(கிருஷ்ணஸ்ய ஹம்ஸடிம்பகவதப்ரதிஜ்ஞா யதிபோஜநம்)
Krishna's Vow | Bhavishya-Parva-Chapter-87 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ஹம்சனையும், டிம்பகனையும் கொல்வதாகக் கிருஷ்ணன் செய்த சபதம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "துர்வாச முனிவரின் பேச்சைக் கேட்ட யாதவர்களின் தலைவன் {கிருஷ்ணன்} பெருமூச்சுவிட்டபடியும், பெருங்கவலையுடன் அவரைப் பார்த்தபடியும் பின்வருமாறு பதிலுரைத்தான்.(1)
{கிருஷ்ணன்}, "உங்களுக்கு நேர்ந்தவை அனைத்திற்காகவும் என்னை மன்னிப்பீராக. உங்கள் மனக்குறைகள் தெரியாமல் நான் அலட்சியமாக இருந்துவிட்டேன். உமது கோபத்தைக் கைவிட்டு, தயை கூர்ந்து நான் சொல்வதைக் கேட்பீராக.(2) விப்ரரே, போரில் நான் ஹம்சனையும், டிம்பகனையும் வீழ்த்துவேனென்பது திண்ணம். சங்கரன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகியோரிடமோ, நான்முகனான பிரம்மனிடமோ அவர்கள் வரங்களைப் பெற்றிருந்தாலுங்கூட, என்னுடைய நண்பர்கள், உறவினர்கள், படைவீரர்கள் ஆகியோரின் துணையுடன் அவ்விரு இளவரசர்களையும் நான் கொல்வேன். அது நிச்சயம் உங்களுக்கு நிறைவைத் தரும்.(3,4) நான் சத்தியத்தைப் பேசுவதால், என் சொற்களை நம்பி உங்கள் கோபத்தைக் கைவிடுவீராக. மிக இழிந்தவர்களான அவ்விரு மன்னர்களையும் கொல்வதன் மூலம், உங்கள் அனைவரையும் நான் நிச்சயம் காப்பேன் என்பதை அறிவீராக.(5)
அவ்விரு பாவிகளும் உங்களுக்குத் தீங்கிழைத்திருக்கின்றனர் என்று நான் அறிகிறேன். அவர்களின் சக்திமிக்கத் தண்டத்தையும், சங்கரனிடம் பெற்ற வரத்தால் உண்டான பலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் செருக்கையும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஜராசந்தனுடன் நட்பு பூண்டிருப்பதால் அவர்களை ஒடுக்குவது எளிதல்ல.(6,7) அவர்கள் இல்லாமல் உலகை வெல்ல முடியாது என ஜராசந்தன் நம்புகிறான். அவன், அவர்களுக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பான் என்பதில் ஐயமில்லை.(8) பிராமணர்களில் சிறந்தவர்களே, போர் நேரிடுகையில், அவர்கள் நிச்சயம் ஜராசந்தனின் உதவியை நாடுவார்கள். இருப்பினும், அவர்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து நான் கொல்வேன். இதில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டியதில்லை. முனிவர்களே, உங்கள் ஆசிரமங்களுக்குத் திரும்பி உங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருப்பீராக. பலமிக்கவர்களான அவ்விரு போர்வீரர்களையும் விரைவில் நான் வீழ்த்துவேன்" என்றான் {கிருஷ்ணன்}.
