(வேன சரிதம் - ப்ருதோத்பத்தி)
An account of Vena and Prithu!| Harivamsa-Parva-Chapter-05 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : வேனன் பிறப்பு; வேனனின் அறம்வழுவிய ஒழுக்கம்; வேனனின் அஹங்காரம்; முனிவர்களால் அழிக்கப்பட்ட வேனன்; வேனனின் இடது தொடையில் பிறந்த நிஷாதன்; அவனது வலது கையில் பிறந்த பிருது; உலகின் முதல் மன்னன் பிருது; பிருதுவைத் துதிக்க முனிவர்களால் நியமிக்கப்பட்ட சூதரும், மாகதரும்; பசுவாக மாறி தப்பி ஓடிய பூமாதேவி; பின்தொடர்ந்த பிருது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "முன்னர் அத்ரி குலத்தில் அவரைப் போலவே பலமிக்கவனாக இருந்த குடிமுதல்வன் அங்கன், அறப்பாதுகாவலனானான்.(1) வேனன் என்ற பெயரில் {அறத்தில் அக்கறையில்லாத} மிக இழிவான மகன் அவனுக்குப் பிறந்தான். அந்தக் குடிமுதல்வன் {வேனன்} மரணத்தின் {மிருத்யுவின்} மகளான சுனீதைக்குப் பிறந்தான்.(2) தன் தாய்வழி தாத்தாவின் குறைபாட்டை உள்வாங்கிக் கொண்ட அந்தக் காலனின் மகன் {வேனன்}, தன் கடமைகளில் இருந்து விலகி, உலகில் ஒழுக்க விடுதலையைப் போதித்தான்.(3) அந்த மன்னன் {வேனன்}, அறமில்லாவொழுங்கை நிறுவி, வேத வினைமுறைகளைப் புறக்கணித்து இழிவான செயல்களில் ஈடுபட்டான்.(4) அவனுடைய நிர்வாகத்தில், வேத கல்வி மற்றும் வேதச் சடங்குகள் இடைநிறுத்தப்பட்டன. வேள்விகளில் புனிதப்படுத்தப்பட்ட சோமச் சாறானது தேவர்களுக்குக் கிட்டவில்லை.(5) அந்தக் குடிமுதல்வனின் பயங்கர உறுதிமொழியானது, ஹோமம் அல்லது வேள்விகளை அழிவுக்காலத்திலும் கூட எவரும் செய்யாத வகையில் இருந்தது.(6)
ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, (அவன்), "துதிக்கத் தகுந்தவன் நானே, வேள்வியைச் செய்பவன் நானே, வேள்வியும் நானே, எனவே, நீங்கள் உங்கள் வேள்விகள் மற்றும் ஹோமங்கள் அனைத்தையும் எனக்கே அர்ப்பணிக்க வேண்டும்" (என்றான்).(7)
மரீசி தலைமையிலான பெரும் முனிவர்கள், அவன் இவ்வாறு ஒழுங்கை மீறுவதையும், வேள்விக் காணிக்கைகளில் நியாயமில்லாமல் முறையற்ற வகையில் செயல்படுவதையும் கண்டு,(8) "ஓ! வேனா, பல ஆண்டுகள் நீடிக்கப்போகும் நித்திய அறத்திற்கான தொடக்கச் சடங்கை நாங்கள் செய்யபோகிறோம். எனவே நீ நீதியில்லாமல் செயல்படாதே.(9) அத்ரி இறந்தபிறகு, நீ குடி முதல்வனாகப் பிறந்தாய் என்பது உண்மையே. மேலும் குடிமக்களை ஆள்வாய் என்ற உடன்படிக்கையையும் நீ செய்திருக்கிறாய்" என்றனர்.(10)
இதை அவர்கள் சொன்னதும், தீய மனம் கொண்ட வேனன் சிரித்தபடியே பின் வரும் தீய சொற்களை அந்தப் பெரும் முனிவர்கள் அனைவரிடமும் சொன்னான்.(11) வேனன், "அறத்தை நிறுவுபவன் {என்னையன்றி} வேறு எவன்? எவன் சொல்வதை நான் கேட்க வேண்டும்? இந்தப் பூமியில் கல்வி, சக்தி, ஆற்றல், தவம் மற்றும் வாய்மையில் என்னைவிட மேன்மையானவன் எவன்?(12) அனைத்து உயிரினங்களும், குறிப்பாக அறத்தின் வடிவங்கள் அனைத்தும் என்னில் இருந்தே உண்டாகின. நீங்கள் அனைவரும் மூடர்களாகவும், நனவற்றவர்களாகவும் இருப்பதால் என்னை அறியாமல் இருக்கிறார்கள்.(13) நான் விரும்பினால் பூமியை எரிக்கவோ, நீரில் மிதக்க வைக்கவோ செய்வேன். சொர்க்கத்தையும், பூமியையும் {அவற்றின் முன்னேற்றத்தை} என்னால் தடுக்க முடியும்; இது குறித்துக் கலந்துரையாட வேண்டிய அவசியம் இல்லை" என்றான்.(14)
அந்த உன்னத முனிவர்களால், செருக்கு மற்றும் அகங்காரத்தில் இருந்து வேனனை பணிவு கொள்ளச் செய்ய இயலாத போது, கோபமடைந்த அவர்கள் {முனிவர்கள்}, பெரும்பலம் மிக்க அந்த மன்னனை {வேனனை} நையப் புடைத்து, அவனது இடது தொடையைக் கடையத் தொடங்கினர்[1].(15,16) அந்த மன்னனின் இடது தொடை கடையப்பட்டபோது, மிகக் கரியவனும், உயரம் குறைந்தவனுமான {குள்ளமானவனுமான} ஒரு மனிதன் அங்கே எழுந்தான்.(17) ஓ! ஜனமேஜயா, அவன் தன் கரங்களைக் கட்டிக் கொண்டு அச்சத்தால் பீடிக்கப்பட்டவனாக அங்கே நின்றான். அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவனைக் கண்ட அத்ரி அவனிடம் "நிஷீதம்" அமர்வாயாக என்றார்.(18) ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, அவனே நிஷாதர்களின் (வேடர்களின்) குலத்தைத் தோற்றுவித்தவனாகி, வேனனின் பாவங்களால் உண்டான மீனவர்களின் குலத்தையும் உண்டாக்கினான்.(19) மேலும், விந்திய மலையில் வாழ்பவர்களும், பக்தியின்மையில் மகிழ்ச்சியடைபவர்களுமான துஷாரர்கள், தும்புரர்கள் மற்றும் பிற குலங்களும், வேனனிடமே பிறந்தனர்.(20)
[1] தேசி ராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பரவசத்தில் திளைத்த களங்கத்துடன் இருந்த அந்த மன்னன் வேனனை திசை திருப்ப முடியாத போது, கோபம் நிறைந்தவர்களும், பேரான்மாக்களாகவும் இருந்த அந்த முனிவர்கள், அனைவரின் மீதும் பாய்ந்து கொண்டிருந்த வலிமைமிக்க வேனனைக் கட்டுப்படுத்தி, மேலும் சீற்றமடைந்து அவனது இடது தொடையைக் கடையத் தொடங்கினர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அந்த முனிவர்கள் அவனை மரணத் தண்டைக்கு உட்படுத்தியதாகச் சில உரைகள் சொல்கின்றன. நாட்டைப் பாதுகாப்பதற்குரிய சந்ததி அந்த மன்னனுக்கு இல்லையென்பதை உணர்ந்த அந்தத் தவசிகள், சந்ததியை உண்டாக்குவதற்காக அவனது தொடையைக் கடையத் தொடங்கினர்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "மஹரிஷிகள், கொடியவனும், வலிமைமிக்கவனுமான மன்னன் வேனனைத் தடுக்க முனைந்தனர். அவர்களால் வெல்ல முடியாத போது, அவர்கள் கோபமடைந்தனர். தன் பலத்தில் வீங்கியிருந்த அவனை அந்தப் பேரான்மாக்கள் தங்கள் கோபத்தால் பற்றினர். அவர்கள் அவனுடைய இடது தொடையைப் பிசைந்தனர்" என்றிருக்கிறது.
அதன் பேரில், அந்த உயர் ஆன்ம முனிவர்கள் கோபமடைந்தவர்களாக, நெருப்பு மூட்டப் பயன்படுத்தப்படும் கட்டையைப் போல வேனனின் வலது கையைக் கடையத் தொடங்கினர்.(21) அந்தக் கையில் இருந்து தழலுக்கு ஒப்பானவனும், நெருப்பைப் போலப் பிரகாசமாக எரிபவனுமான பிருது தோன்றினான்.(22) பெருஞ்சிறப்புமிக்கவனான அந்தப் பிருது, மிகச் சிறந்ததும், முதன்மையானதுமான ஆஜகவம் என்ற தன் வில்லுடனும், தெய்வீக கணைகளுடனும், தன் உடலைப் பாதுகாக்கும் பேரொளி கொண்ட கவசத்துடனும் பிறந்தான்.(23,24) அவன் பிறந்ததும் உயிரினங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் நிறைந்தன, ஓ! ஏகாதிபதி, வேனனும் தெய்வீக உலகத்திற்குச் சென்றான்.(25)
ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, பெருமைமிக்க நல்ல மகனான பிருது பிறந்து, புத் என்றழைக்கப்படும் நரகில் இருந்து வேனனைக் காத்தான்.(26) பெருங்கடல்கள் ரத்தினங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, அவனது பட்டாபிஷேகத்திற்கு நீர் கொண்டு வந்தன.(27) தேவர்களுடன் கூடிய பிரம்மன், அங்கீரஸின் சந்ததியினர், அசையும் மற்றும் அசையாத பிற உயிரினங்கள் அனைத்தும் அங்கே வந்து வேனனின் மகனான அந்தப் பிரகாசமிக்க மன்னனை {பிருதுவை}, மிகப் பரந்த அரசின் தலைவனாக நிறுவின.(28,29) பெருஞ்சக்திமிக்க, பலமிக்க வேனன் மகனான பிருது, வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களை நன்கறிந்த முதன்மையான முனிவர்களால் {பூமியின்} முதல் மன்னனாக நிறுவப்பட்டான்.(30)
வேனானின் தந்தையால் நிறைவடையாத குடிமக்கள் அவனால் {பிருதுவால்} நிறைவடைந்தனர். அவன் அவர்களுடைய அன்புக்குப் பாத்திரனாக இருந்ததால் அவன் ராஜா (மன்னன்) என்றழைக்கப்பட்டான்[2].(31) அவன் பெருங்கடலில் பயணம் மேற்கொள்ளும்போது நீரானது நிலமாகக் கடினமடைந்தது, மலைகள் அவனுக்கு வழிவிட்டன, மரங்களின் கிளைகள் முறியவில்லை.(32) பூமி உற்பத்தியை எளிதில் வளர்த்தது, மேலும் நினைத்த உடனேயே உணவுப் பொருட்கள் விளைந்தன. கறக்கப்படும்போதெல்லாம் பசுக்கள் பாலைக் கொடுத்தன, ஒவ்வொரு இலையிலும் தேன் பெருகியது[3].(33) அதே வேளையில், பிரம்மனின் புனித வேள்வியில் உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட சூதர் பிறந்தார்.(34) அந்தப் பெரும் வேள்வியில் ஞானியான மாகதரும் பிறந்தார். பிருதுவின் மகிமைகளைச் சொல்வதற்காக அவர்கள் இருவரும் தெய்வீக முனிவர்களால் அழைக்கப்பட்டனர்.(35)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "எவனுடைய மகிழ்வான ஆட்சியில் மக்கள் திளைத்திருக்கிறார்களோ அவனே ராஜா" என்றிருக்கிறது.[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அவன் பயணம் செய்த போது கடல் நீர் அமைதியாக இருந்தது, மலைகள் கடப்பதற்கான வழிகளை அவனுக்குக் கொடுத்தன, சாய்ந்திருந்த மரங்களும் அவனது கொடியைத் தட்டி வீழ்த்தவில்லை. பயிரிடப்படாத போதும், கைக்கு எட்டக்கூடிய அளவில் பூமி விளைச்சலைக் கொடுத்தது, பசுக்களில் ஆசைகள் அனைத்தும் கறக்கப்பட்டன, ஒவ்வொரு இலையின் குருத்தும் தேனைப் போல இருந்தன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவன் சென்ற போது பெருங்கடல்களின் நீர் அசையாமல் இருந்தது, மலைகள் அவனுக்கு வழி வகுத்தன. அதன் காரணமாக அவனுடைய கொடிமரம் இரண்டிலும் பற்றப்படவில்லை. அந்நேரத்தில், உழாமல் நினைத்த மாத்திரத்திலேயே பூமி தானியங்களை விளைவித்தது. பசுக்களின் பால் ஆசைக்குரிய அனைத்துப் பொருட்களையும் கொடுத்தது. அனைவரின் கையிலும் தேன் இருந்தது" என்றிருக்கிறது.
அந்த முனிவர்கள் அனைவரும் அவர்களிடம், "நீங்கள் இந்த மன்னனின் மகிமைகளைப் பாடுவீராக. இந்தப் பணி உங்களுக்குத் தகுந்தது, இந்த மன்னும் அதற்குத் தகுந்தவனே" என்றனர்.(36)
சூதரும், மாகதரும், அந்த முனிவர்கள் அனைவரிடமும், "நாங்கள் எங்கள் செயல்களால் தேவர்களையும், முனிவர்களையும் திளைக்கச் செய்வோம்.(37) ஓ! இருபிறப்பாளர்களே, சக்திமிக்கவனான இந்த மன்னனின் செயல்பாடுகள், குணங்கள் மற்றும் புகழை நாங்கள் அறிந்தவர்களல்ல. எங்களால் எவ்வாறு இவனது மகிமைகளைப் பாட முடியும்?" என்று கேட்டனர்.(38)
அப்போது, "பெரும்பலம் கொண்டவனான பிருது முந்தைய கல்பத்தில் செய்த செயல்களின் மகிமைகளை நீங்கள் பாடுவீராக. வாய்மை பேசுபவனும், நற்குணம் கொண்டவனும், உறுதிமொழியைக் காப்பாற்றுபவனும், பணிவுள்ளவனும், அனைவருக்கும் நன்மை செய்பவனும், மன்னிக்கும் தன்மை கொண்டவனும், நன்றியுணர்வு மிக்கவனும், கருணையுள்ளவனுமான இந்த மன்னன் {பிருது}, எப்போதும் இனிய சொற்களைப் பேசுபவனாகவும், தகுந்தவரைக் கௌரவிப்பவனாகவும், வேள்விகளைச் செய்பவனாகவும், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், அமைதியான மனநிலை கொண்டவனாகவும், சமூகத்தின் விதிகளைப் பின்பற்றுபவனாகவும் இருக்கிறான்" என்று (அவனது மகிமைகளைப் பாடும்படி) அந்த முனிவர்களால் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதுமுதல், ஓ! ஜனமேஜயா, சூதர்களும், மாகதர்களும் (துதிபாடிகளும்) மகிமைகளைப் பாடும் வேளையில் அவர்கள் தங்கள் ஆசிகளை இந்த உலகில் பொழிகிறார்கள்.(39-42) அவர்களது துதியில் பெரும் நிறைவடைந்த மன்னன் பிருது, அந்தச் சூதருக்கு அரூப {அனூப} மாகாணத்தையும், மாகதருக்கும், மகதத்தையும் கொடுத்தான்.(43)
இதன்பேரில் மகிழ்ச்சியடைந்த பெரும் முனிவர்களும், குடிமக்களும், "இந்த மன்னன் மெய்யாகவே எங்களுக்குரிய ஏற்பாடுகளை {தொழில்களை} அபரிமிதமாகச் செய்வான்" என்றனர்.(44) அந்தப் பெரும் முனிவர்கள் சொன்ன சொற்களைக் கேட்ட குடிமக்கள், வேனனின் மகனை {பிருதுவை} அணுகி, தங்களுக்குரிய ஏற்பாடுகளுக்காக அவனை இரந்து கேட்டனர்.(45) இவ்வாறு தன் குடிமக்களால் அணுகப்பட்ட அந்தப் பலமிக்க மன்னனர், அவர்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் வில்லை எடுத்துக் கொண்டு பூமியின் மீது தாக்குதல் தொடுத்தான்.(46) அப்போது பூமியானவள் வேனனின் மகன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகப் பசுவின் வடிவை ஏற்றுத் தப்பி ஓடினாள். பிருதுவும் தன் வில்லை எடுத்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.(47) வேனனின் மகனுக்கு {பிருதுவுக்கு} அஞ்சி பிரம்மலோகம் மற்றும் பிற உலகங்களுக்குச் சென்றும், கையில் வில்லுடன் தன் முன் நிற்கும் அவனையே அவள் கண்டாள்.(48) கூராக்கப்பட்ட கணைகளுடன் கூடிய அவன், எரியும் நித்திய நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான், மேலும் தேவர்களாலேயே அந்த உயர் ஆன்மாவை {பிருதுவை} அடக்க முடியவில்லை.(49)
பிரம்ம லோகத்திற்குச் சென்றும் அவள் பாதுகாப்பைக் காணவில்லை; மூவுலகங்களாலும் துதிக்கப்படும் பூமியானவள், கூப்பிய கரங்களுடன் வேனனின் மகனிடம் {பிருதுவிடம்}, "ஒரு பெண்ணைக் கொன்று பாவமிழைக்காதே. ஓ! மன்னா, நான் இல்லாமல் உன்னால் உன் குடிமக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்?(50,51) ஓ! மன்னா, உலகங்கள் அனைத்தும் என்னிலேயே இருக்கின்றன, இந்த அண்டமே என்னால்தான் தாங்கப்படுகிறது. ஓ! மன்னா, என்னை அழித்தால் உயிரினங்கள் அனைத்தும் அழியும் என்பதை நீ அறிவாயாக.(52) ஓ! மன்னா, நீ உன் குடிமக்களுக்கு நன்மை செய்ய விரும்பினால், என்னைக் கொல்வது உனக்குத் தகாது. நான் சொல்லும் இந்தச் சொற்களைக் கேட்பாயாக.(53) வழிமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படும் பணிகள் வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன. ஓ! மன்னா, உன் குடிமக்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைத் தேடுவாயாக.(54) ஓ! மன்னா, என்னைக் கொல்வதன் மூலம் உன் குடிமக்களை எவ்வழிமுறையினாலும் உன்னால் காக்க இயலாது. ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே, நான் அதைக் கண்டுபிடிப்பேன் {குடிமக்களைப் பராமரிப்பதில் நான் உனக்கு உதவுவேன்}; நீ உன் கோபத்தைக் கட்டுப்படுத்துவாயாக.(55) தாழ்ந்த பிறவிகளான பெண்கள் கொல்லப்படக்கூடாது.(55) எனவே, ஓ! மன்னா, நீ அறநெறியைக் கைவிடக்கூடாது" என்றாள் {பூமாதேவி}.(56)
பக்திமானும், உயர் ஆன்மா கொண்டவனுமான அந்த மன்னன் {பிருது}, பூமி சொன்ன பல்வேறு சொற்களைக் கேட்டுத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளிடம் பேசத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(57)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 57
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |