(ஹம்ஸவதம்)
Hamsa sunk | Bhavishya-Parva-Chapter-103 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: யமுனையின் மடுவில் ஹம்சனை மூழ்கடித்த கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாபயங்கரமான அவ்வாயுதம் {வைஷ்ணவாஸ்திரம்} தன்னை அணுகுவதைக் கண்ட மன்னன் ஹம்சன் பீதியில் கிட்டத்தட்ட முடக்கமடைந்தான்.(1) விரைவில் பதற்றம் தணிந்த அவன் தன் தேரில் இருந்து குதித்தான். பிறகு, ரிஷிகேசனான கிருஷ்ணன் ஏற்கனவே காளியனைத் தண்டித்த யமுனை ஆற்றை நோக்கி அவன் ஓடினான்.(2) யமுனையில் இருந்த அந்தப் பெரிய மடுவின் நீர், பாதாளலோகம் வரை ஆழம் கொண்டதாகவும், அஞ்சனத்தைப் போல் கருமையாகவும் இருந்தது.(3)
மலைகளைப் பெயர்த்து பெருங்கடலுக்குள் வீசும்போது ஆர்ப்பரித்த இந்திரனைப்போல அந்த ஹம்சன் பேராரவாரவொலி எழுப்பியவாறே ஓடிச்சென்று அந்த மடுவுக்குள் குதித்தான். தேவர்களும் அடங்கிய இந்த அண்டத்தின் தலைவனான கிருஷ்ணன் இதை அறிந்ததும், காற்றில் குதித்தெழுந்து, பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் சரியாக ஹம்சன் மீதே அந்த மடுவுக்குள் குதித்தான். மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவன், அப்போது தன் கால்களால் வலுவாக மிதித்தே ஹம்சனை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அல்லது, குறைந்தபட்சம் இதுதான் {கிருஷ்ணன் இவ்வாறு ஹம்சனைக் கொன்றான் என்பதே} பார்வையாளர்கள் சிலரின் கருத்தாக இருந்தது.(4-7)
இராஜேந்திரா {ஜனமேஜயா}, வேறு சிலரோ அந்த ஹம்சன் பாதாள லோகத்திற்கு அழுத்தப்பட்டுப் பெரும்பாம்புகளால் உண்ணப்பட்டான் என்று சொல்கிறார்கள். நிலை எவ்வாறிருப்பினும், அன்றுமுதல் {இன்றுவரை} அவன் திரும்பவில்லை.(8) மன்னா, அதன்பிறகு ஜகந்நாதன் {கிருஷ்ணன்} தன் தேருக்குத் திரும்பினான். ஹம்சன் இறந்த பிறகு, உன் முப்பாட்டனும், தர்மபுத்திரனுமான யுதிஷ்டிர மஹாராஜனே ராஜசூய வேள்வியைச் செய்தான். ஹம்சன் உயிருடன் இருந்திருந்தால், அவனது வேள்வி மண்டபத்திற்கு வந்து அவன் முன்பு எவன் வணங்கியிருப்பான்?(9,10)
பிரபுவே {ஜனமேஜயா}, சிவனிடம் வரம்பெற்றதில் ஹம்சன் செருக்கில் மிதந்து வந்தான். ஆனால், "பகைவரின் செருக்கை அழிக்கும் கிருஷ்ணன் அந்த ஹம்சனைக் கொன்றான். கிருஷ்ணன் ஹம்சனைக் கொன்றே விட்டான்" என்ற செய்தி உலகம் முழுவதும் பரவியது. முக்கியக் கந்தர்வர்கள் தேவலோகத்தில் இரவும் பகலும் இந்த வரிகளையே பாடிக் கொண்டிருந்தனர்.(11,12)
இவ்வாறே லோகநாதனான கிருஷ்ணன், தன் புகழ் எங்கும் பரவும்படி ஹம்சனை யமுனையின் மடுவிற்குள் கொன்றான்" என்றார் {வைசம்பாயனர்}.(13)
பவிஷ்ய பர்வம் பகுதி – 103ல் உள்ள சுலோகங்கள் : 13
மூலம் - Source |