(ஸாத்யகிவாக்யம்)
The rage of Satyaki | Bhavishya-Parva-Chapter-93 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனுடனான தன் சந்திப்பை விவரித்துக் கூரிய ஜனார்த்தனன்; வெகுண்டெழுந்த ஹம்சன்; சாத்யகியின் மறுமொழி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஹம்சன் பேசியதைக் கேட்டதும், நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனைப் புகழ்வதில் எப்போதும் ஆவலுடைய தர்மாத்மாவான ஜனார்த்தனன் புன்னகைத்தவாறே பின்வருமாறு மறுமொழி கூறினான்:(1)
{ஜனார்த்தனன்}, "ஆம். ஒரு கையில் சங்கையும், மறுகையில் வெல்லப்பட முடியாத சக்கரத்தையும் கொண்ட கிருஷ்ணனை நான் கண்டேன். அவன் பொன்னாலான கைவளைகளாலும், கௌஸ்துப ரத்தினத்தின் பிரகாசத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(2) யாதவப் பெரியோராலும், முதன்மையான பல முனிவர்களாலும் தொண்டாற்றப்பட்டவனும், வலிமைமிக்க மன்னர்களாலும் மாகதர்களாலும் துதிக்கப்பட்டவனுமான அந்தக் கிருஷ்ணனை நான் தரிசித்தேன். புதிதாய் துளிர்த்த தளிர்களைப் போன்று மென்மையான சிவந்த உதடுகள், அவனது மயக்கும் புன்னகைக்கு மேலும் மெருகூட்டின.(3) புராதன முனிவர்களாலும், தேவர்களாலும் தியானிக்கப்படும் வடிவம் கொண்டவனும், தொண்டில் ஈடுபடும் பக்திமான்களால் உணரப்படுபவனும், நீலோத்பல மலர் போன்ற கரிய நிறம் கொண்டவனும், பொற்றாமரைக்கு ஒப்பான வயிற்றைக் கொண்டதால் பத்மநாபன் என்ற பெயர் கொண்டவனுமான கிருஷ்ணனை நான் தரிசித்தேன்.(4) பிறப்பற்றவனும், இனிய உரைகளால் யாதவர்களுக்குப் பேரின்பத்தை அருள்பவனும், பெரும் முனிவர்களின் துணையுடன் முக்திக்கு வழிவகுக்கும் வேதங்களின் உண்மை சாரத்தை விளக்கிக் கொண்டிருந்தவனுமான அந்த ஜகத்குருவை நான் மீண்டும் மீண்டும் தரிசித்தேன்.(5)
உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பவனும், அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவனும், பூமியின் சுமையைக் குறைப்பதற்காக இப்போது அவதரித்திருப்பவனுமான அந்த ஹரியை நான் மீண்டும் மீண்டும் தரிசித்தேன்.(6) யாதவேஷ்வரனும், துதிக்கப்படத்தகுந்தவர்களில் முதன்மையானவனும், ஈசுவரனும், மகிழ்ச்சியுடன் இருப்பதில் ஆவலுள்ள யது குலத்தினருடன் விளையாடிக் கொண்டிருப்பவனுமான கிருஷ்ணனை நான் இன்று கண்டேன்.(7) பீஷ்மகனின் மகளான ராணி ருக்மிணியுடன் துவாரகையில் வசிக்கும் தாமரைக் கண்ணனான அந்த ஹரியை நான் மீண்டும் மீண்டும் கண்டேன். நாராயண வடிவில் அவனே கர்போதகப் பெருங்கடல் பரப்பில் கிடக்கிறான். அவன் பெருஞ்செழிப்புடையவன், பக்தர்களுக்கு அன்பன், பக்தர்களின் உறைவிடம், முற்றுமுழுமங்கல சிவம்.(8) பரவச நிலையில் எனக்குக் கிருஷ்ணனின் தரிசனம் கிடைத்தது. கிருஷ்ணனின் எழிலுடல் அமுதத்தைக் கண்சிமிட்டாமல் நான் பருகினேன். அவனைக் கண்டபோது, "என் வாழ்வின் பயன் சித்தியடைந்தது" என்ற நினைப்பால் என்னையே நான் மறந்திருந்தேன்.(9) நீக்கமற நிறைந்தவனும், நினைத்தற்கரிய ஆற்றல்களைப் படைத்தவனுமான கிருஷ்ணனை நான் துவாரகையில் கண்டேன். உயிரினங்களால் நிறைந்த அண்டத்தைக் காப்பவனும், படைப்பவனும் அவனே. தன் கரத்தில் தாமரை மலரை ஏந்தியிருந்த விபுவான அந்தப் பிரபுவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆழ்ந்த பரவசத்தில் நான் மூழ்கினேன்.(10)
கௌஸ்துப மணியால் அலங்கரிக்கப்பட்ட மார்பைக் கொண்ட கிருஷ்ணன் நூற்றுக்கணக்கான சாமரங்களால் வீசப்படும்போது நான் அவனைக் கண்டேன்.(11) அந்த யாதவேஷ்வரன் {யாதவர்களின் தலைவன்}, உங்கள் பெயர்களைச் சொன்ன போது பெரும் அருவருப்பை வெளிப்படுத்தினான். உங்கள் நிலையை அறியும் பேராவலுடன் அவன் இருந்தான்.(12) அவன், "அந்த மூடர்கள் இருவரையும் நான் எப்போது காண்பேன்? அவர்களை என்னிடம் வரச் செய்வது எவ்வாறு?" என்று நினைத்தான். சங்கு தரித்திருந்த அந்தத் தேவேசன் இச்சொற்களால் உங்கள் மீது கொண்ட அருவருப்பை வெளிப்படுத்தினான்.(13) அந்தப் பிரபுவைக் கப்பம் கட்டக் கேட்ட போது, உங்களை ஏளனம் செய்து உரக்கச் சிரிக்கத் தொடங்கினான். அதை நான் என் கண்களால் கண்டேன். அந்நேரத்தில் அவன் பெரும் முனிவர் நாரதருடனும், முனிவர்களிற்சிறந்த துர்வாசருடனும் பேசிக் கொண்டிருந்தான்.(14) பிரம்மசூத்திரங்களைச் சீடர்களுக்கு உபதேசிக்குமாறு துர்வாச முனிவரிடம் கிருஷ்ணன் வலியுறுத்தினான். நான் அந்த ஹரியைக் கண்டபோது பின்வரும் எண்ணம் என் மனத்தில் தொடர்ந்து தோன்றியபடியே இருந்தது.(15) என்னிரு நண்பர்களும் தங்களால் சாதிக்க முடியாத ஒன்றைச் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றே அப்போது நான் நினைத்தேன். பூமியின் தலைவா, ராஜஸூய வேள்வி செய்யும் முயற்சியை நீங்கள் கைவிட வேண்டும் என்பதே என் ஆலோசனையாக இருந்தது.(16) கப்பம் கட்டுமாறு நீங்கள் கிருஷ்ணனுக்கு அனுப்பிய செய்தியை நான் அவனிடம் சொன்னபோது, அவன் அதற்குப் பதில் உங்களைக் கைப்பற்றிச் சிறையிலடைப்பேன் என்றான். நான் சொன்ன யாவற்றையும் சாத்யகி உன்னிடம் உறுதி செய்வான்" என்றான் {ஜனார்த்தனன்}.(17)
அந்தப் பிராமணன் இச்சொற்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது பெருஞ்சினமடைந்த ஹம்சன் பின்வரும் சொற்களில் மறுமொழி கூறினான்: "பிராமணா, நீ என்ன சொல்கிறாய்? மூவுலகையும் வெல்ல எத்தனிக்கும் எங்களிடம் இவ்வாறு பேச எப்படித் துணிந்தாய்?(18) மாயாவியான கிருஷ்ணன் உன்னைத் தன் மாய சக்தியால் வசப்படுத்தியிருக்கிறான். அவன் முன்னிலையில் நின்றதற்கே நீ இவ்வளவு மோஹமடைந்திருக்கிறாய்.(19)
நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம், வில் ஆகியவற்றைத் தரித்தவனும், காட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான விருஷ்ணி குலக் கிருஷ்ணனைக் கண்டதும் நீ மாயையில் மயங்கியிருக்கிறாய். அவனது சபையில், அவனது துதிபாடிகளால் துதிக்கப்படும் அவனது சக்தியையும், பெரும் புகழையும், யாதவ விருஷ்ணிகளின் பெரும் படை பலத்தையும் கேட்டு மயங்கியிருக்கிறாய். அந்தச் சக்கரபாணியைக் கண்டதும் நீ மாயையில் வீழ்ந்திருக்கிறாய்.(20-22) துர்மதி கொண்ட பிராமணா, அந்தப் பாவியின் மாயையில் நீ இன்னும் கட்டுண்டிருக்கிறாய். அவனது மாயை உன்னைப் புத்தியற்ற முற்றான மூடனாக்கியிருக்கிறது.(23) பிராமணா, அந்த மாயையில் நீ அமைதியிழந்து குழம்பியிருக்கிறாய். ஐயோ, நீ என்னை அவனுக்கு இணையாகவாவது சொல்லியிருக்க வேண்டும்.(24)
விப்ரா, நட்பால் மட்டுமே உன் நடத்தையைப் பொறுத்துக் கொள்கிறேன். இல்லையென்றால் இத்தகைய சொற்களை வேறு யாரால் பொறுத்துக் கொள்ள இயலும்?(25) மந்த மதி படைத்த விப்ரா, உன் நட்பை இனியும் நான் விரும்பாததால், உலகில் நீ விரும்பும் வேறு எந்த இடத்திற்காவது சென்று விடுவாயாக.(26) அந்த இடையனை வீழ்த்தி, எண்ணற்ற யாதவர்களைக் கொன்ற பிறகு நான் யஜ்ஞம் செய்வேன். "யாதவர்களை வெல்வோம்" என்பதே எங்கள் முதன்மை தீர்மானமாகும்.(27) விப்ரா, இங்கிருந்து உடனே சென்றுவிடுவாயாக. நீ கடுமொழி பேசும் ஆணவக்காரனாக இருக்கிறாய். என் பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டே நீ என் பகைவரைப் புகழ்கிறாய்.(28) எத்தனை வகைக் கஷ்டங்களை எதிர் கொண்டாலும் ஒருபோதும் நான் ஒரு விப்ரனை {பிராமணனைக்} கொல்ல மாட்டேன்" என்றான் {ஹம்சன்}.
{அந்தப் பிராமணனிடம்} இதைச் சொன்ன ஹம்சன், சாத்யகியிடம் திரும்பி பின்வருமாறு பேசினான்:(29) "யாதவா, நீ ஏன் இங்கே வந்தாய்? நந்தசுதன் {நந்தனின் மகன்} உன்னிடம் என்ன சொன்னான்? என்ன கப்பம் கொண்டு வந்தாய்?" என்று கேட்டான்.(30)
சாத்யகி, "ஹம்சா, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் சொற்களைக் கவனமாகக் கேட்பாயாக. அவன் {கிருஷ்ணன்}, "என்னுடைய சாரங்க வில்லைக் கொண்டும், கல்லில் கூராக்கப்பட்ட கணைகளைக் கொண்டும் நான் உனக்குக் கப்பங்கட்டுவேன். ஹம்சா, என் வாளால் உன் தலையைக் கொய்து நான் உனக்குக் கப்பங்கட்டுவேன்" என்று {உன்னிடம் சொல்லுமாறு} சொல்லி அனுப்பினான்.(31,32) துஷ்டா, மன்னர்களில் இழிந்தவனே, இவையே உன்னிடம் கிருஷ்ணன் சொல்லச் சொன்ன சொற்கள். நீ செய்ததைவிடப் பெரிதாக வேறு எவனாலும் தன் ஆணவத்தை வெளிப்படுத்த முடியாது? மனிதர்களில் இழிந்தவனே, ஜகத்பதியிடம் கப்பம்பெற நினைக்கும் எந்த மன்னனின் நாவும் அறுக்கப்பட வேண்டும். திமிருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த வழிமுறை அதுதான். போர்க்களத்தில் கிருஷ்ணனின் பாஞ்சஜன்ய சங்கின் ஒலியையும், சாரங்கத்தின் நாணொலியையும் கேட்ட எவன்தான் தன்னுயிர் தப்புமென எதிர்பார்ப்பான்? நீ இன்னும் உயிருடன் இருப்பது உன் பாக்கியமே. சிவனிடம் வரம்பெற்றதால் செருக்கில் மிதக்கும் உன்னைத் தவிர வேறு எவனால் கிருஷ்ணனிடம் அவ்வாறு கேட்க இயலும்?
பலபத்ரன் {பலராமன்}, நான் உள்ளிட்ட வலிமைமிக்கப் போர்வீரர்கள் கிருஷ்ணனின் துணைவர்களாக இருக்கிறோம். முதலில் பலராமன், இரண்டாவது நான், மூன்றாவது கிருதவர்மன், நான்காவது நிசடன், ஐந்தாவது பப்ரு, ஆறாவது உத்கலன், ஏழாவது நுண்ணறிவுமிக்கத் தாரணன், எட்டாவது சாரங்கன், ஒன்பதாவது விப்ருது, பத்தாவது விவேகியான உத்தவர் ஆகியோர் அவனுக்குத் துணையாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் தடுக்கப்பட முடியாத ஆற்றல் படைத்தவர்கள். போர்க்களத்தில் இந்த ஒப்பற்ற போர்வீரர்கள் அனைவரும் எங்கள் பாதுகாவலனும், சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனுக்கு முன் நிற்போம் என்பதை அறிவாயாக. அவனது மகன்களான பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் இருவரும், பலத்தில் இரட்டையர்களான அஸ்வினி குமாரர்களைப் போன்றவர்களாவர். உண்மையில் அவர்கள் இருவரால் மட்டுமே கூட, சகோதரர்களான உங்கள் இருவரையும் போரில் எளிதாகக் கொன்றுவிட இயலும். என் சொற்களைக் கேட்ட பிறகும் உனக்கு வெற்றியில் நம்பிக்கை இருந்தால் சிவனிடம் பெற்ற விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போர்க்களத்தில் நின்று போரிடுவாயாக.(33-42)
மூவுலகங்களையும் காப்பவனும், பகைவருடன் போரிட எங்களைப் போன்ற பணியாள்களைக் கொண்டவனுமான ஜகத்பதியிடமே கப்பம் கேட்டுவிட்டு உயிருடன் இருப்போமென எவனால் நம்ப முடியும்?(43) மூவுலகங்களையும் காப்பவனான கிருஷ்ணன், கொண்டாடப்படும் தன் சாரங்க வில்லில் இருந்து ஏவப்படும் சரங்களால் போர்க்களத்தில் உங்கள் இருவரையும் நிச்சயம் கொல்வான்.(44) புனிதத்தலமான புஷ்கரமோ, கோவர்த்தன மலையோ, மதுராவோ, பிரயாகையோ போர்க்களம் எதுவாக இருந்தாலும் உன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துத் தாமதமில்லாமல் அங்கே வந்து சேரும்படி அந்த ஜகத்பதி சொல்கிறான். நீ விரும்பிய இடம் எதுவாக இருப்பினும் உன் ஆற்றலை அங்கே வெளிப்படுத்தலாம். மொத்த அண்டத்தையும் காக்கும் சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் அனுமதியில்லாமல் எவனால் ராஜஸூய யஜ்ஞத்தைச் செய்ய முடியும்? நீ பேசியதுபோல் பேசிவிட்டு வேறு எவனால் கவலையில்லாமல் உன்னைப் போல இருக்க முடியும்?(45-47) மூடர்களே, இவ்வாறே நீங்கள் தொடர்ந்தால் மொத்த உலகிற்கும் நீங்கள் கேலிப்பொருளாவீர்கள்" என்றான் {சாத்யகி}. வீரனான சாத்யகி இவ்வாறு பேசிவிட்டு, அவ்விரு இளவரசர்களின் முன்னிலையில் அமைதியாகப் புன்னகைத்து நின்றான்" என்றார் {வைசம்பாயனர்}.(48)
பவிஷ்ய பர்வம் பகுதி – 93ல் உள்ள சுலோகங்கள் : 48
மூலம் - Source |