(ஹம்ஸடிம்பகயோர்தூதப்ரேஷணம்)
Envoy instructed | Bhavishya-Parva-Chapter-88 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ராஜசூயம் செய்ய நினைத்த ஹம்சனும், டிம்பகனும், ஜனார்த்தனன் என்ற பிராமணனைக் கிருஷ்ணனிடம் தூது அனுப்பியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சீடர்கள் இல்லந்திரும்பினாலும் துர்வாசர், நாரத முனிவருடன் சேர்ந்து துவாரகையிலேயே தங்கினார். அவர்கள் முற்றான உண்மை குறித்துத் தங்களுக்குள் விவாதம் செய்து காலத்தைக் கடத்தி வந்தனர்.(1) கோவிந்தன் {கிருஷ்ணன்}, முனிவர்கள் வசிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தான். அதே வேளையில், ஹம்சனும், டிம்பகனும், அரச சபையில் இருந்த தங்கள் தந்தையான மன்னன் பிரம்மதத்தனை அணுகி பின்வருமாறு பேசினர்.(2,3)
{ஹம்சனும், டிம்பகனும்}, "அன்புக்குரிய தந்தையே, மன்னர்களில் முதன்மையானவரே, ராஜஸூய வேள்வி செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்வீராக. இந்த மாதமே அதற்கான மங்கல வேளை வாய்க்கிறது. யஞ்ஜம் இடையூறில்லாமல் நடைபெற நாங்கள் உமக்கு உறுதுணையாக இருப்போம்.(4) நமது குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, காலாட்படை வீரர்களை அழைத்துக் கொண்டு திசைகள் அனைத்தையும் வெல்ல சகோதரர்களான நாங்கள் இருவரும் ஆவலாக இருக்கிறோம். வேள்விக்குத் தேவையான பொருட்களை உடனே திரட்டத் தொடங்குவீராக" {என்றனர்}.
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, மன்னன் பிரம்மதத்தனும் தன் மகன்களின் முன்மொழிவைத் தயக்கமில்லாமல் ஏற்றுக் கொண்டான். எனினும், அவர்களின் {ஹம்சடிம்பகர்களின்} பிராமண நண்பன் ஜனார்த்தனன், அவர்களின் ஆணவ இயல்பைக் கருத்தில் கொண்டும், இத்தகைய முயற்சி வீணானதே எனத் தீர்மானித்தும் அவர்களிடம், "ஹம்சா, என் சொற்களைக் கவனமாகக் கேட்டுக் கருத்தில் கொண்டு நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். பீஷ்மர், ஜராசந்தன், பாஹ்லீகர் ஆகியோரும், யாதவ வீரர்களும் இருக்கையில் நீங்கள் வெற்றுத் துணிச்சலில் இம்முயற்சியில் இறங்குகிறீர்கள்.(5-9) பீஷ்மர், பெருஞ்சக்திமிக்கவர், பேரனுபவம்வாய்ந்தவர், வாய்மை நிறைந்தவர், தற்கட்டுப்பாடுடன் இருப்பவர். இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்த பரசுராமரையே அவர் ஒரு காலத்தில் வீழ்த்தியிருக்கிறார்.
ஜராசந்தன் போர்க்களத்திற்குள் நுழைந்தால் அவனது பலமும், ஆதிக்கமும் எத்தகையது என்பதை நீங்கள் அறிவீர்கள். விருஷ்ணி குல வீரர்கள் அனைவரும் போர்க்கலையில் திறன்வாய்ந்தவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். அவர்களில் பகைவரனைவரையும் வெல்லும் கிருஷ்ணன், இந்தப் பூமியில் எதிர்க்க இயலாத போர்வீரனாகத் திகழ்கிறான்.(10-12) ஜராசந்தனுடன் மீண்டும் மீண்டும் போரிட்டுப் பேரளவில் அவன் அனுபவங்களைத் திரட்டியிருக்கிறான். உண்மையில் எவ்வளவு சக்திமிக்க மன்னனாலும் அவனைப் போர்க்களத்தில் எதிர்த்து நிற்க இயலாது.(13)
வலிமைமிக்கப் பலராமன், தன் ஆற்றலில் செருக்கடைந்து வெறியுடன் இருக்கிறான். அவன் கோபமடைந்தால் மூவுலகங்களையும் மொத்தமாக அழித்துவிடக்கூடியவன்.(14) இஃது என் உறுதியான நம்பிக்கை. வலிமைமிக்கச் சாத்யகியும், போரில் பகைவரனைவரையும் வீழ்த்தும் சக்தியுடன் இருக்கிறான். யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் கீழ் போரிட எப்போதும் தயாராக இருக்கின்றனர்.(15) உங்களால் துன்புறுத்தப்பட்ட பெரும் முனிவர் துர்வாசர், தமது சீடர்களுடன் துவாரகைக்குச் சென்று கிருஷ்ணனைச் சந்தித்திருக்கிறார்.(16) மன்னர்களில் முதன்மையானவர்களே, இதை நான் எங்கள் வீட்டுக்கு உணவருந்த வந்த ஒரு பிராமணரிடம் இருந்து கேள்விப்பட்டேன். இத்தகைய முக்கியமான சூழலில் சிறந்த செயல்பாட்டை உறுதி செய்ய உங்கள் அமைச்சர்களுடன் அனைத்தையும் விரிவாக விவாதிப்பீராக. அதன் பிறகு தான் நீங்கள் ராஜசூய வேள்வி செய்வது குறித்துச் சிந்திக்க முடியும்" என்றான்.
இதற்கு ஹம்சன், "யார் அந்தப் பீஷ்மன்? அவன் ஒரு பலவீனமான கிழவன். அந்தக் கிழவனுடனா எங்களை ஒப்பிடுகிறாய்? பிராமணர்களில் சிறந்தவனே, கிருஷ்ணனின் தலைமையிலான யாதவர்களும், போதையில் மிதக்கும் பலராமனும் எங்களை எதிர்க்கத் துணிவார்கள் என்று நினைக்கவும் செய்வாயோ? சாத்யகி உள்ளிட்ட யாதவர்களில் எவரும் போர்க்களத்தில் எங்கள் முன்னால் நிச்சயம் நிற்க இயலாது. இதை நீ அறிவாயாக.(17-20) ஒப்பற்ற சக்திவாய்ந்த ஜராசந்தன் எங்கள் நண்பனாகவும், நலன்விரும்பியாகவும் இருக்கிறான். இப்போதே துவாரகைக்குச் சென்று எங்கள் நோக்கங்களை அறிவிக்கும் இந்தச் செய்தியைக் கிருஷ்ணனிடம் சொல்வாயாக.(21)
{செய்தி இதுதான்}, "கேசவா, ராஜசூய யஜ்ஞத்திற்குத் தேவையான சிறந்த பொருள்கள் பலவற்றையும் திரட்டிக் கொண்டு விரைவாக எங்களை அடைவாயாக. உன் செல்வமனைத்தையும், பெருமளவிலான உப்பையும் சேர்த்துக் கொண்டு வருவாயாக. கிருஷ்ணா, தாமதமில்லாமல் என் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவாயாக".
பிராமணா {ஜனார்த்தனா}, துவாரகைக்கு விரைந்து சென்று, நான் சொன்ன செய்தியை கிருஷ்ணனிடமும், பிற யாதவர்களிடமும் அறிவிப்பாயாக. பிராமணா, என் ஆணையைப் புறக்கணிக்கவோ, என்னைச் சபிக்கவோ நினைக்காதே. நீ என்னிடம் கொண்ட நட்பிற்காக இத்தொண்டை நீ செய்வாயாக" என்றான் {ஹம்சன்}.(22-24)
அன்புக்குரிய ஜனமேஜயா, ஹம்சனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்தப் பிராமணன் {ஜனார்த்தனன்}, அவர்களுக்குள் இருந்த நட்பைக் கருத்தில் கொண்டு வேறு எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை.(25) நித்திய அறத்தைக் கடைப்பிடிக்கும் தர்மாத்மாவான அந்த ஜனார்த்தனன், துவாரகை செல்லத் தயாராகி, "இன்றோ, நாளையோ, நாளை மறுதினமோ நிச்சயம் நான் புறப்படுவேன்" என்று சொல்லிவிட்டுத் தன் பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.(26) மஹாத்மாவான அந்த ஜனார்த்தனன் அதிகாலையிலேயே தனியாக வேகமான குதிரையில் ஏறி, சங்கு, சக்கர, கதாதாரியும், காரணங்கள் அனைத்தின் காரணனுமான கிருஷ்ணனைச் சந்திக்கத் துவாரகை நோக்கிச் சென்றான். அவன் மனத்தில், 'புலன்களின் தலைவனும், நித்தியமான ஸூக்ஷ்ம உடல் கொண்டவனும், அறிவாலும், அருளாலும் நிறைந்தவனுமான ஹரியைத் தரிசிக்கப் போகிறோம்' என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது. இவ்வாறே அவன் சென்று கொண்டிருந்தபோது, அவனது மனம் ஒரு கணமும் விலகாமல் கிருஷ்ணன் மீதே நிலைத்திருந்தது" என்றார் {வைசம்பாயனர்}.(27,28)
பவிஷ்ய பர்வம் பகுதி – 88ல் உள்ள சுலோகங்கள் : 28
மூலம் - Source |