(தூதஸ்ய ஸந்தேஷநிவேதநம்)
The message of the Envoy | Bhavishya-Parva-Chapter-90 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ஹம்சனின் செய்தியைக் கிருஷ்ணனிடம் சொன்ன பிராமணன் ஜனார்த்தனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "துவிஜோத்தமனும், கிருஷ்ணனின் பாத கமலங்களில் சரணடைந்தவனுமான ஜனார்த்தனன், வாயில் காப்போனால் வழிநடத்தப்பட்டு, சுதர்மமெனும் சபா மண்டபத்திற்குள் நுழைந்தான். உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்தவனும், தேவேசனுமான கிருஷ்ணனையும், உடன் இருந்த பலபத்ரனையும் {பலராமனையும்} அங்கே தரிசித்தான். கிருஷ்ணன் அறக்கோட்பாடுகளின் மொத்த வடிவமாகத் தோன்றினான்.(1,2) சாத்யகியும், நாரதமுனிவரும் கிருஷ்ணனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர். மன்னன் உக்கிரசேனன், துர்வாச முனிவருடன் உரையாடிக் கொண்டிருந்த தலைவனின் {கிருஷ்ணனின்} முன்பு அமர்ந்திருந்தான்.(3) மன்னா, அந்தச் சபையில் கந்தர்வர்கள் பலர் ஆடிக் கொண்டிருந்தனர், அப்சரஸ்கள் பலர் ஆடிக் கொண்டிருந்தனர், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோர் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.(4) அவர்கள், மதுசூதனனான மாதவனின் மகிமைகளை உரக்கப்பாடிக் கொண்டிருந்தனர். பிராமணர்கள் பலரும் சாம வேத மந்திரங்களை ஓதி தலைவனைப் புகழ்ந்தனர்.(5)
கிருஷ்ணனைத் தன் முன் கண்ட போது, அந்தப் பிராமணனின் உடலில் பரவசத்தின் அடையாளங்கள் வெளிப்பட்டன. அவனது உடலில் மயிர்க்கூச்சம் ஏற்பட்டது. "நான் ஜனார்த்தனன்" என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் வணக்கத்தைத் தெரிவித்தான். பலராமனையும் வணங்கிய பிறகு, அவன் கிருஷ்ணனிடம், "தேவேசா, நான் ஹம்ச டிம்பகர்களால் அனுப்பப்பட்ட தூதன்" என்றான். அதற்குக் கிருஷ்ணன், "பிராமணரே, முதலில் இந்த ஆசனத்தில் சுகமாக அமர்வீராக. பிறகு உமது வரவின் காரணத்தை எங்களுக்குச் சொல்வீராக" என்றான். ஜனார்த்தனன், "நன்று" என்று சொல்லி தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த ஆசனத்தில் அமர்ந்தான்.(6-8)
மன்னா, தலைவன் {கிருஷ்ணன்} இனிய சொற்களால் அந்தப் பிராமணன் ஜனார்த்தனனை வரவேற்று, பிரம்மதத்தன், ஹம்சன், டிம்பகன் ஆகியோரின் நலத்தை விசாரித்தான்.(9) அவன், "விப்ரரே, ஹம்சடிம்பகர்களின் ஒப்பற்ற ஆற்றலையும், உயர்ந்த விருப்பங்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உமது தந்தை நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறாரா?" என்று கேட்டான்.(10)
ஜனார்த்தனன், "கேசவா, ஜகந்நாதா, மன்னர் பிரம்மதத்தரும், என் தந்தையும் {மித்ரஸஹரும்} நலமாக இருக்கின்றனர். ஹம்சன், டிம்பகன் என்ற சகோதரர்கள் இருவரும் செழிப்புடன் இருக்கின்றனர்.(11)
அப்போது பகவான் {கிருஷ்ணன்}, "துவிஜோத்தமரே, ஹம்சனும், டிம்பகனும் எனக்கு அனுப்பியிருக்கும் செய்தியென்ன? தயக்கமில்லாமல் அனைத்தையும் விரிவாக என்னிடம் சொல்வீராக.(12) பிராமணர்களில் முதன்மையானவரே, அவ்விருவரும் உம்மிடம் சொன்னவை தகுந்தவையாக இருந்தாலும், தகாதவையாக இருந்தாலும் உள்ளபடியே சொல்வீராக. அனைத்தையும் கேட்ட பிறகு, எங்கள் மறுமொழியை நாங்கள் தருகிறோம்.(13) பிராமணரே, தூதராக வந்திருப்பதால் நீர் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. உள்ளபடியே செய்தியைச் சொல்வதுதான ஒரு தூதரின் கடமை, அதற்காக அவர் மீது எந்தப் பழியும் சுமத்தப்படாது.(14) ஜனார்த்தனரே, செய்தி இனிமையானதாகவோ, புண்படுத்துவதாகவோ இருந்தாலும் கவலை வேண்டாம். ஹம்சனும், டிம்பகனும் சொல்லி அனுப்பியது எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்வீராக" என்றான்.(15)
கேசவன் இவ்வாறு பேசியதும், ஜனார்த்தனன், "பகவானே, அறியாமையில் மூழ்கிய சாதாராண மனிதனைப் போல நீ பேசுவதேன்? நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனைத்தையும் அறிந்தவன் நீ.(16) அச்யுதா, உலகிற்குள் நீ அறியாததேதும் இல்லை. நடைபெறும் அனைத்திற்கும் சாட்சியாக இருந்தாலும் செய்தியைச் சொல்லும்படி என்னை நீ கேட்கிறாய்.(17) ஜகத்பதியே, ஆழமான ஞானத்தில் முன்னேற்றம் கண்டவர்கள், விஷ்ணுவின் அவதாரமாக உன்னைக் காண்கின்றனர். நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவைப் போல வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ நடக்கும் அனைத்தையும் நீ காண்கிறாய்.(18) உன் புற சக்தியின் மூலம் நீ அண்டத்தை வெளிப்படுத்தியதால் அண்டம் உன்னுள்ளேயே இருக்கிறது. அண்டத்தில் உள்ள அசைவன, அசையாதனவற்றில் ஏதொன்றையும் நீ அறியாதவனல்ல.(19) ஜகத்பதியே, நீ அனைத்தையும் அறிந்தவன், நீக்கமற நிறைந்தவன். நீ அறியாததேதும் இல்லை. வாழும் உயிர்கள் அனைத்தையும் காப்பவன் நீயே, அண்டத்தை அழிப்பதற்காக ருத்திரனாக விரிவடைபவனும் நீயே.(20)
மாதவா, சத்வ குண அவதாரமான விஷ்ணுவாக அண்டத்தைக் காப்பவன் நீயே. ரஜோ குண அவதாரமான பிரம்மனாக அண்டத்தைப் படைப்பவன் நீயே. நிலை இவ்வாறு இருக்கக் கொண்டு வந்த செய்தியை என்னை நீ சொல்லச் சொல்வது ஏன்?(21) மாதவா, ஆழமான ஞானத்தின் உடல்வடிவமாகவும், இருப்பில் இருக்கும் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் கல்விமான்கள் உன்னையே அறிகின்றனர்.(22) புருஷோத்தமா, ரிஷிகேசா, பேரிலக்கியங்களில் அறிஞர்களாகத் திகழ்பவர்கள், புனித மந்திரங்கள் ஓதப்படுவதற்கான நோக்கம் அல்லது இலக்காக உன்னையே அறிகிறார்கள்.(23) தேவேசா, மாதவா, இவை யாவற்றையும் கருத்தில் கொண்டாலும் பேசும்படி நீ கேட்டுக் கொண்டதால் நான் கொண்டு வந்த செய்தியைச் சொல்கிறேன்.(24)
மன்னர் பிரம்மதத்தர் ராஜஸூய யஜ்ஞத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். அதன் காரணமாகவே ஹம்சனும், டிம்பகனும் என்னை உன்னிடம் அனுப்பி வைத்திருக்கின்றனர்.(25) யாதவர்களிடம் கப்பம் திரட்டவும், உன்னை அவர்களது வேள்விக்கு அழைக்கவும் தான் என்னை அவர்கள் இங்கே விரைந்து அனுப்பினார்கள். கேசவா, அந்த வேள்விக்கான பெருமளவு உப்பை நீ கொடுக்க வேண்டுமென அவர்கள் கோருகிறார்கள்.(26) ஜகத்பதியே, அவர்களின் ஆணையின் பேரில் பெருமளவு செல்வத்தைக் கப்பமாக நேரடியாகப் பெற்றுக் கொள்ளவே என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கின்றனர். இனி அவர்களின் இரண்டாவது கோரிக்கையைக் கேட்பாயாக.(27) பெருமளவு உப்பை எடுத்துக் கொண்டு தாமதமில்லாமல் திரும்புமாறு அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர். கேசவா, இவையே உனக்காக அவர்கள் அனுப்பிய செய்திகள்" என்றான் {ஜனார்த்தனன்}.(28)
மன்னா, அந்த விப்ரேந்திரன் {ஜனார்த்தனன்} இவ்வாறு பேசியதும் கிருஷ்ணன் நீண்ட நேரம் உரக்கச் சிரித்தான். பிறகு அவன் அந்தத் தூதனிடம் பின்வருமாறு பேசினான்,(29) "என் அருமை தூதரே, துவிஜோத்தமரே, மிக நியாயமான என் சொற்களைத் தயை கூர்ந்து கேட்பீராக. மன்னனாக இஃது என் கடமை என்பதால், நான் அவர்களுக்கு மகிழ்ச்சியாகக் கப்பம் கட்டுவேன்.(30) விப்ரரே, நான் அவர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை திமிரின் உச்சபட்ச வெளிப்பாடாகும். ஐயோ, நல்ல க்ஷத்திரிய குலத்தில் பிறந்த ஹம்சனும், டிம்பகனும் இவ்வளவு ஆணவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(31) எவனும் என்னைக் கப்பங்கட்டச் சொல்வது இதுவே முதல் முறை. இதற்குமுன் என்னிடம் இத்தகைய கோரிக்கையை எவனும் வைத்ததில்லை" என்றான் {கிருஷ்ணன்}.
தூதனிடம் இவ்வாறு பேசிய கிருஷ்ணன், பிறகு யாதவர்களிடம் பின்வருமாறு பேசினான்,(32) "யாதவர்களே, நான் கப்பம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை வேடிக்கையானது. மன்னன் பிரம்மதத்தன் ராஜசூய வேள்வி செய்யப் போகிறான், அவனது மகன்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் அவனுக்கு உதவி செய்கின்றனர். பாவம் நிறைந்தவர்களான அந்த மன்னர்கள், யதுவின் முதன்மை வழித்தோன்றலான கிருஷ்ணன் தங்கள் அடிமையாக உப்பைக் கொண்டு வருவான் என்று நினைக்கின்றனர்.(33,34) யாதவர்களே, போர்க்களத்தில் ஏற்கனவே என்னை வீழ்த்திவிட்டவர்களைப் போல அவர்கள் என்னைக் கப்பங்கட்டும் வாசுதேவனாக்கி இருக்கிறார்கள். இந்தத் தோரணையில் உள்ள எள்ளலைப் பாருங்கள்" என்றான் {கிருஷ்ணன்}.(35)
பலபத்ரன் {பலராமன்} தலைமையிலான முதன்மையான யாதவர்கள் அனைவரும், கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டதும், ஹம்சடிம்பகர்களின் கோரிக்கையை அறிந்து, எழுந்து நின்று ஆவேசத்துடன் சிரித்தனர்.(36) அந்த யாதவர்கள் அனைவரும், "கிருஷ்ணன் கப்பங்கொடுப்பவன்" என்று சொல்லித் தங்கள் கைகளைத் தட்டியபடியும், ஒருவரையொருவர் உரசியபடியும் உரக்கச் சிரித்தனர்.(37)
மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, யாதவர்களின் ஒலி பூமி முழுவதிலும், ஆகாயம் முழுவதிலும் எதிரொலிக்கும் வகையில் அவர்கள் தங்கள் கைகளைத் தட்டிச் சிரித்தனர். அப்போது அந்த விப்ரன் {ஜனார்த்தனன்}, தன் நண்பன் ஹம்சனை நிந்தித்தவாறே, "ஐயோ, தூதனென்ற பணி எனக்குத் துன்பத்தைத் தருகிறதே" என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த அவன், சங்கடமடைந்து, கைகளால் தலையைப் பிடித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(38,39)
பவிஷ்ய பர்வம் பகுதி – 90ல் உள்ள சுலோகங்கள் : 39
மூலம் - Source |