Sunday 20 February 2022

துவாரகையை அடைந்த தூதன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 89

(ஜநார்தநாக்யதூதஸ்ய த்வாரவதீப்ரயாணம்)

Envoy reached Dwaraka | Bhavishya-Parva-Chapter-89 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: துவாரகைக்குப் பயணிக்கும் போது ஜனார்த்தனன் எண்ணிய எண்ணங்கள்...


Vishnu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ராஜேந்திரா, இவ்வாறே அந்தப் பிராமணன் {ஜனார்த்தனன்}, விஷ்ணுவைக் காணும் ஆவலில் குதிரையில் ஏறி புறப்பட்டுச் சென்றான்.(1) கோடை காலத்தில் சூரியனின் வெப்பத்தில் காய்ந்த ஒரு பயணி, தொலைவில் நீரைக் கண்டதும் வேகமாக நடப்பதைப் போலவே கிருஷ்ணனைக் காணும் ஆவலில் அந்தப் பிராமணனும் தன் குதிரையை முடிந்த அளவுக்கு வேகமாகச் செலுத்தினான்.(2,3)

அவன் {ஜனார்த்தனன்}, "ஹம்சன், துவாரகையில் கிருஷ்ணனைக் காணும் வாய்ப்பை எனக்குக் கொடுத்திருப்பதால் என் அன்புக்குரிய நண்பனாகிறான்.(4) துவாரகையில் விஷ்ணுவைக் காணும் என்னைவிடப் பாக்கியசாலி வேறு எவன் இருக்க முடியும்?(5) கிருஷ்ணனைக் காணும் என் பணியை முடித்துத் திரும்பியதும் என்னைக் காணப் போகும் நுண்ணறிவுமிக்க என் அன்னையும் பாக்கியவதியே.(6) வில்லைத் தரித்தவனும், தேவர்களின் தலைவனுமான கிருஷ்ணனின் முகமானது, மலரும் தாமரை மலரின் மகரந்தத்தைப் போன்று பிரகாசிப்பதை நான் காணப்போகிறேன்.(7) நீலோத்பலம் போன்று கரியதும், சங்கு, சக்கரம், கதை, வில், காட்டு மலர் மாலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த ஸூக்ஷ்ம மேனியை நான் காணப்போகிறேன்.(8) தலைவர்களின் தலைவனான அந்தத் தாமரைக் கண்ணனை நான் காணும்போது, பேரின்பத்தை உணரப் போகும் என் இதயத்தைப் பீடித்திருந்த இருப்பின் துயரங்கள் அனைத்தும் விலகும்.(9)

மறைமெய்ம்மைசார் யோகியரின் தலைவனான கிருஷ்ணன், தன் மங்கலப் பார்வையை என் மீது செலுத்துவானா? அவன் என்னிடம் மகிழ்ச்சியாகப் பேசுவானா? "மங்கலமாக இருப்பாயாக" என அவன் என்னிடம் சொல்வானா?(10) துவாரகையை அடைந்ததும், மூவுலகங்களையும் படைத்துக் காக்கும் சக்கரபாணியான கிருஷ்ணனை நான் காணப் போகிறேன். அந்தச் சக்கரபாணியின் தாமரை பாதத்தைக் காண என் மனம் ஏங்குகிறது.(11) கௌஸ்துப மணியின் பிரகாசத்தால் ஒளியூட்டப்பட்ட விஷ்ணுவின் மார்பை நான் தியானிக்கிறேன். பயணம் செய்தாலும் என் மனம் கவனம் சிதறாமல் அந்த ஈசுவரனிலேயே நிலைத்திருக்கிறது.(12) 

பட்டுப் பீதாம்பரத்தையும், காட்டு மலர் மாலைகளையும் அணிந்தவனும், அழகிய புன்னகையால் அலங்கரிக்கப்பட்ட முகத்தைக் கொண்டவனுமான கிருஷ்ணனை நான் இன்று மீண்டும் மீண்டும் காண்பேன்.(13) ஹரியின் எழில்மிகு வடிவை நினைக்கும்போதே எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. நான் பயணிக்கும்போதே கூட, அந்தச் சங்கு, சக்கர, கதாதாரி என் முன்னிலையில் நிற்பதாக உணர்கிறேன்.(14) ஜகத்குருவான கிருஷ்ணன் என் முன்பு நடந்து செல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. "இதோ என் தலைவன்" என்று என் நாவு மீண்டும் மீண்டும் சொற்களை அமைக்கிறது.(15)

"எனக்குக் கப்பம் கொடுப்பாயாக" என்று நான் அவனிடம் சொல்லப் போவதை நினைத்தால் நான் சோகத்தையும், வெட்கத்தையும் அடைகிறேன். ஹம்சனின் இந்தக் கோரிக்கையைத் திமிரின் உச்சமென நான் கருதுகிறேன்.(16) ஹம்சனுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்றும், அவனது ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், அவனுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்றும் விஷ்ணுவிடம் நான் சொல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறேன். எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி நான்?(17)

ஹரியே, விஷ்ணுவே, யதுவின் முதன்மை வழித்தோன்றலே, "நீ ஹம்சனுக்குக் கப்பம் கட்டுவாயாக" என்று நான் சொல்லும்போதே நான் வெட்கமற்ற மூடனாக அறியப்படுவேன்.(18) "மன்னன் ஹம்சனுக்குப் பெருமளவு உப்பைக் கப்பமாகக் கொடுப்பாயாக" என்று ஒருபோதும் சாரங்கபாணியான கிருஷ்ணனிடம் நான் சொல்லக்கூடாது.(19) இருப்பினும் நட்புக்காக அவ்வாறு நான் பேச வேண்டுமே. தூய இதயம்படைத்த ஆன்மாவுக்கு நட்பு துன்பத்தையே தரும்.(20) மறுபுறம் விஷ்ணுவோ எப்போதும் சர்வத்தையும் அறிந்தவன். எனவே, அனைவரின் மனங்களையும் அறிந்த அவன், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்றே விரும்புவான்.(21)

இத்தகைய சூழலில் நட்பின் நிர்ப்பந்தத்தில் செயல்படுவதால் நான் குற்றவாளி ஆகமாட்டேன். பேசப் பணிக்கப்பட்ட பயங்கரச் சொற்களைச் சொல்வதிலிருந்து அந்த விஷ்ணுவே என்னைக் காக்க வேண்டும்.(22) கரிய சுருண்ட தலைமயிரையும், சங்கு போன்ற ரேகையுடன் கூடிய கழுத்தையும், ஸ்ரீவத்சமெனும் மச்சத்தால் அலங்கரிக்கப்பட்ட மார்பையும் கொண்டவனும், அண்டத்தைக் காப்பவனுமான விஷ்ணுவை நான் தரிசிக்கப் போகிறேன்.(23) சக்கரபாணியும், யாதவர்களின் தலைவனும், மாணிக்கம் பதித்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அகன்ற தோள்களைக் கொண்டவனும், கௌஸ்துப மணியையும், பிற ரத்தினங்களையும் அணிவதன் மூலம் பிரகாசமாக ஒளிர்பவனும், நீக்கமற நிறைந்தவனுமான கேசவனை நான் தரிசிக்கப் போகிறேன்.(24) 

நினைத்தற்கரிய ஆற்றல்களைப் படைத்தவனும், வெளிப்பட்டிருக்கும் அனைத்தின் உண்மைக் காரணனும், உலகைக் காப்பவனும், பாற்கடலின் பரப்பில் கிடப்பவனுமான நாராயணனை நான் இன்று தரிசிக்கப் போகிறேன்.(25) அவனைக் காண்பதன் மூலம், என் வாழ்வு நிச்சயம் மகிமையடையும்; என் உடல் பிணிகளில் இருந்து விடுபடும். இன்று நான் ஹரியைக் காணும்போது என் வாழ்வின் பயன் நிச்சயம் விளங்கும்.(26) இன்று நான் ஹரியைக் காண்பதன் மூலம், இது வரை நான் செய்து வந்த யஜ்ஞங்களுக்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அவனைக் காண்பதன் மூலம் இன்று என் கண்கள் உண்மையில் தங்கள் இருப்பின் பயனுக்குச் சாட்சி பகரும்.(27)

பொருந்தாதவையும், பயங்கரமானவையுமான செயல்பாடுகளைச் செய்யுமாறு நான் முன்மொழியப் போகிறேன். எனவே, விஷ்ணு என்னிடம் மனம் நிறைய வேண்டுகிறேன். என்னுடைய கண்கள் இரண்டும் இன்று அந்த ஈசுவரனை உண்மையில் தரிசிக்குமா?(28) இன்று நான் கிருஷ்ணனின் அமுதம் போன்ற எழிலை என் கண்களால் மீண்டும் மீண்டும் பருகப் போகிறேன்.(29) மங்கலமான அவனது கமல பாதங்களின் புழுதியை எடுத்து என் தலையில் பூசிக் கொள்ளப் போகிறேன். அவனது தாமரை பாதத்தின் புழுதியும் தேவலோகத்திற்கான வாயிலைத் திறக்கும் என்பதால் நான் பெரும் நற்பேற்றை அடைந்தவனாவேன்.(30) மேக முழக்கத்தைப் போன்ற கம்பீரமான கிருஷ்ணனின் குரலை நான் இன்று கேட்கப் போகிறேன். ஜகத்பதியும், சக்கரபாணியுமான விஷ்ணுவின் தாமரை பாதங்களை நான் தரிசிக்கப் போகிறேன்.(31)

சந்திரனைப் போன்ற ஹரியின் முகத்தை நான் இன்று காணப் போகிறேன். இந்த மொத்த அண்டமும் ஹரியின் புற வடிவமாகத் திகழ்கிறது. அவ்வாறு நோக்கினால் அவனை நான் எங்கும் பார்க்கிறேன். மிகவும் முறையற்ற வகையில் பேசும் கட்டாயத்தில் இருக்கும் என்னிடம் விஷ்ணு நிறைவடைவானாக. பிரகாசமாக ஆடிக் கொண்டிருக்கும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகளையும், சந்தனம் பூசிய மேனியையும், தோள்வளைகளை அலங்கரிக்கும் ரத்தினங்களின் ஒளியால் அழகூட்டப்பட்ட தோள்களையும், இடது கையில் பாஞ்சஜன்ய சங்கையும் கொண்டவனும், காலை வேளையின் சூரியக் கதிர்களைப் போலப் பொன்னாகப் பிரகாசிப்பவனும், சுதர்சனச் சக்கரத்தின் பிரகாசத்தால் ஒளியூட்டப்படுபவனும், கங்கணங்களாலும், கைவளைகளாலும் அலங்கரிக்கப்பட்ட கைகளைக் கொண்டவனும், பட்டுப் பீதாம்பரம் தரித்தவனும், அகன்ற மார்பைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனுமான அச்யுதனை நான் எப்போது காணப் போகிறேன்.(32-36)

நேருக்கு நேர் முகமுகமாக ஹரியை நான் இன்று காணப் போவதால், நிச்சயம் நான் பெரும் நல்லூழ் கொண்டவனே. நான் இன்று ஹரியை தரிசிக்கத் தீர்மானித்திருப்பதால் மீண்டும் மீண்டும் என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.(37) பலபத்ரனின் {பலராமனின்} நீட்சியான அனந்தசேஷன் என்ற படுக்கையில் கிடப்பவனும், ஜகந்நாதனுமான கிருஷ்ணனை இன்று நான் காணப் போகிறேன். எப்போதும் வாகை சூடுபவனும், ஜகத்குருவுமான {மொத்த உலகின் குருவுமான} அந்தக் கிருஷ்ணனை நிச்சயம் நான் காண்பேன்.(38)

கரிய நிறம் கொண்டவனும், கௌஸ்துப மணியின் கதிர்களால் ஒளியூட்டப்படுபவனும், அதே ரத்தினத்தால் ஒளியூட்டப்பட்டதும், ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியுடன் கூடியதுமான அகன்ற மார்பைக் கொண்டவனும், பட்டுப் பீதாம்பரம் உடுத்தியவனும், மகரவடிவ காதுகுண்டலங்களை அணிந்தவனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவனும், அற்புத மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவனும், பெருங்கரங்கள் இரண்டில் கதாயுதத்தையும், சக்கராயுதத்தையும் தரித்தவனுமான ஹரியின் பிரகாச வடிவம் எனக்குப் புலப்படட்டும்.(39)

நாராயணனைக் காணும் காட்சி என்ற அமுதத்தை இன்று என் கண்களால் நான் பருகப் போகிறேன். இந்த அமுதம், வேத இலக்கியங்களெனும் பெருங்கடலானது, தூய புத்தியெனும் மந்தர மலையின் உதவியையும், உண்மையான விடாமுயற்சி எனும் பெரும்பாம்பு வாசுகியின் உதவியையும் கொண்டு முனிவர்களால் கடையப்பட்டபோது உண்டானதாகும்.(40) இருப்பில் இருந்து விடுபடும் முக்தியை விரும்புவோரின் தியானப் பொருளாக இருப்பவனும், எல்லையற்றவனும், ஆதியில்லாதவனும், அளவற்றவனும், ஸ்தூலமானவனும் {திரளானவனும்}, ஸூக்ஷ்மமானவனும் {நுட்பமானவனும்}, ஏகனும் {ஒருவனும்}, அனேகனும் {பலராக இருப்பவனும்}, மூலனும், அண்டத்தின் பிதாவும், தேவர்களின் முற்றான மகிமையுமான அச்யுதன் என் கண்களின் முன்பும், என் இதயத்திற்குள்ளும் எப்போதும் புலப்படுவானாக" {என்று நினைத்தான் ஜனார்த்தனன்}.(41)

அந்த விப்ரேந்திரன் இவ்வாறு நினைத்தவாறே பெரிதும் நற்பேறு பெற்றவனாகத் தன்னைக் கருதினான். அதன்பிறகு குதிரையைச் செலுத்தியவாறே அவன் துவாரகையின் நுழைவாயிலை அடைந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(42)

பவிஷ்ய பர்வம் பகுதி – 89ல் உள்ள சுலோகங்கள் : 42

மூலம் - Source

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்