(ப்ருதூபாக்யானம்)
A query regarding the origin of the aricles of food!| Harivamsa-Parva-Chapter-04 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : அதிஷ்டாத்ர தேவதைகளை நியமித்த பிரம்மன்; வைவஸ்வத மனுவிடம் தன் அரசை ஒப்படைத்த பிரம்மன்; வேனனின் மகன் பிருது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குடிமுதல்வன் {பிரம்மன்}, வேனனின் மகனான பிருதுவை உயர் தனித் தலைவனின் அலுவலில் {பூமியின் பேரரசனாக} நிறுவிய பிறகு, சோமனுக்கும், பிறருக்கும் அரசுகளை அளிக்கத் தொடங்கினான்.(1) அவன் சோமனை இருபிறப்பாளர்கள், மூலிகைகள், கோள்கள், நட்சத்திரங்கள், வேள்விகள் மற்றும் கடுந்தவங்கள் ஆகியவற்றின் பொறுப்பில் நியமித்தான்.(2) அதன் பிறகு அவன் {பிரம்மன்} வருணனை நீர்நிலைகளின் மன்னனாகவும், வைஸ்ரவணனை மன்னர்களின் தலைவனாகவும், விஷ்ணுவை ஆதித்யர்களின் மன்னனாகவும், பாவகனை வசுக்களின் மன்னனாகவும், தக்ஷனைக் குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} மன்னனாகவும், வாசவனை {இந்திரனை} மருத்துகளின் மன்னனாகவும், ஒப்பற்ற சக்தி கொண்ட பிரல்ஹாதனை {பிரஹலாதனை} தைத்தியர்கள் மற்றும் தானவர்களின் மன்னனாகவும், சூரியனின் மகனான யமனைப் பித்ருக்களின் மன்னனாகவும், நாராயணனை மாத்ரிகள், நோன்புகள், மந்திரங்கள், பசுக்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், மன்னர்கள், ஆகியோரின் மன்னனாகவும், காளையைச் சின்னமாகக் கொண்ட சிவனைச் சாத்யர்கள் மற்றும் ருத்திரர்களின் மன்னாகவும் நிறுவினான்.(3-7) பிறகு அவன் விப்ரசித்தியைத் தானவர்களின் மன்னனாகச் செய்து, கதாதாரியான கிரீசனை (சிவனை) பூதகணங்கள் அனைத்தின் மன்னனாக்கினான்.(8)
ஹிமவானை மலைகளின் மன்னனாகவும், பெருங்கடலை ஆறுகளின் மன்னனாகவும் ஆக்கி, பெரும்பலம் கொண்ட வாயுவை மணம், உடலற்ற உயிரினங்கள், ஒலி, ஆகாயப் மற்றும் பூமி ஆகியவற்றுக்கு மன்னனாக நியமித்தான்.(9) மேலும் அவன், தலைவன் சித்திரரதனை கந்தர்வர்களின் மன்னனாகவும், வாசுகியை நாகர்களின் மன்னனாகவும், தக்ஷகனை பாம்புகளின் மன்னனாகவும் ஆக்கினான்.(10) அவன் ஐராவதனை யானைகளின் மன்னாகவும், உச்சைஸ்ரவத்தைக் குதிரைகளின் மன்னனாகவும், கருடனைப் பறவைகளின் மன்னனாகவும், புலியை விலங்குகளின் மன்னாகவும், காளையைப் பசுக்களின் மன்னனாகவும், பிலக்ஷத்தை {ஆல மரத்தை} மரங்களின் மன்னனாகவும், பர்ஜன்யனை, பெருங்கடல், ஆறுகள், மழை மற்றும் ஆதித்யர்களின் மன்னனாகவும் நிறுவினான்.(11-13) அவன் சேஷனை காட்டு விலங்குகளின் மன்னனாகவும், தக்ஷகனை, ஊர்வன மற்றும் பாம்புகளின் மன்னனாகவும் நிறுவினான்.(14) காமதேவனைக் கந்தர்வர்கள் மற்றும் அசுரர்களின் மன்னனாகவும், பருவகாலங்கள், மாதங்கள், நாட்கள், பக்ஷங்கள், கணங்கள், கோள்களின் சந்திப்புகள், பர்வங்கள், கலைகள், காஷ்டைகள், பிரமாஷைகள் {கதிகள்}, அயனங்கள், கணிதம் மற்றும் {யோகம், கரனை உள்ளிட்ட} இதரவை அனைத்துக்கும் ஸம்வத்ஸரனை மன்னனாகவும் ஆக்கினான். இவ்வாறு நாடுகளைப் பிரித்த பிரம்மன் பின்னர்த் திசைகளின் பாதுகாவலர்களை {திக்பாலர்கள்} நிறுவினான். குடிமுதல்வன் வைராஜனின் மகன் ஸுதன்வனைக் கிழக்குத் திசையின் பாதுகாவலனாக அவன் நிறுவினான். தெற்கில் அவன் குடிமுதல்வன் கர்தமரின் மகன் சங்கபாதனை நிறுவினான், ரஜஸின் மகனான உயர் ஆன்ம கேதுமானை மேற்கின் மன்னனாக அவன் நிறுவினான். தடுக்கப்பட முடியாதவனும், குடிமுதல்வன் பர்ஜன்யனின் மகனுமான ஹிரண்யரோமனை வடக்கின் மன்னனாக அவன் நிறுவினான். இப்போதும் அவர்கள் ஏழு தனித்தீவுகளான கண்டங்கள் மற்றும் மலைகளுடன் கூடிய அவர்களுக்குரிய மாகாணங்களைப் பக்தியுடன் ஆண்டுக் கொண்டிருக்கின்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி செய்யப்பட்ட ஒரு ராஜசூய வேள்வியில் இந்த மன்னர்கள் அனைவராலும் பிருது உயர்ந்த தலைவனாக நியமிக்கப்பட்டான்.(15-23)
மிகத் தீவிரமான சக்ஷுஷ மன்வந்தரம் முடிந்ததும் குடிமுதல்வன் பிரம்மன் தன்னரசை வைவஸ்வத மனுவிடம் கொடுத்தான். ஓ! பாவமற்ற மன்னா, நீ கேட்க விரும்பினால் உனக்கு உதவ (அவனுடைய வாழ்வு) அந்தக் கதையை நான் விரிவாகச் சொல்வேன். புராணத்தில் இது முழுமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இது புனிதமானதும், புகழ், நீண்ட வாழ்நாள், சொர்க்கவாசம் மற்றும் மங்கலம் ஆகியவற்றை அளிக்கவல்லதுமாகும்" {என்றார் வைசம்பாயனர்}.(24,25)
ஜனமேஜயன், "ஓ! வைசம்பாயனரே, பிருதுவின் பிறப்பு குறித்தும், அந்த உயர் ஆன்மாவால் இந்த உலகம் எவ்வாறு கறக்கப்பட்டது என்பதையும் எனக்கு முழுமையாக விளக்குவீராக;(26) பித்ருக்கள், தேவர்கள், முனிவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், யக்ஷர்கள், பாம்புகள், மலைகள், பிசாசங்கள், கந்தர்வர்கள், முதன்மையான பிராமணர்கள், ராட்சசர்கள் மற்றும் வேறு பெரும் உயிரினங்களால் அவள் {பூமி} எவ்வாறு கறக்கப்பட்டாள் என்பதைச் சொல்வீராக.(27,28) ஓ! வைசம்பாயனரே, அவள் கறக்கப்படப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், கன்றுகள் மற்றும் பல்வேறு பொருட்களை எனக்கு வரிசையாகச் சொல்வீராக.(29) முன்னர், கோபம் நிறைந்த முனிவர்களால் வேனன் கை ஏன் கடையப்பட்டது என்பதையும் சொல்வீராக" என்று கேட்டான்.(30)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ! ஜனமேஜயா, வேனனின் மகனான பிருதுவைக் குறித்து விரிவாக உனக்குச் சொல்கிறேன், குவிந்த மனத்துடனும், கவனத்துடனும் கேட்பாயாக.(31) ஓ! ஏகாதிபதி, எவன் தூய்மையற்றவனோ, சிறுமதி கொண்டவனோ, சீடனாகத் தகாதவனோ, நோன்புகள் நோற்காதவனோ, நன்றியற்றவனோ, மக்களுக்குத் தீங்கிழைப்பவனோ அவனுக்கு இதை நான் சொல்ல மாட்டேன்.(32) ஓ! மன்னா, தேவர்களைப் போன்ற முனிவர்களால் விளக்கப்பட்டதும், சொர்க்கத்தை அடையச் செய்வதும், (அனைவருக்கும்) நீண்ட வாழ்நாளையும், புகழையும், செல்வங்களையும் அருளவல்லதுமான இந்தக் கருப்பொருளை நீ முறையாகக் கேட்பாயாக.(33) நாள்தோறும் பிராமணர்களை வணங்கி, வேனனின் மகனான பிருதுவின் பிறப்புக் கதையைக் கேட்கும் ஒருவன் தன்னால் இழைக்கப்பட்ட நன்மைதீமைகளுக்காக வருந்தமாட்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(34)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 34
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |