(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய ப்ரதிஸந்தேஷம்)
The reply of Krishna | Bhavishya-Parva-Chapter-91 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ஜனார்த்தனனுக்கு மறுமொழி கூறிய கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "யாதவர்கள் இது போலச் சிரித்துக் கொண்டும், ஏளனம் செய்து கொண்டும் இருந்தபோது, கேசியைக் கொன்றவனான கேசவன் அந்தத் தூதனிடம் {ஜனார்த்தனனிடம்} திரும்பி, "துவிஜரே, உமது நண்பனிடம் திரும்பிச் சென்று என் செய்தியை அவனிடம் சொல்வீராக.(1) விரைவாக வீடு திரும்பி ஹம்சடிம்பகர்களிடம் இதைச் சொல்வீராக: "நான் உங்கள் இருவருக்கும் கொண்டாடப்படும் என் சாரங்கத்தில் இருந்து ஏவப்படும் கணைகளையே கப்பமாகக் கட்டுகிறேன்" {என்று சொல்வீராக}.(2)
சிந்தனைமிக்க அம்மன்னர்கள் இருவருக்கும், என் வாளின் கூர்மையையே நான் கப்பமாகக் கட்டுவேன். அல்லது, என் சக்கரத்தால் அவர்களின் தலைகளைக் கொய்து கப்பமாகக் கட்டுவேன்.(3)
{மேலும் அவர்களிடம்}, "மஹாதேவன் அளித்த வரமே உங்கள் அழிவுக்குக் காரணமாகப் போகிறது. ருத்திரனே உங்களைக் காக்க நேரில் வந்தாலும், முதலில் அவனை வீழ்த்திவிட்டுப் பிறகு உங்கள் இருவரையும் நான் கொல்வேன்.(4) மன்னா, போர்க்களத்தை உன் விருப்பத்திற்கேற்றபடி நீயே தேர்ந்தெடுப்பாயாக. என்னுடைய பெரிய படையுடன் நான் உன்னை அங்கே சந்திப்பேன்.(5) மன்னர்களே, புஷ்கரமோ, பிரயாகையோ, மதுராவோ, அஃது எதுவாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் இடத்தில் உங்களுடனும், உங்கள் படைவீரர்களுடனும் போரிட நான் தயாராக இருக்கிறேன். ஆஞ்சாதீர்கள். நான் உங்களை அந்தப் போர்க்களத்தில் நிச்சயம் சந்திப்பேன்" {என்றும் சொல்வீராக}.
பிராமணரே, ஜனார்த்தனரே, நட்பின் காரணமாக இந்தச் செய்தியை நீர் உமது நண்பர்களுக்குத் தெரிவிக்கத் தயங்கினால், சாத்யகியை உம்முடன் அழைத்துச் செல்வீராக. அவன் தேவையானவை அனைத்தையும் செய்வான். {சாத்யகியை அழைத்துச் சென்றால்} இவை என் சொற்கள் என்பதை மட்டும் உறுதி செய்தவாறு வெறுமனே செயலேதும் செய்யாமல் நீர் பார்த்துக் கொண்டிருக்கலாம்.(6-8)
விப்ரேந்திரரே, நீர் என்னிடம் கொண்ட மாசற்ற பக்தியை நான் நன்கறிவேன். அருமை ஜனார்த்தனரே, நீர் என்னுடைய கடந்த காலங்களையும், என் பெயர்களையும், என் வடிவங்களையும், என் குணங்களையும் தொடர்ந்து கேட்பதிலும், விவாதிப்பதிலும் ஈடுபட்டால் துன்பம் நிறைந்த இம்மையிலும் எப்போதும் நீர் வாகை சூடுவீர்" என்றான் {கிருஷ்ணன்}".(9)
பவிஷ்ய பர்வம் பகுதி – 91ல் உள்ள சுலோகங்கள் : 9
மூலம் - Source |