(ஸ்ரீக்ருஷ்ணம் ப்ரதி துர்வாஸஸோ வாக்யம்)
Durvasa's speech | Bhavishya-Parva-Chapter-86 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: சாத்யகி முதலிய நண்பர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணனிடம் பேசிய துர்வாசர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, சர்வேஸ்வரனும், விஷ்ணுவும், தாமரை இதழ் கண்களும், கருநிற மேனியும், சுருண்ட கருமுடியும் கொண்டவனும், பீதாம்பரதாரியும், ஆறு செல்வங்கள் நிறைந்தவனும், அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும்,{1} கீர்த்திமானும், ஸ்ரீ பதியும் {லட்சுமி தேவியின் கணவனும்}, நீக்கமற நிறைந்த சாஸ்வத தேவனும், சகல மங்கலங்களும் உடையவனுமான கிருஷ்ணன்,{2} கிரீடத்தால் சிரத்தை அலங்கரித்துக் கொண்டும், கதாயுதம் தரித்துக் கொண்டும் சாத்யகியுடனும், பல இளவரசர்களுடனும் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(1-3) யதுவின் வழித்தோன்றலான அன்புக்குரிய கிருஷ்ணன், சுதர்மமெனும் சபா மண்டபத்தினுள் யுயுதானனுடன் {சாத்யகியுடன்} பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.(4)
அப்போது தாமரைக் கண்ணனான விஷ்ணு {கிருஷ்ணன்}, சாத்யகியிடம், "நானே முதல் கோலத்தை {புள்ளியை / இலக்கை / வெற்றியை} அடைந்தேன், நீ வெல்லவேண்டுமெனில் மிகக் கடுமையான முயற்சியைச் செய்ய வேண்டும்" என்றான்.(5)
மன்னா {ஜனமேஜயா}, விளையாட்டுக் களத்தின் எல்லையில் வசுதேவர், உத்தவர் உள்ளிட்ட முக்கிய யாதவர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.(6) நீண்ட காலத்திற்கு முன்பு, அழுத்தமான பணிச்சுமை ஏதும் இல்லாத காலங்களில் ராமன் சுக்ரீவனுடன் விளையாடியதைப் போலவே, தலைவனும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்பவனுமான கிருஷ்ணனும், தன் நலன்விரும்பிகளான நண்பர்களுடனான விளையாட்டில் மகிழ்ச்சியடைந்தான்.(7) தவறிழைக்காதவனும், விஷ்ணுவுமான கிருஷ்ணன், அந்நாளின் மதிய வேளை வரையில் சாத்யகியுடனான விளையாட்டில் வெற்றியை ஈட்டுவதில் நீண்ட நேரம் இன்புற்றிருந்தான்.(8)
மன்னா {ஜனமேஜயா}, துர்வாச முனிவரின் தலைமையிலான முனிவர்கள் நுழைவதற்கான அனுமதியைப் பெறச் சென்ற காவலர்கள், சுதர்ம சபையின் நுழைவாயிலில் அவர்களை {அந்த முனிவர்களை} மதிப்புடன் அமரச் செய்தாலும் அந்த முனிவர்கள், "நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?" என நினைத்துத் தாமதமில்லாமல் அரசசபையில் நுழைந்தனர்.(9) துர்வாச முனிவரின் தலைமையில் சென்றவர்களும், நீண்ட காலம் தவம் செய்தவர்களும், தூய இதயம்படைத்தவர்களுமான அந்த முனிவர்கள், விளையாட்டை நிறுத்திவிட்டுக் கையில் பந்துடன் நிற்பவனும், யாதவர்களின் தலைவனுமான கிருஷ்ணனை தரிசித்தனர். அந்த ஹரி, ஒரு கண்ணால் சாத்யகியைக் கவனித்தவாறே, மறு கண்ணால் பந்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கணத்தில் துர்வாச முனிவரின் தலைமையிலான முனிவர்கள் காட்சிக்குள் நுழைந்தனர்.(10-12)
தாமரைக் கண்ணனும், விருஷ்ணி குலத்தைக் காப்பவனுமான கிருஷ்ணனும், சாத்யகி, பலபத்ரன் {பலராமன்}, வசுதேவர், அக்ரூரர், உக்ரசேனர் ஆகியோரும், இன்னும் பிற யாதவர்களும் அந்த முனிவர்களைக் கண்டதும் கவலையடைந்தனர். அவர்கள் ஒருவிதமான அச்சத்துடனேயே தங்களுக்குள், "அஞ்சத்தக்க இம்முனிவர்களின் எதிர்பாரா வரவிற்கான காரணமென்ன?" என்று பேசிக் கொண்டனர்.(13,14)
அப்போது அந்த யாதவர்கள் யாவரும், அற்புதமிக்கவரும், உடைந்த தண்டத்தைக் கொண்டவரும், கிழிந்த கோவணத்துடன் கூடியவரும், உலகத்தையே சாம்பலாக்கக்கூடியவரும், செல்வாக்குமிக்கவருமான அந்தப் பிராமணரை {துர்வாசரை} அணுகினர். ஏதோவொரு முக்கியக் காரியத்தை ஆழமாகச் சிந்தித்தபடியே காணப்பட்டதால் அவர் மனத்துயர் கொண்டவரைப் போல் காட்சியளித்தார். மன்னன் ஹம்சன் அவருக்குப் பெருந்தீங்கிழைத்ததால், அவரது மனத்தின் அடியில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அவர் கிருஷ்ணனைப் பார்த்தபோது, அவரது கண்களில் நெருப்பு வெளிப்பட்டது. யாதவர்களில் முதன்மையானவர்களும் கூட, துர்வாச முனிவரை அந்நிலையில் காண அஞ்சினர்.(15-17)
"இத்தகைய கோபத்தில் இந்த முனிவர் என்ன செய்வார் என்பதை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. இவரிடம் கிருஷ்ணன் என்ன சொல்லப் போகிறான்?" என்று சிந்தித்தவாறே யாதவர்களும் விருஷ்ணிகளும் மதிப்புடன் தங்கள் கைகளைக் கூப்பிப் பணிவுடன், "பிரபுவே, அமர்வீராக" என்றனர்.
அதன்பிறகு துர்வாச முனிவரின் எதிரில் வந்த கிருஷ்ணன், "மேன்மைமிக்கப் பிராமணரே, சுகமாக அமர்வீராக. நான் என்னை உமது கிங்கரனாக {பணியாளனாகக்} கருதுவதால், உமக்குத் தொண்டாற்றவே இங்கே இருக்கிறேன்" என்றான்.(18-20)
துர்வாசர், தமக்குக் கொடுக்கப்பட்ட ஆசனத்தில் விருப்பமில்லாமல் தயக்கத்துடன் அமர்ந்தார். அவரது தலைமையில் வந்த முனிவர்கள் அனைவரும் தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர். கிருஷ்ணன் அர்க்கியம் முதலிய மங்கலப் பொருட்களை அந்த முனிவர்களுக்குக் கொடுத்தான்.
பிறகு, புலன்களின் தலைவனான கிருஷ்ணன், பின்வருமாறு துர்வாச முனிவரிடம் பேசினான்: "பிராமணரே, எங்கள் நகருக்கு உம்மை அழைத்து வந்த காரணமென்ன? உமது செயல்பாடுகள் அனைத்தும் நற்காரியங்களுக்காகவே அமைந்திருக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நீரும், துறவிகளான உமது சீடர்களும், எங்களைப்போன்ற இல்லறவாசிகளின் காரியங்களை ஒருபோதும் விரும்பமாட்டீர்கள். பொருள்பற்றிலிருந்து விடுபட்டவரான உமக்கு, உலகஞ்சார்ந்த பொருளேதும் விரும்பத்தக்கதல்ல. பயனை விரும்பும் பணியாளர்கள், உலகஞ்சார்ந்த தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக க்ஷத்திரியர்களை அணுகுவர். எனினும், பொருள் விரும்புவோரின் வரவுக்கான காரணமும், உமது வரவுக்கான காரணமும் வேறுபட்டதென நான் நம்புகிறேன். பிராமணரே, உமது வரவின் நோக்கத்தை நான் அறிய விரும்புகிறேன். உமது வரவே, விரைவில் செய்யப்பட வேண்டிய அதிமுக்கிய காரியங்கள் இருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன. உமது வரவிற்கான நோக்கம் எதுவாக இருந்தாலும், அதை எங்களுக்குத் தெரிவிப்பீராக" என்றான் {கிருஷ்ணன்}.
