(நந்தயஷோதயோர்கோவர்தநே ஷ்ரீக்ருஷ்ணதர்ஷநம்)
Nanda and Yashoda | Bhavishya-Parva-Chapter-105 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: நந்தகோபரும், யசோதையும், ஆயர்பாடி மக்களும் கோவர்த்தன மலையில் கிருஷ்ணனையும், பலராமனையும் சந்தித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "யசோதையும், நந்தகோபனும் நீண்ட நாட்களாகக் கிருஷ்ணனைக் காண விரும்பினர். எனவே, அவன் தன் தமையனுடன் {பலராமனுடன்} கோவர்த்தன மலைக்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கோபர்கள், கோபிகைகள் ஆகியோர் அனைவரையும் திரட்டிக் கொண்டும், வெண்ணெய், தயிர், சுண்டவைக்கப்பட்ட பால், பாயஸம், காட்டு மலர்கள், மயில் இறகுகளாலான கைவளைகள் ஆகியவற்றையும், இன்னும் பிற பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டும் அவர்கள் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1-3)
அங்கே அவர்கள் கரிய மான்களின் கண்களையுடைய வாசுதேவனும், அவனது அண்ணன் பலராமனும் ஒரு மரத்தினடியில் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டனர்.(4) கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டதும், நந்தனும், யசோதையும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர். அப்போது, கிருஷ்ணனும், பலராமனும், நந்தனையும், யசோதையையும் வணங்கினர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பரிசுப்பொருட்களைக் கொடுத்துப் பாயசத்தையும் ஊட்டினர்.(5)
அப்போது கிருஷ்ணன், "அன்புத் தந்தையே, அன்புத்தாயே விரஜத்தில் {ஆயர்பாடியில்} உள்ள பசுக்கள் அனைத்தும் நலமா? அப்பா, பசுக்கள் இன்னும் பால் தருகின்றனவா? கன்றுகள் அனைத்தும் நலமா?(6) விரஜத்தின் பசும்பால் இன்னும் தூய்மையாகவும், மங்கலமாகவும் இருக்கிறதா? அழகிய பசுக்கள் போதுமான அளவுக்கு உங்களிடம் இருக்கின்றனவா? அன்னையே, குழந்தைகள் பருகப் போதுமான பால் கிடைக்கிறதா?(7) அன்புத் தந்தையே, போதுமான கயிறுகளும், கம்பங்களும் உங்களிடம் இருக்கின்றனவா? பசுக்கள் மேய போதுமான புல்வெளிகள் இருக்கின்றனவா?(8) அப்பா, வண்டிகள் அனைத்திலும் அவை சுமக்கும் பால் பொருட்களின் மணம் இருக்கிறதா? கோபிகையர் பிள்ளைகள் ஈன்று அன்னையராகினரா?(9) தந்தையே, விரஜத்தில் அவர்கள் போதுமான அளவுக்கு உடையாத குடங்களை வைத்திருக்கின்றனரா? பசுக்கள் ஒவ்வொரு நாளும் ஏராளமான பாலைக் கொடுக்கின்றனவா?(10) நமது பசுக்கள் பால், தயிர், வெண்ணை ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்கியிருக்கின்றனவா?" என்று கேட்டான்.(11)
நந்தன், "யதுவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, கேசவா, நமது பசுக்கள் பெரும்பாலும் நல்ல உடல்நலத்துடன், பிணியற்றவையாக இருக்கின்றன. அதுவே அவற்றின் இயல்புநிலை.(12) கேசவா, தேவர்களின் தலைவா, உன் பாதுகாப்பில் நாங்கள் பாதுகாப்புடனும், நிறைவுடனும் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் அனைவரும் நலமாக இருக்கின்றோம். நமது பசுக்கள் அனைத்தும் நலமாக இருக்கின்றன.(13) கேசவா, எனக்கு முழுநிறைவேற்படும் வரை உன்னைக் காண முடியாதது மட்டுமே என் ஒரே கவலை. என் இதயம் அதன் காரணமாக மட்டுமே துன்புறுகிறது" என்றான் {நந்தகோபன்}".(14)
வைசம்பாயனர், "தன் தந்தை அழுது புலம்புவதைக் கேட்ட கேசவன், "என் உயிர் தந்தையே, அழாதீர். வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்" என்றான். பிறகு யசோதையிடம், "அன்புத் தாயே, நீயும் வீட்டுக்குத் திரும்பிச் செல்வாயாக.(15) உங்களைத் துதிப்பவர்கள் சுவர்க்கத்தை அடைவார்கள். உங்களை வணங்குபவர்கள் என்னுயிர் பக்தர்களாவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணன், தன்னை வளர்த்த தாய் தந்தையிடம் இதைச் சொல்லிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டான். வாசுதேவன், தனது தந்தையையும், தாயையும் தேற்றி அவர்களைத் தழுவிக் கொண்டான். பிறகு யசோதையும், நந்தனும் கோபகோபிகைகளுடன் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(16-18) அப்போது ரிஷிகேசனான கிருஷ்ணன், விருஷ்ணி, யது குலத்தோர் அனைவருடன் துவாரகை திரும்பும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினான்.(19) இந்த விவரிப்புகளைக் கவனத்துடன் படிக்கும் எவருக்கும், கேட்கும் எவருக்கும் நல்ல மகன் கிடைப்பான், இம்மையில் {உயிருடன் இருக்கையில்} ஏராளமான செல்வமும், மறுமையில் {இறந்தபின்} முக்தியும் கிடைக்கும்" என்றார் {வைசம்பாயனர்}.(20)
பவிஷ்ய பர்வம் பகுதி – 105ல் உள்ள சுலோகங்கள் : 20
மூலம் - Source |