(ஸாத்யகிப்ரதிப்ரயாணம்)
Satyaki warns | Bhavishya-Parva-Chapter-94 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ஹம்சனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடந்த உரையாடல்; அவர்களை எச்சரித்த சாத்யகி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, சாத்யகியின் வாக்கியங்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஹம்சனும், டிம்பகனும் பெருங்கோபத்துடன் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிடுபவர்களைப் போலத் தங்கள் கண்களைத் திக்குகள் அனைத்திலும் துருதுருவென உருட்டினர். சாத்யகியின் எச்சரிக்கையை நினைத்துத் தங்கள் கைகளைப் பிசைந்தவாறே தங்கள் சிற்றரசர்களிடம் பின்வருமாறு பேசினார்:(1,2) {அவர்கள்}, "நந்தனின் மகன் எங்கே? செருக்குடன் வெறி கொண்டிருக்கும் ராமன் {பலராமன்} எங்கே?" என்றனர். ஹம்சனும், டிம்பகனும் இவ்வாறே சாத்யகியின் முன்னிலையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.(3)
பிறகு சாத்யகியிடம், "யதுவின் வழித்தோன்றலே, என்ன மடத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? உடனே செல்வாயாக. நீ இங்கே தூதனாக வந்திருக்கிறாய். இல்லையென்றால் நீ சொன்னவற்றுக்காகக் கொல்லத்தக்கவனாகிறாய். பித்தனைப் போலப் பேசும் வெட்கமற்றவன் நீ. மன்னர்களான எங்கள் இருவருக்கும் மொத்த உலகத்தையும் ஆளும் உரிமை இருக்கிறது. எங்களுக்குக் கப்பங்கட்டுவதைத் தவிர்த்துவிட்டு அதைச் சொல்ல எவனும் உயிருடன் இருப்பது எவ்வாறு?(4-6) கோபாலகர்கள், யாதவர்கள் ஆகியோர் அனைவரையும் கைப்பற்றி அவர்கள் உடைமைகள் அனைத்தையும் கப்பமாக்கிக் கொள்ளப் போகிறோம். மனிதர்களில் இழிந்தவனே, உடனே செல்வாயாக.(7)
உன் பேச்சுப் பொறுத்துக்கொள்ளத்தகுந்ததாக இல்லை. இங்கே நீ தூதனாக வந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. சங்கரன் எங்களுக்கு வரங்களையும், தெய்வீக ஆயுதங்களையும் அருளியிருக்கிறான். அந்த இடையனை வீழ்த்திவிட்டு எங்கள் தந்தையை நாங்கள் ராஜசூய வேள்வி செய்ய வைப்போம்.(8,9) நீ குறிப்பிட்ட யாதவர்கள் அனைவரும் கோழைகளாவர். நான் முதலில் அவர்களை வீழ்த்திய பிறகு கேசவனைக் கொல்வேன்.(10) நாங்கள் எங்கள் பெரும்படையைத் திரட்டி, எங்கள் படைவீரர்களை விற்களும், கணைகளும், கதாயுதங்களும், பராசங்களும், முசலங்களும், பிற ஆயுதங்களும் கொண்டவர்களாக ஆயத்தம் செய்வோம். ஆயிரக்கணக்கான ரதங்களும், அளவற்ற ஆயுதங்களும் எங்களிடம் இருக்கின்றன. எங்களுக்குத் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. படைத்தலைவர்கள் எங்களுக்கு வெற்றியை ஈட்டித் தருவர். எனவே நீ உடனே செல்வாயாக. அஞ்சாதே. நாங்கள் உனக்குத் தீங்கிழைக்க மாட்டோம்.(11-13) நாளையோ, நாளை மறுதினமோ நாங்கள் புஷ்கரத்தில் போரிடுவோம். அங்கே நாங்கள் கேசவனின் பலத்தையும், பலராமன் பலத்தையும், நீ குறிப்பிட்ட யாதவர்களின் பலத்தையும் பார்த்துக் கொள்கிறோம்" என்றார்கள் {ஹம்சனும், டிம்பகனும்}.(14)
சாத்யகி, "ஹம்சா, நாளையோ, நாளை மறுதினமோ உன்னையும், உன் தம்பியையும் நான் கொல்வேன். நான் தூதனாக வந்திராவிட்டால் இன்றே உங்கள் இருவரையும் கொன்றிருப்பேன்.(15) உங்கள் இருவரின் கடுஞ்சொற்களை நான் மன்னித்திருக்க மாட்டேன். சில வேளைகளில் தூதர்கள் பகைவனின் ஏற்கத்தகாத பேச்சைக் கேட்கும் பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.(16) மன்னர்களில் இழிந்தவர்களே, தூதுப்பணியை நான் மேற்கொள்ள வில்லையெனில், வலிமைமிக்க என் கரங்களின் சக்தியை வெளிப்படுத்தி உங்கள் இருவரையும் கொன்று மகிழ்ந்திருப்பேன்.(17) சங்கு, சக்கர, கதாபாணியும், அழகிய மகுடம் சூட்டப்பட்ட சுருள் முடியையும், பருத்த தோள்களையும், ஒப்பற்ற அழகையும் கொண்டவனும், அண்டத்தின் உண்மைக் காரணனும், அண்டத்தின் வடிவமும், யோகியரில் சிறந்தவர்களால் தியானிக்கப்படுபவனும், தைத்திய தானவர்களைக் கொல்பவனும், தாமரைக் கண்ணனும், சியாமள வண்ணனும், சிங்கம்போல் பலம் பெருந்தியவனும், அண்டத்தைப் படைத்துக் காத்து அழிப்பவனும், ஜகத்குருவுமான கிருஷ்ணன், விரைவில் போர்க்களத்தில் சகோதரர்களான உங்கள் இருவரின் செருக்கை அழிப்பான்" என்றான் {சாத்யகி}. இதைச் சொல்லிவிட்டு அந்த சாத்யகி தன் தேரில் ஏறி புறப்பட்டுச் சென்றான்" என்றார் {வைசம்பாயனர்}.(21)
பவிஷ்ய பர்வம் பகுதி – 94ல் உள்ள சுலோகங்கள் : 21
மூலம் - Source |