இதில் பெரும் நிறைவடைந்த துர்வாசர், "கிருஷ்ணா, மூவுலகின் நன்மைக்காகச் செயல்படும் நீ மகிமையடைவாயாக. கேசவா, அண்டத்தின் தலைவா, உன்னால் சாதிக்க முடியாத காரியம் தான் என்ன இருக்கிறது?(9-12) தேவர்களின் தலைவா, மூவுலகங்களை ஆள்பவனும், அவற்றை அழிப்பவனும் நீயே. அனைவரையும் சமமாகக் கருதுபவனாக நீ இருப்பதால், உனக்கு நண்பனும், பகைவனும் எவனுமில்லை.(13) விஷ்ணுவே, ஹரியே, சக்கரபாணியான கிருஷ்ணா, நான் உன்னை வணங்குகிறேன். நித்திய தூயனும், தூய்மையின் அவதாரமும், தூய்மையில் உயர்ந்தவனும் நீயே.(14) தேவர்களின் தலைவா, உன் அவதாரங்களில் பக்தி கொண்ட பக்தர்களிடம், அன்புடன் இருக்கும் உன்னை அனைவரும் தேடுகின்றனர்.(15) ஜகந்நாதா, உன்னுடைய ஒரு பகுதியாகவே என்னை நான் கருதுகிறேன். நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்பதாலும், சாதுவின் குணம் பொறுப்பதே என்பதாலும் என்னை நீ மன்னிப்பாயாக" என்றார் {துர்வாசர்}.(16)
அப்போது அந்தப் பகவான் {கிருஷ்ணன்}, "விப்ரரே, நீரே பொறுத்தருள வேண்டும். உம்மைப் போன்ற மேன்மையானவர்களைப் பொறுத்துக் கொள்ள எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம். துறவிகளின் முதன்மையான கோட்பாடு மன்னிப்பதே {பொறுப்பதே / சகிப்பதே} ஆகும். அதுவே அவர்களின் பலமாகவும் அமைகிறது.(17) அஃது ஒருவனிடம் ஆழமான ஞானத்தை விளைவிப்பதைப் போலவே, பொருள் இருப்பில் இருந்து விடுதலை அடையும் நிலைக்கும் அவனை உயர்த்துகிறது. அறம் {தர்மம்}, வாய்மை {சத்தியம்}, ஈகை {தானம்}, புகழ் {கீர்த்தி} ஆகியவையே பொறுமையின் சாரங்களாகத் திகழ்கின்றன. பொறுமையே சொர்க்கத்திற்கான படிக்கட்டுகள் என வேதங்களை அறிந்தோர் சொல்வதால், பிறரை எப்போதும் நீர் மன்னிக்க {பொறுத்துக் கொள்ள} வேண்டும்.(18,19) முனிவர்களில் முதன்மையானவரே, நீங்கள் அனைவரும் பெரும் ஞானம் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். இங்கே வந்திருக்கும் சந்நியாசிகளான உங்கள் அனைவரையும் வழிபடுவதும், உங்களுக்கு உணவளிப்பதும் என் கடமையும், இன்பமுமாகும்" என்றான் {கிருஷ்ணன்}.
"அவ்வாறே ஆகட்டும்" என்று ஏற்ற முனிவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் வசிப்பிடத்தில் உணவருந்த சம்மதித்தனர். கிருஷ்ணனும் தன் அரண்மனைக்குச் சென்று, இனிமைமிக்க உணவுகளைச் சமைக்க ஆயத்தம் செய்தான். பிறகு அவன் முனிவர்கள் அனைவரையும் அழைத்து, அமர்த்தி, உணவளித்து அவர்களை நிறைவடையச் செய்தான். இந்த விருந்தோம்பலைப் பெற்ற துர்வாச முனிவர், கிருஷ்ணனைப் பெரிதும் துதித்தார்.
ஜனமேஜயா, பிறகு அந்தக் கிருஷ்ணன் நல்ல துணிகளை எடுத்துக் கிழித்து, அவற்றை அந்தத் துறவிகளின் கோவணங்களாக்கிக் கொடுத்தான். அந்த முனிவர்களும், தங்கள் தலைவனிடம் இந்தத் தானத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் தங்கள் ஆசிரமங்களுக்குத் திரும்பிச் சென்றனர்" என்றார் {வைசம்பாயனர்}.(20-24)
பவிஷ்ய பர்வம் பகுதி – 87ல் உள்ள சுலோகங்கள் : 24
மூலம் - Source |