(டிம்பகஸ்யாத்மத்யாகம்)
Dimbhaka Commits Suicide | Bhavishya-Parva-Chapter-104 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: அண்ணனின் பிரிவு தாளாமல் தன் நாவைப் பிடுங்கி உயிர்த்தியாகம் செய்த டிம்பகன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "டிம்பகன், பெருஞ்சக்திவாய்ந்த தன் அண்ணன் ஹம்சன் பெரும்போரில் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும், பலராமனுடன் போர் புரிவதை நிறுத்திவிட்டு யமுனையின் கரைக்குச் சென்றான். கலப்பைதாரியான பலராமன் வேகமாக ஓடி அவனை விரட்டிச் சென்றான்.(1,2) மன்னா {ஜனமேஜயா}, ஹம்சன் குதித்த அதே இடத்தில் டிம்பகனும் யமுனையின் நீரில் குதித்தான். அதன் விளைவாக யமுனையின் நீர் கலங்கியது.(3)
மன்னா, டிம்பகன் நீரைக் கோபத்துடன் அடித்து நீர்ப்பரப்பில் இருந்து மேலும் மேலும் அடியில் மூழ்கிச் சென்றான். மீண்டும் மீண்டும் முயற்சித்தாலும் அவனால் தன் அண்ணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் நீரில் ஆழ மூழ்கி மீண்டும் பரப்புக்கு வந்தபோது, தன் முன் வாசுதேவனை {கிருஷ்ணனைக்} கண்டான்.
அப்போது டிம்பகன், "இடைப்பயலே, என் அண்ணன் ஹம்சன் எங்கே?" என்று கேட்டான்.
அதற்கு வாசுதேவன், "அருவருக்கத்தக்க மன்னா, யமுனையிடம் இந்தக் கேள்வியைக் கேட்பாயாக" என்றான்.
வாசுதேவனின் மறுமொழியைக் கேட்ட டிம்பகன், தன் அண்ணனிடம் பேரன்பும், பற்றும் கொண்டவன் என்பதால் மேலும் யமுனையாற்றின் நீரில் ஆழமாக மூழ்கித் தேடினான். எங்குத் தேடினும் தன் அண்ணனைக் காணமுடியாமல் அவன் புலம்பத் தொடங்கினான். {டிம்பகன்}, "மன்னர்களில் சிறந்தவரே, நண்பர்கள் எவருமற்றவனான இந்த டிம்பகனை விட்டுவிட்டு எங்குச் சென்றுவிட்டீர்? அண்ணா, என்னை இங்கே தனியாக விட்டுவிட்டு எங்குச் சென்றீர்?" என்று புலம்பினான்.
அண்ணனிடம் பாசமிக்க டிம்பகன், இவ்வாறு அழுது புலம்பி யமுனையில் ஆழமான அந்தத் தடாகத்திலேயே தன்னுயிரை விடத் தீர்மானித்தான். அவன் மீண்டும் மீண்டும் நீரில் மூழ்கி, தன் அண்ணனுக்காகப் புலம்பி அழுவதற்காக வெளியே வந்தான். இறுதியில் வீரமிக்க அந்த டிம்பகன், தன் கைகளாலேயே தன் நாவைப் பிடுங்கி தற்கொலை செய்து கொண்டான். அத்தகைய மரணமே அவன் நரகத்திற்குச் செல்ல வழிவகுத்தது.
ஹம்சடிம்பகர்களின் மரணத்திற்குப் பிறகு தாமரைக் கண்ணனான கிருஷ்ணன் போர்க்களத்திற்குத் திரும்பினான். அந்தப் பெரும்போரின் விளைவில் நிறைவடைந்த வாசுதேவனும், பலபத்ரனும், தங்கள் இளமைக் காலங்களில் இன்புற்றிருந்த கோவர்த்தன மலையில் சிறிது காலம் ஓய்ந்திருந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(4-15)
பவிஷ்ய பர்வம் பகுதி – 104ல் உள்ள சுலோகங்கள் : 15
மூலம் - Source |