(துர்வாஸோதர்ஷநம்)
Durvasa | Bhavishya-Parva-Chapter-82 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ஹம்சனும், டிம்பகனும் துர்வாசரைச் சந்தித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பக்திமிக்கவர்களான ஜனார்த்தனன், ஹம்சன், டிம்பகன் ஆகியோர், வேள்வி நடைபெறும் அந்த வளாகத்தில் கூடியிருந்த முனிவர்கள் அனைவரையும் வணங்கினர்.(1) அந்த உயரான்மாக்களும், அவர்களது சீடர்களும் தங்கள் விருந்தினர்களுக்குப் பாத்யம், அர்க்கியம் ஆகியவற்றையும், அமர்வதற்கான சிறந்த இடங்களையும் கொடுத்து மதிப்புடன் வரவேற்றனர்.(2) மன்னா {ஜனமேஜயா}, அந்த இளவரசர்கள் இருவரும், பிராமணன் ஜனார்த்தனனும் முனிவர்கள் கொடுத்த வரவேற்பில் நிறைவடைந்தவர்களாகக் கீழே அமர்ந்தனர்.(3)
அன்புக்குரிய மன்னா, அப்போது ஹம்சன் அந்த முனிவர்களிடம், "சிந்தனையாளர்களில் சிறந்தவர்களே, எங்கள் தந்தை {பிரம்மதத்தர்} ராஜசூய வேள்வி செய்யும் விருப்பம் கொண்டிருக்கிறார்.(4) பிராமணர்களே, இந்த வேள்வி நிறைவடைந்ததும், எங்கள் தலைநகரில் நடைபெறப்போகும் எங்கள் தந்தையின் வேள்வியில் கலந்து கொள்ளும் உங்கள் வரவை வேண்டுகிறோம். நாங்கள் மொத்த உலகையும் வென்ற பிறகு, பக்திமானான எங்கள் தந்தையை ராஜசூயம் செய்யத் தூண்டுவோம். நீங்களும், உங்கள் சீடர்களும் வந்து புரோகிதர்களாகச் செயல்பட்டால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவோம்.(5,6) நாங்கள் இருவரும் சகோதரர்கள். இவன் எங்கள் நல்ல நண்பன் ஜனார்த்தனன். நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். உலகை வெல்ல நாங்கள் இன்றே புறப்படுகிறோம். மஹாதேவனிடம் நாங்கள் அடைந்த வரங்களால் போரில் எங்களைத் தேவாசுரர்களாலும் எதிர்க்க இயலாது. இதன்காரணமாகப் படைகள் இல்லாமலே கூட நாங்கள் உலகை வென்றுவிடுவோம். வரங்களை, பெரும் தெய்வீக ஆயுதங்களையும் நாங்கள் அடைந்திருப்பதால், எங்களை வெல்ல யாராலும் இயலாது" என்றான் {ஹம்சன்}. செருக்குமிக்க ஹம்சன் இவ்வாறு பேசிவிட்டு அமைதியடைந்தான்.(7-9)
அப்போது முனிவர்கள், "மன்னா {ஹம்சா}, அத்தகைய மகத்தான வேள்விக்கு நீ ஏற்பாடு செய்தால், நிச்சயம் நாங்கள் எங்கள் சீடர்களுடன் கலந்து கொள்வோம். இல்லையென்றாலும், நாங்கள் இந்த ஆசிரமத்தில் அமைதியாக வசிப்பத்திலேயே நிறைவடைந்திருக்கிறோம்" என்றனர் {முனிவர்கள்}".(10)
வைசம்பாயனர் சொன்னார், "மன்னா {ஜனமேஜயா}, அதன்பிறகு இளவரசர்கள் இருவரும், அந்தப் புஷ்கரத் தடாகத்தின் வடகரையில் அமைந்திருந்த துர்வாசப் பெருமுனிவரின் வசிப்பிடத்திற்குச் சென்றனர்.(11) இருப்பில் தூய்மையை அடையவும், அதன் விளைவாக மனநிறைவில் திளைக்கவும் தங்கள் வாழ்வை நெறிப்படுத்தும் முற்றுந்துறந்த முனிவர்கள் பலர், அந்தப் புனிதத் தலத்தில் வசித்திருந்தனர். அவர்கள், {ஓம் என்ற} பிரம்மமந்திரத்தை ஓதி, பிரம்மசூத்திரம் பயின்று அதன் உண்மைப் பொருளை உணர்வதையே தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருந்தனர்.(12)
அம்முனிவர்கள் அனைவரும் இடைக்கச்சை {கோவணம்} அணிந்தவர்களாகவும், பொருள் பற்றில் இருந்தும், அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவர்களாகவும் இருந்தனர். தேவர்களின் உயர்ந்த தலைவனும், அண்ட வெளிப்பாட்டின் உண்மைக் காரணனும், உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாவாகவும், உயிராகவும் திகழ்பவனும், நீக்கமற நிறைந்திருக்கும் நிலையான தெய்வமுமான பரப்பிரம்மனையே அவர்கள் இடையறாமல் தியானித்து வந்தனர்.
வேதாந்தத்தின் இறுதி இலக்கும், வேதாந்தத்தின் வடிவமுமான தலைவனையே அங்கே துர்வாசர் வழிபட்டு வந்தார். அவர் {துர்வாசர்}, மாசுடைய அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், அண்டத்தின் ஆன்ம குருவும், உயிரினங்கள் அனைத்தின் உறைவிடமுமான ருத்ரனின் வெளிப்படாத பிறப்பாகவே அவனை {பரப்ரம்மனை} வழிபட்டு வந்தார்.
ஹம்சர்களும், பரமஹம்சர்களுமாக அங்கே இருந்த முனிவர்கள் யாவரும் துர்வாச முனிவரின் சீடர்களாவர். அவர்கள் தர்க்கப்பூர்வமான வாதங்களை முன் வைப்பதன் மூலம், முற்றான உண்மையின் தன்மையைக் கண்டறிய முயன்று வந்ததால், அவர்களின் இதயங்கள் யாவும் ஆழ்ந்த ஞானத் தீபத்தால் ஒளிபெற்றிருந்தன.
அந்தப் புனிதத்தலத்தை அடைந்த இளவரசர்கள் இருவரும் {ஹம்சனும், டிம்பகனும்}, கடும் பிரம்மச்சரியம் நோற்பவரும், பரமனையே எப்போதும் தியானிப்பவருமான துர்வாச முனிவரை அங்கே சந்தித்தனர். சீற்றமடைந்தால் மொத்த உலகையே சாம்பலாக்கிவிடக் கூடியவர் அந்தத் துர்வாச முனிவர். கோபம் தூண்டப்பட்டால் தேவர்களே அவரைக் காணத் துணிய மாட்டார்கள். உண்மையில் அவர் கோபத்தின் உடல்வடிவம் என்றும், பகுதியளவிலான ருத்ரனின் அவதாரம் என்றும் அறியப்படுகிறார்.(13-19)
பெரும் பரமஹம்சரான துர்வாச முனிவர் காவி உடை தரித்திருந்தார். அவரை அங்கே கண்ட அந்த இளவரசர்கள் இருவரும், பின்வருமாறு எண்ணினர்.(20) {அவர்கள்}, "காவி உடை உடுத்தியிருக்கும் இவன் யார்? இவன் நான்கு வர்ணத்திலும் இல்லாதவனாகத் தெரிகிறான். இவன் கிருஹஸ்தனல்ல {இல்லற ஆசிரமத்தைச் சார்ந்தவன் அல்ல} என்பது நிச்சயம் தெரிகிறது. இவன் எந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவன்?(21) கிருஹஸ்தர்களே, அறக்கோட்பாடுகளை அறிந்து பின்பற்றுகிறார்கள். உண்மையில், அவர்களே தர்மத்தின் வடிவமாகத் திகழ்பவர்கள். அவர்களே நான்கு வர்ணங்களிலும் காணப்படுகிறார்கள்.(22) கிருஹஸ்தர்களே உயிர்கள் அனைத்தையும் கவனமாகப் பாதுகாத்து தாயைப் போல அவற்றைப் பராமரிப்பவர்கள். மகத்தான இந்த ஆசிரமத்தைக் கைவிட்டு, வேறு எந்த ஆசிரமத்தையும் ஏற்பவன் நிச்சயம் பெரும் மூடனே.(23) அவன் பித்தனாகவோ, முழுமூடனாகவோ, உடல் குறைகளைக் கொண்டவனாகவோ இருக்க வேண்டும். இவன் தியானிப்பவனைப் போல நடித்து வஞ்சித்து வருகிறான்.(24) இந்தச் சாதாரண மனிதன் ஏன் தன் வரம்பை மீறி தியானம் செய்து வருகிறான்? இவ்வாறு நடிப்பதால் நிச்சயம் இவனுக்கு ஆன்ம முன்னேற்றம் சாத்தியமில்லை. பிற ஆசிரமங்கள் மதிப்பற்றவை எனக் கருதுபவனாகவே இவன் இருக்க வேண்டும். புத்தியற்ற இந்த இருபிறப்பாளனை, நாம் கிருஹஸ்த ஆசிரமத்தை ஏற்கச் செய்ய வேண்டும். (25,26) இவனது மூடச்சீடர்களும் தவறாக வழிநடத்தப்பட்டு, மனக்களங்கம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள். இங்கே அமர்ந்து இவர்களின் ஆன்ம குருவாக நடிக்கும் இந்த மூடன் யார்? இவன் உண்மையான பிராமணன் இல்லை. நாம் இங்கே வந்துவிட்டதால், இந்தப் போலி ஆன்ம குருவை உண்மையான அறப்பாதையில் மீட்டெடுத்த பிறகு, பெரும் நிறைவுடனே நாம் வீடு திரும்ப வேண்டும்" என்று நினைத்தனர் {ஹம்சனும், டிம்பகனும்}.
மன்னா {ஜனமேஜயா}, பெருந்தீயூழினால் மோஹமடைந்த தங்கள் மனங்களில் இவ்வாறு தீர்மானித்த அந்த வீர இளவரசர்கள் இருவரும், பிராமணன் ஜனார்த்தனனுடன் சேர்ந்து கொண்டு, தற்கட்டுப்பாட்டுடன் கூடிய அந்தச் சந்நியாசியை {துர்வாசரை} அணுகினர்.
மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அப்போது அந்த இளவரசர்கள் இருவரும், இம்மையின் புலன்களால் உணரப்பட முடியாதவரும், ஆசிரமத்தின் அனைத்து விதிகளையும், வழிமுறைகளையும் கடுமையாகப் பின்பற்றும் பிற சந்நியாசிகளாலும் புரிந்துகொள்ளப்பட முடியாத பெரும் முனிவருமான துர்வாசரிடம் பெருமிதத்துடன் பேசத் தொடங்கினர்" {என்றார் வைசம்பாயனர்}.(27-30)
பவிஷ்ய பர்வம் பகுதி – 82ல் உள்ள சுலோகங்கள் : 30
மூலம் - Source |