(ஆதிஸர்கம்)
An Account of the Primeval Creation | Harivamsa-Parva-Chapter-01 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வரலாற்றைச் சொல்லும்படி சௌதியிடம் வினவும் சௌனகர்; ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் சொன்னதை சௌனகரிடம் சொல்லத் தொடங்கிய சௌதி; படைப்புத் தொடங்கி விருஷ்ணிகளின் கதையை ஜனமேஜயனுக்குச் சொல்லத் தொடங்கிய வைசம்பாயனர்...
அற ஆன்மா கொண்டவரும், சாத்திரங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவரும், பெரும் முனிவருமான குலபதி[1] சௌனகர், புலன்களை ஆள்பவனும், அசையும் மற்றும் அசையாதனவற்றின் ஆசானும், முதல் புருஷனான ஈசானனும், வேள்விகளில் பலரால் துதிக்கப்பட்டு, காணிக்கைகளுடன் தணிக்கப்படுபவனும், உண்மையானவனும், பற்றுகளேதுமற்ற பிரம்மனும், வெளிப்பட்டவனும், வெளிப்படாதவனும், எப்போதும் நிலைத்திருப்பவனும், உண்மை, பொய்மைக்கு அப்பாற்பட்டவனும், இந்த அண்டத்தைத் தோன்றச் செய்தவனும், புலப்படுபவனும், புலப்படாதவனும், அனைத்தையும் கடந்தவனும், அனைத்தையும் படைத்தவனும், புராதனனும், சிறந்தவனும், சிதைவற்றவனும், இன்பமே ஆனவனும், இன்பத்தை அளிப்பவனும், விஷ்ணுவாக இருப்பவனும், பாவமற்றவர்களும், தூயவர்களுமான அனைவராலும் வழிபடப்படுபவனுமான ஹரியை வணங்கிய பிறகு, நைமிசக் காட்டில் இருந்த சௌதியிடம் பேசினார்.(1-4)
[1] "ஒரே பெயரைக் கொண்ட முனிவர்களின் குடும்பத் தலைவன்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
சௌனகர், "ஓ! சௌதி, பாரத வழித்தோன்றல்களின் வரலாற்றையும், வேறு மன்னர்கள், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள், தைத்தியர்கள், சித்தர்கள் மற்றும் குஹ்யர்களின் வரலாறுகளையும் நீ சொன்னாய்.(5,6) அற்புதம் நிறைந்த அவர்களது செயல்கள், வீர சாதனைகள், அறப் பயிற்சிகள் மற்றும் அவர்களின் பிறப்புகளும் அடங்கிய மிகச் சிறந்த, புனித புராணத்தை இனிய சொற்களில் நீ விளக்கினாய். ஓ! சௌதி, மனத்துக்கும், காதுகளுக்கும் இன்பத்தை அளிப்பதும், அமுதம் போன்ற கருப்பொருளைக் கொண்டதுமான இஃது எங்களுக்கு நிறைவை அளிக்கிறது. ஓ! லோமஹர்ஷணரின் மகனே {சௌதியே}, குருக்களின் பிறப்பு மற்றும் அவர்களின் வரலாற்றை விளக்கும்போது நீ விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின்[2] வரலாற்றைச் சொல்ல மறந்து போனாய். அவர்களுடைய வரலாற்றையும் உரைப்பதே உனக்குத் தகும்" என்று கேட்டார்.(7-9)
[2] "இவை பண்டைய இந்தியாவின் இரண்டு அரச குடும்பங்களைக் குறிக்கும் இரண்டு குலங்களாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
சௌதி {சௌனகரிடம்}, "ஜனமேஜயன், வியாசரின் அணுக்கச் சீடரான வைசம்பாயனரிடம் எதைக் கேட்டானோ, அந்த விருஷ்ணிகளின் பிறப்பு குறித்த கதையை நான் உமக்குத் தொடக்கம் முதல் சொல்லப் போகிறேன்.(10) பாரத வழித்தோன்றல்களின் முழுமையான வரலாற்றைக் கேட்டவனும், அவர்களின் குலத்தில் பிறந்தவனும், உயர்ந்த ஞானத்தைக் கொண்டவனுமான ஜனமேஜயன், வைசம்பாயனரிடம் கேட்டான்.(11)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பல பொருள்களும், வரலாற்றுக் கதைகளும் நிறைந்த மஹாபாரதத்தை நீர் முழுமையாகச் சொன்னீர்; நானும் அதைக் கேட்டேன்.(12) அதில் நீர், விருஷ்ணி மற்றும் அந்தகக் குடும்பங்களைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் தேர்வீரர்கள் பலரின் பெயர்களையும், அவர்களது செயல்களையும் குறிப்பிட்டீர்.(13) ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, நீர் அவர்களின் சிறந்த செயல்கள் பலவற்றைச் சுருக்கமாகவும், விரிவாகவும் சொன்னீர்.(14) இந்தப் புராணக் கதை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும், எனக்கு இன்னும் அது தெவிட்டவில்லை. பாண்டவர்கள் மற்றும் விருஷ்ணிகள் ஒருவருக்கொருவர் உறவினர்களாவர்; அவர்களின் குடும்பங்களை விவரிக்க நீர் போதுமான தகுதியைப் பெற்றவராகவும், அனைத்தையும் உமது கண்களாலேயே கண்டவராகவும் இருக்கிறீர். எனவே, ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, நீர் அவர்களின் குடும்பம் குறித்து விரிவாக விளக்குவீராக.(15,16) எவரெவர் எந்தெந்தக் குடும்பங்களில் {குலங்களில்} பிறந்தனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன். எனவே, ஓ! பெருந்தவசியே, குடிமுதல்வன் {பிரஜாபதி} தொடங்கி, அவர்களின் முந்தைய படைப்புகளை {முற்பிறவிகளை} நினைவுகூர்ந்து, அனைத்தையும் எனக்கு விரிவாக விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான் {ஜனமேஜயன்}".(17)
சௌதி {சௌனகரிடம்}, "அவனால் வரவேற்கப்பட்டு இவ்வாறு கேட்கப்பட்டதும், உயர் ஆன்மா கொண்டவரும், கடுந்தவங்களுடன் கூடியவருமான அந்தத் தவசி {வைசம்பாயனர்}, தொடக்கம் முதல் மொத்த கதையையும் முழுமையாக விளக்கினார்.(18)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, தெய்வீகமானதும், பாவங்களை அழிக்கவல்லதும், அற்புதம் நிறைந்ததும், பல்வேறு பொருட்கள் மற்றும் புனிதக் கதைகள் நிறைந்ததுமான அந்தப் புனித கருப்பொருளை நான் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(19) இந்தக் கதையைப் பரப்புபவன், அல்லது தொடர்ந்து கேட்பவன், தன் குடும்பத்தைப் பெருக்கிக் கொள்கிறான், மேலும், தேவ லோகத்திலும் அவன் உயர்வாகப் பேசப்படுகிறான்.(20) ஈஸ்வரனால் (கடவுளால்) ஊடுருவப்பட்ட இந்த அண்டமானது, வெளிப்படாத காரணமாக இருப்பவனும், நித்தியனும், இருப்பு மற்றும் இல்லாமையாக ஆனவனுமான பிரதான புருஷனிலிருந்தே எழுந்தது.(21) ஓ! ஏகாதிபதி, அவனை ஒப்பற்ற சக்தி கொண்டவனும், அனைத்தையும் படைத்தவனும், நாராயணனிடம் (விஷ்ணுவிடம்) எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான பிரம்மனாக (படைப்பாளனாக) அறிவாயாக.(22) மஹத்தில் இருந்து அஹங்காரம் எழுந்தது; அதனில் இருந்து ஐந்து நுட்பமான பூதங்கள் எழுந்தன; அதனிலிருந்து திரள் பூதங்கள் எழுந்தன; இவ்வாறே படைப்பின் நித்திய தொழில் தொடர்ந்தது[3]. நான் கேட்டது போலவும், நான் நினைப்பது போலவும் முன்னோரின் மகிமையை அதிகரிக்கும் நீண்ட குலவரிசைகளைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(23,24) நீடிக்கும் மகிமை கொண்ட இந்தப் புண்ணியவான்களின் கதைகள் எப்போதும் பலனையே தந்து, குலப் பெருக்கத்திற்கும், சொர்க்கத்தை அடைவதற்கும் வழிவகுக்கின்றன.(25) இந்தக் கருப்பொருள் கனி நிறைந்ததாக இருப்பதாலும் {பலனளிப்பதன் காரணமாகவும்}, நீ கேட்கத் தகுந்த தூயவனாக இருப்பதாலும், படைப்புகளில் மிகச் சிறந்த விருஷ்ணிகளின் குடும்பத்திலிருந்து தொடங்கி நான் உனக்குச் சொல்லப் போகிறேன்[4].(26)
[3] "சங்கியத்தின்படி மஹத் என்பது புத்தியாகும். அது தனிப்பட்டவர்களைக் குறிக்கும் அறிவுசார் கொள்கையாகும். அகங்காரம் என்பது சுய நினைவு அல்லது நான் என்ற நினைவாகும். ஆகாயம், காற்று, நீர், நெருப்பு மற்றும் நிலம் ஆகியன நுட்பமான ஐந்து பூதங்களாகும். இவற்றின் மூலம் கருவறையில் பிறக்கும் மனிதன் மற்றும் பிற விலங்குகள் உள்ளிட்ட ஈனும் வகை; முட்டையில் இருந்து பிறக்கும் பறவைகள், மீன்கள், பாம்புகள் உள்ளிட்ட பொரிக்கும் வகை; வெப்பம் மற்றும் ஈரத்தில் பிறக்கும் புழு பூச்சிகள் உள்ளிட்ட வகை; பூமியில் இருந்து எழும் மரங்கள், செடிகள் உள்ளிட்ட வகை என நான்கு வகைத் திரள் பூதங்கள் பிறக்கின்றன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.[4] "நான் சொல்வதைத் தன்னியல்பாக்கும் திறன்கொண்ட சரியான நபர் நீர் என்பதால் நான் இப்போது உயிரினங்களின் படைப்பு தொடங்கி விருஷ்ணிகளின் வம்சத்தைக் குறித்து விளக்கத் தொடங்குகிறேன்" என்று தேசிராஜுஹனுமந்தராவ் ஆங்கில மொழிபெயர்ப்புச் சொல்கிறது.
பல்வேறு உயிரினங்களைப் படைக்க விரும்பிய தெய்வீக சுயம்பு (பிரம்மன்)[5] முதலில் நீரைப் படைத்து, அதன் பிறகு அதில் வித்துகளையும் படைத்தான்.(27) நீர் என்பது நரனில் இருந்து உண்டானதால் நாரம் என்றழைக்கப்படுகிறது. தேவன் முதலில் அதில் ஓய்ந்திருந்ததால் நாராயணன் என்றழைக்கப்படுகிறான்.(28) நீரில் கிடந்த முட்டை தங்க நிறத்தை ஏற்றது. அதில் இருந்து பிரம்மன் தானாகவே எழுந்ததான், (எனவே) அவன் சுயம்பு என்றழைக்கப்பட்டான்.(29) பல வருடங்கள் அங்கே வாழ்ந்த தெய்வீக ஹிரண்யகர்ப்பன், அந்த முட்டையை இரண்டாகப் பிரித்தான் {பிரித்து வெளியே வந்தான்}, அவை சொர்க்கம் {வானம்} என்றும், பூமி {நிலம்} என்றும் அழைக்கப்படலாயிற்று.(30) அந்த இரு பகுதிகளுக்கிடையில், ஆகாயம், அல்லது வெளியையும், நீரில் மிதக்கும் பூமியையும், பத்து திசைப்புள்ளிகளையும் படைத்தான்.(31) அதன்பிறகு, குடி முதல்வர்கள் {பிரஜாபதிகள்} அல்லது படைப்புத் தலைவர்களைப் படைக்க விரும்பிய அவன், காலம், மனம், வாக்கு, ஆசை, கோபம் மற்றும் விருப்பத்தைப் படைத்தான்.(32)
[5] இங்கே சுட்டப்படும் பரப்பிரம்மம் என்ற சொல் நாராயணனையே குறிக்கும் எனத் தேசிராஜு ஹனுமந்தராவ் தமது மொழிபெயர்ப்பில் சொல்கிறார்.
மிகப் பிரகாசமான அந்தத் தேவன் பிறகு மனத்தில் பிறந்தவர்களான மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் வசிஷ்டர் ஆகிய தன்னுடைய ஏழு மகன்களைப் படைத்தான்.(33) இந்த எழுவரே புராணங்களில் பிராமணர்கள் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறார்கள். பிரம்மனால் படைக்கப்பட்ட இந்த எழுவரும் நாராயணனையே போன்றவர்களாவர்.(34) அதன் பிறகு பிரம்மன், தன் கோபத்தில் பிறந்த ருத்திரனையும், முன்பிறந்தவர்களின் {மரீசி முதலியவர்களின்} முன்னோடியான சனத்குமாரரையும் படைத்தான்.(35) ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, இந்த எழுவரும், ருத்திரனும் படைப்புத் தொழிலில் ஈடுபட்டனர். ஸ்கந்தனும், சனத்குமாரரும் படைப்பாற்றலைத் தக்க வைத்துக் கொண்டனர்.(36) யக்ஷர்கள், பிசாசங்கள், தேவர்கள் மற்றும் பிறர் உள்ளிட்ட அவர்களுடைய ஏழு பெருங்குடும்பங்களில் உள்ள அனைவரும் தெய்வீகச் செயல்களைச் செய்து, சந்ததியைப் படைத்து, கசியபர் மற்றும் பிற முன்னணி தவசிகளால் அலங்கரிக்கப்பட்டனர்.(37)
அதன்பிறகு அவன் {பிரம்மன்}, மின்னலையும், இடியையும், நேரான மற்றும் வளைந்த வானவில்களையும், விண்ணதிகாரிகளையும், மேகங்களையும் படைத்தான்.(38) அதன்பிறகு அவன், யாகங்களை {வேள்விகளை} வெற்றிகரமாகக் கொண்டாட ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்களைப் படைத்தான்; அதன் பிறகு அவன் தேவர்களைத் தன் வாயிலிருந்தும் {முகத்திலிருந்தும்}, பித்ருக்களைத் தன் மார்பில் இருந்தும் படைத்தான்.(39) அதன்பிறகு அவன் தன் பிறப்புறுப்பில் இருந்து மனிதர்களையும், தன் இடையில் இருந்து அசுரர்கள், சாத்யர்கள் மற்றும் தேவர்களில் பிற வகையினரையும் படைத்தான். இதையே நாம் கேள்விப்படுகிறோம்.(40)
பிறகு அவன் {பிரம்மன்}, சந்ததியைப் படைக்க விரும்பியபோது, குடிமுதல்வரான {பிரஜாபதியான} வசிஷ்டரின் உடலில் இருந்து பல்வேறு வகையான அடிப்படை படைப்புகள் எழுந்தன.(41) தன் மனத்தால் படைக்கப்பட்ட சந்ததி பெருகாத போது, அவன் {பிரம்மன்} தன்னுடலையே இரண்டாகப் பிரித்து ஒரு பாதியைக் கொண்டு ஆணைப் படைத்தான்.(42) மற்றொரு பாதியைக் கொண்டு பெண்ணைப் படைத்து, அவளின் மூலம் பல்வேறு வகைச் சந்ததிகளைப் பெருக்கினான். அவன் தன் மகிமையால், சொர்க்கத்தையும் பூமியையும் நிறைத்து அவற்றில் வசிக்கிறான்[6].(43) விஷ்ணு ஓர் அண்ட வடிவைப் படைத்தான்; அஃது ஒரு புருஷனைப் படைத்தது; அவன் மனு என்பதை அறிவாயாக. அவனுடைய ஆட்சிக்காலம் மன்வந்தரம் என்று அழைக்கப்படுகிறது.(44) வசிஷ்டரின் இரண்டாம் படைப்பு மன்வந்தரம் என்று அழைக்கப்படுகிறது. பெரும் விராட் புருஷன் சந்ததியைப் படைத்தான். அவன் நாராயணனின் படைப்பாவான், அவனது சந்ததி எந்தப் பாலினத்திலும் பிறக்கவில்லை[7].(45) இந்தத் தொடக்கக் காலப் படைப்பை அறிந்த மனிதன் நீடித்த வாழ்வு, புகழ், சந்ததி மற்றும் தான் விரும்பிய பகுதி {உலகம்} ஆகியவற்றை அடைவான்" என்றார் {வைசம்பாயனர்}.(46)
[6] "அவனது படைப்புப்பணிகள் சீராகத் தொடராததால், மரீசி முதலிய எழுவரில் ஒரு பிரஜாபதியும், ஆபவர் என்ற மற்றொரு பெயரைக் கொண்டவருமான வசிஷ்டர் தன் உடலை இரண்டாகப் பிரித்து ஆணாகவும், பெண்ணாகவும் ஆனார். இந்தப் பிரஜாபதியின் பெண் கொள்கையானது {வடிவமானது} ஷதரூபம் என்றழைக்கப்படுகிறது. இவ்வாறே யோனியல்லாத மூலத்தில் இருந்து தங்கள் பிறப்பை அடைந்த ஷதரூபம் ஏற்ற பசு, பெண்குதிரை முதலிய எந்தப் பெண் வடிவமும், ஆபவ பிரஜாபதியின் ஆண் பாதி, அதாவது ஸ்வாயம்பூ மனு ஏற்ற எருது, குதிரை முதலிய {எந்த} ஆண் வடிவமும், அந்தந்த வகை இனங்களைப் பெருக்குவதற்காக ஆண் மற்றும் பெண் வடிவங்களைப் பலவாறாகப் படைத்தன. பிரஜாபதி ஆபவர், அஃதாவது ஆபவரின் ஆண் பாதியான ஸ்வாயம்பூ மனு ஷதரூபத்தின் மூலம் பல்வேறு உயிரினங்களின் உயிரியக்கத்தைத் தொடர்ந்து, தன் செயல்திறனுடன் பூமியையும், வானத்தையும் நிறைத்து இருந்தது {இருந்தான்}" என்று தேசிராஜு ஹனுமந்தராவ் ஆங்கில மொழிபெயர்ப்புச் சொல்கிறது. மேலும் இதை விளக்கும் வகையில், "ஆபவர் அல்லது வசிஷ்ட பிரஜாபதி தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்ட பிறகும் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பது கேள்வி. வேறு எந்தப் புராணங்களும் இதை ஒப்புக்கொள்ளவோ, இதைக் குறித்து நமக்குச் சொல்லவோ இல்லை. ஆனால், பின்வருபவையே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தெளிவுரையாகும். ஆபவர் ஆண் மற்றும் பெண் என இரு நிலைகளாக உருமாறும்போது, ஸ்வாயம்பூ என்ற தலைப்பு ஆணுக்கு ஒதுக்கப்படுகிறது. ஷதரூபம் என்பது பெண்ணுக்கு ஒதுக்கப்படுகிறது. ஸ்வாயம்பூ என்பது யோனியல்லாத பிறப்பைக் கொண்டிருப்பதால் தானாக வெளிப்பட்டது என்ற பொருளைக் கொண்டதாக இருக்கிறது. ஷதரூபம் என்பது பன்முகப்படுத்தப்பட்ட பெண்வடிவங்களாகும். அவளது தோற்றமும் யோனியல்லாத இயல்பைக் கொண்டதேயாகும். ஸ்வாயம்பூ மற்றும் ஷதரூபம் ஆகியவற்றின் யோனியல்லாத பிறப்புகளைக் குறித்து ஏன் இப்படிப் பல முறை சொல்லப்படுகிறது? ஏனெனில், மனிதர்களானவர்கள் குரங்குகளில் இருந்து அல்லாமல் ஸ்வாயம்பூ மற்றும் ஷதரூபம் போன்ற தேவர்களில் இருந்து வந்தவர்கள் என்பது தொடர்ந்து நமக்கு நினைவுப்படுத்தப்படுகிறது. இவ்வாறே மனித பிறவி பிற விலங்குகளைவிடச் சிறந்தது என்று நிறுவப்படுகிறது" என்றும் அவர் {தேசிராஜு அனுமந்தராவ் அவர்கள்} சொல்கிறார்.[7] "அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணுவானவன், விராட் என்றும் ஆபவ பிரஜாபதி என்றும் அழைக்கப்படும் அண்ட வடிவைப் படைத்தான். இந்த விராட், அல்லது ஆபவ பிரஜாபதி, அல்லது வசிஷ்டர், உயிரியக்கவியல் ரீதியில் வளரக்கூடிய தன் சொந்த பகுதியான ஆண் பாதி என்ற பொருளைக் கொண்டதும், ஸ்வாயம்பூ மனு என்ற பெயரைக் கொண்டதும் புருஷனை எழுச்செய்தார். எனவே இந்த உயிரியக்கப் படைப்பின் உருவாக்கம் மனுவின் வருகை என்ற பொருளில் மனுவந்தரம் என்று அறியப்படுகிறது" என்று தேசிராஜு அனுமந்தராவின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருக்கிறது.
ஹரிவம்ச பர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 46
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |