(பித்ரு கல்பம் - 6 | சக்ரவாக வர்ணனம்)
The course of the birds | Harivamsa-Parva-Chapter-22 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : அமைச்சர்களாக இருப்போம் என்ற சொன்ன இரண்டு அன்னப்பறவைகள்; மூன்றையும் சபித்த மற்ற நான்கு பறவைகள்; சாபம் விலகும் வழியையும் சொன்னது...
மார்க்கண்டேயர், "அப்போது அவனுடைய[1] தோழர்களான இரு சக்கரவாகப் பறவைகள்[2] அவனிடம், "நாங்கள் எப்போதும் உனக்கு நன்மையைச் செய்யும் உன்னுடைய அமைச்சர்களாக இருப்போம்" என்றனர்.(1) "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்ன அவனுடைய மனது யோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்குள் நுழைந்ததும், ஸுசிவாக்[3] அவர்களிடம்,(2) "ஒரு யோகியின் பாதையில் இருந்து விலகி, ஆசையால் பீடிக்கப்பட்டு நீ இத்தகைய வரத்தை வேண்டுகிறாய். இந்தக் காரியத்தில் நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(3) நிச்சயம் நீ காம்பில்யத்தின் மன்னனாவாய், இந்த இருவரும் உன் அமைச்சர்களாவார்கள்[4]" என்றான்.(4)
[1] ஸ்வதந்த்ரனுடைய / இரண்டாம் பிறவியில் ஏழாம் மகனான பித்ருவர்தியுடைய
[2] வாத்துகள் / அன்னங்கள் - இரண்டாம் பிறவியில் கௌசிகரின் பிள்ளைகளில் கவியும், கஸ்ருமனும். ஐந்தாம் பிறவியில் சக்கரவாகப் பறவைகளாக இருந்தார்கள், ஆறாம் பிறவியில் வாத்துகளாக {அன்னப்பறவைகளாக} இருந்தனர். இங்கே அவர்களின் நிகழ் பிறவியான ஆறாம் பிறவி குறிப்பிடப்படாமல் ஐந்தாம் பிறவி குறிப்பிடப்படுவது எதனால் என்பது தெரியவில்லை. மூலத்தில் இந்த அத்தியாயத்தின் தலைப்பும் கூடச் சக்ரவாகவர்ணனம் என்றே இருக்கிறது.
[3] கௌசிகரின் பிள்ளைகளில் இரண்டாமவரான க்ரோதனர்
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அதே வேளையில் மற்ற அன்னப்பறவைகளான நாங்கள் நால்வரும், அதே காம்பில்ய நகரத்தில் மிகச்சிறந்த பிராமணக் குடும்பத்தில் பிறப்போம். நாங்கள் வேதங்களின் திறன்மிக்க அறிஞர்களாக இருப்போம். செல்வம் அல்லது அதிகாரத்தில் சிக்காமல் வாழ்வைக் கழித்து இறுதியில் நாங்கள் முக்தியை அடைவோம். எனவே, நீங்கள் {மூவரும்} இதைச் சாபமாக நினைக்காமல், அவ்வாறு மறைத்து அளிக்கப்படும் அருள் {வரம்} என்று நினைப்பீராக" என்றிருக்கிறது.
அந்த நான்கு வாத்துகளும் {அன்னப்பறவைகளும்} இந்தச் சொற்களைச் சொல்லி மற்ற மூவரையும் சபித்தன. அரசைப் பெற வேண்டியதன் விளைவால் யோகத்தில் இருந்து மூன்றும் {மூன்று வாத்துகளும்} விழுந்ததன் காரணமாக அவற்றிடம் அவை {அந்த நான்கு வாத்துகளும்} பேசாமல் இருந்தன.(5) சபிக்கப்பட்ட {மூன்று} வாத்துகள், தங்கள் (தாங்கள் அடைந்த) யோகத்தை இழந்து, புலன்கள் கலங்கியவர்களாகத் தங்கள் தோழர்களிடம் நிவாரணத்தை {துயர் நீக்கத்தை} வேண்டின.(6) அவை {அந்த நான்கு வாத்துகளும்} அமைதியை அடைந்தன, மேலும் அவர்கள் அனைவரின் செய்தி தொடர்பாளராகச் செயல்பட்ட ஸுமனன்[5] பின்வரும் கருணைச் சொற்களை அவர்களிடம் சொன்னான்.(7)
[5] இரண்டாம் பிறவியில் கௌசிகரின் மகன்களில் மூத்தவரான வாக்துஷ்டர்.
{ஸுமனன் / வாக்துஷ்டர்}, "உங்கள் சாபத்திற்கு நிச்சயம் ஒரு முடிவுண்டு. நீங்கள் இப்பிறவியில் இருந்து விடுபட்டு மீண்டும் மனிதர்களாகப் பிறந்து, யோகம் பயில்வீர்கள்.(8) {மறுபிறவியில்} ஸ்வதந்த்ரனால் விலங்குகள் அனைத்தின் ஒலிகளையும் புரிந்து கொள்ள இயலும். அவனுடைய[6] ஆலோசனையின் பேரிலேயே நாம் பித்ருகளின் ஆதரவை அடைந்தோம்.(9) அந்தப் பசுவைக் கொன்ற பிறகும், அதைப் பித்ருக்களுக்கு அர்ப்பணித்ததன் காரணமாகவே நாம் அனைவரும் இப்போதும் ஞானத்துடன் யோகம் பயின்றுகொண்டிருக்கிறோம்" என்றான்.(10)
[6] இரண்டாம் பிறவியில் கௌசிகரின் ஏழாம் மகனாகப் பித்ருவர்தி என்ற பெயரில் இருந்த.
அந்த (ஏழு) மனிதர்களின் கதையைக் கொண்ட இந்த ஸ்லோகத்தை {இரண்டு ஸ்லோகங்களைக்} கேட்பவனும், இதை {இவற்றை} உரைப்பவனும் மிகச் சிறந்த யோகத்தை அடைவார்கள்" {என்றார் மார்க்கண்டேயர்}[7].(11)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இந்தப் பதினோராம் ஸ்லோகமும் ஸுமனன் ஸ்வதந்த்ரனிடம் சொல்வது போலவே அமைந்திருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "மறுபிறவியில் மனிதர்களாக இருக்கும் நம் வாழ்வின் முடிவில் நாம் இறுதி விடுதலையை அடைவோம். அந்தச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் வரும் ஸ்லோகத்தை {இரண்டு ஸ்லோகங்களைக்} கேட்பதன் மூலம் நாம் மறுபிறவிகளெனும் சக்கரத்தில் இருந்து விடுபட்டு விடுதலையை {முக்தியை} அடைவோம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பொருள் நிறைந்த சொற்களடங்கிய ஒரு ஸ்லோகம் இருக்கிறது {இரண்டு ஸ்லோகங்கள்}. அந்த மனிதப் பிறவியில் ஒரு மனிதன் அதை உன்னைக் கேட்கச் செய்யும்போது, நீ மீண்டும் யோகத்தை நாடுவாய்" என்றிருக்கிறது. இவ்வாறு மூன்று பதிப்புகளும் மூன்று வெவ்வேறு பொருள்களைத் தருகின்றன. Henry David Thoreau-ன் The Transmigration of the Seven Brahmans-ல், "ஆம், கடந்த காலத்தை நினைவுப்படுத்தும் வகையில், ஒரு நாள், உங்கள் ஆன்மாக்களின் அடியில் மறைக்கப்பட்டிருந்த அறிவைச் சுருக்கமாகச் சொல்லும் சில சொற்களைக் கேட்டு, அனைத்தையும் கைவிட்டு நீங்கள் யோகத்திற்குத் திரும்புவீர்கள்" என்றிருக்கிறது.
ஹரிவம்ச பர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 11
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |