Wednesday 12 February 2020

மனிதர்களின் தோற்றம் - தக்ஷனின் பிறப்பு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 02

(தக்ஷோத்பத்தி)

The origin of men: the birth of Daksha | Harivamsa-Parva-Chapter-02 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஸ்வாயம்பூ மனு மற்றும் ஷதரூபை; உத்தானபாதர்; துருவனின் பிறப்பு; வேனனை அழித்த முனிவர்கள்; வேனனிடம் தோன்றிய முதல் க்ஷத்திரியன் பிருது; பூமியைக் கறந்த பிருது; பிராசேதஸ்களின் தவம்; பத்து பேரை மணந்த மாரிஷை; தக்ஷனின் பிறப்பு; பல்வேறு உயிரினங்களைப் படைத்த தக்ஷன்; பாலினக் கலவி மூலம் உயிரினங்கள் உண்டானது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குடிமுதல்வரான {பிரஜாபதியான} வசிஷ்டர், சந்ததி படைக்கும் தமது தொழில் {மனத்தால்} முடிவடைந்தபோது, எந்தப் பெண்ணில் இருந்தும் பிறக்காத ஷதரூபையைத் தமது மனைவியாக அடைந்தார்.(1) ஓ! ஏகாதிபதி, புலனுக்கு அப்பாற்பட்ட பகுதியை {உலகத்தை} மறைத்தபடி வசித்து வந்த அவர், தமது மகிமையாலும், யோக சக்தியாலும் ஷதரூபையைப் படைத்தார்.(2) ஒரு கோடி {1,00,00,000} வருடங்கள் கடுந்தவம் இருந்த அவள் {ஷதரூபை} தனல் போன்ற தவசக்தி கொண்ட தன் கணவரை அடைந்தாள்.(3) ஓ! குழந்தாய் {ஜனமேஜயா}, அந்தப் புருஷனே ஸ்வாயம்பூ மனு என்றழைக்கப்படுகிறான். இவ்வுலகில் அவனுடைய மன்வந்தரம் எழுபத்தோரு யுகங்களைக் கொண்டதாகும்.(4) அந்த அண்டப் புருஷன் {விராட்} ஷதரூபையிடம் வீரன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றான், அவன் {வீரன்} காம்யையிடம் பிரிவிரதன் மற்றும் உத்தானபாதன் என்ற பெயர்களைக் கொண்ட இரு மகன்களைப் பெற்றான்.(5)


ஓ! நீண்ட கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயனே}, குடிமுதல்வரான {பிரஜாபதியான} கர்த்தமரின் மகளான {மற்றொரு} காம்யையானவள், ஸாம்ராட், குக்ஷி, விராட், பிரபு என்ற நான்கு மகன்களைப் பெற்றாள். பிரியவிரதனைத் தன் கணவனாக அடைந்து அவள் அவர்களை ஈன்றாள்.(6) குடிமுதல்வரான {பிரஜாபதியான} அத்ரி, உத்தானபாதரைத் தமது மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார். ஸூன்ருதை {ஸுனீதை} உத்தானபாதர் மூலம் நான்கு மகன்களைப் பெற்றாள்.(7) தர்மனின் இளமை நிறைந்த மகள் ஸூன்ருதை என்று அறியப்பட்டாள். ஒரு குதிரை வேள்வியில் தோன்றிய அந்தத் தூய கன்னிகை {ஸூன்ருதை} துருவனின் அன்னையாவாள்.(8) குடிமுதல்வரான {பிரஜாபதியான} உத்தானபாதர் ஸூன்ருதையிடம் துருவன், கீர்த்திமான், ஆயுஷ்மான் {சிவன்} மற்றும் வசு {அயஸ்பதி} ஆகிய நான்கு மகன்களைப் பெற்றார்[1].(9) ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, பெரும் பிரம்மனையும், விஷ்ணுவையும் அடையும் நோக்கில், துருவன் மூவாயிரம் தேவ வருடங்கள் கடுந்தவம் இருந்தான்.(10)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் மொழிபெயர்ப்பில், "த்⁴ருவ, கீர்தி-மந்த, ஶிவ, அயஸ்பதி" என்று பெயர்கள் இருக்கின்றன. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தப் பெயர்கள், "துருவன், கீர்த்திமான், அப்யயஸ்மத், அயஸ்பதி" என்று இருக்கின்றன.

இதனால் நிறைவடைந்த குடிமுதல்வன் {பிரஜாபதியான} பிரம்மன், முனிவரெழுவரின் உலகத்திற்கு {சப்தரிஷி மண்டலத்துக்கு} முன்பு பூமியில் இணையற்ற ஒரு நிரந்தர இடத்தை {துருவ மண்டலத்தை} அவனுக்கு அளித்தான்.(11) தேவர்கள் மற்றும் அசுரர்களின் குரு (உசானஸ் {சுக்கிரன்}), அவனது {துருவனின்} பெருஞ்செழிப்பையும், மகிமையையும் கண்டு, பின்வரும் பாடலை {ஸ்லோகத்தைப்} பாடினார்,(12) "ஓ!, முனிவரெழுவரும் தங்கள் முன்னிலையில் கொண்டு வாழும் இவனது தவச் சக்தியும், சாத்திர அறிவும், ஆற்றலும் அற்புதம் நிறைந்தவையாகும்" {என்று சுக்கிராச்சாரியார் பாடினார்}.(13) துருவனிடம், ஸ்லிஷ்டி, பவ்யன், ஷம்பு {ஷும்பன்} ஆகியோர் பிறந்தனர். பாவமற்ற ஏழு {ஐந்து} மகன்களை ஸ்லிஷ்டி ஸுச்சாயையிடம் பெற்றான்.(14) ரிபு, ரிபுஞ்சயன், புஷ்பன் {புண்யன்/விப்ரன்}, விருகலன், விருகத்தேஜஸ் ஆகியோரே அவர்கள். சக்திகள் அனைத்தையும் கொடையாகக் கொண்டவனும், சாக்ஷுஷன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனை ரிபு பிருஹதியிடம் பெற்றான்.(15)

உன்னதனான சாக்ஷுஷன், வீரர்களின் அன்னையும், குடிமுதல்வரான அரண்யரின் {வீரணரின்} மகளுமான புஷ்கரிணியிடம் முனியைப் பெற்றான்.(16)

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, முனி, குடிமுதல்வரான வைராஜனின் மகளான நட்வலையிடம் பெரும் பலமிக்கப் பத்து மகன்களைப் பெற்றான்.(17) ஊரு, புரு, ஷதத்யும்னன், தபஸ்வி, ஸத்யவான், கவி, அக்னிஷ்டூதன், அதிராத்ரன், ஒன்பதாவதாக ஸுத்யும்னன் ஆகியோராவர். அபிமன்யு பத்தாமவனாவான்; இவர்களே நட்வலையின் மகன்களாவர்.

ஊரு ஆக்னேயியிடம் அங்கன், ஸுமனஸ், ஸ்வாதி {கியாதி}, கிரது, அங்கீரஸ், கயன் உள்ளிட்ட பெரும் பலம் கொண்ட ஆறு மகன்களைப் பெற்றான்.(19)

அங்கன், {மிருத்யுவின் மகளான} ஸுனீதையிடம் வேனன் என்ற பெயரைக் கொண்ட ஒரேயொரு மகனைப் பெற்றான். வேனனின் ஒழுக்கக்கேடுகளால் (முனிவர்கள்) பேரெரிச்சல் அடைந்தனர். {அவன் இறந்து போகச் சபித்தனர்}.(20)

சந்ததியை உண்டாக்குவதற்காக முனிவர்கள் அவனது {வேனனின்} வலது கையைக் கடைந்தனர். வேனனின் வலது கையானது தவசிகளால் கடையப்பட்டபோது, அதிலிருந்து பிருது[2] தோன்றினான்.(21) அவனைக் கண்ட முனிவர்கள் மகிழ்ச்சியில், "பெரும் பலம் மிக்கவனான இவன், தன் குடிமக்களை மகிழ்ச்சியடையச் செய்து, புகழை அடைவான்" என்றனர்.(22) ஏதோ தன் சக்தியால் அனைத்தையும் எரித்துவிடுபவனைப் போலவே அவன் வில்லுடனும், கவசத்துடனும் பிறந்தான். வேனனின் மகனான பிருது, க்ஷத்திரிய குலத்தில் முதல்வனாகப் பிறந்து இந்தப் பூமியைப் பாதுகாத்தான்.(23) அந்தப் பூமியின் தலைவனே {பிருதுவே} ராஜசூய வேள்வியில் நீர் தெளிக்கப்பட்டவர்களில் முதலில் பிறந்தவனாவான். மன்னர்களின் மகிமைகளைப் பாடுபவர்களான சூதரும் {சூதர்களும்}, மாகதரும் {மாகதர்களும்{ அவனுக்குப் பிறந்தனர்.(24)

[2] பிருதுவைக் குறித்து மஹாபாரதம் துரோண பர்வம் 69ம் பகுதியிலும்,  சாந்தி பர்வம் 59ம் பகுதியிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வேனன், தன் தாய்வழி தாத்தாவிடமிருந்து, அதாவது மரணத்திடமிருந்து {மிருத்யுவிடமிருந்து} மரபுரிமையாக இதயமற்ற அம்சங்களைப் பெற்று அனைவரையும் அச்சுறுத்தினான். அவனுடைய கொடுஞ்செயல்கள் தாங்க முடியாதவையான போது, முனிவர்கள் அவன் இறந்து போகுமாறு சபித்தனர். அவன் இறந்த போது, எதிர்காலத்தைக் கண்ட தவசிகள், சடங்குகளில் நெருப்பை உண்டாக்க இரண்டு அரணி கட்டைகளை உரசுவதைப் போல வேனனின் தொடைகளைக் கடைந்தனர். அப்போது வேனனின் தொடைகளில் இருந்து கொடுந்தோற்றமுடையவனும், மிகக் கரிய நிறம் கொண்டவனுமான பாஹுன் தோன்றினான். அந்தக் கரிய மனிதன் வேனனின் கொடுஞ்செயல்கள் மற்றும் பண்பின் அடையாளமாக இருந்தான். தவசிகள் அவனை ஏற்றுக் கொள்ளாமல் காட்டுக்கு விரட்டியடித்தனர். அதன் பிறகு அவர்கள், வேனனின் உள்ளங்கையை மற்றொறு உள்ளங்கையின் மீது வைத்து மீண்டும் தேய்த்தனர் {கடைந்தனர்}. அப்போது செழிப்புமிக்கப் பேரரசனான பிருதுவானவன், இறந்து போன வேனனின் வலது உள்ளங்கையில் இருந்து தோன்றினான். இந்த நிகழ்வு பின்வரும் அத்தியாயங்களில் சொல்லப்படுகிறது" என்று இருக்கிறது.

ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, தன்னுடைய குடிமக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பதற்காக அவன், தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், தானவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பாம்புகள், குஹ்யர்கள் ஆகியோர், கொடிகள் மற்றும் மலைகளின் துணையுடன் பயிர்களை விளைவிப்பதற்காகப் பூமியைக் கறந்தான்.(25,26) பூமி கறக்கப்பட்ட போது, அவர்கள் விரும்பிய பாலை அவரவர்களுக்குரிய பாத்திரங்களில் அவள் கொடுத்தாள்; அதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வைப் பராமரித்துக் கொண்டனர்[3].(27) அறம் அறிந்தவர்களான அந்தர்த்தீ மற்றும் பாலிதன் என்ற இரு மகன்கள் பிருதுவுக்குப் பிறந்தனர். அந்தர்த்தீ சிகண்டிணியிடம் ஹவிர்தானனை {ஹவிதானனைப்} பெற்றான்.(28) ஹவிர்தானன், ஆக்னேயிதிஷணையிடம் பிராசீனபர்ஹி, ஷுக்லன் {சுக்ரன்}, கயன், கிருஷ்ணன், விரஜன், அஜினன் ஆகிய ஆறு மகன்களைப் பெற்றான்.(29) ஓ! ஏகாதிபதி, பெரும் ஆன்ம சக்தியைக் கொண்ட பிராசீன பர்ஹி ஹவிர்தானனுக்குப் பிறந்தவனாவான். பெரும் குடி முதல்வனான {பிரஜாபதியான} அவன் சந்ததியைப் பெருக்கினான்.(30)

[3] "பிருதுவின் நடவடிக்கைகள் ஹரிவம்சத்தின் 5ம் அத்தியாயத்தில் விரிவாகச் சொல்லப்படுகிறது, காளிதாசரின் ரகுவம்சத்திலும் இது காணப்படுகிறது" என ஹனுமந்த ராவ் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

ஓ! ஜனமேஜயா, அவனது {பிராசீன பர்ஹியின்} வேள்வி மண்டபத்திலுள்ள குசப்புற்களின் நுனிகள் கிழக்கு நோக்கி இருந்தன, அவை மொத்த பூமியையும் மறைத்தன. எனவே, அவன் பிராசீனபர்ஹி என்ற பெயரால் கொண்டாடப்பட்டான்.(31) கடுந்தவமிருந்த அந்த மன்னன் பெருங்கடலின் மகளான ஸாவர்ணியை மணந்தான், அவள் பிராசேதஸ்கள் என்று அழைக்கப்பட்டவர்களும், வில்லாண்மை அறிவியலில் நன்கு தேர்ச்சியடைந்தவர்களுமான பத்து மகன்களைப் பிராசீனபர்ஹிக்குப் பெற்றாள்.(32,33) அதே அறத்தைக் கடைப்பிடித்த அவர்கள், பெருங்கடலின் நீருக்குள் கிடந்து, பத்தாயிரம் வருடங்கள் கடுந்தவமிருந்தனர்.(34) பிராசேதஸ்கள் {பிரசேதர்கள்} தவங்களில் ஈடுபட்டு வந்தபோது, பாதுகாப்பற்றிருந்த பூமியை மரங்கள் மறைத்தன, அதன் மூலம் உயிரினங்கள் அழிந்தன.(35)

காற்று வீசவில்லை, மேலும், வானம் மரங்களால் மறைக்கப்பட்டிருந்தது. பத்தாயிரம் வருடங்களுக்கு உயிரினங்களால் எந்த முயற்சியும் செய்ய முடியவில்லை {அவை உயிரற்றவையாக இருந்தன}.(36) கடுந்தவங்களைச் செய்து வந்த பிராசேதஸ்கள் அனைவரும், இதைக் கண்டு கோபமடைந்து, தங்கள் வாய்களில் இருந்து காற்றையும், நெருப்பையும் உண்டாக்கினர்.(37) காற்றானது மரங்களை வேரோடு பிடுங்கியெறிந்து, அவற்றை உலர்த்தியது, நெருப்பு அவற்றை எரித்தது. இதன் மூலம் மரங்களுக்குப் பயங்கரமான அழிவேற்பட்டது.(38) சில செடிகளே இன்னும் நீடித்திருந்தபோது, மரங்களின் அழிவை அறிந்த மன்னன் சோமன்[4], குடிமுதல்வர்களை {பிரஜாபதிகளை / பிராசேதஸ்களை} அணுகி,(39) "ஓ! பிராசீனபர்ஹியின் குடும்பத்தை {குலத்தைச்} சேர்ந்த மன்னர்களே, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவீராக. பூமி மரங்களற்றுப் போனது, எனவே, நெருப்பையும், காற்றையும் தணிப்பீராக.(40) மரங்களுடைய இந்த அழகிய மகள் {மாரிஷை}, ஒரு ரத்தினத்தைப் போன்றவளாவாள். சோம குலத்தைப் பெருகச் செய்யும் இந்த மகத்தானவள் உங்கள் மனைவியாக இருப்பாளாக[5].(42) உங்களுடைய பாதிச் சக்தி மற்றும் என்னுடைய பாதிச் சக்தியின் மூலம், அவளிடம் உங்கள் மகனான குடிமுதல்வன் தக்ஷன் பிறக்கட்டும்.(43) நெருப்பைப் போன்று பிரகாசிப்பவனான அவன், நெருப்பு போன்ற உங்கள் சக்தியால் முற்றாக அழிக்கப்பட்ட படைப்பை பெருகச் செய்வான்" என்றான் {சோமன்}.(44)

[4] "சோமன் என்பவன் தன்மயமாதல் மற்றும் சுவையின் தலைவனும், விலங்குகள் உண்டு செழிக்க உதவும் தாவரங்களுக்கு உயிரை அளிப்பவனும், இசை மற்றும் கால அளவுகளின் தேவனும், சந்திரக் கதிர் முதலியவை மூலம் குறிப்பிட்ட செடிகளுக்கு மருத்துவக் குணத்தை அளிப்பவனுமாவான். ஒவ்வொரு முறையும், சோமன் சந்திரனின் அதிதேவதை, அல்லது பிரத்யதி தேவதை மற்றும் ஒரு கோளாகவும் இருப்பவன் என்று சொல்வதற்குப் பதிலாகச் சோமனே நிலவானவன், சந்திரன் என்று வழக்கமாகச் சொல்லப்படுகிறது" என ஹனமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

[5] "சூரியன் பூமியின் ஈரப்பதத்தை மழையாக மாற்றுவதைப் போலவே, சந்திரமும், செடிகளில், குறிப்பாக மூலிகைகளிலும், எண்ணெய் விளைவிக்கும் செடிகளிலும் இருந்து பாலை {தாவர இனப் பாலை} எடுத்து, அமுதம் போல அதைத் தீண்டிப் பதப்படுத்திய பிறகு, மீண்டும் அதைச் செடிகளிலேயே பொழிகிறான். எனவே, சந்திரனே மருத்துவக் குணமுள்ள செடிகளின் தலைமைத் தேவனாக இருக்கிறான். வ்ருʼஷ்டிர்வை வ்ருʼஷ்ட்வா சந்த்³ரமஸமனுப்ரவிஶ்யதி - ஶ்ருதி" என ஹனமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

சோமனின் சொற்களுக்கு இணங்க மரங்களின் மீது கொண்ட தங்கள் கோபத்தை விலக்கிக் கொண்ட பிராசேதஸ்கள் முறையாக மாரிஷையை மணந்து கொண்டனர்[6].(45) அதன் பிறகு அவர்கள் அனைவரும் மாரிஷை கருத்தரிப்பதை மனோரீதியாக நினைத்தார்கள். ஓ! பாரதா, சோமனுடைய சக்தியின் ஒரு பகுதியைக் கொண்டு, பத்து பிராசேதஸ்களின் மூலம் மாரிஷையிடம் தக்ஷன் பிறந்தான்.(46) பிறகு சோமனின் குலத்தைப் பெருக்குவதற்காக அவன், அசைவன, அசையாதன, இரு கால்களுள்ள மற்றும் நான்கு கால்களுள்ள மகன்கள் எனப் பல்வேறு சந்ததிகளைப் படைத்தான். தக்ஷன் முதலில் மனோரீதியில் மகன்களைப் படைத்த பிறகு, தன் மகள்களைப் படைத்தான்.(47) அவர்களில் பத்து பேரை தர்மனும், பதிமூன்று பேரை கசியபரும் மணந்து கொண்டனர். தலைவன் தக்ஷன், நக்ஷத்திரங்கள் அல்லது கோள்கள் என்று அழைக்கப்பட்ட எஞ்சியவர்களை {தனது மற்ற இருபத்தேழு மகள்களை} மன்னன் சோமனுக்கு அளித்தான்[7].(48) தேவர்கள், வானுலாவிகள், பசுக்கள், நாகர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் மற்றும் பல்வேறு உயிரினங்களை அவர்கள் பெற்றனர்.(49) ஓ! மன்னா, அது முதல் {அப்போதிருந்து} உயிரினங்கள் பாலினக் கலவியின் மூலம் உண்டாகின்றன. அவர்களின் முன்னோடிகள் (வெறுமனே) சிந்தித்தல், பார்த்தல் மற்றும் தீண்டலின் மூலம் படைக்கப்பட்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(50)

[6] "கணவர்களுடன் உடல் ரீதியான மணவுறவு என்பதில்லாமல் கண்டால், பல கணவருடைமையில் இந்த மாரிஷையே திரௌபதிக்கு முன்னோடியாவாள். அடுத்ததாக அவளது கணவர்கள் அவளிடம் நிழலிடா கருவை {மனஸா கர்ப்பத்தைச்} செலுத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது." என ஹனமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

[7] "பிராசேதஸ்கள் மற்றும் மாரிஷையின் இந்த மகன் இரண்டாம் தக்ஷனாவான். இவன் அஸிக்னி என்ற பெயர் கொண்ட தன் மனைவியிடம் அறுபது மகள்களைப் பெற்றான். பின் வரப்போகும் பட்டியலில் உள்ள மகள்களைத் தவிர நான்கு பேரை அரிஷ்நேமிக்கும், இருவரை அங்கீரசுக்கும், இருவரை கிறிஷாஷ்வருக்கும், இருவரை பஹுபுத்ரருக்கும் அளித்தான். அருந்ததி, வசு, யமி, லங்கை / லம்பை, பானு, மருத்வதி, ஸம்கல்பை, முஹூர்த்தை, ஸாத்யை, விஷ்வை ஆகிய பத்து மகள்களைத் தர்மனுக்கு அளித்தான். திதி, அதிதி, தனு, அனாயு / அனௌகை, பிராதை, முனி, சுரஸை, இளை, குரோதவாஷை, தாம்ரை, கபிலை / சுரபி, வினதை, கத்ரு ஆகிய பதிமூன்று மகள்களைக் கசியபருக்குக் கொடுத்தான். அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், ஆர்திரை {திருவாதிரை}, புனர்வசு {புனர்பூசம்}, புஷ்யை {பூசம்}, ஆஷ்தேஷை {ஆயில்யம்}, மகம், பூர்வபல்குனி {பூரம்}, உத்தரப் பல்குனி {உத்தரம்}, ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விஷாகம், அனுராதா {அனுஷம்}, ஜேஷ்டா {கேட்டை}, மூலம், பூர்வாஷாதம் {பூராடம்}, உத்தராஷாதம் {உத்திராடம்}, ஷ்ரவணம் {திருவோணம்}, தனிஷ்டம் {அவிட்டம்}, ஷதாபிஷம் {சதயம்}, பூர்வபாத்ரம் {பூரட்டாதி}, உத்தரபாத்ரம் {உத்திரட்டாதி}, ரேவதி ஆகிய இருபத்தேழு மகள்களைச் சந்திரனுக்கு அளித்தான்" என ஹனமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் மற்றும் உயர் ஆன்ம தக்ஷன் ஆகியோரின் பிறப்புகளை முன்பு சொன்னீர்.(51) ஓ! பாவமற்றவரே, தக்ஷன் பிரம்மனின் வலது கை கட்டைவிரலிலும், அவனது மனைவி இடது கை கட்டைவிரலிலும் பிறந்தனர் என்று சொன்னீர். பிறகு, அவர்கள் எவ்வாறு மணவுறவுக்குள் நுழைய முடியும்?(52) பெருந்தவசியான தக்ஷனால் எவ்வாறு பிராசேதஸ்களின் சக்தியை அடைய முடியும்? சோமனின் பேரனாக இருந்து கொண்டு அவனுக்கே மாமனாராக அவனால் எவ்வாறு முடியும்? ஓ! விப்ரரே, எனக்கு இதில் பெரும் ஐயங்கள் ஏற்படுகின்றன, அவற்றைக் களைவதே உமக்குத் தகும்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(53)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "படைப்பின் அடிப்படையிலேயே தோற்றமும், அழிவும் எப்போதும் இருக்கின்றன. முனிவர்களும், ஞானிகளும் இதில் குழப்பமடைவதில்லை.(54) ஓ! மன்னா, தக்ஷர்கள் ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறார்கள். ஒரு யுகத்தில் ஒரு தக்ஷனும், மற்றொரு யுகத்தில் மற்றொரு தக்ஷனும் இருக்கின்றன.(55) ஓ! மன்னா, முன்னர் அவர்களுக்கிடையில் பிறப்பில் முன்னுரிமை கிடையாது; தவத்தாலேயே அவர்கள் மூத்தவர்களாகக் கருதப்பட்டனர், மேலும் அவர்களுடைய ஆற்றலே அதற்குக் காரணமாக அமைந்தது.(56) அசைவன, அசையாதன உள்ளிட்ட தக்ஷனின் படைப்பை அறிந்தவன் எவனோ அவன் சந்ததியை அடைவான், அவன் தன் வாழ்நாள் காலம் தீர்ந்ததும், தேவலோகத்தில் வழிபடப்படுவான்" {என்றார் வைசம்பாயனர்}[8].(57)

[8] "ஜனமேஜயனுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லப்படாததாகவே தெரிகிறது. தக்ஷன், பிரஜாபதி, பிரம்மன், விஷ்ணு, மஹேஷ்வரன் முதலிய பெயர்கள் எதுவும் ஏதோ மனிதர்களின் பெயர்களல்ல, மாறாகச் சில நிலைகளின் பதவிகளாகும். இந்த நிலைகள் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றி மறைகின்றன. இங்கே சொல்லப்படும் தக்ஷர்கள் இருவர். ஒருவன் படைப்பின் தொடக்கத்தில் பிரம்மனின் வலது கை கட்டைவிரலில் இருந்து உண்டானவன். உயிரினங்களைப் படைத்த இரண்டாமவன், பிற்காலத்தில் தோன்றியவன். பொதுவாகத் துணையுரையில் சுட்டப்படும் காலவெளி தவறவிடப்படுகிறது. இங்கேயே இரண்டும் படைப்புகள் சொல்லப்படுகின்றன. ஒன்று சங்கல்ப சிருஷ்டி, மற்றொன்று மரபுசார்ந்த உயிர்பிறப்பின் அடிப்படையிலானது. இதே காட்சி மைத்ரேயருக்கும், பராசரருக்கும் இடையில் நடைபெறும் விவாதம் போல விஷ்ணுபுராணத்திலும் கிட்டத்தட்ட இதே வகையில் சொல்லப்படுகிறது. பிரம்ம புராணத்திலும் இதே சொல்லப்படுகிறது" என ஹனமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 57
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்