(விசக்ரவதம்)
Vichakra killed | Bhavishya-Parva-Chapter-98 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: அசுரன் விசக்ரனைக் கொன்ற கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, எண்ணற்ற படைவீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிய அந்தப் பெரும்போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, கதாயுதத்தையும், கொண்டாடப்படும் சாரங்க வில்லையும் தரித்த கிருஷ்ணனை, விசக்ரன் தாக்கினான்.(1) அந்நேரத்தில் பலபத்ரன் {பலராமன்} ஹம்சனுடனும், சாத்யகி டிம்பகனுடனும், வசுதேவர் ஹிடிம்பனுடனும் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(2) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அந்தப் பெரும்போரில் பகைவரிடம் ஒருபோதும் சரணடைய நினையாத முதன்மையான போர்வீரர்கள் இவ்வாறே ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டிருதனர்.(3)
கிருஷ்ணன் காண்போர் வியக்கும் வண்ணம் விசக்ரனைக் கடுமையாகத் தாக்கினான். அதற்குப் பதிலடியாக அந்தத் தானவன் {விசக்ரன்}, அந்தத் தேவதேவேசனுடைய {கிருஷ்ணனுடைய} மார்பின் மீது கணைமாரியைப் பொழிந்தான்.{4} சசியின் கணவனான இந்திரனின் தலைமையிலான தேவர்கள், வானில் இருந்தபடியே இந்த அற்புதப் போரைக் கண்டனர்.{5} அந்தத் தானவனின் கணைகளால் தாக்கப்பட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, படைப்பின் தொடக்கத்தில் பகவான் விஷ்ணு தன் வாயில் இருந்து எண்ணற்ற ஆத்மாக்களை வெளிப்படுத்தியதைப் போலவே குருதியைக் கக்கினான்.(6)
இதனால் கோபமடைந்த ரிஷிகேசன், ஒரு கணையால் அவனது கொடியை அறுத்தெறிந்து, அவனது நான்கு குதிரைகளையும் மூன்று கணைகளால் கொன்றான். அவன், விசக்ரனின் தேரோட்டியை யமலோகம் அனுப்பிவைத்துவிட்டு பாஞ்சஜன்ய சங்கை முழக்கினான். அதேபோலக் கோபமடைந்த அந்தத் தானவனும் {விசக்ரனும்}, தன்னுடைய பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து திடீரெனக் கீழே குதித்தான். அவன் கிருஷ்ணனின் தலையில் அந்தக் கதாயுதத்தால் பலமாகத் தாக்கி, அவனது கிரீடத்தைக் கீழே தள்ளி, அவனது நெற்றியில் காயமேற்படுத்தினான். தானவன் விசக்ரன் இந்த அருஞ்செயலைச் சாதித்துவிட்டுச் சிங்கம் போல முழங்கினான். வலிமைமிக்கவனான அவன் ஒரு பெரிய கற்பாறையைத் தூக்கி, அதைப் பத்து முறை சுழற்றி கிருஷ்ணனின் மார்பில் வீசினான். கற்பாறை தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் பிரபு, லாகவமாக அதைப் பிடித்துத் தன்னைத் தாக்கியவன் மீதே அதைத் திரும்ப வீசினான். அந்தக் கற்பாறையால் தாக்குண்ட அந்தத் தைத்தியன் {விசக்ரன்} தன் சுயநனவை இழந்து தரையில் விழுந்தான்.(7-12)
சிறிது நேரம் கழித்துச் சுயநனவு மீண்ட அந்தத் தைத்தியன், தன் மேனி முழுவதும் சிவக்கும் வகையில் பெருங்கோபத்தில் எரிந்தான். பிறகு அவன் ஒரு பரிதத்தை {தடியை} எடுத்துக் கொண்டு, ஜனார்த்தனனிடம் பின்வருமாறு பேசினான்:(13) "கோவிந்தா, இந்தப் பரிதத்தால் நான் உன் செருக்கை நொறுக்கப் போகிறேன். தேவாசுரர்களுக்கு இடையில் நடந்த பெரும்போரில் நீ ஏற்கனவே என் ஆற்றலைக் கண்டிருக்கிறாய்.(14) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனா, நான் அவனேதான், என் கரங்களும் அவையேதான். நீ என் சக்தியை அறிந்தவனாக இருந்தாலும் என்னுடன் போரிடத் துணிந்திருக்கிறாய். நான் உன் மீது வீசப் போகும் இந்தப் பரிதத்தை நீ எவ்வாறு தடுக்கப் போகிறாய் என்பதைப் பார்க்கப் போகிறேன்" என்றான் {விசக்ரன்}. அந்தத் தைத்தியன் {விசக்ரன்} இதைச் சொல்லிவிட்டு, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சங்கு சக்கரக் கதாதாரியும், லோகேசனுமான கிருஷ்ணன் மீது அந்தப் பரிதத்தை வீசினான்.(15,16)
கிருஷ்ணன், அனைவரும் வியக்கும் வண்ணம் அந்தத் தைத்தியன் ஏவிய பரிகத்தைப் பிடித்தான். அந்த ஹரி, "இதோ நீ இறக்கப் போகிறாய்" என்று சொல்லி, தன் வாளால் அந்தப் பரிதத்தைத் துண்டுகளாக அறுத்தான்.(17) அந்தத் தைத்தியேசன் {விசக்ரன்}, பல கிளைகளைக் கொண்ட ஒரு நெடுமரத்தை வேரோடு பிடுங்கி, எல்லையில்லா சக்தி படைத்த கிருஷ்ணன் மீது அதை வீசினான்.(18) மாதவனோ, பெருமுயற்சியேதும் செய்யாமல் அந்த மரத்தை எள்ளளவு துண்டகளாக எளிதிற் துண்டித்தான். இவ்வாறு சிறிது நேரம் அந்தத் தைத்தியனுடன் போரிட்டு மகிழ்ந்த விஷ்ணு, பிறகு தன் நாண்கயிற்றில் ஒரு சக்திமிக்கக் கணையைப் பொருத்தி ஏவினான்.(19,20)
அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்தக் கணை அந்தத் தைத்தியனைக் கடுமையாகத் தாக்கி அவனைச் சாம்பலாக எரித்துவிட்டு பகவானின் கைகளுக்கே திரும்பிச் சென்றது.(21) கிருஷ்ணன் விசக்ரனைக் கொன்றதைக் கண்ட பிற தைத்தியர்கள், பத்து திக்குகளிலும் சிதறி ஓடத் தொடங்கினர். உண்மையாக இறுதியில் அவர்கள், இந்நாள்வரை மீண்டும் காணப்படாத வகையில் பெருங்கடலுக்குள் நுழைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(22)
பவிஷ்ய பர்வம் பகுதி – 98ல் உள்ள சுலோகங்கள் : 22
மூலம் - Source |