கணேசனை[1] வணங்குவோம். வேத வியாசரை[2] வணங்குவோம். {ஓம்} நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், கல்வியின் தேவியான சரஸ்வதியையும் வணங்கி வெற்றி {ஜெயம்} என முழங்குவோம்.(1) துவைபாயனரின் {வியாசரின்} உதடுகளில் இருந்து சிந்தியதும், அற்புதமானதும், பாவங்களை அழிக்கவல்லதும், மங்கலமானதும், உயர்வானதும், புனிதமானதுமான மஹாபாரதம் ஓதப்படுவதைக் கேட்பவனுக்கு, புனிதத்தலமான புஷ்கரையில்[3] நீராடுவதால் என்ன பயன்?(2) பராசரரின் மகனும், சத்யவதியை மகிழ்ச்சியடையச் செய்பவரும், உலகம் பருகும் சொல்லமுதத்தைச் சொன்ன தாமரை வாய் கொண்டவருமான வியாசர் வெற்றியால் மகுடம் சூடப்படட்டும்.(3) வேதங்களையும், ஸ்ருதிகள் பலவற்றையும் அறிந்த ஒரு பிராமணருக்குத் தங்கக் கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கொடையளிப்பதால் உண்டாகும் அதே கனியை {பலனை} புனிதக் கருப்பொருளுடன் கூடிய மஹாபாரதத்தைக் கேட்பவன் அடைகிறான்.(4)
[1] "இந்து நம்பிக்கையின்படி கணேசன் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றித் தருபவனாவான். ஒவ்வொரு விழாவின் தொடக்கத்திலும் அவனை வழிபடுவது இந்துக்களின் வழக்கமாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.[2] "வியாசர் என்பது தொகுப்பாளர் என்ற பொருளைத் தரும் ஒரு பொதுவான சொல்லாகும். இங்கே இது வேதங்கள் மற்றும் புராணங்களை வகுத்தவரைக் குறிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.[3] "இஃது ஆஜ்மீர் மாவட்டம் மார்வாரில் {ஜோத்பூரில்} உள்ள ஒரு தடாகமாகும். இங்கே ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான புனிதப்பயணிகள் நீராடச் செல்கிறனர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
ஹரிவம்சத்தை {பிரதி எடுத்து} கொடையளிப்பதால், நூறு குதிரை வேள்விகளைச் செய்வதாலோ, வற்றாத உணவுக்கொடையை அளிப்பதாலோ, இந்திரனின் கண்ணியத்தைக் காப்பதாலோ உண்டாவதை விட அதிகமான புண்ணியத்தை ஒரு மனிதன் அடைவான்.(5) வாஜ்பேயம் அல்லது ராஜசூய யாகங்களோ, யானைகளுடன் கூடிய தேர்க்கொடையாலோ கிட்டும் அதே கனியை {பலனை} அளிக்கிறது. வியாசரின் சொல்லே இதற்குச் சான்றாகும், மேலும் முனிவர் வால்மீகியாலும் இது சொல்லப்பட்டிருக்கிறது.(6) ஹரிவம்சத்தை எழுதுவதில் முறையாக ஈடுபடும் பெரும் தவசி, தேனின் மணத்தால் ஈர்க்கப்பட்டுத் தாமரையை நோக்கி நகரும் வண்டைப் போலவே ஹரியின் தாமரைப் பாதத்தை விரைவாக அடைவான்.(7) பிரம்மனில் இருந்து ஆறாம் தலைமுறையைச் சார்ந்தவரும், நித்திய ஆன்ம மகிமை கொண்டவரும், நாராயணனுடைய ஒரு பகுதியாக {அவதாரமாக} தோன்றியவரும், சுகரை மட்டுமே தமது மகனாகக் கொண்டவருமான துவைபாயனரையே {வியாசரையே} அனைத்திற்கும் மேலான காரணராக நான் கருதுகிறேன்[4].(8)
[4] பெரும்பாட்டனும், அனைத்தின் காரணனுமான நாராயணனில் இருந்து தொடங்கி ஆறாமவரான கிருஷ்ண துவைபாயனரைப் போற்றுவோம்; வற்றாத செல்வமாக அன்ம அறிவைக் கொண்டவரும்; நாராயணனின் நிழலிடா நிழலாகப் பிறந்தவரும்; தவசியான பராசரரின் ஒரே மகனும், வேதங்களெனும் புதையலின் கொள்ளிடமுமான பெருந்தவசி துவைபாயனரை {வியாசரைப்} போற்றுவோம்" எனத் தேசிராஜு ஹனுமந்த ராவ் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருக்கிறது.
முகவுரை_யில் உள்ள சுலோகங்கள் : 8
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |