Sunday 12 April 2020

பிரம்மதத்தனும் வினோதப் பறவையும் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 20

(பித்ரு கல்பம் - 4 | பூஜனீயோபாக்யானம் - சடகாக்யானம்)

Account of Brahmadatta and the strange bird | Harivamsa-Parva-Chapter-20 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிருஹத்க்ஷத்ரனின் குலத்தில் தோன்றிய நீபனின் நூறு மகன்கள்; நீபனின் குலத்தில் தோன்றிய அணுஹனின் மகன் பிரம்மதத்தன்; பிரம்மதத்தனின் குலத்தில் தோன்றிய மற்றொரு நீபனால் அந்த நீப குலத்துக்கு நேர்ந்த பேரழிவு; அஜமீடனின் குலத்தில் தோன்றிய கிருதன்; கிருதனின் மகன் உக்ராயுதன்; உக்ராயுதனால் அழிந்த நீபர்கள்; சத்யவதியைத் தனக்கு மனைவியாகக் கொடுக்குமாறு பீஷ்மரை மிரட்டிய உக்ராயுதன்; உக்ராயுதனிடம் இருந்த சக்கராயுதம்; உக்ராயுதனைக் கொன்ற பீஷ்மர்; பிரம்மதத்தன் மற்றும் பூஜனி என்ற பறவையின் கதை...

மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "அந்தத் தேவன் {சனத்குமாரர்} மறைந்ததும், அந்தத் தலைவனின் சொற்களுக்கிணங்க நான் தெய்வீகப் பார்வையுடன் கூடிய பகுத்தறிவு ஞானத்தை {பவ்யவிஜ்ஞானத்தை} அடைந்தேன்.(1) ஓ! கங்கையின் மைந்தா, அந்தத் தலைவர் (சனத்குமாரர்) என்னிடம் சொன்னவர்களும், கௌசிக வழித்தோன்றல்களுமான அந்தப் பிராமணர்கள் அனைவரையும் நான் குருக்ஷேத்திரத்தில் கண்டேன்.(2) அவர்களில் ஏழாவது பிராமணரே, மன்னன் பிரம்மதத்தனானான். அவனது பெயர், குணம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் அவன் பித்ருதத்தன் {பித்ருவர்தி} என்ற பெயரில் கொண்டாடப்படலானான்.(3) மன்னர்களில் முதன்மையானவனான அணுஹன் {அணுஹு}, காம்பில்யம் என்ற பெயரைக் கொண்ட ஒரு சிறந்த நகரத்தில், சுகரின் மகளான கிருத்வியிடம் {கீர்த்திமதியிடம்} அந்த ஏகாதிபதியை {பிரம்மதத்தனைப்} பெற்றான்" என்றார்".(4)



பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்தவரும், மறுபிறப்பாளரும், பெரும் முனிவருமான மார்க்கண்டேயர் சொன்னது போலவே அந்த மன்னனின் குடும்பத்தை {குலத்தை} விளக்கிச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக" என்றார்.(5)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "பக்திமான்களில் முதன்மையான அணுஹன் யாருடைய மகன்? அவன் எந்த யுகத்தில் பிறந்தான்? அவன் எவ்வளவு பலமிக்கவன்? பெருஞ்சிறப்புமிக்க மன்னன் பிரம்மதத்தன் யாருடைய மகன்? ஏழாவது பிராமணர் எவ்வாறு ஒரு மன்னனானார்?(6,7) தற்கட்டுப்பாடு கொண்டவரும், எல்லாம் வல்லவரும், உலகங்கள் அனைத்தாலும் மதிக்கப்படுபவருமான சுக முனிவர், தன் சிறப்புமிக்க மகளான கிருத்வியை (நிச்சயம்) ஆண்மையற்ற எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை {அல்லவா?}.(8) ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, பிரம்மதத்தனின் கதையை முழுமையாக நான் கேட்க விரும்புகிறேன்; அதை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(9) மார்க்கண்டேயரால் குறிப்பிடப்பட்ட பிராமணர்கள் இவ்வுலகில் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(10)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இந்த மன்னன் (பிரம்மதத்தன்) என் பாட்டனான அரசமுனி பிரதீபரின் காலத்தைச் சேர்ந்தவன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.(11) உன்னதத் தவசியும், அரச முனிகளில் முதன்மையானவனுமான பிரம்மதத்தன், அனைத்து உயிரினங்களிடமும் நன்றியுணர்வுமிக்கவனாக அவற்றுக்கு நன்மை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(12) அவன் தன் தவ வழிமுறைகளின் மூலம் சிக்ஷை[1] என்றழைக்கப்படுவதை (என்ற வேத பிரிவை) அமைத்து, அதைப் படிப்பதற்கான ஓர் ஒழுங்கை ஏற்படுத்தினான். பெருஞ்சிறப்புமிக்க யோகாசானான காலவர், அவனுடைய நண்பராக இருந்தார், தவசியான கண்டரீகர் அவனுடைய அமைச்சராக இருந்தார்.(13) மற்றொரு பிறவியில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். உன்னதரும், பெருந்தவசியுமான மார்க்கண்டேயர் உரைப்பதைப் போலவே அவர்கள், தங்கள் ஏழாம் பிறவியில் அளவற்ற சக்தியைக் கொடையாகக் கொண்டிருந்தனர்.(14) ஓ! மன்னா, புரு குலத்தில் பிறந்த உயரான்ம மன்னன் பிரம்மதத்தனின் புராதனக் குடும்பத்தைக் குறித்துச் சொல்கிறேன், கேட்பாயாக.(15)

[1] "இது வேதாங்கப் பகுதிகளில் ஒன்றாகும். வேதங்களின் பகுதி அல்லது ஓர் உப பகுதி என்று கருதப்படும் இஃது ஒரு புனித அறிவியலாகும்; ஆறு அறிவியல்கள் இந்த வகுப்பின் {வேதாங்கங்கள் என்ற பிரிவின்} கீழ் வருகின்றன. சிக்ஷை<1> அல்லது உச்சரிப்பு மற்றும் ஒலி தெளிவைக் குறித்த அறிவியல்; கல்பம்<2> அல்லது அறச்சடங்குகளின் விளக்கங்கள்; வியாகரணம்<3> அல்லது இலக்கணம்; சந்தஸ்<4] அல்லது யாப்பு {பேச்சு}; ஜோதிஷம்<5> அல்லது வானவியல்; நிருக்தம்<6> அல்லது, வேதங்களில் தென்படும் கடின சொற்கள் மற்றும் வாக்கியங்களுக்கான விளக்கம் ஆகியனவே அந்த ஆறு அறிவியல்களாகும்.

பக்திமானானான பிருஹத்க்ஷத்ரனின் மகன் ஸுஹோத்ரன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டான். ஸுஹோத்ரனின் மகன் ஹஸ்தி என்ற பெயரில் அறியப்பட்டான்.(16) மிகச் சிறந்த நகரமான ஹஸ்தினாபுரம் பழங்காலத்தில் இவனாலேயே அமைக்கப்பட்டது. ஹஸ்திக்குப் பெரும்பக்திமான்களான மூன்று மகன்கள் இருந்தனர்.(17) அவர்களில் மூத்தவன் அஜமீடன், இரண்டாமவன், திவிமீடன், இளையவன் புருமீடன் ஆகியோராவர். அஜமீடன் தூமினியிடம் மன்னன் பிருஹத்திஷுவைப் பெற்றான். அவனுடைய {பிருஹத்திஷுவின்} மகன் பெருஞ்சிறப்புமிக்கப் பிருஹத்தனு ஆவான்.(18) அவனுடைய {பிருஹத்தனுவின்} மகன் பெரும்பக்தியுடைய மன்னனான பிருஹத்தர்மன் என்று அறியப்பட்டான். அவனுடைய {பிருஹத்தர்மனின்} மகன் சத்யஜித் ஆவான், அவனுடைய {சத்யஜித்தின்} மகன் விஷ்வஜித் ஆவான்.(19) அவனுடைய மகன் மன்னன் ஸேனஜித் ஆவான். அவனுக்கு இவ்வுலகில் கொண்டாடப்பட்ட நான்கு மகன்கள் இருந்தனர்.(20) ருசிரன், ஸ்வேதகேது, மஹிந்நாரன், அவந்தியின் மன்னனான வத்ஸன் {வத்ஸலன்} ஆகியோரே அந்த நான்கு மகன்களாவர்.(21) ருசிரனின் மகன் பெருஞ்சிறப்புமிக்கப் பிருதுசேனனாவான். அவனுடைய மகன் பாரன் ஆவான். அவனிடம் இருந்து நீபன் பிறந்தான்.(22)

நீபனுக்கு அளவற்ற சக்தியைக் கொண்டவர்களாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும், பெரும் வீரர்களாகவும், பெரும்பலம் மிக்கவர்களாகவும் நூறு மகன்கள் இருந்தனர்.(23) அந்த நீபர்களில் சிறப்புமிக்க வழித்தோன்றலானவன் காம்பில்ய மாகாணத்தில் ஸமரன் என்ற பெயரில் அறியப்பட்டான். அவன் போரை மிகவும் விரும்புபவனாக இருந்தான்.(24) ஸமரனுக்கு, பெரும் பக்திமான்களான பரன், பாரன் மற்றும் ஸதஸ்வன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். பரனின் மகன் பிருதுவாவான்.(25) பிருதுவின் மகன், நற்செயல்களின் மூலம் அனைத்து சாதனைகளையும் செய்தவனான ஸுக்ருதன் ஆவான். அவனுடைய {ஸுக்ருதனின்} மகன் விப்ராஜன் ஆவான்.(26) அவனுடைய {விப்ராஜனின்} மகன் அணுஹன் {அணுஹு} ஆவான். அவன் {அணுஹன்} சுகரின் சிறப்புமிக்க மருமகனாகவும், கிருத்வியின் கணவனாகவும் இருந்தான்.(27) அணுஹனின் மகன் அரசமுனியான பிரம்மதத்தன் ஆவான். அவனுடைய {பிரம்மதத்தனின்} மகன் எதிரிகளை அடக்குபவனான விஷ்வக்ஸேனன் ஆவான்.(28)

{பிரம்மதத்தனின் பாட்டனான} விப்ராஜன் தன் வினையின் விளைவால் மீண்டும் (பிரம்மதத்தனின் மகனாக) {விஷ்வக்ஸேனனாகப்} பிறந்தான். அவனுக்கு {பிரம்மதத்தனுக்கு} ஸர்வஸேனன் என்ற பெயரில் மற்றொரு மகனும் இருந்தான்.(29) ஓ! மன்னா, பிரம்மதத்தனின் வீட்டில் நெடுங்காலம் வாழ்ந்திருந்திருந்ததும், பூஜனி என்ற பெயரில் அறியப்பட்டதுமான (வழிபடத்தகுந்ததுமான) ஒரு குருவியால் அவனது {ஸர்வஸேனனின்} கண்கள் குத்திக் கிழிக்கப்பட்டன.(30) பிரம்மதத்தனுக்கு விஷ்வக்ஸேனன் என்ற பெயரில் பெரும்பலமிக்க மற்றொரு மகன் இருந்தான்.(31) அவனுடைய {விஷ்வக்ஸேனனின்} மகன் மன்னன் தண்டஸேனனாவான். அவனுடைய மகனான பல்லாடன் முன்பு {ராதேயனால்} கர்ணனால் கொல்லப்பட்டான்.(32) தண்டஸேனனின் மகனான இவன் {பல்லாடன்}, வீரனாகவும், தன் குலத்தைத் தழைக்கச் செய்பவனாகவும் இருந்தான். ஓ! யுதிஷ்டிரா, பல்லாடனின் மகன் தீய மனம் கொண்டவனாக இருந்தான்.(33) ஓ! மன்னா, அவனே நீபர்களின் குலத்திற்கு வீழ்ச்சியைக் கொண்டு வந்தான். அவனுக்காகவே நீபர்கள் அனைவரும் உக்ராயுதனால் அழிக்கப்பட்டனர்.(34) உக்ராயுதன் செருக்கமிக்கவனாக இருந்ததன் காரணமாக நான் ஒரு போரில் அவனைக் கொன்றேன். அவன் செருக்குமிக்கவனாகவும், அகந்தை மற்றும் பாபகரமான வழிகளில் இன்பம் கொள்பவனாகவும் இருந்தான்" என்றார் {பீஷ்மர்}.(35)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உக்ராயுதன் யாருடைய மகன்? அவன் எந்தக் குலத்தில் பிறந்தான்? நீர் எதற்காக அவனைக் கொன்றீர்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(36)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "கல்விமானான மன்னன் யவிநரன், அஜமீடனின் மகனாவான். அவனுடைய {யவிநரனின்} மகன் திருதிமான், அவனுடைய {திருதிமானின்} மகன் ஸத்யத்ருதி ஆவர்.(37) அவனுடைய {ஸத்யத்ருதியின்} மகன் பலமிக்கத் திருடநேமி, அவனுடைய {திருதநேமியின்} மகன் மன்னன் ஸுதர்மன் ஆவர்.(38) அவனுடைய {ஸுதர்மனின்} மகன் ஸார்வபௌமன் ஆவான். அவனே உலகின் ஒரே மிகச் சிறந்த தலைவனாக இருந்ததனால் ஸார்வபௌமன் என்றழைக்கப்பட்டான்.(39) அவனது குடும்பத்தில், புருவின் வழித்தோன்றலான மஹான் என்பவன் பிறந்தான். மஹானின் மகன் மன்னன் ருக்மரதன் என்று அறியப்பட்டான்.(40) அவனுடைய {ருக்மரதனின்} மகன் மன்னன் ஸுபார்ஷ்வன், அவனுடைய {ஸுபார்ஷ்வனின்} மகன் பக்திமானான ஸுமதி ஆவர்.(41) அவனுடைய {ஸுமதியின்} மகன் அறம் சார்ந்த ஆன்மா கொண்டவனும், பலமிக்கவனுமான ஸன்னதி ஆவான். அவனுடைய {ஸன்னதியின்} மகன் வீர மன்னனான கிருதன் ஆவான்.(42)

அவன் {கிருதன்} உயரான்ம ஹிரண்யகர்ப்பனின் சீடனாவான். சாமவேத ஸம்ஹிதைகள் {ப்ராச்யஸாமங்கள்} இருபத்துநான்கு வழிகளில் பாடப்படுகின்றன.(43) இதன் காரணமாக மேற்கத்திய சாமங்களும், அதன் கோஷங்களும் கார்த்தியின் பெயரில் அறியப்படுகின்றன. புருவின் குலத்தில் பிறந்த வீர உக்ராயுதன், கிருதனின் மகனாவான்.(44) அவன் தன் ஆற்றலை வெளிப்படுத்தி, பெருஞ்சக்தி கொண்டவனும், பிருஷதனின் பாட்டனும், நீபன் என்ற பெயரைக் கொண்டவனுமான பெருஞ்சக்திமிக்கப் பாஞ்சால மன்னனை {நீபனைக்} கொன்றான்.(45) உக்ராயுதனின் மகன் பெருஞ்சிறப்புமிக்க மன்னன் க்ஷேம்யன், அவனுடைய {க்ஷேம்யனின்} மகன் ஸுவீரன், அவனுடைய {ஸுவீரனின்} மகன் நிருபஞ்ஜயன் {ஸ்ருஞ்ஜயன்} ஆவர்.(46) நிருபஞ்ஜயனிடம் இருந்து பஹுரதன் பிறந்தான். இந்த மன்னர்கள் அனைவரும் பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, உக்ராயுதன் மிகத் தீயவனாக வளர்ந்தான்.(47) அவன், நீபர்கள் அனைவரையும் எரித்து, அவர்களை அழிவடையச் செய்தான் {நிர்மூலமாக்கினான்}. நீபர்களையும், பிற மன்னர்கள் அனைவரையும் கொன்ற அவன் செருக்கால் நிறைந்திருந்தான்.(48)

என் தந்தை {சந்தனு} இறந்த பிறகு, அவன் பாவம் நிறைந்த (பல) சொற்களை என்னிடம் சொன்னான். ஓ! மன்னா, என் அரசவையினர் சூழ நான் பூமியில் கிடந்தபோது {நான் பித்ருமேதம் செய்து கொண்டிருந்தபோது}, உக்ராயுதனிடம் இருந்து ஒரு தூதன் என்னிடம் வந்து, "ஓ! குருக்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, சிறப்புமிக்கவளும், பெண்குல ரத்தினமுமான உன் அன்னை கந்தகாளியை {சத்யவதியை} என் மனைவியாகக் கொடுப்பாயாக.(49,50) நான் உனக்குச் செழிப்பான நாட்டையும், செல்வத்தையும் நிச்சயம் வழங்குவேன். நான் என் விருப்பத்தின்படியே பூமியில் உள்ள ரத்தினங்களை அடைந்திருக்கிறேன்.(51) ஓ! பரதனின் வழித்தோன்றலே, பிரகாசமானதும், தடுக்கப்பட முடியாததுமான என்னுடைய இந்தச் சக்கரத்தை {சக்கராயுதத்தை} வெறுமனே கேட்டதனாலேயே, அல்லது பார்த்ததனாலேயே பகைவர்கள் அனைவரும் போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடுகின்றனர்.(52) நீ உன் நாட்டையும், உயிரையும், உன் குடும்பத்தின் நன்மையையும் நாடினால் {விரும்பினால்} என் ஆணைக்குக் கீழ்ப்படிவாயாக, இல்லையெனில் உனக்கு அமைதி ஏற்படாது" என்று {உக்ராயுதனின் சொற்களை எனக்குச்} சொன்னான்.(53)

நான் பூமியில் குசப்புல் {தர்ப்பைப்} படுக்கையில் கிடந்த போது, அவனால் {உக்ராயுதனால்} அனுப்பப்பட்ட தூதனிடமிருந்து நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான இந்தச் சொற்களைக் கேட்டேன்.(54) ஓ! சிதைவற்றவனே, தீய மனம் கொண்ட அவனது விருப்பத்தை அறிந்த நான், போர் தொடுக்குமாறு என் படைத்தளபதிக்கு ஆணையிட்டேன்.(55) விசித்திரவீரியன் சிறுவனாகவும் என் பாதுகாப்பின் கீழும் இருந்தான். சினத்தில் நிறைந்திருந்த நான், போரில் ஈடுபட என் மனத்தை ஆயத்தம் செய்தேன்.(56) ஆனால், ஓ! பாவமற்றவனே, ஆலோசனைகளை நன்கறிந்த என் அமைச்சர்கள் அனைவரும், தேவர்களைப் போன்ற ரித்விக்குகளும், நலம் விரும்பும் நண்பர்களும், சாத்திரங்களை நன்கு அறிந்த தோழர்கள் அனைவரும் அதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டு, அதற்கான முக்கியக் காரணங்களையும் சுட்டிக்காட்டினார்கள்.(57,58)

அமைச்சர்கள் {பீஷ்மரிடம்}, "ஓ! தலைவா, தீய ஆன்மா கொண்ட அவன் (உக்ராயுதன்) பேரழிவுக்கான பணியைச் செய்து கொண்டிருக்கிறான், நீரும் தூய்மையற்றவராக இருக்கிறீர்[2]. எனவே, நீர் உமது முதல் பணியாகப் போரிடக் கூடாது.(59) நாம் முதலில் சமரசம் {சாமம்}, கொடை {தானம்}, மற்றும் வேற்றுமை விதைத்தல் {பேதம்} ஆகிய தகுமுறைகளை முதலில் நாடுவோம். நீர் தூய்மையடைந்து[3], தேவர்களை வணங்கி, பிராமணர்களிடம் சொல்லி அருட்சடங்குகளைச் செய்து, அவர்களை வணங்கி, அவர்களது அனுமதியைப் பெற்றுக் கொண்ட பிறகே வெற்றியை நாடி நீர் புறப்பட வேண்டும்.(60,61) துக்கத்தில் இருப்பவன் ஆயுதத்தை எடுக்கவோ, ஓர் ஒப்பந்தத்திற்குள் நுழையவோ கூடாது எனப் பெரியோரான தவசிகளால் விதிக்கப்பட்டிருக்கிறது.(62) முதலில் சமரசம் அதன் பிறகு கொடை அதன் பிறகு வேற்றுமை விதைத்தல் ஆகியவற்றை நீர் முயற்சிக்க வேண்டும். அதன்பிறகே, (அசுரன்) சம்பரனைக் கொன்ற இந்திரனைப் போல உமது ஆற்றலை வெளிப்படுத்தி அவனை {உக்ராயுதனை} நீர் கொல்ல வேண்டும்.(63) ஓ! மன்னா, உரிய நேரங்களில் பெரியோரான தவசிகளின் சொற்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்" என்றனர். இதைக் கேட்டு நான் போரிடுவதைத் தவிர்த்தேன்.(64)

[2] "உமது தந்தையின் மரணத்தின் காரணமான துக்கத்தில் நீர் இருப்பதால்" {தூய்மையற்றிருக்கிறீர்} என்பது இங்கே பொருள் என மன்மதநாததத்தர் விளக்குகிறார்.
[3] "உமது தந்தையின் சிராத்தம் முடிந்த பின்னர்" {தூய்மையடைந்துவிடுவீர்} என்பது இங்கே பொருள் என மன்மதநாததத்தர் விளக்குகிறார்.

அதன் பிறகு, ஆலோசனைகளை நன்கறிந்த அந்த அமைச்சர்கள் அனைத்து வழிமுறைகளையும் முயற்சி செய்து பார்த்தனர். ஓ! குருக்களில் முதன்மையானவனே, அந்நேரத்தில் மிகச் சிறந்த பணி தொடங்கியது.(65) தவசிகள் தீர்மானித்திருக்கும் சமரசம் முதலிய வழிமுறைகளால் வேண்டப்பட்டாலும் அந்தத் தீய மனம் கொண்டவனை வெல்ல இயலவில்லை.(66) அந்தப் பாவியின் சக்கரம் {சக்கராயுதம்} செலுத்தப்பட்டாலும், அவன் பிறன் மனைவியை நாடியதன் காரணமாக அஃது உடனே நின்று போனது.(67) அவனது மிகச் சிறந்த சக்கரம் {சக்ராயுதம்} நின்றுவிட்டது என்பதை அப்போது நான் உணரவில்லை. பக்திமான்களால் தவறாகப் பேசப்பட்ட அது தன் செயலின் விளைவாலேயே பயனற்றுப் போனது[4].(68)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஆனால் நான், ‘இந்தத் தீய மனம் கொண்ட உக்ராயுதனிடம் என் அமைச்சர்களின் அரசியல் சூழ்ச்சிகள் பலனளிக்காது. அவன் தன் சக்கரத்தை முறையாகப் பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். பிறன் மனைவியை அபகரிக்கும் திட்டத்துடன் இருப்பவனுக்கு அந்தத் தெய்வீக சக்கரம் எப்படிப் பயனளிக்கும்? அந்தச் சக்கராயுதத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அது நம் மீது பயன்படுத்தப்பட்டால், அதை எப்படிக் கலங்கடிப்பது?’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, நல்லெண்ணம் கொண்டோரும், "இந்த உக்ராயுதன் தனக்காகக் குழியைத் தானே தோண்டிக் கொள்கிறான்" என்று சபித்தார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.

அதன் பிறகு தூய்மையடைந்து, பிராமணர்களின் மூலம் அருட்சடங்குகளைச் செய்து கொண்ட நான், என் வில்லுடனும், கணைகளுடனும் ஒரு தேரில் ஏறி நகரத்தைவிட்டுப் புறப்பட்டு என் பகைவனுடன் போரில் ஈடுபட்டேன்.(69) ஆயுதங்களால் பலமூட்டப்பட்ட படையுடன் ஏற்பட்ட மோதலில், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரைப் போன்ற அந்த மிகப் பயங்கரமான போர் மூன்று நாட்கள் நீடித்தது.(70) அந்தப் போர் உச்சக் கட்டத்தை எட்டிய போது என் ஆயுதங்களின் வலிமையால் முழுமையாக எரிக்கப்பட்ட அந்த வீரன் {உக்ராயுதன்}, தன் ஆவியைக் கொடுத்து தலை கவிழ்ந்தவாறு கீழே விழுந்தான்.(71)

அதேவேளையில், ஓ! மகனே {யுதிஷ்டிரா}, பிருஷதன் காம்பில்ய மாகாணத்தை நோக்கிப் புறப்பட்டான். மன்னன் நீபனும், உக்ராயுதனும் கொல்லப்பட்டதால் பெரும்பிரகாசமுடைய அவன் தன் மூதாதையருக்குச் சொந்தமான அஹிச்சத்திரத்தின் அரசை அடைந்தான். ஓ! மன்னா, அவன் {பிருஷதன்}, மன்னன் துருபதனின் தந்தையும், என் கூட்டணியைச் சேர்ந்தவனும் ஆவான்.(72,73) அதன்பிறகு, போர்க்களத்தில் துருபதனை வென்ற அர்ஜுனன், அஹிச்சந்திரத்துடன் சேர்ந்து காம்பில்ய மாகாணத்தையும் துரோணருக்கு அளித்தான்.(74) வெற்றியாளர்களில் முதன்மையான துரோணர், இரண்டு அரசுகளையும் ஏற்றுக் கொண்ட பிறகு, காம்பில்யத்தைத் துருபதனிடம் திருப்பிக் கொடுத்தார். இதை நீ அறிவாய்.(75) நான் இவ்வாறே துருபதனின் மூதாதையரான பிரம்மதத்தனின் குலத்தையும், வீரனான உக்ராயுதனின் குலத்தையும் உனக்கு விரிவாகச் சொன்னேன்" என்றார் {பீஷ்மர்}[5].(76)

[5] பிபேக்திப்ராயின் பதிப்பில் இத்தோடு இந்த அத்தியாயம் நிறைவடைகிறது. இனிவரப்போகும் பூஜனி என்ற பறவையின் கதை அதிலில்லை.

யுதிஷ்டிரன், "ஓ! கங்கையின் மைந்தரே, பூஜனி என்ற பறவையானவள் ஏன் பிரம்மதத்தனின் மூத்த மகனுடைய கண்களைப் பிடுங்கினாள்?(77) அவள் அவனுடைய வீட்டில் நீண்ட காலம் வாழ்ந்தாள். (பிறகு) ஏன் அவள் அந்த உயரான்ம மன்னனுக்கு இத்தகைய தீங்கை இழைத்தாள்?(78) பூஜனி ஏன் அவனுடன் நட்பு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டாள்? என்னுடைய இந்த ஐயங்கள் அனைத்தையும் முறையாக நீர் நிறைவடையச் செய்வீராக" என்று கேட்டான்.(79)

பீஷ்மர், "ஓ! பேரரசனே, ஓ! யுதிஷ்டிரா, பிரம்மதத்தனின் வீட்டில் முன்பு நடந்தவற்றை முறையாகக் கேட்பாயாக.(80) ஓ! மன்னா, ஒரு குறிப்பிட்ட பெண் பறவை பிரம்மதத்தனிடம் தோழமையுடன் இருந்தாள். அவளுடைய இரண்டு சிறகுகள் வெண்ணிறத்திலும், தலை சிவப்பு மற்றும் கருப்பாகவும், வயிறு கருப்பாகவும் இருந்தன.(81) பிரம்மதத்தன் அந்தப் பெண் துணையிடம் பெரும்பற்றுக் கொண்டிருந்தான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அவள் அவனுடைய வீட்டில் ஒரு கூட்டை அமைத்துக் கொண்டு அங்கே வாழ்ந்து வந்தாள்.(82) அவள் ஒவ்வொரு நாளும் அந்த அரண்மனையைவிட்டு வெளியே சென்று, கடற்கரைகளிலும், தடாகங்களிலும், குளங்களிலும் உலவித் திரிந்து வந்தாள்.(83) ஆறுகள், மலைகள், காடுகள், நந்தவனங்கள், வெண்ணிற நீராம்பல் மலர்களின் மணங்கமழும் தடாகங்கள், அல்லி மற்றும் தாமரை மலர்களின் மணம் நிறைந்த காற்றுடன் கூடியவையும், அன்னங்கள், சாரஸங்கள் {கொக்குகள்}, காரண்டவங்கள் {நீர்க்காக்கைகள்} நிறைந்தவையுமான இடங்களிலும் திரிந்துவிட்டு, இரவு நேரத்தில் காம்பில்ய நகரம் திரும்பி, நுண்ணறிவுமிக்க மன்னன் பிரம்மதத்தனின் வீட்டில் அவள் {பூஜனி என்ற பறவையானவள்} வாழ்ந்து வந்தாள்.(84-86)

அவள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயணித்தபோது கண்ட வினோத காரியங்களைக் குறித்து இரவில் தன் உரையாடலில் மன்னனிடம் விளக்கிச் சொல்வாள். ஓ! குருவின் வழித்தோன்றலே, ஒரு காலத்தில் மன்னர்களில் முதன்மையானவனான பிரம்மதத்தனுக்கு ஸர்வஸேனன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட ஒரு மகன் பிறந்தான். பூஜனியும், அங்கே ஒரு முட்டையை இட்டாள்.(87-89) உரிய நேரத்தில் முட்டை பொரிந்து, அதிலிருந்து கால்கள், கைகள் மற்றும் முகத்துடன் கூடிய ஒரு சதைப்பிண்டம் வெளியே வந்தது.(90) ஓ! மன்னா, அதன் முகம் பழுப்பு நிறத்தில் இருந்தது, அதற்குக் கண்களேதும் இல்லை {கண்கள் திறக்கவில்லை}. படிப்படியாக அந்தக் குஞ்சானது, கண்களைப் பெற்றது, அதன் சிறகுகளும் சிறிது வளர்ந்தன.(91) பூஜனி தன் குஞ்சிடமும், அந்த இளவரசனிடமும் நிகராகவே அன்பு செலுத்தி, படிப்படியாக அவர்களை விரும்பத் தொடங்கினாள்.(92) ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் அவள், (இளவரசன்) ஸர்வஸேனனுக்கும், தன் குஞ்சுக்குமென அமுதம்போன்ற இரு கனிகளைத் தன் அலகுகளில் கொண்டு வருவாள்.(93) பிரம்மதத்தனின் மகனும், அந்தக் குஞ்சும் அந்த இரு கனிகளை உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.(94) நாள்தோறும் அந்தக் கனிகளை உண்டு அவர்கள் வளரத் தொடங்கினர். பகலில் பூஜனி வெளியே சென்றதும், செவிலி அந்தப் பறவைக் குஞ்சை எடுத்து பிரம்மதத்தனுக்கு விளையாடக் கொடுப்பாள்.(95,96) பூஜனி கூட்டை விட்டு வெளியே சென்றதும், அந்த இளவரசன் விளையாடுவதற்காக அந்த இளங்குருவியை எடுத்துக் கொள்வான்.(97)

ஒரு காலத்தில் அந்த இளவரசன் அந்த இளம்பறவையின் கழுத்தை அழுத்தமாகப் பிடித்ததன் விளைவால் அஃது உடனே இறந்தது.(98) சிறுவனால் கொல்லப்பட்டு வாயை அகலத் திறந்து கிடந்த அந்த இளம்பறவையைக் கண்ட மன்னன், அதை அவனது பிடியில் இருந்து விடுவித்துப் பெரிதும் வருந்தி, செவிலியிடம் கண்டனம் தெரிவித்தான். அந்த இளங்குருவிக்காக அவன் பெருந்துயரில் நிறைந்தான்.(97-100) காட்டில் உலவித் திரியும் பூஜனியும் அந்நேரத்தில் பிரம்மதத்தனின் அரண்மனைக்கு இரு கனிகளுடன் வந்தாள்.(101) தன்னுடலில் இருந்து வெளிவந்த அந்தப் பிள்ளை இறந்ததை அங்கு வந்து கண்டாள்.(102) தன் குஞ்சு இறந்ததைக் கண்டதும் முதலில் அவள் நினைவிழந்தாலும் பிறகு படிப்படியாக மீண்டாள். நினைவுமீண்ட அந்தப் பாவப்பட்ட பறவையானவள் புலம்பத் தொடங்கினாள்.(103)

பூஜனி, "ஓ! என் குழந்தாய், என் கூக்குரலை வெளியிட்டு நான் கூட்டுக்குத் திரும்பி வரும்போதெல்லாம், நீ தெளிவற்ற உன் ஆயிரம் மொழிகளுடன் என்னிடம் வருவாயே.(104) மஞ்சள் முகம் மற்றும் கருப்புத் தொண்டையுடன் வாயைத் திறந்து கொண்டு நீ ஏன் இன்று வரவில்லை?(105) நான் எப்போதும் என் சிறகுகளை உன்னைத் தழுவிக் கொண்டு கூக்குரலிடுவேன். நான் ஏன் இன்று உன் தெளிவற்ற ஒலியைக் கேட்கவில்லை?(106) என்றாவது ஒரு நாள் என் குஞ்சான நீ உன் வாயைத் திறந்து கொண்டும், சிறகுகளை அசைத்துக் கொண்டும் நீர் கேட்பதை நான் காண விரும்பினேன்.(107) என்னுடைய அந்த ஆசை உன் மரணத்தால் தவிடுபொடியானது" என்றாள்.

இவ்வாறு பல்வேறு வகைகளில் புலம்பிய அவள் {பூஜனி}, அந்த மன்னனிடம்,(108) "ஓ! மன்னா, நீ ஒரு க்ஷத்திரியனாவாய்[6]. அறத்தின் நித்திய வழிமுறைகளை நீ அறிவாய். அப்படியிருந்தும் நீ ஏன் உன் செவிலியைக் கொண்டு என் குஞ்சைக் கொன்றாய்?(109) ஓ! க்ஷத்திரியரில் இழிந்தவனே, உன் மகன் ஏன் என் குஞ்சை எடுத்துக் கொன்றான்? அங்கிரஸின் ஸ்ருதியை நீ கேட்டதில்லையென நான் நினைக்கிறேன்.(110) உறைவிடம் நாடுபவன், பசித்தவன், பகைவர்களால் தாக்கப்பட்டவன், எப்போதும் தன் வீட்டில் வாழ்பவன் ஆகியோர் ஒரு மனிதனால் பாதுகாக்கப்பட வேண்டும்.(111) இந்தக் கடமையைப் புறக்கணிக்கும் ஒருவன் நிச்சயம் கும்பீபாகம் என்ற நரகிற்குச் செல்வான். ஸ்வதா மந்திரங்களுடன் அவனால் அளிக்கப்படும் ஹவிஸையும், உணவையும் தேவர்களும், பித்ருக்களும் எவ்வாறு ஏற்பார்கள்?" என்று கேட்டாள்.(112)

[6] "இங்கே மூலத்தில் இருப்பது மூர்த்தாபிஷிக்தம் என்ற சொல்லாகும். தலையில் நீர் தெளிக்கப்பட்டவன் என்பது இதன் பொருளாகும். பட்டமேற்கும்போது க்ஷத்திரியர்கள் இந்தச் சடங்கைச் செய்து கொள்வார்கள்" என மன்மதநாததத்தர் விளக்குகிறார்.

இவ்வாறு அந்தப் பெரும் மன்னனிடம் சொல்லிவிட்டு, துயராலும், பத்து வகைக் குணங்களால்[7] பீடிக்கப்பட்ட அவள் (அந்தப் பறவையானவள்) {தன் அலகால்} அந்தச் சிறுவனின் கண்களைக் குத்திக் கிழித்தாள்.(113) இதனால் அந்த இளவரசனின் கண்கள் பறிக்கப்பட்டன. இவ்வாறு அவனைக் குருடாக்கிவிட்டு பூஜனி என்ற அந்தப் பறவை வானத்தில் பறந்து சென்றாள்.(114)

[7] "குடிகாரன், பைத்தியக்காரன், களைத்தவன், பசித்தவன், கோபம் கொண்டவன், அவசரம் கொண்டவன், அச்சம் கொண்டவன், கலக்கமடைந்தவன், உணர்ச்சிமிக்கவன் ஆகியோரின் குணங்களே இவையாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

தன் மகனைக் கண்ட மன்னன், அந்தப் பறவையிடம், "ஓ! மங்கலமானவளே, உன் துயரைக் கைவிடுவாயாக. ஓ! அச்சம் கொண்ட பறவையே, நீ சரியாகவே செய்திருக்கிறாய்.(115) உன் கவலையை விட்டுத் திரும்பி வருவாயாக; உன் நட்பு நிலைத்திருக்கட்டும். என் நகரத்தில் வாழ்ந்து இன்புற்றிருப்பாயாக. உனக்கு நன்மை நேரட்டும்.(116) என் மகனின் தீப்பேற்றினால் விளைந்ததற்கு உன்னிடம் நான் கிஞ்சிற்றும் கோபம் கொள்ளவில்லை. என் நண்பராய் இருப்பாயாக. நீ பிரிந்து செல்லாதே. உன் கடமையையே நீ செய்திருக்கிறாய்" என்றான்.(117)

பூஜனி, "என்னைப் போலவே நீயும் உன் மகனிடம் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாய் என்பதை நான் அறிவேன். உன் மகனைக் குருடாக்கிவிட்டு நான் இங்கே வாழ விரும்பவில்லை.(118)

ஆசானான சுக்கிரரால் சொல்லப்பட்ட கருப்பொருட்களை நான் திரும்பச் சொல்கிறேன் கேட்பாயாக. {சுக்கிராச்சாரியார் சொன்னதாகப் பூஜனி சொன்னது}, "தீய நண்பன், தீய நாடு, தீய மகன், தீய மனைவி ஆகியோரை எப்போதும் ஒருவன் தொலைவிலேயே விட்டுவிட வேண்டும். ஒரு தீய நண்பனிடம் நட்போ, ஒரு தீய மனைவியிடம் பற்றோ ஒருபோதும் ஏற்படாது. ஒருவன் ஒரு தீய மகனிடம் இருந்து பிண்டத்தை எதிர்பார்க்க முடியாது, ஒருவன் ஒரு தீய மன்னனை நம்ப முடியாது.(119,120) ஒரு தீய நண்பனை எவனால் நம்பமுடியும்? ஒரு தீய நாட்டில் ஒருவனால் வாழ முடியாது. தீய மன்னனைக் கண்டு மக்கள் எப்போதும் அஞ்சுவார்கள், ஒரு தீய மகன் எப்போதும் பேரிடரையே கொண்டுவருவான்.(121) பலவீனனும், தன்னைப் பாதுகாக்க எவரும் இல்லாதவனுமான இழிந்த மனிதன் ஒருவன் தனக்குத் தீங்கிழைக்கக் கூடிய மனிதனை நம்பினால் நீண்ட நாள் வாழ மாட்டான்.(122) நம்பிக்கையற்ற மனிதனை ஒருபோதும் நம்பக்கூடாது, நம்பிக்கையுள்ள மனிதனிடமும் அதிக நம்பிக்கை வைக்கக்கூடாது. நம்பிக்கையினால் விளையும் அச்சம் வேர்கள் அனைத்தையும் அழித்துவிடும்.(123)