மன்னா, சக்கரபாணியான ஜனார்த்தனன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, மூவுலகங்களையும் எரித்து, வழியில் குறுக்கிடும் எதனையும் எரித்துவிடுபவரைப் போலத் தெரியுமளவுக்குத் துர்வாசரின் கோபம் அதிகரித்திருந்தது. உண்மையில், கண்கள் நெருப்பைப் போலச் சிவக்கும் அளவுக்குத் துர்வாசரின் கோபம் அதிகமாக இருந்தது.
இவ்வளவு கோபத்துடனிருந்தாலும் அம்முனிவர் சிரித்தவாறே, "யாதவத் தலைவா, கிருஷ்ணா, நான் வந்த காரணத்தை அறியாதவன் போல் நீ ஏன் பேசுகிறாய்? நீயே விஷ்ணுவின் அவதாரம் என்பதை நானறிவேன் என்றாலும், சாதாரண நரனைப் போல் நடித்து நீ எங்களை வஞ்சிக்கிறாய். தலைவா, நாங்கள் நீண்ட காலம் வாழ்ந்துவருவதால், கடந்த காலத்தில் நடந்தவற்றை அறிந்திருக்கிறோம். அகவீரியத்தினால் மனித அவதாரமேற்றிருக்கும் நீயே தேவர்களின் தலைவன் என்பதை நான் அறிவேன். ஓ! ஜகத்பதியே, நீயே எங்கள் தலைவனும், ஆசானுமாவாய். உன் உண்மையான அடையாளத்தை ஏன் நீ மறைக்கிறாய்?(21-33) தன்னை உணர்ந்த ஆன்மாக்களின் உயிராகவும், ஆன்மாவாகவும் நீயே இருக்கிறாய். பழங்காலத்தில் பிரம்மன் தியானித்த இறுதி இலக்கும், அவன் அடைந்த ஆழ்நிலை ஞானமும் நீயே. உன்னையும் வழிபட்டத்தால் நாங்கள் ஆழ்ந்த ஞானத்தை அடைந்திருக்கிறோம்.(34)
எதிலிருந்து இந்த அண்டம் வெளிப்பட்டதோ அந்த முற்றான உண்மை நீயே. அண்டத்தின் தலைவா, புராணங்களை அறிந்தவர்களால் விராடன் {விராட்புருஷன்} என்று அழைக்கப்படும் அண்ட வடிவாக உன்னைப் பெருக்கிக் கொள்பவன் நீயே. உன் மகிழ்ச்சிக்கான செயல்பாடுகளில் ஈடுபடும் பக்தர்கள் உன் தாமரை பாதங்களை அடைகின்றனர். உன் தாமரைப் பாதங்களைத் தொடர்ந்து நினைவுகூர்ந்து வருவதன் மூலம், இருப்பில் இருந்து விலகி ஆழமான பேரின்ப அருட்கடலில் நாங்கள் மூழ்குகிறோம். உன்னிடம் அன்பும், பக்தியும் கொண்ட பக்தர்கள் உன்னை நேரடியாகவே காண்கின்றனர். மூடர்களால் உன் சச்சிதானந்த உடலின் ஆழ்நிலை இயல்பைப் புரிந்து கொள்ள முடியாது. எனினும் நாங்கள் அந்த மூடர்களைப் போன்றவர்களல்ல.
இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால் எங்கள் வரவின் காரணத்தை அறிய முடியவில்லை என்ற உன் கூற்றுக் குழப்பத்தை அளிக்கிறது. பரமனே, கேசியைக் கொன்றவனே, காரணங்கள் அனைத்தின் காரணனை அறிந்தோரிடம் இவ்வாறு பேசுவதன் மூலம் நீ என்ன ஈட்டப்போகிறாய்? ஆழமானதும், பிரகாசமானதுமான உன் வடிவம் வேதாந்தத்தில் அமைதியான பிரம்மமாக விளக்கப்பட்டிருக்கிறது. பிரபுவே, பாவமற்றவர்களும், ஆழமான ஆறிவில் ஈர்க்கப்படுவதில் நிறைவடைந்தவர்களுமான யோகிகள் உன்னை எப்போதும் தங்கள் இதயத்தில் கண்டு வருகின்றனர்.(35-40)
வேதங்களில் பரப்பிரம்மன் என்று துதிக்கப்படுபவனும், முற்றான உண்மையுமான உன்னையே நாங்கள் பரமன் என்று அறிகிறோம்.(41) விஷ்ணுவே, "எங்கே விஷ்ணு இருக்கிறானோ அதுவே பரமபதம்" என்ற புகழ்பெற்ற வேத விளக்கத்தின் இலக்காகத் திகழ்பவன் நீயே.(42) பிரபுவே, ஓம் எனும் புனித அக்ஷரத்தின் வித்தாகத் துதிக்கப்படும் பரமாத்மா நீயே. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால், எங்கள் வரவின் காரணத்தை அறியவில்லை என்று நீ சொல்ல முடியாது.(43) கோவிந்தா, உன் ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஏதும் உண்டென்றால் நீ அவ்வாறு பேசலாம். எனவே, நாங்கள் இங்கே வந்திருக்கும் காரணத்தை அறியமாட்டாய் என்று நீ சொல்லாதே.(44) கேசவா, யாரிடம் இந்த அண்டம் உண்டானதோ, அண்ட அழிவின் போது யாரிடம் அது கலக்குமோ அந்த உயர்ந்த இயக்குனன் நீயே என்பதை உறுதியாக நம்புகிறேன்.(45)
ஹரியே, புறத்தில் வெளிப்பட்டிருக்கும் அனைத்துக்கும் உண்மை காரணனும், அகத்தில் உயிரினங்கள் அனைத்தின் இதயத்தில் இருப்பவனும் நீயே. நான் உன்னை எந்த வடிவத்தில் தியானித்தாலும் அந்த வடிவத்திலேயே என் இதயத்தில் தோன்றுபவன் நீயே.(46) விபுவே, வாயுவும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதை நான் அறிந்திருக்கிறேன்; வாயு வடிவில் நீ என் இதயத்தில் இருக்கிறாய்.(47) விபுவே, ஆகாயமும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவ்வடிவிலும் நீ என்னுள் இருக்கிறாய்.(48) பூமியும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதால் அவ்வடிவிலும் நீ என்னுள் இருக்கிறாய்.(49) நீரும் உன் சக்தியின் வெளிப்பாடே என்பதால் அவ்வடிவில் என்னுள் நீ நித்தியமாக இருக்கிறாய்.(50) பிரபுவே, பிரகாசமான உன் வடிவை நான் தியானிக்கும்போது அவ்வடிவிலும் என் இதயத்தில் நீ தோன்றுகிறாய்.(51) கேசவா, ஹரியின் வடிவமாக நான் சந்திரனைக் கருதுகிறேன்; நிலவைக் காணும்போதெல்லாம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.(52) சூரியனை உன் வடிவங்களில் ஒன்றாக நான் கருதும்போது, சூரியனாக நீ எவ்வாறு விரிவடைகிறாய் என்பதை நான் காண்கிறேன்.(53) எனவே, நீயே அனைத்தின் பிறப்பிடமென நான் நம்புகிறேன். எதுவும் உன்னில் இருந்து வேறுபட்டதல்ல. ஜனார்த்தனா, இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு, "உங்கள் வரவின் காரணமென்ன?" என நீ கேட்கக் கூடாது.(54)
விஷ்ணுவே, நீ அனைத்தையும் அறிந்தவனாக இருந்தாலும், எங்கள் துன்பத்தைத் தணிக்க ஏதும் செய்யாதிருக்கிறாய். பெருந்துன்பத்தில் இருக்கும் நாங்கள், உன் உறைவிடம் நாடி வந்திருக்கிறோம்.(55) கேசவா, நாங்கள் பெரும் மனச்சோர்வில் இருந்தாலும், நீ அலட்சியமாக இருக்கிறாய் என்பதால் பேறில்லா எங்கள் நிலையை நாங்கள் கடிந்து கொள்கிறோம். விஷ்ணுவே, துன்பநிலையிலும் உன் கருணையைப் பெறத் தவறியது எங்கள் கெடுபேறே. ஜனார்த்தனா, சிவனின் வரங்களைப் பெற்ற, செருக்குமிக்க ஹம்சன், டிம்பகன் என்ற க்ஷத்திரியர்கள் இருவரும் பேராணவமடைந்திருக்கிறார்கள். சந்நியாச ஆசிரமத்தைவிடக் கிருஹஸ்த ஆசிரமமே மேன்மையானது என்று சொல்லி அவர்கள் எங்களைப் பயங்கரமாகத் துன்புறுத்துகிறார்கள்.(56-58) நாங்கள் வசிக்கும் ஆசிரமத்தை அழித்து, கொடூரமாகப் பேசி, தங்கள் சொற்களால் எங்களைப் பெரிதும் துன்புறுத்துகிறார்கள்.(59)
பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு எங்கள் ஆசிரமத்தில் அவர்கள் செய்த அடாவடிகளை நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். உடைந்து நொறுங்கிய இந்த ஆயிரக்கணக்கான தண்டங்களையும், கமண்டலங்களையும், மூங்கிற் கூடைகளையும் காண்பாயாக. இவை யாவும் ஹம்ச டிம்பகர்களால் நொறுக்கப்பட்டவை. இதையுந்தவிர இழிந்தவர்களான அவ்விருவரும் எங்கள் இடைக்கச்சைகளை {கௌபீனங்களை / கோவணங்களைக்} கிழித்தெரிந்தனர். இவை மட்டுமே எங்கள் உரிமையாக இருந்தன. அவர்களால் நொறுக்கப்பட்ட கமண்டலங்கள் இப்போது கபாலங்களை {மண்டை ஓடுகளைப்} போலத் தெரிகின்றன. எங்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனான உன் கடமை என்றாலும் இந்நிலையையே நாங்கள் அடைந்திருக்கிறோம். எங்களைக் காப்பதாக நீ சபதம் செய்திருந்தாலும், நீ நீக்கமற நிறைந்தவனாக இருந்தாலும், இந்த முரட்டு இளவரசர்கள் இருவராலும் நாங்கள் துன்புறுத்தப் படுகிறோம்.(60-63)
தலைவா, என் புத்தி குழம்புகிறது. பேறற்றவர்களான நாங்கள் என்ன செய்வது? எங்களுக்குப் பாதுகாப்பை வழங்கக்கூடிய உறைவிடத்தை நாங்கள் வேறு எவரிடம் அடைவோம்?(64) இந்த அயோக்கியர்கள் இருவரும் அடக்கப்படவில்லையெனில் மூவுலகங்களும் சர்வநாசமடையும். இனி பிராமணர்களே இருக்க மாட்டார்கள் எனும்போது, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களைக் குறித்து என்ன சொல்வது?(65) இந்த இளவரசர்கள் இருவரும் சர்வ பலம் பொருந்தியவர்களாகவும், செருக்கில் மிதப்பவர்களாகவும், செல்லுமிடமெல்லாம் தண்டங்களை நீட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் அவர்களை எதிர்க்க இயலாது.(66)
கிருஷ்ணா, பீஷ்மரோ, பாஹ்லீகரோ அவர்களை எதிர்க்க இயன்றவர்களல்ல. வலிமைமிக்க ஜராசந்தனே கூட அவர்கள் சிவனிடம் அடைந்த வரங்களின் வலிமையால் போரிடத் துணியானென்றால் பிறரைக் குறித்து என்ன சொல்வது? அவர்கள் நல்ல நண்பர்களாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதால் அவர்களுக்கிடையில் உன்னால் வேற்றுமையை உண்டாக்க இயலாது.(67,68) பிரபுவே, அவர்களை வென்று மூவுலகங்களையும் மீட்க இயன்றவன் நீயே. இல்லையென்றால், "நல்லோரைப் பாதுகாப்பேன்" என்ற உன் உறுதிமொழி பொய்யாகும்.(69) இன்னும் அதிகம் சொல்வதில் என்ன பயன்? எங்களைப் பாதுகாப்பதன் மூலம் மூவுலகங்களின் சுமையை அகற்றுவாயாக" என்றார் {துர்வாசர்}. துர்வாச முனிவர் இதைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தார்" என்றார் {வைசம்பாயனர்}.(70)
பவிஷ்ய பர்வம் பகுதி – 86ல் உள்ள சுலோகங்கள் : 70
மூலம் - Source |