(ஸங்குலயுத்தம்)
Fierce Battle | Bhavishya-Parva-Chapter-97 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ஹம்சடிம்பகர்களுக்கும் யாதவர்களுக்கும் இடையில் மூண்ட கடும்போர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, அந்தப் பெரும்போர் தொடங்கியதும் இரு படைகளும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டதைப் போலத் தோன்றியது. இரு தரப்பிலும் எண்ணற்ற கொடிகளும், இரும்பு தண்டங்களும், கதாயுதங்களும், சக்தி ஆயுதங்களும் இருந்தன.(1) இரு படைகளிலும் சூலங்கள், வாள்கள், விற்கள் தரித்த படைவீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேரிகைகளும், எக்காளங்களும் முழக்கப்பட்டன.(2)
மன்னா {ஜனமேஜயா}, இரு படைகளைச் சேர்ந்த போர்வீரர்களும், போர் தொடங்கியதும் ஒருவரையொருவர் வீழ்த்துவதில் பேரார்வம் கொண்டனர். கணைகள் தங்கள் இலக்கைத் துளைத்த பிறகும் நெடுந்தொலைவைக் கடக்கும் அளவுக்கு அவர்களின் ஊட்டம் பலமிக்கதாக இருந்தது. படைவீரர்களின் வாள்கள், பகைவரின் மார்பைப் பிளந்த பிறகோ, அவர்களின் தலைகளைக் கொய்த பிறகோ வானை நோக்கிப் பறந்து செல்லும் அளவுக்கு வலுவாக வீசப்பட்டன. க்ஷத்திரியர்களால் வீசப்பட்ட இரும்பு பரிகங்கள், தங்கள் பகைவரின் உடல்களைக் கூழாக நசுக்கின. வெற்றிக்கு முயன்று கொண்டிருந்த போர்வீரர்கள் இரக்கமற்ற வகையில் ஒருவரையொருவர் கொன்றனர்.(3-6)
அந்தப் பெரும்போரில் தேர்வீரர்கள் தேர்வீரர்களுடனும், யானை வீரர்கள் யானைவீரர்களுடனும், குதிரைப்படை வீரர்கள் குதிரைப்படை வீரர்களுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படை வீரர்களுடனும் போரிட்டனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கியபடியே போர் நிற்காமல் தொடரும் வேளையில் தங்கள் பகைவரைக் காயப்படுத்தினர். ராக்ஷசர்கள், தங்கள் பகைவரின் படையணிக்குள் பெரும்படுகொலைகளை நிகழ்த்தி மதங்கொண்ட யானைகளைப் போலப் போரிட்டனர். சூலங்கள், போர்க்கோடரிகள், ஈட்டிகள், வாள்கள், கணைகள், சக்தி ஆயுதங்கள் உள்ளிட்ட பலவகை ஆயுதங்களாலும் தாக்கப்பட்ட படைவீரர்கள், தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தங்களாலான சிறந்த முறையில் எதிர்த்தாக்குதலைத் தொடுத்தனர்.(7-11)
மன்னா {ஜனமேஜயா}, ராக்ஷசர்களும், க்ஷத்திரியர்களும் தங்கள் பகைவரின் மீது கணைத்தாரைகளைப் பொழிந்து முழங்கியவாறே போர்க்களமெங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.(12) எண்ணற்ற படைவீரர்கள், வாள்களால் தாக்குண்டு தரையில் விழுந்து மாண்டனர். வீரமிக்கப் போர்வீரர்கள் பலரின் தலைகள் பலமிக்கக் கதாயுதங்களின் வீச்சுகளில் நொறுங்கின.(13) பரிதாயுதங்கள் தாங்கிய படைவீரர்கள் பலர் தங்கள் பகைவரின் தோள்களைத் தங்கள் வலிமைமிக்க வீச்சுகளால் முறித்தனர். போரில் கொல்லப்பட்ட சிலர் யமராஷ்டிரத்திற்கு {யமனின் நாட்டுக்குச்} சென்றனர், வேறு சிலர் சுவர்க்கத்திற்குச் சென்றனர்.(14) தேவலோகம் சென்றவர்கள், போர்க்களத்தில் தங்கள் சடலங்கள் கிடக்கும்போதே அப்சரஸ்களை அடைந்தனர். பிறரோ, தங்கள் பகைவரைக் கொன்றே ஆக வேண்டுமென நினைத்துத் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர்.(15)
மன்னா {ஜனமேஜயா}, தீடீரென ஆயிரக்கணக்கான சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் முழக்கம், மிருதங்க ஒலியுடன் சேர்ந்து கேட்டது.(16) நடுப்பகல் சூரியனால் உண்டாக்கப்பட்ட அதீத வெப்ப வேளையில் கோரமான பிசாசுகளும், பயங்கரத் தோற்றம் கொண்ட பூதங்களும் கொல்லப்பட்ட போர்வீரர்களின் சதையையும், குருதியையும் உண்ணும் விருப்பத்தில் போர்க்களத்தை அடைந்தன.(17,18) கூரிய வாள்களால் கொய்யப்பட்ட தலைகளுக்குரிய சடலங்கள் போர்க்களம் முழுவதும் விரவிக் கிடந்தன. ஊனுண்ணும் பூதங்கள் அந்தப் போர்க்களத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சடலங்களை உண்ணத் தொடங்கின.(19) மேலும் கங்கங்கள், காக்கைகள், நரிகள் உள்ளிட்ட எண்ணற்ற ஊனுண்ணும் பறவைகளும், விலங்குகளும் அங்கே வந்து சடலங்களை அலகுகளால் பற்றி, நகங்களால் கிழித்துச் சதைகளை உண்டன.(20)
மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பயங்கரப் போரில் எண்பத்தேழாயிரம் யானைகளும், ஏறக்குறைய முப்பது லட்சம் குதிரைகளும் கொல்லப்பட்டன.(21) தேரோட்டிகளுடன் கூடிய ஒரு லட்சம் தேர்கள் அழிக்கப்பட்டன, ஆயுதங்களுடன் கூடிய முப்பது கோடி காலாட்படை வீரர்கள் அங்கே கொல்லப்பட்டுக் கிடந்தனர்.(22) மன்னா, நடுப்பகல் வேளையில் எண்ணற்ற படைவீரர்கள் காயமடைந்தனர், எண்ணற்ற படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் போர்க்களத்தைவிட்டுத் தப்பித்து ஓடினர். வேறு சிலர், தாகத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் புஷ்கரத் தடாகத்திற்குள் நுழைந்தனர்.(23)
கொல்லப்பட்ட போர்வீரர்கள் பலர், பூமியைத் தழுவிக் கிடப்பவர்கள் போல மாண்டு கிடந்தனர். காயமடைந்தவர்களில் சிலர், கொலை செய்யப்படுவதில் இருந்து உயிர்பிழைக்கும் நம்பிக்கையில் இரந்து கொண்டிருந்தனர். போர்வீரர்கள் பலர், தேரில் இருந்து கீழே விழுந்து தலைமுடி கலைந்து கிடந்தனர்.(24) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, குதிரைப்படை வீரர்கள் பலர் தங்கள் உதடுகளைக் கடித்த நிலையில் தரையில் இறந்து கிடந்தனர். இவ்வாறே பழங்காலத்து தேவாசுரப் போரை நினைவூட்டும் வகையில் அந்தப் புஷ்கரத்தில் கடும்போர் நடந்து கொண்டிருந்தது" என்றார் {வைசம்பாயனர்}.(25)
பவிஷ்ய பர்வம் பகுதி – 97ல் உள்ள சுலோகங்கள் : 25
மூலம் - Source |