இழிந்த சாதியில் நம்பிக்கை வைத்து ஒரு மனிதனுக்குத் தொண்டாற்றும் மூடன், நீண்டகாலம் உயிர்வாழ மாட்டான்.(124) பிறந்தவுடனேயே பறவைகளால் விழுங்கப்படும் மண்புழுக்களைப் போல மனிதர்களும், ஒரு மன்னனிடம் இருந்து முன்னேற்றத்தை அடைந்தால் நிச்சயம் விரைவில் அழிவை அடைவார்கள்.(125) ஒரு பெருமரத்தை அழிக்கும் கொடியைப் போலவே, மெல்லியல்புடன் தன் உடலை அழித்துக் கொள்ளும் ஒரு கல்விமானும், நாள்தோறும் தன் பகைவர்களுக்கு அழிவைக் கொண்டுவருவான்.(126) முதலில் மென்மையாகவும், கனிவாகவும், மெலிவாகவும் மாறும் ஒரு பகைவன், ஒரு மண்புழு ஒரு மரத்தை மெல்லமெல்ல ஒழிப்பதைப் போலவே படிப்படியாகத் தன் உடலை மெலியச் செய்து, அதன்பிறகு நம்மைக் கொல்வான்.(127)

"நான் எவனையும் அழிக்கமாட்டேன்" என்று தவசிகளின் முன்னிலையில் உறுதிமொழியளித்த ஹரி, ஓ! மன்னா, அதன் பிறகு நுரையைக் கொண்டு நமுசியைக் கொன்றான்.(128) ஒரு மனிதனானவன், தன் பகைவன், உறங்கிக் கொண்டிருந்தாலும், குடித்திருந்தாலும், கவனமில்லாமல் இருந்தாலும், நஞ்சு, நெருப்பு அல்லது நீரைக் கொண்டு அவனை அழிப்பான்.(129) எதிர்காலப் பகைமைக்கு அஞ்சும் மனிதர்கள், பகைவர்களில் எஞ்சியவர்களை ஒருபோதும் விடமாட்டார்கள். ஓ! மன்னா, இந்த எடுத்துக்காட்டை நினைவில் கொள்ளும் அவர்கள், தங்கள் பகைவர்களுக்கு முற்றான அழிவைக் கொண்டு வருகிறார்கள்.(130)

ஓ! மன்னா, பகைவர், கடன் மற்றும் நெருப்பில் எஞ்சியிருப்பது மீண்டும் ஒன்றிணைந்து விகிதமேற்கும். எனவே, இவை மூன்றிலும் எதையும் ஒருபோதும் மிச்சம் வைக்கக்கூடாது.(131) ஒரு பகைவன் சிரிப்பான், பேசுவான், ஒரு தட்டில் உணவருந்துவான், ஒரே இருக்கையில் அமரவும் செய்வான், ஆனால் அவன் அந்தப் பாபத்தை எப்போதும் மனத்தில் வைத்திருப்பான்.(13) ஒரு பகைவனிடம் ஒருவன் உறவு பூண்டாலும் அவனை ஒருபோதும் அவன் நம்பக்கூடாது. தேவர்களின் மன்னன் {இந்திரன்}, புலோமனுக்கு மருமகனாகவே இருந்தாலும், அவனே அவனைக் கொன்றான்.(133) ஒரு மான் ஒரு வேடனை அணுகாதத்தைப் போலவே, ஞானம் கொண்ட ஒரு மனிதனும், இதயத்தில் பகையை வைத்துக் கொண்டு இனிய சொற்களில் பேசுபவனின் அருகில் செல்லக்கூடாது.(134) செழிப்படைந்த பகைவனின் அருகில் வாழ்வது முறையாகாது. ஓராறு ஒரு மரத்தை அழிப்பதைப் போலவே அவன் நம்மை அழித்துவிடுவான்.(135) ஓர் எதிரியிடம் இருந்து முன்னேற்றத்தை அடைந்தாலும் அவன் ஒருபோதும் அவனை நம்பக்கூடாது. அவனிடம் இருந்து செழிப்பை அடையும் ஒருவன், ஒரு மண்புழுவைப் போல அழிவை அடைவான்" {என்றார் சுக்ராச்சாரியார்}.(136)

ஓ! மன்னா, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் கல்விமான்கள், ஆசான் சுக்கிரரால் சொல்லப்பட்ட இந்த வரிகளை {ஸ்லோகங்களை} எப்போதும் தன் மனத்தில் கொள்ள வேண்டும்.(137) உன் மகனைக் குருடாக்கியதன் மூலம் நான் உனக்குப் பெருங்கொடுமையை இழைத்திருக்கிறேன். எனவே, நான் உன்னிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்க முடியாது" என்றது {பூஜனி என்ற அந்தப் பறவை}[8].(138)

[8] மஹாபாரதம், சாந்தி பர்வம் {ஆபத்தர்மாநுசாஸன உப பர்வம்} பகுதி 139ல்  பூஜனி மற்றும் பிரம்மதத்தனின் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

அந்தப் பறவையானவள் {பூஜனி}, இவையனைத்தையும் சொன்ன உடனே வானத்தில் பறந்து சென்றாள். ஓ! மன்னா, முன்பொருசமயம் பூஜனிக்கும், மன்னன் பிரம்மதத்தனுக்கும் இடையில் நடந்தவற்றை நான் உனக்கு விளக்கிச் சொன்னேன். ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, ஓ! யுதிஷ்டிரா, மார்க்கண்டேயர் கேட்ட கேள்விக்கு மறுமொழியாக ஸனத்குமாரர் சொன்ன சிராத்தத்தின் பழங்கால வரலாற்றை நீ கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் சொல்லப் போகிறேன்.(139-141) ஓ! மன்னா, பழங்காலத்தில் சிராத்தம் மற்றம் நல்வினையின் பலனைப் பெற விரும்பியவர்களும், மூன்று பிரம்மசாரிகளும், காலவர், கண்டரீகர் மற்றும் பிரம்மதத்தன் ஆகியோருக்கு அவர்களின் ஏழாம் பிறவியில் என்ன நடந்தது என்பதைக் கேட்பாயாக" என்றார் {பீஷ்மர்}.(142,143)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 143
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்