(ஹம்ஸபலபத்ரயோர்யுத்தம்)
Balabadhra | Bhavishya-Parva-Chapter-99 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: பலராமனுக்கும் ஹம்சனுக்கும் இடையில் நடந்த போர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு, வில்லாளிகளில் முதன்மையானவனும், தர்மாத்மாவுமான பலதேவன் {பலராமன்}, பத்துக் கணைகளை ஹம்சன் மீது ஏவினான்.(1) ஹம்சன், அவன் மீது ஐந்து கணைகளை ஏவி பதிலடி கொடுத்தாலும், கலப்பைதாரியான பலராமன், தன்னை நோக்கி வரும் கணைகளை மேலும் பத்துக் கணைகளால் தவிடுபொடியாக்கினான். பிறகு அவன் ஹம்சனின் நெற்றியில் ஒரு கணையால் பலமாகத் தாக்கினான்.(2) அந்தக் கணையானது, ஹம்சனை சுயநனவற்றவனாக்கித் தேரில் அமரச் செய்தது. சுயநனவு மீண்ட ஹம்சன், ஒரு கணையோடையை ஏவி, பலராமனுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்தி, வானத்தில் பார்வையாளர்களாக நின்றிருந்த தேவர்களை வியப்படையச் செய்தான். அவன் {ஹம்சன்} இந்த அருஞ்செயலைச் செய்துவிட்டுச் சிங்கமுழக்கம் செய்தான்.(3,4)
அந்தக் கணைகளால் புண்பட்ட கலப்பைதாரி {பலராமன்}, குருதியைக் கக்கி பெருமூச்சுவிட்டபடியே பெருஞ்சினங்கொண்டான்.(5) குங்குமத்தால் பூசப்பட்ட உடலைப் போல, அவனது மேனி முழுவதும் குருதியில் நனைந்திருந்தது. நீல அடைகளை உடுத்தியிருந்த அந்த ஹலாயுதன் {பலராமன்}, அன்னம் போல் நளினமாக நடந்த ஹம்சனை ஒரு லட்சம் கணைகளால் மறைத்தான். மன்னா, வண்ணமயமான இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட பலராமனின் கணைகள், ஹம்சனின் தேர், கொடி, வில், சக்கரங்கள், கவசம் ஆகியவற்றை நொறுக்கியது. அந்நிலையில் அவன் {ஹம்சன்} ஒருகணம் திகைப்படைந்து நின்றான்.(6-8)
மன்னா, செருக்கின் மிதப்பில் வெறி கொண்டிருந்தவனும், பகைவனைத் தாக்கும் நேரத்தை அறிந்தவனுமான ஹம்சன், மீண்டும் சுயநனவை அடைந்ததும், ஒரே கணையால் பலராமனின் கொடியை வீழ்த்தினான். பிறகு அவன் நான்கு கணைகளால் ஹலாதரனின் குதிரைகளையும், மேலும் ஒன்றால் அவனது சாரதியையும் கொன்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஹலாதரன், அந்தக் கடும்போரில் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டும், பாம்புகளின் மன்னனான சேஷனைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டும் ஹம்சனை நோக்கி விரைந்தான். அப்போது பலராமன், ஹம்சனின் தேர், கொடிகள், சக்கரம், குதிரைகள் ஆகியவற்றையும், சாரதியையும் தன் கதாயுதத்தால் முற்றாக அழித்தான்.(9-11)
பலராமன் ஹம்சனைத் தாக்க முற்பட்ட போது, அந்த மன்னன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சிதைந்திருந்த தன் தேரில் இருந்து கீழே குதித்தான்.(12) அதன்பிறகு வலிமைமிக்கத் தேர்வீரர்களான ஹம்சனும், பலராமனும் போர்க்களத்தின் தரையில் நின்றபடியே கதாயுத்தம் செய்தனர்.(13) ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவர்களான அவ்விருவரும் தங்கள் எதிரியைக் கொல்லும் தீர்மானத்துடன் போரிட்டனர். அன்னம் போன்ற நடையைக் கொண்டிருந்த அவ்விருவரும், வெற்றியை அடைவதற்காக எந்தத் துன்பத்தையும் தாங்கும் உறுதியுடன் இருந்தனர். அந்தக் கதாயுத்தத்தைக் காண அற்புதமாக இருந்தது.(14)
பழங்காலத்து தேவாசுரப் போரில் இந்திரனும், விருத்திராசுரனும் வானில் போரிட்டதைப் போல ஹம்சனும், பலராமனும் கதாயுத்தம் புரிந்தனர். அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது அவர்களின் உடல்கள் குருதியால் மறைக்கப்பட்டன.(15) அந்தப் பெரும்போரில் இருவரும் தங்கள் பகைவன் வெளிப்படுத்தும் அற்புத ஆற்றலை வியந்து பாராட்டினர். அப்போது பலராமன் தன் பகைவனை வலப்புறத்தில் இருந்து தாக்கும் வகையில் தன் கதாயுதத்தைத் திறனுடன் பயன்படுத்தினான்.(16) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அந்தத் திட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஹம்சன் வேறொரு உத்தியைக் கையாண்டான். யானைகளைப் போன்று பலமிக்கவர்களான அந்தப் போர் வீரர்கள் இருவரும் தங்கள் கதாயுதங்களால் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கினர்.(17)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும் தங்கள் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தியவாறே மீண்டும் மீண்டும் தங்கள் பகைவனின் வலுவான தாக்குதலைத் தடுத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெரும்போரில், பழங்காலத்து தேவாசுரப் போரை அனைவருக்கும் நினைவுப்படுத்தும் வகையில் அந்தப் போர்வீரர்கள் இருவரும் கடுமையாகப் போரிட்டனர். தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், முனிவர்கள் ஆகியோர் பெரும் வியப்படைந்து, "ஐயோ, இத்தகைய அற்புதமான போரை நாங்கள் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை" என்றனர்.(18-20)
அந்தப் போர்வீரர்கள் இருவரும் தங்கள் பகைவனை வெல்லும் தீர்மானத்துடன் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர். சிறிது நேரங்கழித்து அவ்விருவரும் தங்கள் உத்திகளை மாற்றிக் கொண்டனர். ஹம்சன் வலப்புறத்தில் இருந்து பலராமனைத் தாக்கினான். எல்லையில்லா சக்தி கொண்ட ஹலாதரன் இடப்புறத்தில் இருந்து ஹம்சனைத் தாக்கினான்.(21) முதன்மையான போர்வீரர்களான பலராமனும், ஹம்சனும் கடுந்தாக்குதல்களைத் தொடுத்தவாறே தங்கள் முழங்கால்களில் நின்றும் போரிட்டனர்" என்றார் {வைசம்பாயனர்}.(22)
பவிஷ்ய பர்வம் பகுதி – 99ல் உள்ள சுலோகங்கள் : 22
மூலம் - Source |