக் கொல்லும் கொடுஞ்செயல்" என்றிருக்கிறது. மற்றொரு அடிக்குறிப்பில், "1932ல் ஹென்றி டேவிட் தொர்யோ Henry David Thoreau என்ற அமெரிக்கர், ஹரிவம்சத்தின் இந்த அத்தியாயத்தை "ஏழு பிராமணர்களின் புலம்பெயர்வு The Transmigration of the Seven Brahmans" என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்" என்றிருக்கிறது. அவருடைய மொழிபெயர்ப்பு https://www.sacred-texts.com/hin/tsb/index.htm என்ற சுட்டியில் இணையத்தில் கிடைக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஈமச்சடங்குகளின் மூலம் விளையும் உயர்ந்த பலன்களை நான் சொல்லப் போகிறேன். ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே, இதையே பிரம்மதத்தன் ஏழு பிறவிகளில் அடைந்தான். ஓ! மாசற்றவனே, அவர்கள் ஏற்கனவே தர்மத்தை ஒடுக்கியவர்களாக இருந்த போதிலும் ஈமச்சடங்குகளைச் செய்வதன் மூலம் விரைவில் அவர்களுடைய மனம் தர்மத்தை நோக்கித் திரும்பியது. அந்த ஏழு பிராமணர்களும் குருக்ஷேத்திரத்தில் தங்கள் மூதாதையருக்கான சடங்கைச் செய்வதில் ஈடுபட்டபோது செய்த ஓர் அதர்மச் செயலை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஏழு பிறவிகள் என்பன: பரத்வாஜர் (பரத்வாஜரின் மகன்கள்), கௌசிகர் (கௌசிகர் அல்லது விஷ்வாமித்ரரின் மகன்கள்), வியாதன் (வேடர்கள்), மிருகம் (விலங்குகள்), சக்ரவாகம் (பறவைகள்), ஹம்ஸம் (அன்னப்பறவைகள்), சிரோத்ரியம் (கல்விமானான பிராமணர்கள்)" என்றிருக்கிறது.

ஓ! மகனே, ஸனத்குமாரர் சுட்டிக் காட்டியதன் மூலம், குருக்ஷேத்திரக் களத்தில், பக்தியில்லாதவர்களான {அதர்மிகளான} ஏழு பிராமணர்கள், தங்கள் மூதாதையருக்கான அறச்சடங்குகளைச் செய்வதில் ஈடுபடுவதை நான் என் தெய்வீகப் பார்வையில் கண்டேன்.(4) கௌசிகரின் மகன்களும்[3], கர்க்கரின் சீடர்களுமான அந்த ஏழு பிராமணர்களும், தங்கள் செயல்களுக்குப் பொருத்தமாக வாக்துஷ்டர், க்ரோதனர், ஹிம்ஸ்ரர், பிசுனர், கவி, காஸ்ருமர், பித்ரூவர்தி என்ற பெயர்களைக் கொண்டவர்களாக இருந்தனர். தங்கள் தந்தை அவர்களைச் சபித்துவிட்டு விட்டுச் சென்ற பிறகு, அவர்கள் மணமாகா நிலையை {பிரம்மசரியத்தை} நோன்பாகக் கொண்டு கர்க்கரின் வீட்டில் வாழத் தொடங்கினர்.(5,6)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முதற்பிறவியில் இவர்கள் பரத்வாஜரின் மகன்களாவர், இரண்டாம் பிறப்பில் இவர்கள் கௌசிகர் அல்லது விஷ்வாமித்ரரின் மகன்களாவர். இங்கே குறிப்பிடப்படும் சம்பவம் நடந்த பிறகு இவர்கள் வேடர்களாகவும், விலங்குகளாகவும், சக்கரவாகப் பறவைகளாகவும், அன்னங்களாகவும் பிறந்து இறுதியாகப் பிராமணர்களாகப் பிறந்தனர். பிரம்மதத்தன் { பிராமணர்களான} அவர்களில் ஒருவனே" என்றிருக்கிறது.

ஒரு காலத்தில் அவர்கள் அனைவரும், தங்கள் ஆசானின் {கர்க்கரின்} ஆணையின் பேரில் கறவைப் பசுவான கபிலையையும், அவளால் முறையாகப் பெறப்பட்ட கன்றையும் மேய்ப்பதற்காகக் காட்டுக்குச் சென்றனர்.(7) ஓ! பரதனின் வழித்தோன்றலே, வழியில் பசியால் பீடிக்கப்பட்ட அவர்கள், அந்தப் பசுவைக் கொல்லும் விருப்பத்தை அடைந்தனர்.(8) கவி மற்றும் காஸ்ருமர் ஆகியோர் அவ்வாறு விரும்பாவிட்டாலும், அவ்விருவராலும் பிற பிராமணர்களைத் தடுக்க முடியவில்லை.(9)

அவர்களில் நாள்தோறும் சிராத்தத்தையும், மாலைநேரத்தில் செய்யப்படும் பிற சடங்குகளையும் செய்வதை வழக்கமாகக் கொண்டவரும், அறவழிகளில் உறுதியாக நிற்பவருமான பித்ரூவர்தி என்ற பிராமணர், தன்னுடன் பிறந்தோரிடம் கோபமாக,(10) "நீங்கள் அனைவரும் இந்தப் பசுவைக் கொல்ல விரும்பினால், கட்டுப்பாடுடைய மனங்களுடன் கூடியவர்களாக இதை {இந்தப் பசுவைப்} பித்ருக்களுக்கு அர்ப்பணிப்பீராக.(11) இதனால், இந்தப் பசுவும் நிச்சயம் அறமீட்டும். மேலும், பக்தியுடன் நாம் நமது பித்ருக்களுக்கான சடங்கைச் செய்தால், நாம் எந்தக் கொடுமையையும் இழைத்தவர்களாக மாட்டோம்" என்றார்.(12) அதன்பேரில், ஓ! பரதனின் வழித்தோன்றலே, இதை ஏற்றுக் கொண்ட அவர்கள் அனைவரும் அந்தப் பசுவைக் கொன்று, அதைப் பித்ருக்களுக்கு அர்ப்பணித்து, அதன் இறைச்சியை உண்டனர்.(13)

பசுவின் இறைச்சியை உண்ட அவர்கள் அனைவரும், தங்கள் ஆசானிடம் {கர்க்கரிடம்}, "அந்தப் பசுவானவள் ஒரு புலியால் கொல்லப்பட்டாள். இதோ அவளுடைய கன்று" என்றனர்.(14)

அந்தப் பிராமணரும் {கர்க்கரும், அவர்களிடம் எந்த ஐயமும் கொள்ளாமல்} எளிமையாக அந்தக் கன்றைப் பெற்றுக் கொண்டார். தங்கள் ஆசானிடம் பொய்க் கதையைச் சொன்ன அந்தப் பிராமணர்கள் அனைவரும், தங்கள் வாழ்வுக்காலம் முடிந்ததும் மரணமடைந்தனர்.(15) அவர்கள், தங்கள் ஆசானிடம் தாங்கள் கொண்ட பாவம் நிறைந்த ஒழுக்கத்தினாலும், அந்தப் பசுவைக் கொன்றதனாலும், பொறாமை, இரக்கமின்மை மற்றும் கோபத்தால் பீடிக்கப்பட்டவர்களாக ஒரு வேடனின் மகன்களாகப் பிறந்தனர். அவர்கள் அனைவரும் பலவான்களாகவும், தயாள மனம் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அந்தப் பசுவைக் கொன்றாலும், முறையாகத் தங்கள் பித்ருக்களை வழிபட்டதனால், அவர்கள் தங்கள் மாசற்ற பிறவி மற்றும் செயல்களின் அறிவைக் கொண்டிருந்தனர். கல்விமானான அந்தப் பிராமணர்கள் எழுவரும், தசார்ண மாகாணத்தில் வேடர்களாகப் பிறந்தனர்.(16-18)

தங்கள் கடமைகளைச் செய்யும் கருத்தில் தீர்மானமாக இருந்த அவர்கள் அனைவரும் வாய்மை நிறைந்தவர்களாகவும், பேராசையற்றவர்களாகவும் இருந்தனர்[4]. அவர்கள் தங்கள் உடலையும், ஆன்மாவையும் ஒன்றாகத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவையான காலம் மட்டுமே பணி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(19) எஞ்சிய நேரத்தை அவர்கள் தியானத்தில் கழித்தனர். ஓ! மன்னா, நிர்வைரன், நிர்விருதி, சாந்தன், நிர்மன்யு, கிருதி, வைதஸன், மாத்ருவர்தி ஆகியவையே முறையாக அவர்களுடைய பெயர்களாகும். அவர்கள் அனைவரும் பெரும் பக்திமிக்க {அறவோரான} வேட்டைக்காரர்களாக இருந்தனர்.(20,21) இவ்வாறே வாழ்ந்து, ஒரு வேடனுக்குரிய கடமைகளைச் செய்து வந்த அவர்கள் முதியவர்களான தங்கள் பெற்றோரை வழிபட்டு அவர்களை நிறைவடையச் செய்தனர்.(22) காலத்தில் அவர்களுடைய பெற்றோர் இறந்தபோது, அவர்கள், தங்கள் விற்களையும், கணைகளையும் விலக்கி வைத்துவிட்டு, காட்டில் தங்கள் வாழ்வைத் துறந்திருந்தனர்.(23)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வேடர்கள் எதை வேட்டையாடலாம், எதை வேட்டையாடக்கூடாது என்று பகுத்துப் பார்த்து வேட்டையாட வேண்டும். அறம் சார்ந்த வேட்டைக்காரர்கள், குஞ்சுகள், குட்டிகள், கருவுற்றவை, கலவியில் ஈடுபட்டிருப்பவை ஆகிய விலங்கு மற்றும் பறவைகளை வேட்டையாடமாட்டார்கள். அவர்களே நியாயமான நேர்மையான வேட்டைக்காரர்கள்" என்றிருக்கிறது.

அந்த அறச்செயல்களின் மூலம் தங்கள் மறுபிறவியில், தங்கள் மாசற்ற பிறவிகளைக் குறித்த நினைவுடன்கூடிய மான்களானார்கள். {வேடர்களாக இருந்தபோது} (மான்களை) அச்சத்தால் பீடிக்கச் செய்ததாலும், {அவற்றைக்} கொன்றதாலும் அவர்கள், உன்முகன், நித்யவித்ரஸ்தன், ஸதப்தகர்ணன், விலோசனன், பண்டிதன், கஸ்மரன், நாதி என்ற பெயர்களைக் கொண்ட மான்களாக அழகிய காலஞ்ஜர மலையில் பிறந்தனர்.(24,25) தங்கள் முற்பிறவிகளையும், முந்தைய உயிரின வகைகளையும் நினைவில் கொண்டபடியே அவர்கள் காட்டில் திரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் மனங்களை அடக்கியவர்களாக, அமைதிநிறைந்தவர்களாக, திருமணம் செய்யாதவர்களாக, நல்வினைகளைச் செய்பவர்களாக, அதே அறச்சடங்குகளைச் செய்பவர்களாக இருந்தனர். ஒரு யோகியின் வாழ்வைப் பின்பற்றி அவர்கள் அங்கே வாழ்ந்து வந்தனர்.(26,27) தவசிகளின் வாழ்வைப் பின்பற்றிய அவர்கள், மிகக் குறைந்த அளவே உணவை உட்கொண்டு {ஜலத்யாகவ்ரதம் இருந்து} தங்கள் உயிர்களைப் பாலைவனத்தில் விட்டனர். ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே, இப்போதும் காலஞ்சர மலையை ஒட்டியமைந்துள்ள பாலைவனத்தின் அவர்களின் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன.(28)

ஓ! மகனே, அந்த அறச்செயல்களின் விளைவாகத் தீமைகளேதும் அற்றவர்களாக இருந்த அவர்கள், {தங்கள் மறுபிறவியில்} மேன்மையான மங்கலம் நிறைந்த உயிரினங்களான சக்கரவாகங்களாகப் பிறந்தனர்.(29) பிரம்மசரிய வாழ்வுமுறையைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும், பக்திமான்களுமான அந்தத் தவசிகள், சரம் என்றழைக்கப்படும் புனிதமான தீவில் {சரத்வீபத்தில்} ஏழு நீர்க்கோழிகளாகப் பிறந்தனர்.(30) நிஹ்ஸ்பிருஹன், நிர்மமன், க்ஷாந்தன், நிர்த்வந்திவன், நிஷ்பரிக்ரஹன், நிர்விருத்தி, நிப்ருதன் என்பன அவர்களுடைய பெயர்களாகும்.(31) பக்திமிக்க அந்தச் சக்கரவாகங்கள் அனைவரும் பிரம்மசாரிகளாக இருந்தனர். உணவைத் தவிர்த்துக் கடுந்தவங்களைச் செய்து வந்த அவர்கள் ஓர் ஆற்றின் கரையில் இறந்தனர்.(32)

