(ஹம்ஸவாக்யம்)
The words of Hamsa | Bhavishya-Parva-Chapter-92 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: சால்வ நகரில் உள்ள ஹம்சடிம்பகரின் சபைக்கு சாத்யகியுடன் திரும்பிச் சென்ற ஜனார்த்தனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த விப்ரனிடம் {ஜனார்த்தனனிடம்} பேசிய பிறகு கிருஷ்ணன் சாத்யகியிடம், "சைநேயா {சிநியின் பேரனே}, இந்த விப்ரருடன் சென்று நான் இப்போது சொன்னவற்றை ஹம்சடிம்பகர்கள் என்ற சகோதரர்கள் இருவரிடமும் மீண்டும் சொல்வாயாக.(1) நாம் போர்க்களத்தில் சந்திக்கும் வகையில் நான் சொன்ன செய்தியை மாற்றமில்லாமல் அவர்களிடம் மீண்டும் சொல்வாயாக. அவர்கள் எதை எதிர்க்கிறார்கள் என்று விளக்கிப் போதுமான எச்சரிக்கையையுயம் அவர்களுக்குக் கொடுப்பாயாக.(2) சாத்யகி, யதுவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, வில்லை எடுத்துக் கொள்வாயாக, உடும்புத் தோலுறைகளைச் சூடிக் கொள்வாயாக. துணைவரெவரும் இல்லாமல் ஒரேயொரு குதிரையை மட்டும் எடுத்துச் செல்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(3)
"நன்று" என்று சொன்ன சாத்யகி, துணைவரெவருமின்றி வேகமான குதிரையொன்றில் ஏறினான்.(4) {ஜனார்த்தனன் என்ற அந்தத்} தூதனுக்கு விடைகொடுத்தனுப்பிய கிருஷ்ணன், "ஐயோ, ஹம்சனும், டிம்பகனும் இவ்வளவு ஆணவமிக்கவர்களாக இருக்கிறார்களே. இத்தகைய ஆணவத்தைக் காண்பதரிது" என்றான் {கிருஷ்ணன்}.(5)
மாதவனுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்த தூதன் ஜனார்த்தனன், துவாரகையை விட்டகன்று சாத்யகியுடன் சால்வ நகரத்தை நோக்கிப் புறப்பட்டான்.(6) அந்த விப்ரன், அந்நகரை அடைந்து ஹம்ச டிம்பகர்களின் சபா மண்டபத்திற்குள் நுழைந்து சாத்யகிக்கு ஒரு நல்ல ஆசனத்தைக் கொடுத்தான். சாத்யகியின் அருகில் அமர்ந்த பிறகு அவனை அவ்விரு இளவரசர்களுக்கும் அவன் அறிமுகம் செய்து வைத்தான்.(7,8)
{ஜனார்த்தனன்}, "மன்னா, இவன் சாத்யகி. இவன் துவாரகையின் தூதனாக வந்திருக்கிறான். இவன் கிருஷ்ணனின் வலது கையாகச் செயல்படுபவன்" என்றான்.
ஜனார்த்தனனின் சொற்களைக் கேட்ட ஹம்சன் பின்வருமாறு மறுமொழி கூறினான் :(9) "நான் ஏற்கனவே துவாரகையில் யாதவர்களுடனான உன் சந்திப்பைக் குறித்துக் கேள்விப்பட்டேன். இன்று கிருஷ்ணனை நான் முகமுகமாகச் சந்திக்கப் போகிறேன். சாத்யகி நிதானமானவன், வில் தரிப்பதில் சமர்த்தன், வேதங்களை நன்கறிந்தவன், ஆயுதங்கள் அனைத்தையும் கையாள்வதில் தனித்திறன் கொண்டவன் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவன் தானே நம் முன் வந்திருப்பதால் இவனைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.(10,11) சாத்யகி, வசுதேவர், கிருஷ்ணன், பலபத்ரன் {பலராமன்} ஆகியோர் நலமா? உக்கிரசேனரும் பிறரும் செழித்திருக்கின்றனரா?" என்று கேட்டான் {ஹம்சன்}.(12)
சாத்யகி மென்மையாக, "ஆம், அனைவரும் நலம்" என்றான். இந்நேரத்தில் அவனுடைய முகம் கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.
அப்போது நாநயமிக்கவனான ஹம்சன் ஜனார்த்தனனிடம், "பிராமணா, சக்கரபாணியான கிருஷ்ணனை நீ சந்தித்தாயா? உள்ளபடியே நான் அனுப்பிய செய்தியை நீ அவனிடம் சொன்னாயா? உன்னுடைய துவாரகைப் பயணத்தைக் குறித்த அனைத்தையும் நீ எனக்குச் சொல்வாயாக" என்றான் {ஹம்சன்}".(13,14)
பவிஷ்ய பர்வம் பகுதி – 92ல் உள்ள சுலோகங்கள் : 14
மூலம் - Source |