(ஸ்ரீக்ருஷ்ணஹம்ஸயோர்யுத்தம்)
Krishna Hamsa Battle | Bhavishya-Parva-Chapter-102 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: புஷ்கரத்தில் இருந்து கோவர்த்தன மலைக்குப் பெயர்ந்த போர்; கிருஷ்ணனும் ஹம்சனும் போரிட்டது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, சகோதரர்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் அந்த இரவிலேயே கொண்டாடப்பட்ட மலையான கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1) இரவு முடிந்து, சூரியன் எழுந்தபோது, கேசிசூதனனான கேசவனும் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(2) சாத்யகி, பலபத்ரன் {பலராமன்}, சாரணன் ஆகியோரும், பிற யாதவர்களும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இசையால் எதிரொலிக்கப்பட்ட கோவர்த்தன மலைக்குக் கேசவனுடன் சென்றனர்.(3)
மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் கோவர்த்தன மலையை அடைந்தபோது, எண்ணற்ற படைவீரர்கள் மற்றும் பசுக்களின் ஒலியால் நிறைந்திருக்கும் அந்தச் சுற்றுச்சூழலைக் கண்டனர்.(4) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மலையின் வடக்கில் யாதவர்கள் கூடினர். அதன்பிறகு அந்தப் போர், யமுனை நதியின் அருகில் மீண்டும் தொடங்கியது.(5)
போர் தொடங்கியபோது, ஹம்சடிம்பகர்களைக் காயப்படுத்தும் ஏழு கணைகளை வசுதேவர் ஏவினார். சாரணன் அந்தச் சகோதரர்கள் இருவர் மீதும் இருபத்தைந்து கணைகளை ஏவினான். கங்கனோ, பத்துக் கணைகளை ஏவினான்.(6) இவ்வாறே முன்னணி யாதவர்களில் பலர் ஹம்சடிம்பகர்களுடன் போரிட்டனர். உக்கிரசேனன், எழுபத்துமூன்று முட்கணைகளை ஏவினான்.(7) மன்னா, விராடன் முப்பது கணைகளை ஏவினான். சாத்யகி ஏழு கணைகளையும், விப்ருது எட்டுக் கணைகளையும், உத்தவர் பத்துக் கணைகளையும் அந்த மன்னர்கள் {ஹம்சடிம்பகர்கள்} இருவர் மீதும் ஏவினர்.(8) பகைவரைக் காயப்படுத்தும் வகையில், பிரத்யும்னன் முப்பது கணைகளையும், சாம்பன் ஏழு கணைகளையும், அநாதிருஷ்டி அறுபத்தொரு முட்கணைகளையும் ஏவினர்.(9) மன்னா, இவ்வாறு முக்கிய யாதவர்கள் அனைவரும் பேராவலுடனும், உத்வேகத்துடனும் போரிடத் தொடங்கினர். அது, பார்ப்பதற்கு அற்புதமான கடும்போராகத் திகழ்ந்தது.(10)
வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஆதரவாக யாதவர்கள் அனைவரும் ஹம்சடிம்பகர்களுடன் போரிட்டனர்.{11} சகோதரர்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் தங்கள் கணைத் தாரைகளால் யாதவர்கள் அனைவரையும் ஒடுக்கினர். ஹம்சனும், டிம்பகனும் பிரகாசமான பத்துப் பத்துக் கணைகளை யாதவர்கள் ஒவ்வொருவரின் மீதும் ஏவினர்.{12} அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட யாதவேஷ்வரர்கள் பலரும், வசந்தகாலத்தில் மலரும் பலாச மரங்களைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் குருதியைக் கக்கினர்.{13} மன்னா {ஜனமேஜயா}, அப்போது, பெரிதும் ஒடுக்கப்பட்ட யாதவர்கள் போர்க்களத்தைவிட்டுத் தப்பியோடத் தொடங்கினர்.
அந்நேரத்தில், வாசுதேவனும் {வசுதேவரின் மகனான கிருஷ்ணனும்}, பலனும் {ஹலாதரனான / கலப்பைதாரியான பலராமனும்} தங்கள் கைகளில் விற்களுடன் ஹம்சடிம்பகர்களை எதிர்த்தனர்.{14,15} அதன்பிறகு, நீண்ட காலத்திற்கு முன்னர்ச் சக்ரன் {இந்திரன்}, ஸ்கந்தன் {கார்த்திகேயன்} ஆகியோருக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில், ஓர் அற்புதப் போர் நடைபெற்றது. தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பெரும் நாகர்கள் ஆகியோர்{16} வானில் தேவவிமானங்களில் அமர்ந்தபடியே இந்தப் பெரும்போரைக் கண்டனர். அந்நேரத்தில் ஹம்சடிம்பகர்களைப் பாதுகாக்க மஹாதேவனால் அனுப்பப்பட்ட பூதேஷ்வரர்கள் திடீரெனத் தோன்றினர்.{17}
வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஹம்சனுடன் போரிட்டது நிகரான இருவருக்கிடையில் நடைபெறும் போரைப் போலத் தோன்றியது. அவர்களின் அருகிலேயே பலராமனும் டிம்பகனும் போரிட்டனர். அந்த நான்கு போர்வீரர்களும், தங்கள் தேர்களில் அமர்ந்தபடியே சங்குகளை முழக்கினர். வாசுதேவன் {கிருஷ்ணன்}, அனைவரின் இதயங்களையும் ஆச்சரியத்தால் நிறைக்கும் வகையில் தன் பாஞ்சஜன்ய சங்கை முழக்கினான்.
பேருடலையும், துருத்தும் வயிறுகளையும் கொண்ட பயங்கரமான அந்தப் பூதங்கள் இருவரும், தங்கள் சூலங்களால் கிருஷ்ணனைத் தாக்கினர். தேவர்களும், கந்தர்வர்களும் அந்தச் சூலங்களால் தாக்கப்பட்டும் புன்னகைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணனைக் கண்டனர். போர்வீரர்களில் சிறந்தவனான ஜனார்த்தனன், தன் தேரில் இருந்து கீழே குதித்து அந்தப் பூதங்கள் இருவரையும் பிடித்தான். அவர்கள் இருவரையும் நெருப்புப் பந்தத்தைப் போல நூறு முறை சுழற்றி கைலாச மலையை நோக்கி வீசியெறிந்தான்.{18-24} அந்தப் பூதங்கள், கைலாச மலையின் சிகரத்தில் விழுந்தபோது, கிருஷ்ணனின் பேராற்றலை வியந்தனர்.{25} தன்னைப் பாதுகாக்கும் அந்தப் பூதங்களைக் கிருஷ்ணன் தூக்கி வீசுவதைக் கண்டு ஹம்சன், கோபத்தால் கண்கள் சிவந்தான்.{26}
தேவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோதே அவன் {ஹம்சன்}, "கேசவா, நாங்கள் ராஜசூய யஜ்ஞம் செய்வதை ஏன் நீ தடுக்க முனைகிறாய்?{27} நீ விளைவிக்கும் இடையூறுகளின் மத்தியிலும் எங்கள் தந்தை பிரம்மதத்தர் அவ்வேள்வியைச் செய்து முடிப்பார். நீ உன் உயிர் மீது மதிப்புக் கொண்டிருந்தால், நாங்கள் கோரும் கப்பத்தைக் கட்டுவாயாக. நந்தபுத்திரா {நந்தனின் மகனான கிருஷ்ணா}, நீ எங்களுக்குக் கப்பங்கட்ட விரும்பவில்லையெனில், ஒரு கணம் பொறுப்பாயாக. ஒப்பற்றதாக இருக்கும் என் ஆற்றலைக் கண்ட பிறகு, நீ புலனுணர்வை மீண்டும் அடைவாய். அதன் பிறகு, நீ கப்பமும் கட்டுவாயாக, என் தந்தையும் வேள்வியைத் தொடங்குவார். சூலபாணியான மஹாதேவன், தேவர்களின் ஈசுவரனாக {தேவசுவரனாக} இருப்பதைத் போல, நானும் மன்னர்களின் தலைவனாவேன் {ராஜர்களின் ஈசுவரனாவேன் / ராஜேசுவரனாவேன்}. இந்தப் போரில் உன் செருக்கை நான் எப்படி அறுக்கப் போகிறேன் என்பதை நீ காண்பாயாக" என்றான் {ஹம்சன்}.{28-30}(11-30)
மன்னா {ஜனமேஜயா}, இதைச் சொன்ன பிறகு, சாலமரத்தைப் போன்று பெரிதாக இருந்த தன் வில்லை எடுத்துக் கொண்ட ஹம்சன், கிருஷ்ணனின் நெற்றியை நோக்கி ஒரு கணையை ஏவினான். அந்தக் கணை கிருஷ்ணனின் நெற்றியைத் துளைத்தாலும், அஃது அவனது மேனியை எழிலுடன் அலங்கரிப்பதாகவே தெரிந்தது.
அப்போது கிருஷ்ணன், சாத்யகியிடம், "பலமிக்க வீரா, என் தேரைச் செலுத்துவாயாக" என்றான். இதைக் கேட்ட சாத்யகி, தாருகனைத் தனக்குப் பின் இருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு அந்தத் தலைவனின் தேரைச் செலுத்தத் தொடங்கினான்.(31-33) இராஜேந்திரா {ஜனமேஜயா}, பகைவனைத் தாக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவாறே சாத்யகி தலைவனின் தேரைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஹம்சனின் கணைகளால் புண்பட்டக் கிருஷ்ணன், கடுங்கணையொன்றைத் தன் நாண்கயிற்றில் பொருத்தியவாறே, பகைவனின் அருகில் செல்லுமாறு சாத்யகிக்கு ஆணையிட்டான்.
பிறகு அந்தத் தலைவன் {கிருஷ்ணன்}, ஹம்சனிடம் பின்வருமாறு பேசினான்:(34,35) "பாவியே, இப்போதே நான் உன்னை இந்தக் கணையால் எரித்து விடுவேன். உனக்குத் திறனிருந்தால் என் முயற்சியை வீணடிப்பாயாக. அதிகம் பேசுவதில் பயனேதும் இல்லை. நீ க்ஷத்திரியன் என்பதால் போரிடும் உன் கடமையை நிறைவேற்றுவாயாக.(36) ஹம்சா, நான் கப்பங்கட்ட வேண்டுமென நீ விரும்பினால், இன்றே போர்க்களத்தில் உன் ஆற்றலை வெளிப்படுத்துவாயாக. மனிதர்களின் ஆட்சியாளனென நீ சொல்லிக் கொண்டாலும், புஷ்கரையில் வசிக்கும் முனிவர்களை நீ துன்புறுத்தியிருக்கிறாய்.(37) மனிதர்களில் இழிந்தவனே, நானே ஜகத்பதி. என் முன்னிலையில் பிராமணர்களைத் துன்புறுத்தும் அளவுக்கு நீ துணிந்திருக்கிறாயா? இவ்வுலகில் என்னிடம் பகை கொள்ளும் துஷ்டர்களைத் தண்டிப்பதன் மூலம் உன்னைப் போன்ற க்ஷத்திரியர்களை நான் அழித்து வருகிறேன். பெரும் முனிவர்களின் சாபத்தைப் பெற்றிருப்பதால் நீ ஏற்கனவே இறந்தவனாவாய். யமனிடம் உன்னைக் கொடுத்துப் பிராமணர்களுக்குப் பாதுகாப்பை நான் அருளப் போகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு ஹம்சன் மீது தன் நெருப்புக் கணையை ஏவினான். எனினும் ஹம்சனோ, நீர்க்கணையால் அதற்குப் பதிலடி கொடுத்தான். அப்போது கோவிந்தன், ஹம்சனின் ஆயுதத்திற்கு எதிர்த்தாக்குதல் தொடுக்கும் வகையில் வாயவ்ய ஆயுதத்தை இருப்புக்குள் அழைத்து மஹேந்திர ஆயுதத்தையும் அதனுடன் சேர்த்தான். அதன்பிறகு கிருஷ்ணன் மஹேஷ்வர ஆயுதத்தை இருப்புக்குள் அழைத்தான். அதற்கு ஹம்சன் உடனே ரௌத்ர ஆயுதத்தால் எதிர்த்தான்.
கிருஷ்ணன், கந்தர்வ, ராக்ஷச, பைசாச ஆயுதங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஏவினான். இருப்பினும் ஹம்சன் தன்னுடைய பிரம்மாஸ்திரம், கௌபேரமாஸ்திரம், ஆசுராஸ்திரம் உள்ளிட்ட ஆயுதங்களால் அவை அனைத்திற்கும் பதிலடி கொடுத்தான். அதன்பிறகு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஹம்சனுக்கு எதிராகப் பெருஞ்சக்திவாய்ந்த பிரம்மசிரத்தை ஏவினான்.(38-46) மன்னா {ஜனமேஜயா}, அந்த முதன்மையான ஆயுதத்தைக் கண்ட ஹம்சன் பேரச்சம் கொண்டான். இருப்பினும் அவன் தன்னுடைய ஆயுதத்தால் அதற்கும் பதிலடி கொடுத்தான்.(47) உயிரினங்கள் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் இருப்பவனும், அண்டத்தைப் படைத்துக் காப்பவனும், தேவதேவனுமான ஜனார்த்தனன் தன் கைகளையும், வாயையும் யமுனை நீரில் கழுவி வலிமைமிக்க வைஷ்ணவாஸ்திரத்தை இருப்புக்கு அழைத்தான். பழங்காலத்தில் அசுரர்களிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்ட அதே ஆயுதத்தின் துணையால் கிருஷ்ணன் ஹம்சனைக் கொல்ல முயற்சித்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(48,49)
பவிஷ்ய பர்வம் பகுதி – 102ல் உள்ள சுலோகங்கள் : 49
மூலம் - Source |