(ஹம்ஸடிம்பகயோர்ம்ருகயா)
Hunting | Bhavishya-Parva-Chapter-81 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ஹம்சனும் டிம்பகனும் தங்கள் நண்பன் ஜனார்த்தனனை காட்டில் வேட்டைக்கு அழைத்துச் செல்வது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒரு நாள், ஹம்சன், டிம்பகன் என்ற அந்த வீரர்கள் இருவரும் வேட்டைக்குச் செல்லத் தீர்மானித்துத் தேர்கள், யானைகள், குதிரைகள் துணையுடன், தங்கள் நண்பன் ஜனார்த்தனனையும் காட்டுக்கு அழைத்துச் சென்றனர்.(1) மன்னா, காட்டில் நுழைந்ததும் இளவரசர்கள் இருவரும் புலிகள், சிங்கங்கள், பன்றிகள் பலவற்றைத் தங்கள் கணைகளால் கொல்வதில் ஈடுபட்டனர்.(2) அந்தச் சகோதரர்கள் இருவரும் தங்கள் நாய்களின் துணையுடன் பாம்புகள் பலவற்றையும், காட்டுவிலங்குகள் பிறவற்றையும் கொன்றனர்.
அந்த நேரத்தில் மொத்தக் காட்டிலும், "பெரிய கண்களைக் கொண்ட காட்டுப்பன்றி அதோ வருகிறது. அதோ சிங்கம் போகிறது; அதனை உங்கள் கணைகளால் கொல்லுங்கள். இதோ இவ்வழியில் காட்டெருமை செல்கிறது. அதோ பாம்பைப் பாருங்கள். இதோ உயிருக்கு அஞ்சி ஓடிச்செல்லும் மான்கூட்டத்தைப் பாருங்கள். அதோ எண்ணற்ற முயல்கள் அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் சூழ்ந்து கொண்டு அவற்றைக் கைப்பற்றுவோம் வாருங்கள். இதோ குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த மானைக் கொல்லாதீர்கள், அது பெருந்தகைமையல்ல" என்ற கூக்குரல்களே கேட்டுக் கொண்டிருந்தன.(3-7)
மனித ஆட்சியாளர்களில் முதன்மையான ஹம்சன், டிம்பகன் இருவரும் புலிகள், சிங்கங்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் பலவற்றைக் கொன்று, நடுப்பகல் வேளையில் களைப்படைந்தனர்.(8) மன்னா, அவர்கள் ஒருவருக்கொருவர், "நாம் களைத்துவிட்டோம். இனி வேட்டையை நிறுத்துவோம்" என்று சொல்லிவிட்டுப் புஷ்கரத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(9)
தடாகத்தை அடைந்ததும் அதன் கரையில் அவர்கள் அமைதியாக அமர்ந்தனர். அந்தப் புனிதமான இடத்தில் பெரும் முனிவர்கள் பலரும் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர். இளவரசர்கள் இருவருக்கும் யாரோ சாமரம் வீசுவதைப் போல அங்கே குளிர்ந்த தென்றல் வீசிக் கொண்டிருந்தது.(10) கடின பணிகளால் களைப்படைந்திருந்த அவர்கள் அந்தத் தடாகத்தில் நீராடி, தாமரைத் தண்டுகளையும், மலர்களையும் உண்டு தங்கள் பசியைத் தணித்தனர்.(11) இவ்வாறே ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் ஆகியோர் அந்தத் தடாகக் கரையில் ஓய்வெடுத்துத் தங்கள் களைப்பில் இருந்து விடுபட்டனர்.(12)
அவர்கள் அந்தத் தடாகத்தின் அருகில் சுகமாக அமர்ந்திருந்த போது, பெரும் முனிவர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களின் ஒலியைக் கேட்டனர்.(13) நடுப்பகல் வேளையில் முனிவர்கள் ஓதும் வேதவொலியைக் கேட்டு ஈர்க்கப்பட்டதால், அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேள்வியைக் காண அவர்கள் விரும்பினர். மன்னா {ஜனமேஜயா}, விற்களையும், கணைகளையும் வைத்து விட்டு வந்த அவர்கள், பல முனிவர்களுடன் சேர்ந்து வைஷ்ணவ நெருப்பு வேள்வியைச் செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் கசியபரின் ஆசிரமத்திற்கு நடந்து சென்றனர்" என்றார் {வைசம்பாயனர்}.(14-17)
பவிஷ்ய பர்வம் பகுதி – 81ல் உள்ள சுலோகங்கள் : 17
மூலம் - Source |