உடன்பிறந்தோரான அந்த எழுவரும் மானஸத் தடாகத்தில் விரும்பியபடி உலவும் வாத்துகளாக {ஹம்ஸங்களாக / அன்ன பறவைகளாகப்} பிறந்து, முற்பிறவிகளின் மாசற்ற நினைவுகளால் பிரம்மச்சரிய வாழ்வைத் தொடர்ந்து பின்பற்றினர்.(33) பிராமணர்களாகப் பிறந்தும், தங்கள் ஆசானிடம் பொய்ச் சொற்களைச் சொன்னதால் இப்போது பறவைகளாகப் பிறந்து உலகில் திரிந்து கொண்டிருக்கின்றனர்.(34) தன்னல நோக்கத்துக்காகவே இருந்தாலும், அவர்கள் பித்ருக்களை வழிபட்டதால் தங்கள் முற்பிறவியின் அறிவைப் பெற்றிருந்தனர்.(35) இந்த வாத்துகள் முறையே ஸுமனன், ஸுசிவாக், ஸுத்தன், பஞ்சமன், சின்னதர்ஷனன் {சித்ரதர்சனன்}, ஸுநேத்ரன், ஸ்வதந்த்ரன் என்ற பெயர்களைப் பெற்றிருந்தனர்.(36)

அவர்களில் {கௌசிகரின் மகன்களில்} ஐந்தாமவன் {கவி} தன் ஏழாம்பிறவியில் பாஞ்சிகன் என்ற பெயரையும், ஆறாமவன் {கஸ்ருமன்} பண்டரீகன் {கண்டரீகன்} என்ற பெயரையும், ஏழாமவன் {பித்ருவர்தி} பிரம்மதத்தன் என்ற பெயரையும் பெற்றனர்.(37) ஏழு பிறவிகளில் அவர்களால் செய்யப்பட்ட கடுந்தவங்கள், யோகப் பயிற்சிகள் மற்றும் தங்கள் நற்கர்மத்தின் காரணமாக அவர்கள் தங்கள் முதல் பிறவியில் தங்கள் ஆசானின் வீட்டில் வேதப் பாடல்கள் ஓதப்படுவதைக் கேட்டனர். அதன் விளைவாக அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும், அவர்களது விருப்பங்கள் தூய்மையாகவே நீடித்திருந்தன.(38,39) இந்தப் பிரம்மச்சாரிகள் அனைவரும் பிரம்மஞானத்தைப் பெற்றிருந்தனர்; தியானத்தில் ஈடுபட்டபடியே அவர்கள் அங்கே வாழ்ந்து வந்தனர்.(40)

அந்தப் பறவைகள் அனைத்தும் ஒன்றாக வாழ்ந்து வந்தபோது, பெருஞ்செழிப்புமிக்கவனும், பலம் நிறைந்தவனும், பிரகாசமானவனும், நீபர்களின் தலைவனும், புரு குலத்தில் பிறந்தவனுமான மன்னன் விப்ராஜன், தன் வீட்டின் பெண்களுடன் அந்தக் காட்டுக்கு வந்தான்.(41,42) செழிப்புமிக்க அந்த மன்னனைக் கண்டதும் ஸ்வதந்த்ரன் என்ற பறவையானவனுக்குப் பொறாமையுண்டாகி, அவனைப் போலவே ஆக விரும்பினான்.(43) (அவன் {ஸ்வதந்த்ரன் என்ற வாத்தானவன் / கௌசிகரின் மகன் பித்ருவர்தி}), "நான் நல்வினை செய்து தவம்பயின்றவன் என்பது உண்மையானால், மெய்யாகவே நான் இத்தகைய மன்னனாக ஆவேன். எந்தப் பலனையோ, மகிழ்ச்சியையோ விளைவிக்காத கடுந்தவங்களின் மூலம் நான் பெரிதும் மெலிந்திருக்கிறேன்" (என்று நினைத்தான்)" {என்றார் மார்க்கண்டேயர்}.(44)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 44
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்