(யதீநாம் த்வாரகாகமநம்)
Durvasa in Dwaraka | Bhavishya-Parva-Chapter-85 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனைச் சந்திக்க துவாரகை சென்ற துர்வாசரும், யதிகளும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, அதன்பிறகு பெருங்கோபமடைந்த ஹம்சனும், டிம்பகனும் அங்கே இருந்த முனிவர்களின் சந்நியாச தண்டங்கள், கமண்டலங்கள், உணவுக்குப் பயன்படும் மரத்தட்டுகள் ஆகியவற்றையும், இன்னும் பிற சாதனங்களையும் நொறுக்கினர். பிறகு அவர்கள் அந்த ஆசிரமத்திலேயே இறைச்சி {மாமிசம்} சமைக்கத் தங்கள் தொண்டர்களுக்கு ஆணையிட்டனர்.(1,2) இறைச்சியை உண்ட பிறகு அவர்கள் தங்கள் தலைநகருக்குத் திரும்பினர். ஜனார்த்தனன், தங்கள் நண்பர்களிடம் கொண்ட அன்பினால் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.(3) ஜனார்த்தனன், தங்கள் அழிவுக்கான நேரம் மிக அருகில் இருப்பதை நிச்சயமாக உணர்ந்து பெருஞ்சோகமடைந்தான்.
அவ்விரு இளவரசர்களும், அவர்களின் படைகளும் புறப்பட்டுச் சென்ற பிறகு துர்வாச முனிவர்,{4} அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடிய தமது சீடர்கள் அனைவரையும் கூட்டி, "பெரும் முனிவர்களே {யதீஷ்வரர்களே}, புஷ்கரமெனும் இப்புனிதத் தலத்தில் இருந்து துவாரகாபுரிக்குச் செல்வோம்.{5} அங்கே சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனைச் சந்தித்து நம் தீயூழை {நமக்கு நேர்ந்த இடையூறை} எடுத்துச் சொல்வோம்.{6} நல்லோரை பாதுகாக்கும் தர்மவர்த்தனனான அவன், அறக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதில் அர்ப்பணிப்புள்ளவனாவான்.{7} தன்னை உணர்ந்தோரால் வழிபடப்படும் அவனே, ஆதிதேவனும், நீக்கமற நிறைந்திருக்கும் லோககுருவுமாவான். அவன் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்திருக்கிறான்.(4-8) உலகஞ்சார்ந்த ஆசைகள் அனைத்தில் இருந்தும், போலி அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவர்களும், ஆழமான ஞானத்தை விளைவிப்பதில் மனத்தை நிலைநிறுத்தியவர்களுமான நம்மை அந்தப் பிரபுவே பாதுகாப்பான். பிறரின் மனங்களில் அச்சத்தையூட்டும் பாவிகள் அனைவரையும் அவன் அழிப்பான்.(9) விப்ரர்களே {பிராமணர்களே}, இதுவே நமக்கான சிறந்த செயல் திட்டம் என்பதால் தாமதமில்லாமல் நாம் துவாரகை செல்வோம்.{10} முனிவர்களில் சிறந்தவர்களே, ஹம்சனாலும், டிம்பகனாலும் உடைக்கப்பட்ட நமது கமண்டலங்கள் அனைத்தையும், பிற பொருட்களையும் எடுத்துச் சென்று அந்த ஜனார்த்தனனிடம் காட்டுவோம்" என்றார் {துர்வாசர்}.{11}
நுண்ணறிவுமிக்க அந்த முனிவர்களும், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்ல தண்டங்கள், கமண்டலங்கள், காவி வஸ்திரங்கள், இடைக்கச்சைகள், மரவுரிகள், மரத்தட்டுகள் ஆகியவற்றையும்,{12} ஹம்சனாலும், டிம்பகனாலும் நொறுக்கப்பட்ட அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணனைச் சந்திக்கத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(9-13) இவ்வாறே ஐயாயிரம் முனிவர்கள் புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், மேனிகள் மயிரால் மறைக்கப்பட்டிருந்தாலும் தலைகளை மழித்துக் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் சிவபெருமானின் அவதாரங்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் தங்கள் தலைவரும், பெரும் தவசியுமான துர்வாச முனிவரைப் பகல், இரவுகளாகப் பின்தொடர்ந்து சென்று, கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டு வரும் துவாரகையை அடைந்தனர்.(14,15) இராஜேந்திரா {ஜனமேஜயா}, துர்வாச முனிவரால் வழிநடத்தப்பட்ட அந்த முனிவர்கள் தங்கள் பயணத்தின் முடிவில் காலை வேளையில் துவாரகாபுரிக்குள் நுழைந்தனர். முதலில் ஓர் அழகிய தடாகத்தில் நீராடி ஆசமனஞ்செய்தனர் {வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை உட்கொண்டனர்}.{16} இவ்வாறு தங்கள் காலைக் கடமைகளை நிறைவேற்றிய அவர்கள், உலக மக்களை ஒடுக்கும் துஷ்டர்கள் அனைவரையும் அழிப்பதெவ்வாறு என்று திட்டமிட்டபடியே சுதர்மம் என்ற சபாமண்டபத்தில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணனைத் தரிசிக்க மகிழ்ச்சியாகச் சென்றனர்" என்றார் {வைசம்பாயனர்}.(16,17)
பவிஷ்ய பர்வம் பகுதி – 85ல் உள்ள சுலோகங்கள் : 17
மூலம் - Source |